World Socialist Web Site www.wsws.org |
Australian imperialism: Political attack dog for US war drive ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம்: அமெரிக்க யுத்த முனைவிற்கான அரசியல் வேட்டைநாய்Nick Beams அடுத்த மாதம் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் மலேசிய விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதன் மீது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் "சட்டையைப் பிடித்து உலுக்கப்போவதாக" (shirtfront) குறிப்பிட்ட ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போட்டின் சமீபத்திய குறிப்புகள், முதல் பார்வைக்கு வேண்டுமானால் ஏதோ இயல்புக்குமீறியதாக தோன்றக்கூடும். ஆனால் ஒரு விசித்திரமான நேரெதிர் மோதலில் இருந்து தூர விலகி பார்த்தால், அப்போட்டின் கருத்து தீவிரமடைந்துவரும் புவிசார்-அரசியல் பதட்டங்களின் ஒரு வெளிப்பாடாகும், அதுவும் குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க நெருக்குதல், மற்றும் இராஜாங்கரீதியில் கையாள்வதை இராணுவவாதம் மற்றும் போர்-ஆக்ரோஷத்தைக் கொண்டு அதிகளவில் மாற்றீடு செய்வது ஆகியவற்றின் வெளிப்பாடாகும். "shirtfront" என்ற இந்த வார்த்தை ஆஸ்திரேலிய கால்பந்து விதிமுறைகளிலிருந்து தருவிக்கப்பட்டதாகும், அது ஒரு விளையாட்டு வீரர் ஓர் எதிராளியை சாத்தியமானால் காயமேற்படுத்தும் வகையில் தரையில் வீழ்த்தும் நோக்கத்தோடு, தலைதெறிக்க ஓடி அவர்மீது மோதுவதைக் குறிக்கிறது. அந்த வார்த்தையை வேண்டுமானால் அப்போட் தற்செயலாக தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அந்த விரோத மனோபாவத்தின் கருத்துக்கள் ஏதோ தற்செயலான அபிப்ராயமல்ல. அது ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அமெரிக்க யுத்த முனைவிற்கு ஒரு முன்னணி சிப்பாயாக, அதிகளவில் உலகளாவிய பாத்திரம் வகித்து வருவதன் ஒரு வெளிப்பாடாகும். அது அபோட்டினது குரல் என்றபோதினும், அந்த சேதி வாஷிங்டனிலிருந்து வந்தது என்பதை அது புரிந்து கொண்டதாக ரஷ்ய அரசாங்கம் தெளிவுபடுத்தி இருந்தது. ஆஸ்திரேலியா ஏற்கனவே சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெப்புக்குள்" முழுவதுமாக ஒருங்கிணைந்துள்ளது. அமெரிக்க தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அக்கட்சியினது உள்பிரிவு கையாட்களின் ஒத்துழைப்புடன், ஜூன் 2010 உட்கட்சி ஆட்சிக்கவிழ்ப்பில் முன்னாள் தொழிற்கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட்டை வெளியேற்றியதன் மூலமாக அதன் பாத்திரம் தயாரிக்கப்பட்டது. கிழக்கு ஆசியாவில் அதிகரித்துவரும் சீனாவின் பொருளாதார பலத்துடன் அனுசரித்திருக்க வலியுறுத்திய ரூட்டின் வெளியேற்றம், அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஜப்பானிய பிரதம மந்திரி யுகியோ ஹடோயமா பதவியிலிருந்து நீக்கப்பட்டதைப் பின்தொடர்ந்து நடந்திருந்தது, இவரும் (ஹடோயமா) சீனாவை நோக்கிய நிலைநோக்கு கொண்ட ஒரு வெளியுறவு கொள்கையில் அக்கறை காட்டியிருந்தார். அந்த ஜூன் 2010 சம்பவங்களுக்குப் பின்னரில் இருந்து, ஆஸ்திரேலிய வெளியுறவு கொள்கை அமெரிக்காவுடன் இணைந்து நடைபோட தொடங்கியது. ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு, இது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவால் நவம்பர் 2011இல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தளத்திலிருந்து தான் அறிவிக்கப்பட்டது, இதில் சீனாவுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இராணுவ மற்றும் அரசியல் தாக்குதலுக்குள் ஆஸ்திரேலியா முன்பில்லாத அளவிலான-நெருக்கத்துடன் ஒருங்கிணைந்தது. கடந்த நவம்பரில், சென்காயு/தியாயு தீவுகளைச் சுற்றிய பகுதிகளை உள்ளடக்கி (இதன்மீது சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பிரச்சினை நிலவுகின்ற நிலையில்) வான்வழி பாதுகாப்பு அடையாள மண்டலம் ஒன்றை சீனா அறிவித்த பின்னர், ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலியா பிஷாப் பெய்ஜிங்கின் நடவடிக்கைகளைக் குறித்து சில மிகவும் கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தார். ஆஸ்திரேலியா பொருளாதாரரீதியில் சீனாவைச் சார்ந்திருக்கிறது என்ற மேலோங்கிய வழக்கமான அரசியல் அறிவுடமைக்கு முரணாக, ஜனவரியில், பிஷாப் வலியுறுத்துகையில், நிலவும் நிதியியல் உறவுகளின் நெருக்கம் மற்றும் அமெரிக்க முதலீட்டின் அளவை எடுத்துப்பார்க்கையில், அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் மிகவும் முக்கிய மூலோபாய பங்காளி மட்டுமல்ல, மாறாக அதன் மிக முக்கிய பொருளாதார பங்காளியும் கூட, என்றுரைத்தார். அதிகளவிலான ஆக்ரோஷ குணாம்சத்தை ஏற்றுள்ள அமெரிக்க நலன்களுடன் இயைந்த விதத்தில், ஆஸ்திரேலிய அரசியல், இராஜாங்க மற்றும் இராணுவ நடவடிக்கையின் அதிகரிப்பை இந்த ஆண்டு கண்டுள்ளது. ஜூலை 17இல் MH17 சுட்டு வீழ்த்தப்பட்ட போது, அந்த விபத்தைக் குறித்த உண்மைகள் தெளிவாக இல்லாததைக் குறிப்பிட்டு காட்டியவாறு, அபோட்டின் முதல் எதிர்வினை ஏதோவிதத்தில் எச்சரிக்கையூட்டுவதாக இருந்தது. ஆனால் அதற்கடுத்த சில மணிநேரங்களிலேயே, வாஷிங்டனுடன் ஒரு விவாதம் நடத்திய பின்னர் ஆனால் ஸ்தாபிக்கப்பட்ட உண்மைகளில் எந்த மாற்றமும் இல்லாதிருந்த நிலையிலேயே, அபோட் ரஷ்யாவின் பாத்திரத்தை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டார்—அந்தவொரு நிலைப்பாடு தான் கடந்த மூன்று மாதங்களாக ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தாலும் தக்க வைப்பட்டுள்ளது. வரவிருக்கின்ற ஜி20 உச்சிமாநாட்டை நடத்தும் நாடான ஆஸ்திரேலியா, ரஷ்ய ஜனாதிபதிக்கான அதன் அழைப்பைத் திரும்ப பெறுமா என்ற கேள்வி, ஏறத்தாழ ஆரம்பத்திலிருந்தே, எழுப்பப்பட்டு வந்தது. அக்டோபர் 11-12 வாரயிறுதியில், சர்வதேச நாணய நிதிய கூட்டத்திற்கு புறத்தே, புட்டினை தவிர்ப்பதை அமெரிக்கா விரும்பவில்லையென்பதை அது தெளிவுபடுத்தியபோது, அந்த கேள்வியும் தீர்வு செய்யப்பட்டது. அதுபோன்றவொரு நடவடிக்கைக்கு பிரிக்ஸ் குழுவில் உள்ள ஏனைய உறுப்பு நாடுகளின்—பிரேசில் இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவின்—தெளிவான எதிர்ப்பும் அதில் உக்குவிக்கும் காரணியாக இருந்தது. முன்னதாக, ரஷ்யா ஜி8 கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தது, ஆனால் ஜி20இல் அது சாத்தியமில்லையென அமெரிக்கா முடிவெடுத்தது. எவ்வாறிருந்த போதினும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்ய-விரோத வனப்புரையைத் தீவிரப்படுத்த அமெரிக்கா தீர்மானகரமாக உள்ளது. இதில் ஆஸ்திரேலியா ஒரு பிரத்யேக பாத்திரம் வகித்து வருகிறது. ஒரு நடுத்தர ஏகாதிபத்திய சக்தியாக, மூலோபாயரீதியில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் அது, பொருளாதாரரீதியிலோ அல்லது ஏனைய உறவுகளிலோ ரஷ்யாவைச் சார்ந்தில்லாமல், உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் முனைவை அமெரிக்கா பின்தொடர்ந்து செல்கையில், ஆஸ்திரேலியா வாஷிங்டனின் ஒருவித அரசியல் வேட்டைநாயாக செயல்படுவதில் சுதந்திரமாய் உள்ளது. ஒரு பிரச்சினை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறைக் கொண்ட ஒரே பகுதி சீனாவுடனான மோதல் மட்டுந்தான். ஆனால் அந்த பிரச்சினையும் நான்காண்டுகளுக்கு முன்னர் ரூட்டிற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பால் தீர்வு செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் புதிய உலகளாவிய பாத்திரம், மத்திய கிழக்கில் புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கான அதன் முழுமுதலான ஆதரவிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஈராக்கின் குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு இராணுவ விமானங்களை அனுப்புவதற்கும் மற்றும் அந்நாட்டில் சிறப்பு இராணுவ படைகளை உபயோகிப்பதற்கும் பொறுப்பேற்கின்ற, ஒபாமாவின் புதிய "விருப்ப கூட்டணியில்" (coalition of the willing) கையெழுத்திட்ட முதல் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அரசியல் மற்றும் இராணுவ முன்னணியில் அது வகிக்கும் பாத்திரத்தின் பாகமாக, ISISஆல் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) முன்னிறுத்தப்படும் அச்சுறுத்தலாக கூறப்படுவதை ஊதிப்பெரிதாக்க ஒரு பங்கரவாத அச்சுறுத்தல் மாற்றி ஒரு அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலமாக, யுத்த-விரோத எதிர்ப்பை திணறடிக்க முனைவதிலும் ஆஸ்திரேலியா பலமாக ஈடுபட்டுள்ளது. ஒரு பகிரங்கமான கழுத்தறுத்து கொல்லும் ISISஇன் சதி நடவடிக்கையை தடுப்பதற்காக என்று கூறி, ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய பொலிஸ் நடவடிக்கை ஒன்று செப்டம்பர் 18இல் நடத்தப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான காங்கிரஸ் மற்றும் சர்வதேச ஆதரவுக்கு தம்பட்டமடிக்க முனைந்த போது, இந்த நடவடிக்கை அவரால் ஆர்வத்துடன் கைப்பற்றப்பட்டது. வெறும் ஒரேயொரு நபர் பெரிதும் சந்தேகத்திற்கிடமாக, பயங்கரவாத-தொடர்பு கொண்டிருந்ததான குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்டதே அந்த வேட்டைகளின் இறுதி விளைவாக இருந்தது. அங்கே ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகரிக்கும் இராணுவவாதத்திற்கான மற்றொரு முக்கிய அம்சமும் உள்ளது, அது உலகளாவிய நிகழ்முறைகளை, அதாவது அதிகரித்துவரும் சமூக பதட்டங்களை வெளிப்புறமாக திசைதிருப்பிவிடும் முயற்சியை, மிகபலமாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஆஸ்திரேலிய முதலாளித்துவம், விரிவடைந்துவந்த சீனப் பொருளாதாரத்துடன் கொண்டிருந்த அதன் பொருளாதார இணைப்புகளின் காரணமாக, 2008 நிதியியல் முறிவின் ஆரம்ப தாக்கத்தில் ஓரளவுக்கு பாதிப்பைப் பெறவில்லை. ஆனால் இப்போதோ உலகளாவிய நெருக்கடியின் முழு தாக்கங்களும் உள்நாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றன, அதுவும் சில விவகாரங்களில் தாமதத்தின் காரணமாக கூடுதல் பலத்தோடு வந்து கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலிய பொருளாதாரத்தைக் காப்பாற்றி வைப்பதில் அதிமுக்கிய முக்கியத்துவம் கொண்டுள்ள சுரங்கத்துறை செழிப்பு, நிச்சயமாக முற்றிலும் முடிந்துவிட்டது. நிலக்கரி சுரங்கங்களில் பாரிய வேலைநீக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, அதேபோல நாட்டின் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதும் அரசு வரிவருமானத்தின் முக்கிய உட்கூறாக உள்ள இரும்பு தாது விற்பனையிலிருந்து கிடைத்த வருவாய்களும், இந்த ஆண்டின் இதுவரையிலான 40 சதவீத விலைவீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது, நிஜமான ஊதியங்கள் தேக்கமுற்றுள்ளன அல்லது வெட்டப்பட்டு வருகின்றன, வறுமை அதிகரிப்பில் உள்ளது. அனைத்து பிரதான முதலாளித்துவ சக்திகளின் நிலைமையுடன் பொதுவாக பொருந்திய விதத்தில், உத்தியோகப்பூர்வ அரசியல் ஸ்தாபகமோ மக்களின் இன்னும்-பரந்த பிரிவுகளால் அதிகரித்த விரோதத்துடன் பார்க்கப்படுகிறது. இந்த உள்ளடத்தில் நிலைநிறுத்தப்பட்டு, அப்போட்டினது புட்டின் "சட்டையைப் பிடித்து உலுக்கும்" மோதல் சர்வதேசரீதியில் இராணுவவாத அதிகரிப்பின் மற்றொரு வெளிப்பாடாகும், அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு மூலமாக நிறுத்தப்பட்டால் அன்றி, மற்றொரு உலக யுத்தத்திற்கு இட்டுச் செல்லாமல் விடாது. |
|