தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Storm clouds gather over world economy உலக பொருளாதாரத்தைச் சுற்றி கருமேகம் சூழ்கிறது
By Nick Beams Use this version to print| Send feedback ஓர் ஆழமடைந்துவரும் பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடிக்கு மத்தியில், வாஷிங்டனில் வாரயிறுதியில் நடந்திருந்த சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டங்கள், உலக பொருளாதார மீட்சிக்கான எவ்வித சாத்தியக்கூறும் இல்லாமல் முடிந்திருந்தன. 2008இல் வெடித்த உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் யூரோ மண்டலம் அதன் மூன்றாவது பின்னடைவுக்குள் நுழைய தொடங்கி இருப்பதாக தெரிகிறது, அத்துடன் உலக பிரதான மத்திய வங்கிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொள்கைகள் மற்றொரு பொறிவுக்கு நிலைமைகளை உருவாக்கி வருகின்றன என்ற அச்சங்களும் அங்கே நிலவுகின்றன. ஜேர்மனி ஒரு பின்னடைவுக்குள் நகரக்கூடுமென்ற புள்ளிவிபரங்கள் வெளியானதை பின்தொடர்ந்து, IMF மற்றும் உலக வங்கியின் கூட்டங்கள் நடந்திருந்தன. அங்கே ஜூலையிலிருந்து தொழில்துறை உற்பத்தி 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது, இது ஜனவரி 2009க்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும். ஒரு கொள்முதல் மேலாண்மை ஆய்வின்படி, 2009க்குப் பின்னர் இந்த செப்டெம்பருக்கான புதிய கேட்பாணைகள் (New orders) தான் அவற்றின் மிக வேகமான வேகத்தில் சரிந்திருந்தன. முதலீட்டு பொருட்களின் உற்பத்தி ஆகஸ்டில் 8.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது, இடைநிலை பொருட்கள் 1.9 சதவீதம் குறைந்தன, நுகர்வு பொருட்கள் 0.4 சதவீதம் சரிந்தது, மற்றும் கட்டுமானம் 2 சதவீதம் அளவுக்கு குறைந்தது. வெறும் எரிசக்தித்துறை வெளியீடு மட்டுமே 0.3 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருந்தது. IMF அதன் 2014க்கான ஜேர்மன் வளர்ச்சி முன்மதிப்பீட்டை 1.9 சதவீதத்திலிருந்து 1.4 சதவீதமாக வெட்டியது, அத்துடன் அதன் 2015க்கான கணிப்பையும் 1.7இல் இருந்து 1.5 சதவீதமாக கீழிறக்கியது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஜேர்மனியின் பொருளாதாரம் சுருங்கி இருந்தது, ஆகவே இந்த கணிப்புகளே கூட மிகவும் தளரா-நம்பிக்கையின் அடிப்பையில் இருக்கக்கூடும். பெரிதும் ஏற்றுமதிகளைச் சார்ந்திருக்கும் ஜேர்மனி, அதன் மிகப்பெரிய ஒரே சந்தையான ஐரோப்பாவெங்கிலுமான மந்தநிலைமையால், மற்றும் அதன் மற்றொரு முக்கிய சந்தையான பிரேசிலின் பின்னடைவினாலும் மற்றும் சீன வளர்ச்சி மெதுவாகி இருப்பதாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய மந்தநிலை மற்றும் மத்திய வங்கி கொள்கைகளது வழிகாட்டலின் மீது அதிகரித்துவரும் நிச்சயமற்றதன்மை, உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் புவிசார்-அரசியல் பதட்டங்கள் என இவையனைத்தும், நிதியியல் சந்தைகளில் கொந்தளிப்பான நிலைமைகளை உருவாக்க ஒருங்கிணைந்து வருகின்றன. S&P 500 குறியீடு 2009க்குப் பின்னர் மூன்று நாட்களாக அதன் மிக மோசமான இழப்பை அனுபவித்து வரும் நிலையில் தான், இந்த வார வோல் ஸ்ட்ரீட் வர்த்தகம் தொடங்கியது. இபோலா நெருக்கடியின் காரணமாக விமானச்சேவை பங்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் மற்றும் எண்ணெய் விலைகள் நான்காண்டுகளில் அதன் மிகக்குறைந்த புள்ளியை எட்டியதால் ஏற்பட்ட எரிசக்தித்துறை பங்குகளின் வீழ்ச்சியும், S&P 500 குறியீடு சரிவதற்கு இட்டுச் சென்றிருந்தன. மற்றொரு நிதியியல் நெருக்கடி மீதான அச்சங்கள், நேற்று ஒரு திட்டமிடல் ஒத்திகையை ஏற்பாடு செய்வதற்கு அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நிதியியல் அதிகாரிகளை ஆயத்தப்படுத்தியது, அதில் அவர்கள் 2008 நெருக்கடியிலிருந்து படிப்பினைகளைப் பெற்றிருந்தார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முனைந்தார்கள். ஞாயிறன்று அந்த திட்டமிடல் ஒத்திகை குறித்து எழுதிய Guardian இதழின் பொருளாதாரத்துறை எழுத்தாளர் லாரி எலியாட், IMF கூட்டத்தின் சூழலைத் தொகுத்து வழங்கியிருந்தார். "அந்த நிதியத்தின் ஆண்டு கூட்டம் ஏதோ 1930களில் சர்வதேச இராஜாங்க அதிகாரிகள் சர்வதேச சங்கத்தில் ஒன்றுகூடியதைப் போன்றிருந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் மற்றொரு யுத்தத்தைத் தவிர்க்கும் பிரயத்தனத்தில் இருந்தார்கள், இருந்தும் அதை எவ்வாறு செய்வதென்பதில் தெளிவில்லாமல் இருந்தார்கள். அவர்கள் இருண்ட சக்திகள் ஒன்றுகூடுவதைக் காண்கின்றார்கள், ஆனால் அதற்குரிய ஆயுதங்களோ அல்லது அவற்றைத் திறமையாக கையாளக்கூடிய சாதுர்யமோ அவர்களுக்கு இல்லை." நிதியியல் அமைப்புமுறைக்குள் பணத்தைப் பாய்ச்சுவதானது, விரிவடைந்த முதலீடு மற்றும் அதிகரித்த உற்பத்தி மூலமாக நிஜமான பொருளாதாரத்தை ஊக்குவிக்கவில்லை, மாறாக அதிகப்படியான நிதியியல் அபாய-முன்னெடுப்புக்கு மட்டுமே இட்டுச் சென்றுள்ளதை IMFஉம் மற்றும் மத்திய வங்கியாளர்களும் நன்கு அறிந்துள்ளதாக எலியாட் சுட்டிக் காட்டினார். அதேநேரத்தில், ஊகவணிகத்தை நிறுத்த வட்டிவிகிதங்களை உயர்த்துவது அவற்றின் பொருளாதாரங்களை பின்னடைவுக்குத் தள்ளுமென்று அவர்கள் அஞ்சுகின்றார்கள், ஆகவே "அவர்கள் விரல்களைப் பிசைந்து கொண்டு நல்லது நடக்குமென்ற நம்பிக்கையில்" இருக்கிறார்கள். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ஏதோவொன்று “ஐரோப்பாவில் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது, ஆனால் அதுகுறித்து எதுவும் செய்ய அது சக்தியற்று இருக்கிறதென்பது" IMFக்குத் தெரியும் என்றார். திரண்டுவரும் மந்தநிலைக்குத் தெளிவான ஆதாரத்தை, பொருட்களது கூர்மையான விலை வீழ்ச்சியே வழங்கியது. எண்ணெய் விலைகள் "கட்டுப்பாடில்லாத வீழ்ச்சியில்" இருப்பதாக செய்திகள் தெரிவித்தன, விலை நிர்ணயித்திற்குரிய பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) இந்த ஆண்டின் மத்தியிலிருந்து 24 சதவீதம் குறைந்துள்ளது. எண்ணெய் விலைகள் "ஏராளமான வினியோகங்களாலும்" மற்றும் தேவை குறைவாலும் "விலை குறைந்துள்ளதாக" சர்வதேச எரிசக்தி ஆணையம் தெரிவிக்கிறது. கட்டுமானத்துறையில் எஃகு பாத்திரம் வகிப்பதால் முதலீட்டின் ஒரு முக்கிய குறியீடாக உள்ள இரும்பு தாதுவின் விலை, ஐந்தாண்டுகளில் அதன் குறைந்த மட்டமாக இந்த ஆண்டு 41 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் புளூம்பெர்க் தொழில்துறை உலோகங்களின் குறியீடு, அதன் அதிகபட்ச புள்ளியிலிருந்து 37 சதவீதம் மற்றும் 2007இல் எட்டிய மட்டங்களை விட 50 சதவீதம் குறைவாக சரிந்துள்ளது. தங்கத்தின் விலை 2011இல் அது எட்டியதிலிருந்து 38 சதவீதம் குறைந்துள்ளது. மற்றொரு முக்கிய குறியீடான வேளாண் பொருள் விலைகளும் கூர்மையாக சரிந்துள்ளன. சோளத்தின் விலைகள் ஜூனில் இருந்ததை விடவும் 22 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது, கோதுமை அதே காலக்கட்டத்தில் இருந்ததை விடவும் 16 சதவீதம் குறைந்துள்ளது, மற்றும் சோயாபீன் நான்காண்டுகளில் அவற்றின் மிகக் குறைந்த மட்டத்திற்கு 28 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிகரித்துவரும் மந்தநிலை, நிதியியல் சந்தைகளின் நிச்சயமற்றதன்மை மற்றும் குழப்பத்தால் சூழ்ந்துள்ளது. கடந்த வாரம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆணையம் அதன் கொள்கை-வகுக்கும் கமிட்டியின் செப்டம்பர் கூட்டத்தின் குறிப்புகளை வெளியிட்டது. அது "பொருளாதார வளர்ச்சியின் நீடித்த வீழ்ச்சி மற்றும் யூரோ பகுதி பணவீக்கம் ஆகியவை டாலர் மதிப்பை மேற்கொண்டும் உயர்த்த இட்டுச் செல்லக்கூடுமென்றும், அமெரிக்க வெளியுறவு துறையின் மீது கேடான விளைவுகளை ஏற்படுத்துமெனவும் பங்குபெற்றவர்களில் சிலர் கவலை வெளியிட்டதாக" குறிப்பிட்டது. பெடரலின் துணை-தலைவர் ஸ்டான்லெ பிஸ்செர் கூறுகையில், அமெரிக்க பண்டங்கள் மற்றும் சேவைகளின் உலகளாவிய தேவை அளவின்படி டாலர் மதிப்பு மீதான தாக்கத்தை மத்திய வங்கி கண்காணிக்குமென தெரிவித்துள்ளார். பெடரல் எப்போது என்ன வேகத்தில் வட்டிவிகிதங்களை மிக சாதாரண மட்டங்களுக்கு உயர்த்த முனையுமென அந்த குறிப்புகள் கேள்வி எழுப்புகின்றன. வட்டிவிகிதங்களை உயர்த்துவதில் பெடரல் வெளிப்பார்வைக்கு ஒரு தெளிவற்ற பாதையில் இருக்கின்ற நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கியும் (ECB) மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பானும் வட்டிவிகிதங்களை குறைத்து வருகின்றன என்ற உண்மையிலிருந்து கொந்தளிப்பு அபாயம் வருகிறது. இது முன்னெடுக்கப்படும் வர்த்தகம் (carry trades) என்றழைக்கப்படுதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது, இத்தகைய வர்த்தகங்களில் முதலீட்டாளர்கள் சர்வதேச சந்தைகளில் குறைந்த வட்டிவிகிதங்களில் கடன்வாங்கி அமெரிக்க சொத்துக்களில் முதலீடு செய்வார்கள், அது டாலரின் மதிப்பை உயர்த்தி அமெரிக்க ஏற்றுமதிகளைப் பாதிக்கிறது. பெடரல் கொள்கையின் வழிகாட்டல் மீதான நிச்சயமற்றதன்மை, அமெரிக்க பங்குச்சந்தைகளின் இயக்கத்தைக் கவனித்துவரும் VIXஇன் ஏற்ற-இறக்க குறியீட்டில் ஒரு கூர்மையான உயர்வுக்கு பங்களிப்பு செய்துள்ளது. அது "பீதியூட்டும் அமைதி" என்று வர்ணிக்கப்பட்ட மாதங்களைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் 21 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. நிதியியல் சந்தைகளின் பிரச்சினைகள் பிரதான பொருளாதார சக்திகளின் கொள்கைகளில் வேறுபாடுகளை அதிகரிக்கின்றன, அவை IMF கூட்டத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் பகிரங்கமாக வெளிப்பட்டது. ஜேர்மனி மீது அவரது கோபத்தை மையப்படுத்தி, முன்னாள் அமெரிக்க கருவூலத்துறை செயலர் லாரன்ஸ் சம்மர்ஸ் (இவர் கடந்த ஆண்டு உலக பொருளாதாரத்தின் "நீடித்த மந்தநிலைமைக்கான" சாத்தியக்கூறு குறித்து எச்சரித்திருந்தார்), ஐரோப்பாவின் "படுமோசமான" பொருளாதார செயல்திறனை ஜப்பானின் இரண்டு-தசாப்தகால நீண்ட மந்தநிலைமை மற்றும் 1930களின் பெருமந்தநிலைமையுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார். ஜேர்மன் நிதிமந்திரி வொல்ஃப்காங் ஷொய்பிள, இந்த நெருக்கடி ஐரோப்பிய கொள்கை தோல்வியின் விளைவு என்ற அந்த கருத்தை நிராகரித்து, திருப்பித் தாக்கினார். “வெளிப்படையாக கூறுவதானால், இந்த நெருக்கடிக்கு காரணமே அமெரிக்கா தான்," என அவர் தெரிவித்தார். அமெரிக்கா, அத்துடன் IMFஉம், நிதியியல் ஊக்கப்பொதியை அதிகரிப்பதற்காக அரசாங்க பத்திரங்களை வாங்க ECB அதன் சொத்து-வாங்கும் திட்டத்தை விரிவாக்க வேண்டுமென விரும்புகிறது. ஆனால் ECB தலைவர் மரியோ திராஹி கூறுகையில், ECB அதனால் என்ன செய்ய முடியுமோ அந்த மட்டத்திற்கு அருகாமையில் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 2012இல், “என்னவெல்லாம் செய்ய முடியுமோ” ECB அதை செய்யுமென அறிவித்ததன் மூலமாக, திராஹியால், ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுக்கல் மற்றும் ஏனைய அதிக கடன்பட்ட யூரோ மண்டல நாடுகளில் தோன்றிய நிதியியல் நெருக்கடியைச் சமாளிக்க முடிந்திருந்தது. எவ்வாறிருந்த போதினும், ஆறு ஆண்டுகால மத்திய வங்கி தலையீடுகள் எடுத்துக்காட்டி உள்ளதைப் போல, பணத்தைப் பாய்ச்சுவது நிஜமான பொருளாதாரத்தில் அதிகளவிலான முதலீட்டையோ அல்லது உற்பத்தியையோ கொண்டு வர முடியாது என்பதால், அங்கே தான் நெருக்கடி இப்போது மையங்கொண்டிருக்கிறது. வங்கிகள், நிதியியில் அமைப்புகள் மற்றும் அதி-செல்வந்த ஊகவணிகர்கள் மட்டுமே இதில் ஆதாயமடைந்தவர்கள் ஆவர். அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய மத்திய வங்கியிலேயே ஆழ்ந்த பிளவுகள் உள்ளன. ஜேர்மன் பிரதிநிதிகள் ஏற்கனவே தற்போதைய சொத்து வாங்கும் சுற்றுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதுடன், அரசு பத்திரங்கள் வாங்கும் மற்றும் பணத்தைப் புழக்கத்தில்விடுவதை விரிவாக்கும் மத்திய வங்கியின் எந்தவித நகர்வையும் கடுமையாக எதிர்க்க உறுதியோடு இருக்கிறார்கள். IMF விவாதங்கள் குழப்பத்திலிருக்கும் ஆளும் வர்க்கத்தின் ஒரு சித்திரத்தை எடுத்துக்காட்டியுள்ளன. என்ன செய்வது என்பதில் பிளவுபட்டு, ஒரு பொருளாதார மீட்சி போன்ற ஏதோவொன்றை விலகியிருந்து ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தை முன்னெடுக்க இயலாமல், ஆளும் மேற்தட்டுக்கள் அவர்கள் ஒரு வெடிமருந்து பீப்பாயின் மீது அமர்ந்திருப்பதைத் துல்லியமாக உணர்ந்துள்ளனர். எதன்மீது அவர்கள் தங்கியிருந்தார்களோ அந்த பொருளாதார அமைப்புமுறையின் உடைவால் உருவாக்கப்பட்ட மோசமடைந்துவரும் சமூக நிலைமைகள் மற்றும் ஆழமடைந்துவரும் சமத்துவமின்மை அடிமட்டத்திலிருந்து சமூக போராட்டங்களின் ஒரு வெடிப்பைத் தூண்டிவிடும் என்ற அவர்களது அச்சத்தில் மட்டுமே அவர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். |
|
|