World Socialist Web Site www.wsws.org |
The US midterm elections and the bankruptcy of the capitalist system அமெரிக்க இடைதேர்தல்களும், முதலாளித்துவ அமைப்புமுறையின் திவால்நிலைமையும்
Joseph
Kishore வரவிருக்கின்ற அமெரிக்க இடைதேர்தல்கள், ஒபாமா நிர்வாகத்தின் கடந்த ஆறு ஆண்டு பதவிக்காலத்தின் மற்றும் ஒட்டுமொத்தமாக அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் இருப்புநிலைக் குறிப்பை வரைவதற்குரிய தருணமாகும். இன்னும் ஒருசில வாரங்களில் வரவிருக்கின்ற இந்த வாக்குப்பதிவு, ஒரு "கண்ணுக்கு புலப்படாத தேர்தலாகும்." இரண்டு பெரு நிறுவன கட்சிகளின் பிரச்சாரங்களுக்குள் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டு வருகின்ற அதேவேளையில், அது பரந்த பெரும்பான்மை மக்களிடையே எந்தவொரு உற்சாக சுவடையும் கொண்டு வரவில்லை. வாக்குப்பதிவு புதிய குறைந்த மட்டத்தை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது, அமெரிக்க தேர்தல்களாக இருந்தாலும் கூட, அது வழக்கமாக 50 சதவீதத்திற்கும் குறைந்த வாக்காளர்களைத் தான் ஈர்க்கிறது. 2014 தேர்தல்களுக்குக் காணப்படும் பரந்த ஆர்வமின்மையானது, அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் மீது இருந்துவரும் ஒரு நீடித்த கால ஏமாற்றஉணர்வின் விளைபொருளாகும். அங்கே யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதன் விளைவு இன்னும் மேற்கொண்டும் வலதிற்கு நகர்வதாக இருக்குமென்ற, முற்றிலும் சரியான, உணர்வு அதிகரித்து வருகிறது. 2008இல் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டமையும், அதன்பின்னர் அவரது நிர்வாகத்தினது போக்கும், அரசியல் அமைப்புமுறை மீதான தொழிலாள வர்க்கத்தின் மனோபாவத்தில் ஒருமுக்கிய திருப்புமுனையாக இருந்தது. ஆறாண்டுகளுக்கு முன்னர் ஒபாமா பிரச்சாரம், அரசியல் அமைப்புமுறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டுயிர்பெறச் செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட முயற்சியின் பாகமாக இருந்தது, அது சமூக நிலைமைகளின் நீடித்த சீரழிவு, முற்றிலும் மக்களால் விரும்பப்படாத ஈராக் யுத்த அதிர்ச்சி மற்றும் 2008 பொருளாதார நெருக்கடியின் அதிர்வு ஆகியவற்றால் உலுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வெறுக்கப்பட்ட ஜனாதிபதியாக பதவியிலிருந்து இறங்கிய ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு ஒபாமா மாற்றீடாக வந்தார். எவ்வித மதிப்பார்ந்த அரசியல் வரலாறும் கொண்டிராத ஒரு வேட்பாளரை "நம்பிக்கை" மற்றும் "மாற்றத்தின்" முகவராக காட்டி, அந்த தேர்தல் பிரச்சாரமோ பாரிய ஊடக சந்தைப்படுத்தலால் நிரம்பி வழிந்தது. ஆனால் பதவிக்கு வந்ததும், ஒபாமா அமெரிக்க வரலாற்றில் மிகமிக வலதுசாரி நிகழ்ச்சிநிரலை பின்பற்றினார். அவர் என்னவெல்லாம் வெற்று வாக்குறுதிகள் அளித்தாரோ அவை நேர்மையற்றவை என்பது விரைவிலேயே வெளிப்பட்டது, அத்துடன் அவரது நிர்வாகம் புஷ் நிர்வாகத்தினது கொள்கைகளையே தீவிரப்படுத்துவதற்குப் பொறுப்பேற்றது—அதாவது பணக்காரர்களுக்கு செல்வத்தைக் கைமாற்றும் ஒரு வரலாற்று பரிவர்த்தனையை மேற்பார்வை செய்வது, அன்னிய நாடுகளில் இராணுவ வன்முறையைத் தீவிரப்படுத்துவது, மற்றும் அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்துவது ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்றது. இந்த உள்ளடக்கத்தில், ஒபாமா மீது "இடதினால்"—அதாவது ஜனநாயக கட்சியின் மீது பிரமைகளை ஊக்குவித்தும், இருகட்சி முதலாளித்துவ அமைப்புமுறையின் அரசியல் மேலாதிக்கத்தை தக்க வைத்தும் தொழில் நடத்துகின்ற அரசியல் அமைப்புகள் மற்றும் பத்திரிகைகளால்—என்ன விதத்தில் பிரமைகள் தூண்டிவிடப்பட்டன என்பதை நினைவுக்கூர்வது மதிப்புடையதாக இருக்கும். ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டமை, இந்த சக்திகளிடையே, அமெரிக்க அரசியலை ஒரு புதிய போக்கில் நிறுத்தும் ஒரு "மாற்றத்திற்குரிய" நிகழ்வாக நீண்டகாலத்திற்கு கொண்டாடப்பட்டது. ஜனநாயக கட்சியின் தாராளவாத பிரிவாக தன்னைத்தானே காட்டிக்கொண்டு பதாகை-தாங்கும், Nation இதழின் பதிப்பாசிரியர் கத்ரீனா வான்டென் ஹூவெல், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஆகஸ்ட் 2008இல் எழுதுகையில், அவர் (ஜனாதிபதியாக) தேர்ந்தெடுக்கப்பட்டால், “புதிய சாத்தியக்கூறுகள் பிறக்கும்" என்று எழுதினார். அவரது பிரச்சாரத்தில் அவர் சலுகைகளை அறிவித்தபோது, வான்டென் ஹூவெல் எழுதினார், “தவறுக்கிடமின்றி, [ஒபாமாவின்] நியமனம் சீர்திருத்தத்தின் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிதிறக்கும்." இதே வார்த்தைகள் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பால் (ISO) எதிரொலிக்கப்பட்டது, அதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஜனநாயக கட்சி அரசியலை "சோசலிசத்தின்" வலையில் பிணைப்பதாக இருந்தது. நவம்பரில் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வென்றதும், ISOஇன் Socialist Worker இதழ், “அமெரிக்க அரசியலின் புதிய வடிவம்" என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில் எழுதியது, “பராக் ஒபாமாவின் மாபெரும் வெற்றியானது... அடிமைமுறை இருந்த ஒரு நாட்டில் ஓர் ஆபிரிக்க அமெரிக்கர் மிக உயர்ந்த பதவியை ஏற்பதென்பது, அமெரிக்க அரசியலில் ஒரு பெரும் மாற்றத்திற்குரிய சம்பவமாகும்." (அழுத்தம் சேர்க்கப்பட்டது) ஒருசில வாரங்கள் கழித்து ("மிகப்பெரிய எதிர்பார்ப்புகள்" என்பதில்) சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதோடு "நவதாராளவாத சகாப்தம்" முடிந்துவிட்டதாக வலியுறுத்தியது. “வெறுமனே பொருளாதாரீதியில் அல்ல, மாறாக வெளியுறவு கொள்கை மற்றும் இன்னும் கூடுதலான விவகாரங்களிலும், அமெரிக்கா முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களின் அளவு, ஒபாமாவை வேறொரு நிகழ்ச்சிநிரலை நோக்கி உந்தி வருகிறது," என்று குறிப்பிட்டது. இதேபோன்ற கருத்துக்களை ஜனநாயகக் கட்சியின் சுற்றுவட்டத்தில் செயல்பட்டுவரும் எண்ணிலடங்கா பத்திரிகைகளின் ஆவணக்கிடங்கில் பார்க்கலாம். முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியாக அவை ஒபாமாவின் கௌரவத்தின் மீது பலமாக சார்ந்திருந்த நிலையில், ஒரு வரலாற்று மாற்றம் என்ற அவற்றின் வாதங்கள் ஓர் அரசியல் மோசடியாக நிரூபிக்கப்பட்டன. என்னவெல்லாம் சிறியளவிலான கொள்கை சரிகட்டல்கள் செய்யப்பட்டதோ அவை, ISO மற்றும் Nation போன்ற அமைப்புகளுக்கு, அடித்தள ஆதரவை வழங்குகின்ற உயர்தர மத்தியதட்டு வர்க்கத்தின் அடையாள அரசியலை மையமாக கொண்டவர்களின் குறிப்பிட்ட கவலைகளின் மீது அக்கறை செலுத்தி இருந்தன. ISO, Nation மற்றும் அவை போன்றவை, ஒபாமாவை ஊக்குவித்தமை தீர்க்கமான அரசியல் நோக்கங்களுக்கு சேவை செய்தன. அது வெறுமனே தவறான புரிதல் சார்ந்த ஒரு பிரச்சினை அல்ல, மாறாக திட்டமிட்ட ஏமாற்றுதலாகும். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், புதிய “இடது" பிரபலங்களாக கூறப்படுபவர்களை (பில் டு பிளாசியோ, எலிசபெத் வாரென் மற்றும் அவர்களைப் போன்றவர்களை) மேலுயர்த்துவதன் மூலமாக அல்லது அதே நோக்கத்திற்கு சேவை செய்ய பெயரளவில் ஜனநாயகக் கட்சிக்கு வெளியே இருப்பவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியின் மூலமாக (அதாவது தொழிற்சங்கங்களின் கூட்டணியோடு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு 15 டாலர் குறைந்தபட்ச கூலி பிரச்சாரமான சோசலிஸ்ட் அல்டர்நேட்டிவ்வின் சீட்டில் சாவண்ந்த் பிரச்சாரம், இதர பிறவற்றின் மூலமாக), ஜனநாயக கட்சிக்காரர்களுக்கான ஆதரவை மீண்டும்-உயர்த்துவதற்கு அவர்கள் ஓய்வில்லாமல் முனைந்து வருகிறார்கள். அதற்கு முரண்பட்ட விதத்தில், கடந்த ஆறு ஆண்டுகால சம்பவங்களோ உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியால் (SEP) முன்வைக்கப்பட்ட ஆய்வுமுடிவுகளையே எடுத்துக்காட்டி உள்ளன. அதன் 2008 தேர்தல் அறிக்கையில், SEP குறிப்பிடுகையில், “அடுத்த ஜனாதிபதி—அவரது பெயர் மெக்கெயினாக இருக்கட்டும் அல்லது ஒபாமாவாக இருக்கட்டும், யாராக இருந்தாலும்—ஏறத்தாழ உடனடியாக அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவார்," என்று எச்சரித்தது. ஒபாமா வெற்றி பெற்றதற்குப் பின்னர், WSWS குறிப்பிடுகையில், ஒபாமாவின் கொள்கைகள் "மக்கள் எதிர்பார்ப்பின்படி தீர்மானிக்கப்படாது, மாறாக அமெரிக்க நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை நலன்களால் தீர்மானிக்கப்படும்," என்று குறிப்பிட்டது. நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட இந்த முன்கணிப்புகள், அரசியல் என்பது வர்க்க நலன்களின் ஒரு வெளிப்பாடு என்ற தத்துவார்த்த புரிதலில் வேரூன்றி இருந்தது. அரசு எந்திரம்—அதாவது இரண்டு பெரு வணிக கட்சிகள், பரந்த ஊடகம், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ், மற்றும் ஜனநாயகக் கட்சியின் விளிம்பாக இருக்கும் அமைப்புகளின் வலையமைப்பு ஆகிய அனைத்தும், ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய நலன்களை மற்றும் அது எதன் அடித்தளத்தில் இருக்கிறதோ இந்த சமூக அமைப்புமுறையை, அதாவது முதலாளித்துவத்தை, தாங்கிப்பிடிக்கின்றன மற்றும் பாதுகாத்து வருகின்றன. ஒரு தீவிர சமூக மாற்றத்திற்கான அவசியம் குறித்த உணர்வு அமெரிக்காவிற்குள் அதிகரித்து வருகிறது. வரவிருக்கின்ற தேர்தல் மீதான பாரிய அதிருப்தியை வெறுமனே ஒரு அக்கறையற்ற விடயமாக பார்ப்பது தவறாக போய்விடும். இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளும் பணக்காரர்களுக்கு சாதகமாகவே பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள் என்ற ஓர் ஒட்டுமொத்த மற்றும் பொதுவான கருத்துடன், அரசியல் அமைப்பின் மீது அங்கே ஒரு பரந்த வெறுப்பு நிலவுகிறது. ஆனால், தொழிலாளர்கள் வேறு வடிவத்தில் உள்ள அதே பொறிக்குள் விழுந்துவிடாமல் தடுக்க, அனுபவத்தின் அடிப்படையில் வேரூன்றியுள்ள இந்த உள்ளுணர்வை, ஒரு நனவுப்பூர்வமான அரசியல் புரிதலாக மாற்றியாக வேண்டும். அனைத்திற்கும் மேலாக, ஒபாமா நிர்வாகத்தின் போக்கு வெறுமனே ஒரு தனிநபரின் அல்லது நிர்வாகத்தின் விளைபொருளல்ல, மாறாக—அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும்—ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறையினது என்பதைப் புரிந்து கொள்ள செய்ய வேண்டியது அவசியமாகும். முதலாளித்துவ அரசுக்குள் நபர்களது சேர்க்கையை மாற்றுவதன் மூலமாக எதையும் மாற்றிவிட முடியாது. என்ன அவசியப்படுகிறதென்றால் ஒரு சமூக புரட்சியாகும்—தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்க மற்றும் பொருளாதாரத்தின் மீது ஜனநாயக கட்டுப்பாட்டின் புதிய வடிவங்களை ஸ்தாபிக்க, அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்காக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஐக்கியமே அவசியமாகும். இந்த பணியை நடைமுறைப்படுத்த, ஒரு அரசியல் தலைமை—சோசலிச சமத்துவ கட்சி மற்றும் சர்வதேச அளவில் உள்ள அதன் சகோதர கட்சிகளை—கட்டியெழுப்பப்பட வேண்டும். சோசலிச சமத்துவ கட்சியில் இணைந்து சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக இந்த முன்னோக்கிற்காக போராட, நாம் எமது ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். |
|