தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French President Hollande moves to end universality of family benefits பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்ட் அனைவருக்குமான குடும்பநல உதவிகளை முடிவுக்குக் கொண்டு வர நகர்கிறார்
By Stéphane Hugues Use this version to print| Send feedback குடும்பநல உதவிகள் பெறுவதற்கு தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை (means-testing) அறிமுகப்படுத்த, பிரெஞ்சு அரசாங்கம், நேற்று, 2015 வரவு-செலவு திட்டக்கணக்கில் குடும்பநல உதவிகள் பகுதியில் ஒரு கடைசி-நிமிட மாற்றத்தைச் செய்தது. இது குடும்பநல உதவிகளை 700 மில்லியன் யூரோவிலிருந்து 800 மில்லியனாக வெட்டுக்களை ஆழப்படுத்தும் ஒரு பரந்த தொகுப்பின் பாகமாகும். தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்துவதானது, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரான்சின் சமூகநல உதவிகளுக்கான வழிகாட்டும் கோட்பாட்டை உடைக்கிறது: அதாவது அது "அனைவருக்கும்" கிடைப்பதைத் தடுக்கிறது. ஒவ்வொருவரும், அவர்களின் வருமானம் என்னவாக இருந்தாலும், சேவைகள் வடிவத்தில் அல்லது பண வடிவத்தில் ஒரேமாதிரியான சமூகநல உதவிகளைப் பெற வேண்டுமென இக்கோட்பாடு கூறுகிறது. இந்நடவடிக்கை, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அவரது தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் மற்றொன்றையும் மீறுவதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மார்ச் 2012இல், அவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவர் தெரிவித்திருந்தார்: “அனைவருக்கும் குடும்பநல உதவிகள் கிடைப்பதுடன் நான் இணைந்திருப்பேன். அவை அனைத்து குடும்ப வடிவங்களையும், தேசம் அங்கீகரித்து விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிவகையாக உள்ளன. ஆகவே அவை தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு உட்படுத்தப்படாது," என்றார். ஹோலாண்ட் ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச்சில் தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கும் முறையின் யோசனையை முன்னுக்குக் கொண்டு வந்திருந்தார். இருந்த போதினும், வலதுசாரி மக்கள் பெரும்பான்மை சங்கம் (UMP), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), மற்றும் குடும்ப அமைப்புகளின் தேசிய சங்கம் ஆகியவை அம்முறையை எதிர்த்ததால், அவர் பின்வாங்கி விட்டார். இம்முறை, அரசாங்கம் அதன் காலதாமதமான சட்டதிருத்தத்தை நியாயப்படுத்த, சோசலிஸ்ட் கட்சியின் (PS) நிர்வாகிகளது ஒரு குழுவை ஆதரவுதிரட்டுவதற்கு பயன்படுத்தி இருந்தது. அரசாங்கத்தின் சட்டதிருத்தத்தின்படி, இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் 6,000 யூரோவுக்கு அதிகமாக இருந்தால், குடும்பநல உதவிகள் 50 சதவீதம் வெட்டப்படும். மூன்று குழந்தைகள் இருந்தால் உச்சவரம்பு 6,500 யூரோவாகும்; நான்கு குழந்தைகள் என்றால் 7,000 யூரோவாகும், இதுபோல இன்னும் சில. இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பம் 8,000 யூரோ என்ற இரண்டாவது உச்சவரம்பில் இருந்தால் (அதற்கடுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக 500 யூரோ உச்சவரம்பு என முந்தைய உச்சவரம்பைப் போலவே), அவர்களுக்கு குடும்பநல உதவி 75 சதவீதம் குறைக்கப்படும். இத்தகைய புதிய வெட்டுக்களை அரசாங்கம் ஏற்பதென்பது, உண்மையில் வெறுமனே மாதம் ஒன்றுக்கு 6,000 யூரோவுக்கு மேல் வருவாய்களைக் கொண்டுள்ள பிரெஞ்சு குடும்பங்கள் மீதான தாக்குதல் என்பதையும் விட மிக பரந்த தாக்கங்களைக் கொண்டுள்ளது. யுத்தம் முடிந்த பின்னர் பிரான்சில் தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்ட நலன்புரி செலவினங்கள் மற்றும் சமூக உரிமைகளை அழிப்பதற்கு ஒரு வெள்ளோட்டமாக, அது முதலில் வளமான மத்தியதர வர்க்க அடுக்குகளுக்கான நலன்புரி அரசின் குடும்பநல உதவிகள் மற்றும் ஏனைய சமூக திட்டங்களின் ஆதரவை வலுவிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பநல உதவிகளில் அந்த வெட்டுக்கள், மக்களின் வளமான அடுக்குகளுக்கு ஏறத்தாழ அர்த்தமற்றதாகும் என்பதுடன், ஒட்டுமொத்தமாக குடும்பநல உதவிகளை நீக்குவதில் அவர்களது ஆதரவை ஊக்குவிக்கும். குடும்பநல உதவிகளில் 100 மில்லியன் யூரோ வெட்டு என்பது ஐரோப்பிய கமிஷனுக்கு காட்டப்படும் ஒரு சிறிய சைகை தான். பிரெஞ்சு வரவு-செலவு திட்டக்கணக்கில் போதியளவுக்கு ஆழமான வெட்டுக்கள் இல்லையென தாக்கி வரும் ஐரோப்பிய நிர்வாகிகளிடமிருந்து வந்த விமர்சனங்களுக்குப் பின்னர், ஐரோப்பிய கமிஷன் பிரெஞ்சு வரவு-செலவு திட்டகணக்கைத் தற்போது விசாரணைக்குட்படுத்தி வருகிறது. பிரெஞ்சு வரவு-செலவு திட்டகணக்கின் தற்போதைய வடிவம், பற்றாக்குறையை பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.3 சதவீதத்திற்கு சமமான வைக்க திட்டமிடுகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம் வரவு-செலவு திட்டகணக்கில் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாதென ஆணையிடுகிறது. குடும்பநல உதவிகளில் கூடுதலாக 100 மில்லியன் யூரோக்கள் வெட்டு என்பது பிரெஞ்சு GDPஇல் மிகச்சிறிய சதவீதத்தையே பிரதிநிதித்துவம் செய்கிறது, இருப்பினும், அவ்விதத்தில் வரவு-செலவு திட்டகணக்கின் மீது புருசெல்ஸின் முடிவு செல்வாக்கு செலுத்துவதை விரும்பாதது போல காட்டிக் கொள்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அது பெற்றிருந்த புதிய அதிகாரங்களுடன், ஐரோப்பிய கமிஷன் இன்னும் ஆழமான வெட்டுக்களைச் செய்வதற்கு வரவு-செலவு திட்டக்கணக்கைத் திருத்தியமைக்குமாறு பாரீஸை நிர்பந்திக்கக்கூடும்; பாரீஸ் மறுத்தால், ஐரோப்பிய கமிஷன் மொத்தமாக பில்லியன் கணக்கான யூரோ மதிப்பில் தடைகளை விதிக்கக்கூடும். இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற பிரான்சின் பிரதான போலி-இடது குழுக்களின் அங்கீகாரத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட, சோசலிஸ்ட் கட்சியின் ஹோலாண்டால் நடத்தப்படும் அனைவருக்குமான குடும்பநல உதவிகள் மீதான தாக்குதல், பரந்த வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்நடவடிக்கை ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தோல்வியைப் பிரதிநிதித்துவம் செய்வதுடன், அது பில்லியன் கணக்கான ஏன் ட்ரில்லியன் கணக்கான யூரோக்களை வங்கிகளுக்கு கையளிப்பதற்கு இடையே, உழைக்கும் மக்களுக்கு தேவையான பணத்தைக் காண இயலாமல், அதற்கு மாறாக தொழிலாளர்களின் அடிப்படை சமூக உரிமைகளைத் தாக்க நகர்ந்து வருகிறது. அனைவருக்கும் உதவிகள் என்பது தேசிய எதிர்ப்பு இயக்க கவுன்சிலின் (Conseil National de la Résistance -CNR) 1944 வேலைத்திட்டத்தின் பாகமாக இருந்தது. அந்த கவுன்சில் நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு ஒத்துழைத்த விச்சி ஆட்சியும் தூக்கியெறியப்பட்ட போது ஒரு முதலாளித்துவ பிரெஞ்சு நான்காம் குடியரசை ஸ்தாபித்த அரசியல் சக்திகளால் ஒருங்கிணைந்து கொண்டு வரப்பட்டதாகும். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), அத்துடன் தளபதி சார்லஸ் டு கோல்க்கு விசுவாசமான வலதுசாரி மற்றும் சமூக-ஜனநாயக சக்திகளும் இந்த CNRஇல் உள்ளடங்கி இருந்தன. இவ்விதத்தில் CNR இன் வேலைத்திட்டம், “பொருளாதார தலைமையைக் கொண்டு மிகத்திரண்ட பொருளாதார மற்றும் நிதிய பிரபுத்துவ எச்சசொச்சங்களை அகற்றுவதை உள்ளடக்கிய, ஒரு நிஜமான பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகத்தை உருவாக்குவது" என்று யுத்தத்திற்குப் பிந்தைய பிரெஞ்சு முதலாளித்துவத்திற்காக சூளுரைத்தது. இந்த வேலைத்திட்டம், பிரான்சிலும் சரி ஐரோப்பா முழுவதிலும் சரி, பாசிசத்தின் குற்றங்களால் முதலாளித்துவம் முற்றிலுமாக மதிப்பிழந்து போனபோது நடைமுறைப்படுத்தப்பட்டதாகும். ஆகவே மருத்துவ பராமரிப்பு, குடும்பநல உதவிகள், மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற பல விட்டுக்கொடுப்புகளை உள்ளடக்க முதலாளித்துவவாதிகள் நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள், அத்துடன் இத்தகைய விட்டுக்கொடுப்புகளின் அடிப்படையில் தான் ஸ்ராலினிஸ்டுகள் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய ஒரு சமூக புரட்சியை ஒடுக்கி இருந்தார்கள். இன்றோ, பல தசாப்தங்களுக்குப் பின்னர், அனைத்து வகையறாக்களையும் சேர்ந்த முதலாளித்துவ கட்சிகள் படிப்படியாக இத்தகைய உதவிகளை வெட்டி வருகின்றன. இது, அதுபோன்ற சமூக உரிமைகள், முதலாளித்துவ ஆட்சியுடன் அடிப்படையிலேயே பொருந்தாதிருப்பதை இன்னும் அதிகமாக வெட்டவெளிச்சமாக்கி காட்டுகிறது. அவற்றைப் பாதுகாக்க, பிரான்சிற்கும் மற்றும் ஐரோப்பா முழுவதற்குமான நிகழ்ச்சிநிரலை அமைக்கின்ற புதிய "மிகப்பெரிய பொருளாதார மற்றும் நிதிய பிரபுத்துவ எச்சசொச்சங்களுக்கு" எதிரான ஒரு போராட்டத்தை தொழிலாள வர்க்கம் மீண்டும் முகங்கொடுக்கிறது. |
|
|