தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
அமெரிக்க தன்னலக்குழு
Andre Damon Use this version to print| Send feedback அங்கே அமெரிக்க அரசியலில் ஒரு பேசப்படாத விதிமுறை உள்ளது, அது ஒவ்வொரு தேர்தல் தருணத்திலும் எப்போதையும்விட தெளிவாக வெளிப்படும், ஒரு மிக முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அது தேர்தலில் குறைவாகவே விவாதிக்கப்படும்—அதையும் விட மிகக் குறைவாகவே அதுகுறித்து முடிவெடுக்கப்படும். அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் ஒரு புதிய யுத்தத்தைத் தொடங்கியுள்ளது, ஜனநாயக உரிமைகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன, மில்லியன் கணக்கானவர்களுக்கு வேலைகள் இல்லை, குடும்ப வருமானங்களோ சரிந்து வருகின்றன, வரலாறு காணாத எண்ணிக்கையில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இருந்தாலும் கூட, 2014 இடைக்கால தேர்தல் வருவதற்கு வெறும் 17 நாட்களே உள்ள நிலையில், இந்த பிரச்சினைகளில் எதுவுமே விவாதிக்கப்படுவதில்லை. அமெரிக்க அரசியலின் இந்த வெற்றுத்தன நடவடிக்கையும் மற்றும் தேர்தல்களை ஈராண்டுக்கொருமுறை வெறும் சம்பிரதாயமாக மாற்றுவதும் எதை கணக்கில் காட்டுகிறது? அனைத்து முக்கிய அரசியல் மாற்றங்களைப் போலவே, இந்த மாற்றங்களும் ஆழ்ந்த சமூக நிகழ்வுபோக்கில் வேரூன்றி உள்ளன என்பதைத் தான். இவற்றை அடையாளம் காண ஒருவருக்கு தொலைநோக்கு பார்வையும் கூட தேவையிருக்காது. கடந்த பல வாரங்களாக, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சமூக சமத்துவமின்மையின் அசாதாரண வளர்ச்சியை ஆவணப்படுத்தி அறிக்கை மாற்றி அறிக்கை வெளியாகி உள்ளன. அமெரிக்காவிலுள்ள 400 பணக்காரர்கள் அவர்களது செல்வவளத்தில் கடந்த ஆண்டில் 14 சதவீத வளர்ச்சியை கண்டதாக, கடந்த மாத இறுதியில் Forbes இதழ் குறிப்பிட்டது. அதற்கடுத்த வாரம், பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பு, உலகளாவிய சமூக சமத்துவமின்மை பெருமந்தநிலைமைக்கு முன்னர் 1920களின் உயரத்தையும் தாண்டிவிட்டதாக குறிப்பிட்டது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களுடன் சேர்ந்து, உலக மக்கள்தொகையில் மேலே உள்ள ஒரு சதவீதத்தினர் அண்ணளவாக மொத்த செல்வவளத்தில் பாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாக, இந்த வாரம், Credit Suisse நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பொருளாதாரத்துறையினர் எம்மானுவெல் சாஸ் மற்றும் கேப்ரியல் ஜக்மனின் ஓர் ஆய்வறிக்கை வெளியானது. அமெரிக்கா வெறுமனே பணக்கார 10 சதவீதத்தினராலேயோ அல்லது மேலே உள்ள 1 சதவீதத்தினராலோயோ மட்டும் அதிகளவில் ஏகபோகமாக்கப்படவில்லை, மாறாக மேலே உள்ள 0.1 சதவீதத்தினராலேயும் ஏகபோகமாக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டியது. அவர்கள் இவ்வாறு முடித்திருந்தார்கள், “கடந்த மூன்று தசாப்தங்களில் மேலே உள்ள 10 சதவீதத்தினரின் மற்றும் மேலே உள்ள 1 சதவீதத்தினரின் பங்குகளில் நடைமுறையளவில் ஏற்பட்டுள்ள அனைத்து உயர்வும், மேலே உள்ள 0.1 சதவீதத்தினரின் பங்கு அதிகரித்ததினாலேயே ஆகும், அது 1970களின் இறுதியில் 7 சதவீதமாக இருந்ததிலிருந்து 2012இல் 22 சதவீதமாக உயர்ந்திருந்தது," என்று குறிப்பிட்டிருந்தார்கள். நிதியியல் சந்தைகளுக்கு பணத்தைத் தொடர்ந்து வாரி இறைப்பதை மேற்பார்வையிட்டு வருகின்ற, அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெனெட் யெலெனே கூட, “அமெரிக்காவில் சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறித்தும், அதன் விஸ்தீரணத்தைக் குறித்தும்" எச்சரிக்கை விடுக்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார். அவர் வெள்ளியன்று வெளியிட்ட கருத்துக்களில் குறிப்பிடுகையில், “சில மதிப்பீடுகளின்படி, வருமானம் மற்றும் செல்வவளத்தின் சமத்துவமின்மையானது கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் அவற்றின் அதிகபட்ச உச்சங்களை எட்டியுள்ளன, அந்த காலக்கட்டத்தில் இருந்த சராசரியையும் விட பெரிதும் அதிகமாக, அனேகமாக அமெரிக்க வரலாற்றிலேயே இதற்கு முன்னர் இருந்திராத அளவுக்கு அதிகமாக உள்ளன," என்றார். பெருளாதார உறவுகளில் இந்தளவுக்கு பரந்த மாற்றங்கள் எவ்வாறு அரசியல் வாழ்வில் ஓர் ஆழ்ந்த மற்றும் மாற்றத்திற்குரிய தாக்கத்தை எடுக்காமல் இருக்க முடியும்? வரலாற்றாளர் எட்வர்டு ஜிப்பன் ஒருமுறை ரோம் சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் வடிவத்தை, “பொதுச்சொத்தின் வடிவங்களால் மூடிமறைக்கப்பட்ட ஒரு முழுமையான முடியாட்சி" என்று தொகுத்தளித்தார். அவரது வரையறையிலிருந்து நாம் குறிப்பை எடுத்துக் கூறுவதானால், அமெரிக்கா வெளியுலகை நோக்கிய, அதிகளவில் இற்றுப்போன ஒரு ஜனநாயக வலையால் மூடிமறைக்கப்பட்ட ஒரு தன்னலக்குழுவாக மாறியுள்ளது என்று கூறலாம். “ஒருவருக்கு ஒரு வாக்கு" என்பதன் பாசாங்குத்தனம் என்னவாக இருந்தாலும், மேலே உள்ள 0.1 சதவீதத்தினரே கொள்கை வகுக்க கட்டளை கொடுக்கிறார்கள், அத்துடன் முக்கியமாக அதை நிறைவேற்றுவோரை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள்தொகையில் சற்றே பரந்த, ஆனால் அதிகளவில் சலுகைபெற்ற மற்றும் சிறிய ஒரு பிரிவும் சிறிது செல்வாக்கைக் கொண்டுள்ளது—அதுதான் மேலே உள்ள 5 அல்லது 10 சதவீதத்தினர். அடியிலுள்ள 90 சதவீதத்தினரின் நலன்கள் மற்றும் கவலைகள் குறித்து, அரசாங்க நடவடிக்கைகளில் முற்றிலும் எந்த தாக்கமும் இருப்பதில்லை. பணம் தேர்தல்களை விலைக்கு வாங்குகிறது. வரலாற்றிலேயே மிகவும் செலவுமிகுந்த தேர்தலாக இருந்த 2012 தேர்தலை, சுமார் 6.3 பில்லியன் டாலர் பிரச்சார பணம் முடிவு செய்தது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல்கள் குறித்த ஒரு பகுப்பாய்வு, எந்த வேட்பாளரால் அதிகளவிலான பணம் கொண்டு வரப்படுகிறது என்பதைக் கொண்டே 93 சதவீதம் முடிவெடுக்கப்படுவதாக கண்டறிந்தது. 2004 தேர்தல்களில், மலைப்பூட்டும் விதத்தில் வெற்றிபெற்ற 98 சதவீத வேட்பாளர்கள், தேர்தல் செலவுகளில் அவர்களின் எதிராளிகளை மிஞ்சி இருந்தார்கள். பரந்த மக்கள் புறக்கணிப்புக்கு இடையே, அமெரிக்க வரலாற்றிலேயே ஜனாதிபதிக்கான-தேர்தல் அல்லாத மிகவும் செலவுமிகுந்த ஒரு தேர்தலாக இந்த 2014 தேர்தல் இருக்க போகிறது. அரசியல்வாதிகள் செல்வந்தர்களுக்கு விட்டுக்கொடுப்புகளை மட்டும் வழங்கவில்லை, அவர்களே அதிக எண்ணிக்கையில் பணக்காரர்களாகவும், மிகப்பெரிய பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பொறுப்புறுதி அரசியல் மையம் குறிப்பிடுகையில், வரலாற்றில் முதல்முறையாக, அமெரிக்க காங்கிரஸின் அதிகளவிலான உறுப்பினர்கள் மில்லியனர்கள் என்று குறிப்பிட்டது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஏற்கனவே அது கொண்டிருக்கும் அதிகாரத்தோடு திருப்தி அடைந்துவிடவில்லை, அது அரசியலில் பணத்தின் மீது எஞ்சியிருக்கும் அனைத்து தடைகளையும் நீக்க நகர்ந்து வருகிறது. அரசியல் பிரச்சாரங்களுக்கு தனிநபர்கள் அளிக்கும் மொத்தத் தொகையின் மீதிருந்த உச்சவரம்பை நீக்கி, ஏப்ரலில், அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. நிதியியல் ஊகவணிகம் மற்றும் மோசடிகளுக்காக, அமெரிக்க பொருளாதாரத்திலிருந்து முன்பில்லாத அளவில் பெரும் பங்கைத் திருப்பிவிட, நிதியியல் தன்னலக்குழு அதன் கட்டுப்பாடில்லாத அதிகாரம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளது. ஒபாமா நிர்வாகமும் மற்றும் பெடரல் ரிசர்வும், வங்கிகளுக்கு பிணையெடுப்பு வழங்கிய பின்னர், ஆறு ஆண்டுகளுக்கு அண்மித்தளவில் வட்டிவிகிதங்களை பூஜ்ஜியத்தில் வைத்துள்ளன, இது ஓர் ஆக்ரோஷமான நிதியியல் குமிழிக்கு எண்ணெய் வார்த்து வருகிறது. செல்வந்தர்களின் சர்வாதிகாரம், பிரித்தெடுக்க முடியாதபடிக்கு முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை கட்டமைப்புடன் பிணைந்துள்ளது. பொருளாதார வாழ்வு முழுமையாக மிகப்பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் தணியாத இலாப முறையீடுகளுக்கு அடிபணிய செய்யப்பட்டுள்ளது, இவற்றின் உயர்மட்ட செயலதிகாரிகளுமே அதிகரித்துவரும் அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒரு பகுதியாக கணக்கில் வருகிறார்கள். சோசலிச சமத்துவ கட்சியின் வேலைத்திட்டம் குறிப்பிடுவதைப் போல, “அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் சர்வாதிகாரம் செலுத்தும் மிகப்பெரிய வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் சர்வாதிகாரத்துடன், தொழிலாள வர்க்கத்தின் அனைத்து அடிப்படை தேவைகள் உடனடியாகவும் நேரடியாகவும் மோதலுக்கு வருகிறது." சமூக சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டு வருவது, உழைக்கும் மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார உரிமைகளின் மீது உத்தரவாதமளிப்பது, சர்வாதிகார முனைவை நிறுத்துவது, ஒரு புதிய உலக போரைத் தடுப்பது என எந்தவித முற்போக்கான மாற்றமும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களைத் தேசியமயமாக்கி, நிதியியல் பிரபுத்துவத்தின் பாரியளவிலான செல்வங்களை கைப்பற்றாமல்—அதாவது அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தின் சோசலிச மறுகட்டமைப்பைத் தொடங்காமல்—அடைய முடியாது. |
|
|