World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா Police clash with Hong Kong protesters பொலிஸ் ஹாங்காங் போராட்டக்காரர்களுடன் மோதுகிறது
By
Peter Symonds ஞாயிறன்று தலைமை நிர்வாகி லீயுங் சுன்-யிங், போராட்டங்கள் "கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக" அறிவித்து, துல்லியமாக பொலிஸ் உள்ளே நுழையவதற்கு பச்சைக்கொடி காட்டிய பின்னர், கடந்த இரண்டு நாட்களாக ஹாங்காங் பொலிஸ் போராட்டக்காரர்களை எதிர்கொண்டது. கடந்த வியாழனன்று மாணவர் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை இரத்து செய்த லீயுங், சீன அரசாங்கம் அவர்களின் முறையீடுகளை ஒப்பு கொள்வதற்கான "வாய்ப்பு எதுவும் இல்லையென" அறிவித்தார். தலைமை நிர்வாகிக்கான 2017 தேர்தலில், வாக்களிக்கும் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க ஆகஸ்ட் மாதயிறுதியில் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் அனுமதி அளித்தது. ஆனால் பெய்ஜிங்கிற்கு-ஆதரவான அதிகாரிகளைக் கொண்ட ஒரு தேர்வாணைக் குழுவே வேட்பாளர்களை தேந்தெடுக்குமென அது வலியுறுத்தியது. போராட்ட அமைப்புகள்—ஹாங்காங் மாணவர் கூட்டமைப்பு, மத்திய ஆக்கிரமிப்பு அமைப்பு (Occupy Central) மற்றும் ஸ்காலரிசம் குழு (Scholarism) ஆகியவை—இந்த நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டுமென முறையிட்டு வருகின்றன. பிரதானமாக இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஹாங் காங்கின் மத்திய பகுதியின் முக்கிய சாலைகளை மறித்து, இரண்டு வாரங்களுக்கும் மேலாக மூன்று போராட்ட இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இருப்பினும் போராட்டங்கள் நீண்டகாலமாக இழுக்கப்பட்டுள்ளதால், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை பத்து ஆயிரக் கணக்காக இருந்ததிலிருந்து நூற்றுக் கணக்காக குறைந்துள்ளது. திங்களன்று அதிகாலை, பொலிஸ் காஸ்வே பே பகுதியில் தடைகளை அப்புறப்படுத்தி சாலை இடர்பாடுகளை நீக்கினார்கள். நேற்று, முக்கிய அரசு கட்டிடங்களுக்கு அருகே உள்ள அட்மிரால்டியின் பிரதான போராட்ட தளத்தில், கலக-தடுப்பு கவசங்களுடன் நூற்றுக்கணக்கான பொலிஸ் மூங்கில் மற்றும் திடப்பொருட்களால் கூடுதலாக பலப்படுத்தப்பட்டிருந்த மறிப்புகளை, இயந்திர வெட்டுளி மற்றும் சம்மட்டிகளைப் பயன்படுத்தி அப்புறப்படுத்துவதற்காக சென்றனர். முந்தைய இரவு ஒரு சுரங்கப்பாதையை ஆக்கிரமித்திருந்த போராட்டக்காரர்களை வெளியேற்ற பொலிஸ் மிளகுப்பொடி தெளிப்பானைப் பயன்படுத்திய போது, இந்த அதிகாலையில் மோதல்கள் வெடித்தன. குறைந்தப்பட்சம் 45 ஆர்ப்பாட்டக்காரர்கள், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதற்காக கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து தொந்தரவுகளால் அவர்களின் தொழில் மற்றும் அன்றாட வாழ்க்கை அவதியில் இருக்கும் மக்கள் மத்தியில், ஹாங் காங் அரசாங்கமும் மற்றும் பெய்ஜிங்-ஆதரவு அமைப்புகளும் போராட்டக்காரர்களுக்கு எதிராக விரோதத்தைத் தூண்டிவிட்டு வருகின்றன. போராட்டக்காரர்களுக்கும் மற்றும் தடைகளை அப்புறப்படுத்த முனைந்துள்ளவர்களுக்கும் இடையே திங்களன்று பல கைகலப்புகள் ஏற்பட்டன. டிரக் ஓட்டுனர்கள் அமைப்புகளின் ஒரு கூட்டணி கடந்த வாரம், சாலைகளைப் போக்குவரத்துக்குத் திறந்துவிடுமாறும் அல்லது அதைச் செய்ய அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்குமென்றும் இன்றைய தினத்தை இறுதிக்கெடுவாக அறிவித்தது. அந்த போராட்டங்கள் ஜனநாயக உரிமைகள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மோசமடைந்து வருவதைக் குறித்த பரந்த கவலைகளால் உந்தப்பட்டுள்ள போதினும், மாணவர் அமைப்புகளும் மற்றும் மத்திய ஆக்கிரமிப்பு அமைப்பும் அவர்களின் முறையீடுகளை 2017 தேர்தலுடன் மிகக் குறுகியரீதியில் மட்டுப்படுத்திக் கொண்டுள்ளன. இந்த குழுக்கள் உத்தியோகபூர்வ எதிர்கட்சியுடன்—தளர்ந்த நாடுதழுவிய-ஜனநாயகவாத குழுக்களுடன்—நெருக்கமாக இணைந்துள்ளன, இவை உள்ளூர் அரசியலில் பெய்ஜிங்கின் மேலாதிக்கமானது தங்களின் வணிக நலன்களைப் பாதிக்கும் என்றும் மற்றும் சீனாவின் முக்கிய நிதியியல் மையமாக விளங்கும் அப்பிராந்தியத்தின் அந்தஸ்திற்குக் குழிபறிக்கும் என்றும் அஞ்சுகின்ற ஹாங் காங்கின் மேற்தட்டு அடுக்குகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. நாடுதழுவிய ஜனநாயகவாத குழுக்களைப் போலவே, போராட்ட அமைப்புகளும், உலகின் சமூகரீதியில் மிகவும் துருவமுனைப்பட்ட நகரங்களில் ஒன்றில் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் முகங்கொடுத்துவரும் அத்தியாவசிய அடிப்படை சமூக தேவைகளை நிவர்த்தி செய்யக் கோரவில்லை. ஊதிப்பெருத்துவரும் சொத்துச் சந்தை உட்பட, அந்த பொருளாதாரமோ விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்காரர்களால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது, அவர்களில் பலர், ஆனால் அனைவரும் அல்ல, பெய்ஜிங்குடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருக்கிறார்கள். 8.5 சதவீத குடும்பங்கள் அமெரிக்க டாலரில் மில்லியனர்களாக இருப்பதாக 2011இல் ஓர் ஆய்வு கண்டறிந்தது. மற்றொரு சமூக துருவத்தில், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களோ வீழ்ச்சி அடைந்துவரும் நிஜமான கூலிகள் மற்றும் அதிகரித்துவரும் வீட்டுச் செலவுகளுடன் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதத்தினர், குறைந்தபட்ச சமூக சேவைகளுடன், வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இளைஞர்களுக்கோ, சிறந்த பல்கலைக்கழகங்களில் இடங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் சுருங்கிப் போயுள்ளன, பகுதியாக இது ஏனென்றால் பிரதான சீன மண்ணின் இளைஞர்களை ஈர்க்கும் ஒரு துருவமாக ஹாங் காங் மாறியுள்ளதால் ஆகும். வலதுசாரி Civic Passion போன்ற சில எதிர்கட்சிகளும் மற்றும் குழுக்களும், வேலைகள் மற்றும் வீடுகள் இல்லாமைக்கு பிரதான சீன மண்ணிலிருந்து வந்தவர்களை பலிக்கடாவாக்கி ஹாங் காங் பிராந்தியவாதத்தைத் (parochialism) தூண்டிவிட முனைந்துள்ளன. சீனத் தொழிலாள வர்க்கம் ஒருபுறம் இருக்கட்டும், ஹாங் காங் தொழிலாள வர்க்கத்திற்கே எவ்வித முறையீடுகளும் செய்ய இயலாமல், மாணவர் தலைவர்கள் அந்நகரின் அரசாங்கத்திடமும் மற்றும் சீன அதிகாரிகளிடமுமே பலவீனமாக சமரசத்திற்கான அழைப்புகளை விடுக்குமளவுக்கு குன்றிபோயுள்ளனர். மாணவர்கள் மற்றும் ஸ்காலரிசத்திற்கான ஹாங் காங் மாணவர்கள் கூட்டமைப்பு, கடந்த வாரயிறுதியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதியது. அது 2017 தேர்தல் குறித்த தேசிய மக்கள் காங்கிரஸின் முடிவைத் திரும்ப பெறுமாறு அவரைக் கேட்டுக் கொண்டிருந்தது. சீன அரசாங்கம் பெரிதும் எந்தவித விட்டுகொடுப்புகளையும் அளிக்க விரும்பவில்லை, ஏனெனில் அது அதன் பெருநிலப்பகுதியில் மிகப்பெரிய ஜனநாயக உரிமைகளுக்கான முறையீடுகளைக் கொண்டு வரக்கூடுமென்பதால் ஆகும். ஹாங் காங் போராட்டங்கள் சீனாவில் பரந்த சமூக கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுமென்ற அச்சம் அங்கே தொடக்கத்திலிருந்து இருந்து வருகிறது. திங்களன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு கருத்துரையில், ஹாங் காங்கினது மத்திய கொள்கைத்துறை தலைவர் ஷின் சின்-பர் குறிப்பிடுகையில், 2017 தேர்தல் எந்தவிதத்தில் நடந்தாலும் தலைமை நிர்வாகியை நியமிக்கும், அல்லது நியமிக்காமல் இருக்கும், அதிகாரத்தை பெய்ஜிங் அதன் அத்தியாவசிய சட்டத்தின் மூலமாக—இந்த அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலமாக தான் 1997இல் பிரிட்டனிடமிருந்து சீனா அந்நகரின் கட்டுப்பாட்டை பெற்றிருந்தது—தக்கவைத்திருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். அப்பிராந்தியத்தில் சீன செல்வாக்கிற்குக் குழிபறிக்கவும் மற்றும் அதை அரசியல் சதி நடவடிக்கைகளுக்கு ஓர் அடித்தளமாக பிரயோகிக்கவும் மற்றும் அதன் பெருநிலப்பகுதியில் ஆத்திரமூட்டலைக் கொண்டு வரவும் ஹாங் காங்கின் ஒப்பீட்டளவிலான சுய அதிகாரத்தை அமெரிக்கா சுரண்டுமோ என்று பெய்ஜிங் கவலைக் கொள்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" ஒரு திடமான இராஜாங்க பிரச்சாரத்தையும் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் சீனாவிற்கு எதிரான இராணுவ கட்டமைப்பையும் விளைவித்திருப்பதைக் குறித்து சீனத் தலைமைக்கு நன்கு தெரியும். கடந்த வெள்ளியன்று வெளியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் People’s Dailyஇன் முதல்பக்க தலையங்கம், முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் வேறு இடங்களிலும் அதன் ஆட்சிமாற்ற நடவடிக்கையின் போக்குடன் சேர்ந்து, ஹாங் காங்கில் ஒரு "வண்ணப் புரட்சியை" தூண்டிவிட முயல்வதாக அமெரிக்காவை குற்றஞ்சாட்டியது. அமெரிக்க நலன்களுக்கு ஒத்த வகையில் அதன் விவகாரங்களை நடத்தும் ஒரு நாடே, ஒரு "ஜனநாயக" நாடாக இருக்கிறது என்று அறிவித்து, அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களை முன்னெடுக்க “ஜனநாயகம்" என்ற பதாகையைப் பிரயோகித்து வருவதாக அந்நாளிதழ் அப்பட்டமாக குறிப்பிட்டது. இது நிச்சயமாக உண்மை தான் என்றாலும், ஹாங் காங் போராட்டங்களுக்கு ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பு, மாறாக அதிக பரபரப்பு இன்றி இருந்துள்ளது. அங்கே பெய்ஜிங்கை குற்றஞ்சாட்டியோ அல்லது, அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களால் பெரிதாக்கப்பட்ட லீயுங்கை வெளியேற்றும் முறையீடுகளோ வெள்ளை மாளிகையின் எந்த பிரச்சாரத்திலும் இல்லை. மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார கொந்தளிப்புக்கு இடையே ஒரு நிதியியல் மையமாக ஹாங் காங்கின் முக்கியத்துவமும், அத்துடன் மத்திய கிழக்கின் அதன் யுத்தத்தில் வாஷிங்டன் மும்முரமாக ஈடுபட்டிருப்பதும் மற்றும் மாஸ்கோவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் அதன் மோதலும், சந்தேகத்திற்கிடமின்றி காரணிகளாக உள்ளன. அமெரிக்கா ஹாங் காங் எதிர்கட்சிகளின் பிரிவுகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறது என்பதுடன், அந்நகரில் அரசியல்ரீதியாக செயல்பட்டு வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு அமெரிக்க கூட்டாளியும் மற்றும் முன்னாள் காலனித்துவ சக்தியும் ஆன பிரிட்டனும், ஹாங் காங்கில் அரசு எந்திரம், வணிகம் மற்றும் ஊடகங்களுடன் நீண்டகால தொடர்புகளைக் கொண்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, பெரிதும் மத்தியதர வர்க்க போராட்டத்தின் கோட்பாடற்ற அரசியல் குணாம்சம், வாஷிங்டனையும் மற்றும் அதன் கூட்டாளிகளையும் அந்த நிலைமையைச் சுரண்ட தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என, அதை சூழ்ச்சிக்குரிய இடமாக விட்டு வைத்துள்ளது. |
|