World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை The liquidation of the BLPI and the LSSP’s great betrayal in Sri Lanka போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் கலைப்பும் இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பும்
By Nanda Wickremasinghe
and K. Ratnayake லங்கா சம சமாஜக் கட்சியானது (Lanka Sama Samaja Party -LSSP) 1964 ஆண்டு ஜூனில் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party -SLFP) அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதன் மூலம் செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள் பற்றிய நான்கு தொடர் கட்டுரைகளின் முதல் கட்டுரை இதுவாகும். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொண்ட ஒரு கட்சி, முதல் முறையாக முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டமையானது சர்வதேச சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை பகிரங்கமாக மறுதலிப்பதாகும். லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பானது சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு ஒரு ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது, மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான அரசியல் போக்கின் சந்தர்ப்பவாத பண்பை உறுதிப்படுத்தியது. இந்தப் போக்கிலிருந்து உடைத்துக்கொண்ட உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகளே 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை அமைத்தனர். ஒவ்வொரு கட்டத்திலும், லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் சரிவுக்கு மன்னிப்பளித்து வசதியளித்த பப்லோவாதிகள், பண்டாரநாயக்க அரசாங்கத்திற்குள் அதனுடைய நுழைவிற்கு வழியமைத்துக் கொடுத்தனர். முதலாவது கட்டுரை, 1942ல் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI) ஸ்தாபிக்கப்பட்டது தொடர்பாகவும், ஆசியா முழுவதும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்த இருந்த அதனுடைய பின் தொடர்ந்த அரசியல் கலைப்பையும் பற்றி ஆராய்கின்றது. 1942ல் இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பிஎல்பிஐ) ஸ்தாபிக்கப்பட்டமை, இந்திய துணைக் கண்டம் பூராவும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முக்கியமான முன்னோக்கிய அடியெடுப்பை பிரதிநிதித்துவம் செய்தது. இலங்கையில் புதிய கட்சியைத் தொடக்கிவைத்த லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர்கள், 1935ல் சம சமாஜக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டிருந்த தீவிர தேசியவாத முன்னோக்கில் இருந்து முறித்துக் கொண்டனர். நாஜி ஜேர்மனிக்கு எதிரான போரில், ஜனநாயகங்கள் என்றழைக்கப்பட்ட பிரிட்டன் போன்றவற்றுக்கு தொழிலாள வர்க்கம் ஆதரவளிக்க வேண்டும் என்ற மாஸ்கோவின் கட்டளைகளின் வழியைப் பின்பற்றிக்கொண்டிருந்த ஸ்ராலினிஸ்டுகளை, அவர்கள் சம சமாஜக் கட்சி அணிகளில் இருந்து வெளியேற்றினர். “ஒன்றுதிரண்ட வரலாற்று அனுபவங்கள் மற்றும் குறிப்பாக நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட அதனுடைய புரட்சிகர மூலோபாயத்துடன், “இந்தியாவில் உள்ள நான்காம் அகிலத்தின் இந்த (புரட்சிகரக்) கட்சியால் மட்டுமே, இந்தியாவிலுள்ள தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர வெற்றியை நோக்கி வழிநடத்த முடியும்” என பிஎல்பிஐயின் வரைவு வேலைத் திட்டம் உறுதிப்படுத்துகின்றது. இலங்கையிலும் இந்தியாவிலும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஐக்கியப்படுத்திய பிஎல்பிஐ, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான அரசியல் பிரதிநிதியான இந்திய தேசியக் காங்கிரஸ் (காங்கிரஸ்) உட்பட, முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை வலியுறுத்தியது. ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) விரோதமாக, ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகவும் பிஎல்பிஐ தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்தது. ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள், 1942 ஆகஸ்ட்டில் இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தின் மத்தியில் (Quit India movement) பிஎல்பிஐ உந்தப்பட்டது. பிரிட்டனிடம் இருந்து சலுகைகளை வலிந்து பெறும் முயற்சியில் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், இலட்சக்கணக்கான இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளையும் பிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு எதிரான போர்க்குணம் மிக்க போராட்டத்திற்குள் ஈர்த்தது. இந்தப் போராட்டங்களை காங்கிரஸ் “குடிமக்கள் ஒத்துழையாமை” என்ற திராணியற்ற எதிர்ப்புக்குள் மட்டுப்படுத்த முயன்றது. யுத்த முயற்சிகளை நாசப்படுத்துவதாக இந்த இயக்கத்தை கசப்புடன் கண்டனம் செய்த சிபிஐ, தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களை நசுக்க முயற்சித்ததோடு பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளுக்கு ஒற்றர்களாகவும் ஆத்திரமூட்டல்காரராகவும் செயற்பட்டது. இந்த வெகுஜனப் போராட்டத்தில் பங்கேற்ற பிஎல்பிஐ, காங்கிரசுக்கு எந்தவொரு அரசியல் சலுகையும் வழங்காததோடு ஸ்ராலினிஸ்டுகளின் துரோகத்தை கண்டனம் செய்தது. சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் ஊடாக ஏகாதிபத்திய போரை எதிர்க்குமாறு அது தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அழைப்பு விடுத்தது. வெகுஜனப் போராட்டம் வெடித்த ஆகஸ்ட் 9 அன்று பாம்பேயில், கட்சி விநியோகித்த துண்டுப் பிரசுரமானது “ஏகாதிபத்திய நிர்வாக இயந்திரத்தை முடமாக்கி நிறுத்துவதற்கு… ஒரு வெகுஜன பொது அரசியல் வேலைநிறுத்தத்திற்கு” தொழிலாளர்களை தலையீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தது. “விவசாயிகள் குழுக்கள்” ஊடாக விவசாயிகளால் நிலங்கள் பறிமுதல்செய்யப்படுவதற்கு வழிகாட்டும்” கோரிக்கைகளுடன் விவசாய கிளர்ச்சி இயக்கத்துக்கு தலைமை வழங்குமாறு அது தொழிலாள வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.” கொடூரமான பொலிஸ்-அரச ஒடுக்குமுறைகளுடன் பதிலிறுத்த பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகம், சுமார் ஆயிரம் பேரை கொன்றதோடு பிஎல்பிஐ தலைவர்கள் உட்பட இலட்சக்கணக்கானவர்களை கைது செய்தது. வெகுஜன எழுச்சி தணிந்த நிலையில், பிஎல்பிஐ உறுப்பினர்களுக்குள்ளேயே ஒரு சந்தர்ப்பவாத போக்கு தலைநீட்டியது. அதுவே வரவிருந்த பிரச்சினைகளுக்கு முன்னறிவிப்பாக இருந்தது. 1943ல் சிறையில் இருந்து எழுதிய என்.எம். பெரேராவும் பிலிப் குணவர்தனாவும், “ஒரு சக்திவாய்ந்த இடது அமைப்பு நாடு பூராவும் புரட்சிகர உணர்வுக்கு ஒரு தூண்டுதலைக் கொடுக்கும்” எனக் கூறி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடனும் (Congress Socialist Party -CSP) ஏனைய பல்வேறு குட்டி முதலாளித்துவ குழுக்களுடனும் ஒரு கொள்கையற்ற இணைப்பை முன்மொழிந்தனர். இந்த முன்மொழிவானது, சம சமாஜக் கட்சியின் மத்தியதர வர்க்க தீவிரவாத அரசியலுக்குத் திரும்புவதும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் ஆதரவு கொடுப்பதுமாகும். 1944ல் இந்த இணைப்பை நிராகரித்து பிஎல்பிஐ மாநாடு வெளியிட்ட ஒரு தீர்மானம், அது “இந்தியாவில் ஒரு தெளிவான புரட்சிகர வேலைத் திட்டத்துடன் இருக்கும் ஒரே ஒரு கட்சியை கலைத்து விட்டு, அதன் இடத்தில் ஒரு பரந்த மத்தியவாத கட்சியை உருவாக்குவதையே விளைவாக்கும்” என எச்சரித்தது. போரின் முடிவானது, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியத் துணைக் கண்டம் உட்பட உலகம் பூராவும் புரட்சிகர போராட்டங்கள் வெடிக்க வழிவகுத்தது. புரட்சிகர கட்சியால் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினரை அடைய முடியாது என்ற பெரேரா மற்றும் குணவர்தனாவின் கூற்றுக்களை பொய்யாக்கி கல்கத்தா, சென்னை மற்றும் பாம்பேயிலும் தொழிலாளர்கள் மத்தியில் பிஎல்பிஐ கணிசமான தளத்தை வென்றது. இத்தகைய வளர்ச்சியடைந்து வந்த வர்க்கப் போராட்டங்களின் மத்தியில், காங்கிரசும் இந்தியாவில் முஸ்லிம் உயர்தட்டுக்களின் கட்சியான முஸ்லிம் லீக்கும், இந்த சுயாதீனமான இயக்கத்தை தலை தூக்கவிடாமல் செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஒரு உடன்படிக்கைக்குச் செல்ல துரிதமாக செயற்பட்டன. ஸ்ராலினிச சிபிஐ இந்த முதலாளித்துவக் கட்சிகளையும், 1947ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என வகுப்புவாத வழியில் பிரிட்டன் இந்தியாவை பிரித்ததையும் ஆதரித்தது. மேலும் வலது பக்கம் நகர்ந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, வாக்களிக்காமல் புறக்கணிப்பதன் மூலம் பிரிட்டன் உடனான காங்கிரசின் உடன்படிக்கையை மௌனமாக ஆதரித்தது. போருக்குப் பிந்திய உடன்பாட்டை எதிர்ப்பதில் பிஎல்பிஐ தனித்திருந்தது. 1947 மே மாதம் நடத்திய மாநாட்டில், இந்தியா “அரசியல் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரு அரைக்-காலனித்துவ நாடாக ஆகும், ஆனால், முன்னரைப் போலவே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களின் பொருளாதார ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும்…” என பிஎல்பிஐ பண்புமயப்படுத்தியது. ஆபத்துக்களைப் பற்றி எச்சரித்த அந்த தீர்மானம், அந்த உடன்பாட்டை எதிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. சில மாதங்களுக்குள், இந்தியா 1947 ஆகஸ்ட்டில் இந்து மேலாதிக்க இந்தியாவாகவும் ஒரு முஸ்லிம் பாகிஸ்தானாகவும் பிரிக்கப்பட்டமை, ஒரு வகுப்புவாதப் படுகொலையை தூண்டிவிட்டது. இதில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். அடுத்து வந்த ஆண்டு, வங்காள மாணவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய, பிஎல்பிஐ தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா, “இந்தியாவின் பொருளாதார மேலிடங்களையும், இந்தியாவின் கரைகளை கழுவும் கடல்களையும் பிரிட்டிஷ் தொடர்ந்தும் மேலாதிக்கம் செய்யும்… இதனால், இந்தியாவில் நடைபெற்றிருப்பது சுதந்திரத்துக்கான மாற்றம் அல்ல, மாறாக, இந்திய முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது கூட்டை மறு ஒழுங்கு செய்வதன் ஊடாக ஏகாதிபத்தியம் நேரடியாக ஆளும் வடிவத்திலிருந்து மறைமுகமாக ஆளும் வடிவத்துக்கு மாறியுள்ளது,” என விளக்கினார். பெரேராவும் குணவர்தனாவும் 1943ல் தாம் பரிந்துரைத்த சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பதற்காக, இந்தியாவில் சிறையில் இருந்து விடுதலையான உடன் இலங்கைக்குத் திரும்பினர். பிஎல்பிஐயில் இருந்து பிரிந்த அவர்கள், தமது சொந்தக் கட்சியாக லங்கா சம சமாஜக் கட்சியின் பெயரை புதுப்பித்தனர். அவர்களது ஓடுகாலித்தனத்தை கண்டனம் செய்த பிஎல்பிஐ, அவர்களது பிளவானது “ஒரு பாட்டாளி வர்க்கம் சாராத போக்கை குறிக்கின்றது”, தடுக்கப்படவில்லை எனில், “முழுமையான சந்தர்ப்பவாத அரசியலாக” அது வளர்ச்சியடையும்” என எச்சரித்தது. இலங்கையில் பிஎல்பிஐ பிரிவு என்று அறியப்பட்டிருந்த போல்ஷிவிக் சம சமாஜ கட்சிக்கும் (Bolshevik Samasamaja Party -BSP) மற்றும் மீளமைக்கப்பட்ட சம சமாஜக் கட்சிக்கும் இடையிலான அரசியல் பிளவானது, பிரிட்டன் உள்ளூர் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து “சுதந்திரம்” வழங்கத் திட்டமிட்டதில் நிரூபணமாகியது. 1947 இலங்கை சுதந்திர சட்டத்தை போல்ஷிவிக் சம சமாஜக் கட்சி எதிர்த்தது. அதன் தலைவர் டொரிக் டீ சொய்சா அதை “மக்களுக்கு எதிரான சதி” என குணாம்சப்படுத்தினார். 1948ல் சம்பிரதாயபூர்வ சுதந்திர கையளிப்பை பகிஷ்கரித்த போல்ஷிவிக் சம சமாஜக் கட்சி, அந்த “போலி சுதந்திரத்துக்கு” எதிராக கொழும்பில் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டியது. அதற்கு மாறாக, பிரிட்டிஷின் கையளிப்பை ஒரு முன் அடியெடுப்பாக குணாம்சப்படுத்திய சம சமாஜக் கட்சி, சுதந்திர மசோதாவின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததோடு போல்ஷிவிக் சம சமாஜக் கட்சியின் எதிர்ப்பு கூட்டம் நடத்தும் திட்டத்தை “கண்காட்சிவாதம்” என கண்டனம் செய்தது. சம சமாஜக் கட்சி துரிதமாக வலது பக்கம் நகர்ந்து, ஆட்சியைப் பொறுப்பேற்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை (யூஎன்பி) ஸ்தாபித்த இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் இணையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவும் உடன்பட்டிருந்தது. புதிய யூஎன்பி அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, “சுதந்திரத்தின்” ஜனநாயக-விரோத பண்பை விரைவில் அம்பலப்படுத்தியது. அது சுமார் ஒரு மில்லியன் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடிஉரிமையையும் வாக்களிக்கும் உரிமையையும் பறித்தது. இந்த தீர்மானத்தை கண்டனம் செய்த போல்ஷிவிக் சம சமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வா, பாசிசமே இன அடிப்படையில் குடி உரிமையைத் தீர்மானிக்கும் என சுட்டிக் காட்டினார். இந்த இனவாத சட்டமானது ஆட்டங்கண்டுள்ள முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்தும் பொருட்டு, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என அவர் எச்சரித்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உலகம் பூராவும் முதலாளித்துவத்தை மீள்-ஸ்தாபிதம் செய்வதுடன் பொருந்துகிறவாறு அமைந்த, இந்திய துணைக் கண்டத்திலான சம்பிரதாயபூர்வ சுதந்திரம், பிஎல்பிஐ மீது உக்கிரமான அழுத்தத்தை திணித்தது. உள்ளூர் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தட்டின் ஒரு பகுதியினருக்கு வர்த்தகம், அரச எந்திரம், பாராளுமன்ற பதவிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் புதிய வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டிருந்தன. இந்த அழுத்தங்கள், சோசலிஸ்ட் கட்சியினுள் (SP) நுழைவதற்கு பிஎல்பிஐ எடுத்த முடிவில் உடனடியாக பிரதிபலித்தது. காங்கிரஸ் சோசலிஸ்டுகளால் (CSP) 1948ல் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி (SP), இந்தியாவில் ஏகாதிபத்தியத்தின் உடன்பாட்டை நேரடியாக எதிர்க்கவில்லை. 1948 அக்டோபரில் நடந்த பிஎல்பிஐ மாநாடு, நுழைவை அங்கீகரித்து தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியது -இந்த நகர்வை 1943ல் பெரேரா மற்றும் குணவர்தனாவும் முன்மொழிந்தபோது பிஎல்பிஐ அதை நிராகரித்திருந்தது. ஒரு ஆழமான கலந்துரையாடலுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதன் பேரில் நுழைவை ஒத்திப்போடுமாறு நான்காம் அகிலத்தின் சர்வதேச செயலகத்தின் சார்பில் மிஷேல் பப்லோ விடுத்த வேண்டுகோளை பிஎல்பிஐ புறக்கணித்தது. சோசலிஸ்ட் கட்சிக்குள் (SP) நுழைவதற்கான முடிவுக்கும் 1930ல் லியோன் ட்ரொட்ஸ்கி முன்மொழிந்த நுழைவு தந்திரோபாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நுழைவுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் கூறியது போல், சோசலிஸ்ட் கட்சி ஒன்றும் இடது பக்கம் நகரும் அமைப்பு அல்ல. மாறாக அது துரிதமாக வலது பக்கம் நகர்ந்துகொண்டிருந்தது. கட்சி தலைமை உட்கட்சி ஜனநாயகத்தை நெரித்ததோடு அதன் மூலம் பிஎல்பிஐ உறுப்பினர்கள் புரட்சிகர அரசியலுக்காகப் போராடும் திறமையையும் இல்லாமல் ஆக்கியது. நான்காம் அகிலத்தின் மீது வந்த அழுத்தங்களுக்கு பரந்தளவு அடிபணிந்ததன் பாகமே பிஎல்பிஐயின் நகர்வாகும் என்பது விரைவில் வெளிப்படையானது. இந்த அடிபணிவுகளுக்கு பப்லோ மற்றும் மண்டேல் தத்துவார்த்த வெளிப்பாட்டை வழங்கினர். போருக்குப் பிந்திய ஓப்பீட்டளவிலான ஸ்திரமாக்கலின் அழுத்தத்துக்கு அடிபணிந்து போன பப்லோ மற்றும் மண்டேல், உலக சோசலிச முன்னோக்கை கைவிட்டு, புரட்சிகர கட்சிகளை கட்டியெழுப்புவதை நிராகரித்ததோடு நான்காம் அகிலத்தின் பகுதிகள் ஸ்ராலினிச அல்லது சமூக ஜனநாயக கட்சிகளுக்குள் நுழைய வேண்டும் மற்றும் முதலாளித்துவ தேசிய அமைப்புகளுடன் கூட்டணியமைக்க வேண்டும் என முன்மொழிந்தனர். 1950ல் பிஎல்பிஐ காரியாளர்களில் ஒரு பகுதியினர் சோசலிஸ்ட் கட்சியை (SP) விட்டு வெளியேற முயற்சித்தபோது, அவர்களை அங்கேயே இருக்குமாறு பப்லோ ஆலோசனை கூறினார். இந்தியாவில் சோசலிஸ்ட் கட்சிக்குள் (SP) பிஎல்பிஐ கலைத்துவிட்டமை, 1950 ஜூன் 4 அன்று நடந்த ஒரு “ஐக்கிய மாநாட்டில்” சம சமாஜக் கட்சி உடன் போல்ஷிவிக் சம சமாஜக் கட்சியை ஒன்றிணைத்ததன் மூலம் இலங்கையில் பின்பற்றப்பட்டது. 1960ல் எழுதப்பட்ட சம சமாஜக் கட்சியின் ஒரு சுருக்க வரலாற்றில், சம சமாஜக் கட்சி செயலாளர் லெஸ்லி குணவர்தனா, “இரு அமைப்புகளுக்கும் இடையில் அடிப்படை அரசியல் வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கவில்லை” என கூறிக்கொண்டார். இந்த ஒருங்கிணைவை வடிவமைத்த அடிநிலையில் இருந்த பாராளுமன்றவாத முன்நோக்கை சுட்டிக் காட்டிய அவர், சம சமாஜக் கட்சி மற்றும் போல்ஷிவிக் சம சமாஜக் கட்சிக்கும் இடையிலான பகைமை, 1949 இடைத் தேர்தலில் கம்பஹாவில் வலதுசாரி யூஎன்பி வெற்றிபெறுவதை சாத்தியமாக்கியது என்று குறிப்பிட்டுள்ளார். அடிப்படை வேறுபாடுகள் இல்லை எனக் கூறுவது பொய்யானதாகும். போல்ஷிவிக் சம சமாஜக் கட்சிக்கும் சம சமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையிலான பிளவு, சுதந்திரம் பற்றிய விவாதத்திலும் யூஎன்பி தலைமைத்துவத்தின் பகுதியினரை நோக்கிய சம சமாஜக் கட்சியின் சூழ்ச்சிகளுக்கு போல்ஷிவிக் சம சமாஜக் கட்சியின் எதிர்ப்பிலும் ஏற்கனவே வெளிப்படையாகி உள்ளது. போல்ஷிவிக் சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அரசியல் வேறுபாடுகளை சாதாரணமாக ஐக்கியம் என்ற பெயரிலான தரைவிரிப்புக்கு கீழ் கூட்டித் தள்ளிவிட்டனர். சோசலிச சமத்துவக் கட்சியின் (நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான) வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் எனும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாவது: “இந்த ‘இணைப்பானது’’ சம சமாஜ வாதத்துக்கு, அதாவது, இலங்கை தேசிய பாரம்பரியத்துக்கு திரும்புவதற்கு சமமாகும். இந்த விடயங்களை கலந்துரையாடத் தவறியமை, புதிய கட்சியில் நிலவும் உண்மையான உறவுகளை அம்பலப்படுத்துகிறது: என்.எம். பெரேரா தலைமையிலான வலதுசாரி பகுதி பொறுப்பில் இருந்த அதேவேளை, முன்னாள் பிஎல்பிஐ தலைவர்கள் ‘ட்ரொட்ஸ்கிச’ நற்சான்றுகளை அவருக்கு வழங்கினர். அரசியல் தெளிவைக் கோருவதற்கும் கொள்கையற்ற ஐக்கியத்தை எதிர்ப்பதற்கும் தலையிடுவதற்கு மாறாக, மிஷேல் பப்லோ தலைமையிலான சர்வதேச செயலகம், அதற்கு ஆசீர்வாதம் வழங்கியதோடு நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதியாக லங்கா சம சமாஜக் கட்சியை ஏற்றுக்கொண்டது.” |
|