World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The return of German militarism and the tasks of the Partei für Soziale Gleichheit (Socialist Equality Party of Germany)
Resolution of the Special Conference Against War of the Partei für Soziale Gleichheit

ஜேர்மன் இராணுவவாதத்திற்கு திரும்புதலும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் போருக்கு எதிரான சிறப்பு மாநாட்டின் தீர்மானம்

20 September 2014

Back to screen version

செப்டம்பர் 13 மற்றும் 14ல் சோசலிச சமத்துவக் கட்சி – PSG பேர்லினில் போருக்கு எதிரான சிறப்பு மாநாட்டை நடத்தியது. பின்வரும் தீர்மானம் பேராளர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1. சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும் என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜூன் 9ம் தேதி அறிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி (PSG) ஆதரிக்கிறது. அது பின்வரும் வார்த்தைகளில் தொடங்குகிறது: “முதலாம் உலக யுத்தம் வெடித்ததன் பின்னர் நூறு ஆண்டுகளும் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்து 75 ஆண்டுகளும் ஆன பின்னர் ஏகாதிபத்திய அமைப்பானது, மீண்டும் ஒருமுறை மனிதகுலத்தை பேரழிவுக்கு இட்டுச்செல்கின்றது. கடந்த மூன்று மாதங்களின் அரசியல் நிகழ்வுகள் இந்த அறிக்கையை, கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உறுதிப்படுத்துகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவுக்கு எதிராக ஒன்றும் மத்தியகிழக்கில் ஒன்றுமாக இரண்டு புதிய முனைகளை திறந்துள்ளன.

2. உளவுத்துறை முகவாண்மைகளுடன் நெருக்கமாகத் தொடர்புடைய அரசியல் செயற்பாட்டாளர்கள், இராணுவப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு கும்பலும் மற்றும் கருத்தை உருவாக்கும் ஏனையோரும் நிகழ்வுகளைச் சூழ்ச்சித்திறமுடன் கையாண்டு எடுக்கும் முடிவுகள், மனிதகுலம் அனைத்தையும் ஒரு இரத்தக்களரிக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றன. இந்த இராணுவவாதக் கொள்கை மக்கள்தொகையின் பரந்த தட்டினர் மத்தியில் பலத்த எதிர்ப்பை சந்தித்துள்ளது. முழு ஜேர்மன் மக்களில் மூன்றில் இருபங்கிற்கும் மேலானோர் ஈராக்கிற்கு ஆயுதங்கள் அளிப்பதை எதிர்க்கின்றனர் என்று கருத்துக் கணிப்பு காட்டுகிறது. ஆனால் இந்த பரந்த எதிர்ப்பானது அலட்சியம் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் தமது வாக்காளர்களுக்கு பதில் கூறக் கடமைப்பட்டவையாக இல்லை. அவை, பூகோள மற்றும் ஜேர்மன் மூலதனத்தின் மிகவும் சக்திமிக்க பிரதிநிதிகளிடமிருந்தே அவற்றின் ஆணைகளைப் பெறுகின்றன. ஜனநாயகமானது சிறுபான்மையரின் ஆட்சிக்கான மூடுதிரையாக மட்டுமே சேவைசெய்கிறது.

3. ரஷ்யாவுடனான ஒரு அணு ஆயுதப்போரானது இனியும் கற்பனை சாத்தியமாக இல்லை, மாறாக உண்மையான ஆபத்தாக உள்ளது. பெப்ரவரியில் கியேவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியை ஏற்பாடு செய்ய வாஷிங்டனும் பேர்லினும் பாசிசவாதிகளுடன் கூடி வேலைசெய்தன. அதுமுதற்கொண்டு, ரஷ்யாவுடனான மோதலை அவை திட்டமிட்டு உக்கிரப்படுத்தி வந்தன. ஜூலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17 க்கு என்ன நிகழ்ந்தது என ஒருபோதும் விளக்கமளிக்கப்படாதிருந்த நிலைமையின் கீழ், அவ்விபத்தை பொருளாதாரத்தடை விதிப்பதற்காக அவை பயன்படுத்திக்கொண்டன. செப்டம்பர் தொடக்கத்தில் வேல்சில் கூடிய நேட்டோ உச்சிமாநாடு, இராணுவ மூலோபாயத்தை அடிப்படை ரீதியாக மறுநோக்குநிலைப்படுத்தலை ஏற்றுக்கொண்டது. கடந்த இரு தசாப்தங்களாக இக்கூட்டணியானது பிரதானமாக பால்கன்களில், வடஆபிரிக்காவில் மற்றும் மத்தியகிழக்கில் யுத்தங்களை நடத்தியது. அதன் ஆயுத தளவாடங்கள் குளிர்யுத்த காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக திசைதிருப்பப்பட்டதைப் போல, மீண்டும் ஒருமுறை இப்பொழுது ரஷ்யாவுக்கு எதிராக திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய வெளிவிவகாரக் கொள்கையை நேட்டோ தளபதிகள் சக்திமிக்கவையில் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர். பால்டிக் அரசுகளில் உள்ள வலதுசாரி ஆட்சியாளர்களுக்கு உதவிசெய்வதற்கு எவ்வித நிபந்தனையுமில்லாமல் நேட்டோ உத்தரவாதம் அளித்து, இப்போது அவை ரஷ்யாவுடனான ஒரு போரைத் தூண்டுவதற்கு ஒரு தடையற்ற உரிமையைக் கொண்டுள்ளன.

4. வாஷிங்டன் போஸ்ட் இற்கான தனிப்பத்தியில், போலந்து வெளிவிவகார அமைச்சரின் மனைவி ஆன் அப்பிள்பௌம் முழுஅளவிலான யுத்தத்திற்குஅழைப்பு விடுத்தார். “ஐரோப்பாவில் யுத்தம் ஒரு வெறிபிடித்த யோசனை அல்லஎன்ற தலைப்பின் கீழ் அவர் பின்வரும் வினாக்களை முன்வைத்தார்: “ஆகையால் முழு அளவிலான யுத்தத்திற்கான தயாரிப்பு வெறித்தனமானதா? அல்லது அவ்வாறு செய்யாமல் விடுவது வெகுளித்தனமானதா?” இந்த நிகழ்வுகளில் முன்னணி நபர்களுள் ஒருவரான ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிராங்வால்ட்டர் ஸ்ரைன்மையர், “சக்திமிக்க இராணுவ வெடிப்பே அதிகரித்த அளவில் அரசியல் நடவடிக்கையை தீர்மானிக்கிறது, எதிர்மறையாக அல்ல என்று ஒப்புக்கொண்டார் - இது ஜேர்மன் தலைமைத் தளபதியின் மூலோபாயத் திட்டங்கள், அரசியல் முடிவுகளை எடுக்க ஆனையிட்டு, மாற்றமுடியாதவாறு யுத்தத்திற்கு இட்டுச்சென்ற, முதலாவது உலக யுத்தத்திற்கு முந்தைய நிகழ்வுகளைக் குறிக்கின்றது.

5. மத்திய கிழக்கில், இஸ்ரேலானது ஜேர்மன் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் பாரஸ்தீனியர்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, கட்டார், சௌதி அரேபியா மற்றும் துருக்கியாலும் ஆதரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அரசு (Islamic State -IS) என்ற பயங்கரவாதப் படைக்கு எதிரான போராட்டம் என்ற சாக்கில், மூலப் பொருட்கள் வளம் நிறைந்த பிராந்தியத்தில் மேலும் வன்முறை கொண்ட பிளவுபடுத்தலைத் தொடங்கியுள்ளமை ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் முன்னர் நடந்ததை விட மிகவும் இரத்தம்தோய்ந்த யுத்தங்களுக்கு அச்சுறுத்துகின்றது.

6. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜூன் நிறை பேரவை, யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் வேலையின் மையத்தில் வைக்கும் பணியை செய்துள்ளதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஏகாதிபத்திய வன்முறையும் இராணுவவாதமும் மீண்டெழுதலுக்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பின் சர்வதேச மையமாகஆக்கவும் தீர்மானித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (PSG) இந்தப் போராட்டத்தில் பிரதான பொறுப்பை ஏற்கிறது.

7. 2003ல் ஈராக்கிலும் 2011ல் லிபியாவிலும் நடந்த யுத்தங்களைப் போல் அல்லாமல், ஜேர்மனி இம்முறை யுத்தத்தை நோக்கிய உந்துதலில் ஒரு முன்னணி பாத்திரம் ஆற்றிக்கொண்டிருக்கிறது. முன்னர் இருமுறை உலகை படுபாதாளத்தில் தள்ளிய, நாட்டின் ஆளும் செல்வந்தத் தட்டுக்கள், மீண்டும் ஒருமுறை ஜேர்மன் தலைமைக்காக” (Führung) அழைப்பு விடுப்பதுடன், இராணுவ வன்முறை ஊடாக தங்களின் ஏகாதிபத்திய நலன்களை அடைவதற்கு தயார் செய்து வருகின்றன. அவை தங்களின் வழியை, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிரதேசங்களான கிழக்கு ஐரோப்பாவிற்குள்ளும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்குள்ளும் வலியத் திருப்புகின்றன.

8. வரலாறு வஞ்சம் தீர்ப்பதுடன் திரும்பிக் கொண்டிருக்கிறது. நாஜி குற்றங்களின் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் அதன் தோல்விக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கமானது கெய்சர் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய வல்லரசு அரசியலை மீண்டும் ஒருமுறை ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான யுத்தப் பிரச்சாரத்தின் வெடிப்பின் வேகமானது, முதலாவது மற்றும் இரண்டாவது உல யுத்த நிகழ்வை மீண்டும் நினைவூட்டுகிறது. உக்ரேனில் ஜேர்மன் அரசாங்கமானது ஸ்வோபோடா மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜி ஒத்துழைப்பாளர்களின் மரபில் நிற்கும் ரைட்செக்டார் பாசிஸ்டுகளுடன் கூடிவேலை செய்துகொண்டிருக்கின்றது. இரண்டு உலக யுத்தங்களிலும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டு ரஷ்யாவிற்கு எதிராக நிலைகொள்ளும் தளமாக இருந்த நாட்டை இப்போது அது மீண்டும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ஈராக் உள்நாட்டு யுத்தத்தில் குர்திஷ் பெஸ்மெர்கா கட்சியினரை ஆயுதபாணியாக்கியதற்கும் மேலாக, ஜேர்மன் அரசாங்கமானது அப்பகுதியின் வன்முறையிலான மறு பங்கீடின் அடுத்த சுற்றில் பங்கேற்கும் தனது விருப்பத்தையும் அறிவித்துள்ளது.

9. ஜேர்மனி, நாஜிக்களின் படுபயங்கரமான குற்றங்களில் இருந்து கற்றுக்கொண்டு, “மேற்குலகை வந்து அடைந்து,” அமைதியான வெளிவிவகாரக் கொள்கையைத் தழுவிக்கொண்டு, நிலையான ஜனநாயகத்தை வளர்த்தெடுத்திருந்தது, என்ற போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரங்கள் பொய்கள் என அம்பலப்பட்டுள்ளன. ஜேர்மன் ஏகாதிபத்தியமானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் அனைத்து மூர்க்கத்தனத்துடன் வரலாற்று ரீதியாக வெளிப்படுகையில் மீண்டும் ஒருமுறை அதன் உண்மையான நிறங்களைக் காட்டுகின்றது.

ஒரு அரசியல் சதி

10. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீள்வருகை மக்களின் முதுகுக்குப்பின்னால் ஒழுங்குமுறையாக தயார்செய்யப்பட்டு வந்தது. லிபியப் போரில் ஜேர்மனி பங்கேற்காததற்கு பின்னர், அந்த நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கீடோ வெஸ்டர்வெல்ல (சுதந்திர ஜனநாயகக் கட்சி- FDP), ஜனாதிபதி கிறிஸ்டியான் வொல்ஃப் ஆகியோருக்கு எதிரான ஊடகப் பிரச்சாரம், FDP-ஐ பொறிவுக்கு இட்டுச்சென்றதுடன், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஊழல் அவதூறின் காரணமாக வொல்ஃப் இராஜினாமா செய்யத் தள்ளப்பட்டார். வொல்புக்கு பதிலாக ஜோஹாயிம் கௌவ்க் மாற்றப்பட்டார். ஜோஹாயிம் கௌவ்க் உடைய உறுதியான கம்யூனிச எதிர்ப்பு மற்றும் ரஷ்ய எதிர்ப்பு நிலைப்பாடானது பரந்த அளவிலான பொது எதிர்ப்புக்கு முகங்கொடுக்கையில், ரஷ்யாவிற்கு எதிரான புதிய போர்க்கொள்கையை திணிப்பதற்கு மிகப்பொருத்தமுடையதாக பார்க்கப்பட்டது.

11. 2013ல், ஐம்பதிற்கும் மேற்பட்ட முன்னணி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், இராணுவத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், அரசாங்கம்- விஞ்ஞானம் மற்றும் அரசியலுக்கான அமைப்பு (Stiftung Wissenschaft und Politik) மற்றும் வாஷிங்டனை அடித்தளமாகக் கொண்ட ஜேர்மன் மார்ஷல் நிதியம் (German Marshall Fund -GMF) ஆகியவற்றின் சிந்தனைக் குழாம் இணைந்த வழிகாட்டலின் கீழ், ஜேர்மன் வெளிவிவகாரக் கொள்கைக்கான புதிய மூலோபாயத்தை வளர்த்தெடுக்க வேலைசெய்தனர். அவர்கள் ஜேர்மனியை வர்த்தக மற்றும் ஏற்றுமதி நாடுஎன வரையறை செய்தனர். அது கிட்டத்தட்ட வேறு எந்த நாடையும் விட ஏனைய சந்தைகளிலிருந்து வரும் கோரிக்கை, அதேபோல சர்வதேச வர்த்தக வழித்தடங்களையும் கச்சாப்பொருட்களையும் பெறுவதற்குமான கோரிக்கைகளை சார்ந்து இருக்கின்றது.’’ ஜேர்மனி சர்வதேச ரீதியில் குறிப்பாக ஜேர்மன் பாதுகாப்பு நலன்களைப் பலப்படுத்துவதற்கான தனித்துவமான ஒரு படை என்று விவரிக்கப்பட்ட, நேட்டோ கட்டமைப்புக்குள்ளேயான இராணுவத் தலையீடுகளில் மீண்டும் ஒருமுறை தலைமைப் பங்கைஆற்றவேண்டி இருக்கிறது என்று அவர்கள் முடித்தனர். “புதிதாக நோக்குநிலைப்படுத்தப்பட்டநேட்டோவின் எதிர்கால திசைவழிக்கு ஜேர்மனி அதன் அதிகரித்துவரும் செல்வாக்கைபயன்படுத்த வேண்டி இருந்தது. (1)

12. 2013 செப்டம்பரில் நடந்த கூட்டாட்சி தேர்தலை அடுத்து உடனடியாக, ஜனாதிபதி கௌவ்க் இந்த புதிய மூலோபாயத்திற்கான தாக்குதலுக்கு சென்றார். அவர் ஜேர்மன் ஒன்றிணைப்பு ஆண்டுவிழாவில், ஜேர்மனி அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதார மோதல்களிலிருந்துவிலகி இருக்கக்கூடிய தீவு அல்லஎன்று அறிவித்தார். அது ஐரோப்பாவிலும் உலகிலும்அதன் அளவு மற்றும் செல்வாக்கிற்கு ஏற்ப பங்காற்ற வேண்டி இருந்தது.

13, இந்த மூலோபாயம், புதிய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையை அமைத்தது. வெளியுறவு அமைச்சர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் வொன் டெர் லையன் இராணுவக் கட்டுப்பாட்டுக் காலம் முடிந்துவிட்டது என்று அறிவித்தபொழுது அது அப்பட்டமாக அதிகாரத்தை எடுத்துக்கொண்டிருந்தது. ஜேர்மனி உலக அரசியலில் வெளியிலிருந்து வெறுமனே கருத்துத் தெரிவிப்பதை விட அதனது நிலை மிக பெரியது மற்றும் வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கையில் இன்னும் தீர்மானகரமாகவும் இன்னும் கணிசமாகவும் ஆரம்பத்திலேயே தலையிடுவதற்கு தயாராக இருக்கவேண்டும். உக்ரேனில் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. வாஷிங்டனும் பேர்லினும், ஐரோப்பாவை இராணுவமயமாக்கவும் மக்களுக்குள்ளே யுத்தத்திற்கு ஆழமாக வேரூன்றிய வெறுப்பை உடைப்பதற்கும் ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதற்காக அரசியல் நெருக்கடியைத் தூண்டிவிட்டன.

14. பொதுக் கருத்து எப்போதும் தொடர்ச்சியாக வேலைசெய்து வந்திருக்கிறது. பொதுத் தொலைக்காட்சியில் இரு முக்கியமான செய்தி நிகழ்ச்சிகளான tagesthemen, heute journal ஆகியன, நாளாந்த பிரச்சாரக் காட்சிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. வெளியுறவு அமைச்சகம் ஜேர்மனின் தலைவிதி: உலகிற்கு தலைமைதாங்கும் பொருட்டு ஐரோப்பாவிற்கு தலைமை தாங்குவதற்குஎன்ற தலைப்பின் கீழ் அறிக்கைகளை வெளியிட்டது. வொன் டெர் லையன், ஸ்ரேர்ன் இதழின் முகப்பில் யுத்த அமைச்சர்என்று காட்டப்பட்டார், மற்றும் கௌவ்க், ஜேர்மனியின் போலந்தின் மீதான 1939 தாக்குதல் இரண்டாம் உலக யுத்தத்தை தொடங்கிய அதே Westerplatte என்ற இடத்தில் ரஷ்யா மீதான தாக்குதலை தொடர்ந்தார். ஜோசப் ஜோஃப மற்றும் ஜோஹாயிம் பிட்னர் (Die Zeit), ஸ்ரெபான் கோர்னிலியுஸ் (Süddeutsche Zeitung), நிக்கோலாஸ் போஸ் மற்றும் கிளவுஸ் டீற்றர் பிராக்கென்பேர்க்கர் (Frankfurter Allgemeine Zeitung), நிக்கோலாஸ் புளுமே (Der Spiegel) மற்றும் டொமினிக் ஜோன்சன் (taz) போன்ற அத்திலாந்திக் கடந்த சிந்தனைக் குழாமினருடன் நெருக்கமாக தொடர்பு வைத்துக்கொண்டுள்ள பத்திரிகையாளர்கள் களைப்படையாமல் ரஷ்ய எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

15. பல்கலைக் கழகங்களும் இராணுவவாதத்திற்கு சேவைசெய்ய வைக்கப்பட்டுள்ளன. வரலாறுக்கும் பிரச்சாரத்திற்கும் இடையிலான வேறுபாடு இந்த செயல்முறையில் திட்டமிட்டபடி கீழறுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 1999ல் மரணமடைந்த வரலாற்றாளர் ஃபிரிட்ஸ் பிஷ்சர் கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். 1960களில், பிஷ்சர் முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் பேரரசின் தீவிர போர் நோக்கங்களை அம்பலப்படுத்தினார், மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லர் அதே குறிக்கோள்களைத்தான் புதுப்பித்தார் என எடுத்துக்காட்டினார். பிஷ்சரின் ஆய்வுகள் பெரிதும் பொருத்தமாக இருக்கின்ற காரணத்தால் அவர் இப்போது தாக்கப்படுகிறார். உக்ரேனை நோக்கிய ஜேர்மன் கொள்கை, வில்ஹெல்ம் பேரரசு மற்றும் மூன்றாவது குடியரசின் அடிச்சுவடுகளை இப்போது மீண்டும் ஒருமுறை பின்பற்றுகிறது. பெத்தமான் ஹோல்விக்கிலிருந்து ரிப்பென்ட்ரொப் மற்றும் ஸ்ரைன்மையர் வரைக்கும் நேரடி வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

16. பல்கலைக்கழகங்களில் உள்ள கொள்கைப் பிரச்சாரவாதிகள் ஜேர்மன் பேரரசின் போர்க்கொள்கைகளை புனருத்தாரணம் செய்வதுடன் மட்டும் கட்டுப்பட்டிருக்காமல், அவர்கள் ஹிட்லரின் புகழைப் புனருத்தாரணம் செய்வதற்கும் கூட முயற்சிசெய்து கொண்டிருக்கின்றனர். இந்த நோக்கில், முப்பதாண்டுகளுக்கு முன்னர் தேசிய சோசலிசத்தின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டதன் மூலம், வரலாற்றாளரின் சர்ச்சையை தூண்டி வைத்த 91 வயதான ஏர்ன்ஸ் நோல்ட்ட புதுபிக்கப்பட்டு வருகிறார். பெப்ருவரியில் பேர்லினை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றாளர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி, டெர் ஸ்பீகலில், “நோல்ட்ட வரலாற்று ரீதியாக சரியாக இருந்தார்என்று அறிவித்தார். தன் பங்கிற்கு நோல்ட்ட, ஐரோப்பியன் இதழின் அண்மைய பதிப்பில், “ஒரு காலத்து விடுவிப்பாளரை(அதாவது ஹிட்லரை) முற்றுமுழுதான கேடுமற்றும் தீண்டத்தகாததன் பிரதிநிதியாக ஆக்கும் வெறுப்பு மற்றும் நிந்திப்பும் நீடிப்பதைகண்டனம் செய்தார். ஹிட்லர், “‘சுய உறுதிப்படுத்தல்போக்குகளின் மறக்கப்பட்ட பிரதிநிதிஆக இருந்தார். அவை ஜேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கைகளில் காணப்படாது இருக்கின்றனஎன்று நோல்ட்ட எழுதுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி

17. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீள் எழுச்சிக்கான காரணம், பூகோள முதலாளித்துவத்தின் நெருக்கடியும் அது அடிப்படையாகக் கொண்டிருக்கும் தேசிய அரசு அமைப்பு முறையும் ஆகும். 1932ல் ஹிட்லரின் வருகைக்கு வழிவகுத்த புறநிலை உந்துசக்திகளை ஆய்வு செய்கையில், ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: “ஜேர்மனியின் உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் உந்துதல் பெற்று, அதிகமான இயக்க ஆற்றலைப் பெறப் பெற, ஐரோப்பிய அரசு அமைப்புக்குள்ளே அவை மேலும் மேலும் நெரிக்கப்படுகின்றன. அந்த அமைப்பு சிறுமைப்பட்ட ஒரு வட்டாரத்து மிருகக்காட்சி சாலையின் உள்ளே உள்ள கூண்டுகளின் அமைப்பை ஒத்ததாக இருக்கிறது.” (2)

18. வன்முறை மூலம் ஐரோப்பாவை வெல்லுதலால் இந்த கூண்டுகளின் அமைப்பை உடைத்தெறிவதற்கான ஹிட்லரின் முயற்சியானது அக்கண்டத்தை அழிவில் விட்டுச்சென்றது, 70 மில்லியன் பேரைப் பலியிட்டு, முழு இராணுவத்தோல்வியில் முடிவடையச் செய்தது. ஆனால் போருக்கு இட்டுச்சென்ற பிரச்சினைகளில் ஒன்றைக்கூட போருக்குப் பிந்தைய ஒழுங்கு தீர்க்கவில்லை. அமெரிக்காவின் பொருளாதார வல்லமையானது ஒரு தற்காலிக ஸ்திரத்தன்மையையும் போருக்குப் பிந்தைய செழுமையையும் சாத்தியமாக்கியது. குளிர் யுத்தமானது சோவியத் ஒன்றியத்தை தடுத்துவைத்தது மட்டுமல்லாமல், ஜேர்மனியைக் கட்டுப்பாட்டிலும் கூட வைத்திருந்தது. ஆனால் ஜேர்மனியின் மறு ஐக்கியம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும், அமெரிக்காவின் எழுச்சியில் ஜேர்மன் வர்த்தகம் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்த காலகட்டத்தையும் ஜேர்மன் இராணுவம் தன்னை தேசியப் பாதுகாப்புக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்த காலகட்டத்தையும் மீட்க முடியாமல் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டன.

19. ஜேர்மனி மறுஐக்கியம் செய்யப்பட்டதில் முற்போக்கு அம்சம் ஒன்றும் இல்லை. அது ஜேர்மனியின் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் எதிர்பார்த்திராத அளவுக்கு ஒரு சமூக வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், ஜேர்மன் முதலாளித்துவத்தின் சக்தி செயல்படும் முறையின் காரணமாக இராணுவவாதம் மீள எழுவதற்கும் கூட வழிவகுத்தது. இன்று அரசாங்க உறுப்பினர்கள், ஜேர்மனின் இராணுவ செல்வாக்கானது அதன் பொருளாதார வலிமைக்கு பொருந்தியாக வேண்டும் என்று கூறும்பொழுது, அவர்கள் மீண்டும் ஒருமுறை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மொழியையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

20. 1990ல் PSG –ன் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter), ஜேர்மனியின் கிழக்கிற்கும் ஐரோப்பாவிற்கும் திரும்ப வருகை தரும் அதே முதலாளித்துவ வர்க்கம், மனித சமுதாயம் இதுவரை கண்டிருந்திராத மிகக் காட்டு மிராண்டித்தனமான குற்றங்கள் சிலவற்றிற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளது என்று எச்சரித்தது. “கிழக்கு ஐரோப்பாவில் தேசிய அரசுகளின் பொறிவானது, இறுதி ஆய்வில், ஏகாதிபத்தியத்தின் ஆழமடைந்துவரும் உலக நெருக்கடியின் முதல்விளைவாக மட்டுமே இருக்கும்,” என்று நாம் எழுதினோம். ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் உதவியுடன் ஏகாதிபத்தியவாதிகள் தங்களின் ஆட்சியை ஒழுங்குபடுத்திக் கொண்ட மற்றும் பூகோளநலன்களைப் பாதுகாத்துக் கொண்ட, சக்திகளின் சர்வதேச சமநிலையானது உடைந்து நொருங்கிவிட்டது. இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தை இருமுறை உலகயுத்தத்தின் கொடூரத்திற்குள் தள்ளிய, உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலான பழைய மோதல்கள், மீண்டும் மேலெழுகின்றன.”(3)

21. மத்திய ஐரோப்பாவில் மேலாதிக்கம் செய்யும் சக்தியாக அதன் எழுச்சியின் விளைவுகளைக் கண்டு அஞ்சி, மார்கரெட் தாட்சரின் பிரிட்டிஷ் அரசாங்கமும் பிரான்சுவா மித்திரோனின் பிரெஞ்சு அரசாங்கமும் முதலில் ஜேர்மனியின் மறு ஐக்கியத்தை தடுக்க விழைந்தன. இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபிதமும் விரிவுபடுத்தலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை, ஆதிக்கம் செய்யும் அதன் பக்கத்து வீட்டாரைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சாதனமாக பார்த்த அதேவேளை, ஜேர்மனி அதனை ஐரோப்பாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாகக் கருதியது.

22. ஜேர்மன் அரசாங்கம் அதன் அபிலாசைகளை மறைக்க சிறு முயற்சியே செய்தது. ஏற்கனவே 1993ல், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் கிளவுஸ் கிங்க்கெல் அறிவித்ததாவது: “80 மில்லியன் மக்களைக் கொண்டவர்கள் என்ற வகையிலும் மத்திய ஐரோப்பாவில் மிகப் பலம்வாய்ந்த பொருளாதாரம் என்ற வகையிலும், அது நமக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நாம் சிறப்பான, பகுதி அளவில் புதிய பொறுப்பினை ஏற்கவேண்டும். அதற்கேற்றாற் போல் நமது வெளிவிவகார நடவடிக்கையை நாம் கட்டாயம் திருத்தியமைத்துக்கொள்ள வேண்டும். நாம் மத்தியில் இடம்பெற்றிருப்பதன் காரணமாகவும், நமது அளவு மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா தொடர்பான நமது பாரம்பரிய உறவுகள் காரணமாகவும், இந்த அரசுகள் ஐரோப்பாவுக்குள் வருகைதருவதில் பிரதான ஆதாயம் அடையக்கூடியவராக நாம் முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறோம்.”(4)

23. பொது மக்களின் முன் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவை ஒன்றிணைப்பதை நோக்கிய பிரதான படி என்று முன்வைக்கப்பட்டது. உண்மையில், அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிக சக்திமிக்க வர்த்தக மற்றும் நிதி நலன்களின் ஒரு ஆயுதமாக இருந்தது, இருந்து வருகிறது; அது ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான அகதிகள் சுவர்களின் மீது மடிகின்ற ஒரு கோட்டை; மேலாதிக்கத்திற்காக ஐரோப்பிய சக்திகள் போராடும் ஒரு போர்க்களம்; தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் பாதுகாத்து வளர்க்கும் விளைநிலமாக உள்ளேயும் வெளியேயும் மீளாயுதமயப்படுத்துவதற்கான ஒரு சாதனமாகும். அது இராணுவவாதம், கெடுபிடிக்கொள்கைகள் மற்றும் சர்வாதிகாரமும் பல்கிப் பெருகுவதற்கான தளமாக இருக்கிறது.

24. ஏற்கனவே புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயான பதட்டங்கள் வெடித்து வெளியே வந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையில் ஜேர்மனி அமெரிக்காவிற்கு சமமாக ஒரு உலகசக்தி ஆகும் என்ற கருத்து ஒரு பிரமையாக மாறியுள்ளது. மத்திய ஐரோப்பாவில் ஒரு மிகைபலம் கொண்ட ஜேர்மனியை பிரிட்டனோ அல்லது பிரான்சோ சகித்துக்கொள்ளத் தயாரில்லை. 2003ல், ஈராக் போர் தொடர்பானதில் அது வெளிப்படையாக உடைவுக்கு வந்தது. பிரிட்டனும் வரிசையான ஐரோப்பிய அரசுகளும் இராணுவரீதியாக அமெரிக்காவை ஆதரித்தவேளை, பிரான்சும் ஜேர்மனியும் போரில் பங்கெடுக்க மறுத்தன. 2005ல் பிரெஞ்சு மற்றும் டச்சு வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பை நிராகரித்தனர்.

2008 நிதி நெருக்கடியின் விளைவுகள்

25. ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியானது 2008 சர்வதேச நிதிநெருக்கடியுடன் வெடித்தது. 1930களின் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிதி பொறிவானது ஒரு சுழற்சி முறையிலானதாக இல்லை, மாறாக இன்னும் சொல்லப் போனால், அது உலக முதலாளித்துவத்தின் நடந்து கொண்டிருக்கும் நெருக்கடியின் ஆரம்பம் ஆகும். ஆறுவருடங்கள் கழித்தும், பொறிவின் விளிம்பிற்குக் கொண்டுவந்த அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்றுகூட தீர்க்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, வங்கிகளுக்கு டிரில்லியன்கள் வெகுமதியாகக் கொடுத்தது, மத்திய வங்கிகளிலிருந்து நிதிச்சந்தைகளுக்கு மலிவாக பணம் பாய்ச்சப்பட்டது, மற்றும் கூலிகளில், வேலைகளில் மற்றும் சலுகைகளில் ஓயாது ஒழியாது தாக்குதல் தொடுக்கப்பட்டதானது வர்க்கப் பதட்டங்களை பெரிய அளவில் கிளறிவிட்டுள்ளன. மற்றும் அடுத்த நிதிய பொறிவிற்கான நிலைமைகளை உருவாக்கி இருக்கின்றன.

26. வட்டி விகிதங்களை 0.05 சதவீதத்துக்கு வெட்டுவதற்கும், 2008ல் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களுக்கான நெருக்கடியைத் தூண்டிவிட்ட பெறுமதியற்ற பத்திரங்களை (junk bonds) வாங்குவதற்குமான ஐரோப்பிய மத்திய வங்கியின் அண்மைய முடிவானது, திவாலடைந்ததன் ஒரு அரசியற் பிரகடனம் ஆகும். அது போதைக்கு அடிமையானவர் சாவுக்கு அஞ்சி, மரண ஆபத்தான அளவுக்கு போதைமருந்தை எடுக்கும் நடவடிக்கையை ஒத்ததாக இருக்கின்றது. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகி (Mario Draghi), “எதிர்காலத்தில் நம்பிக்கை இன்மைமற்றும் இன்னொரு கீழ்நோக்கிய திருப்பத்தின் ஆபத்து என்று குறிப்புரைத்ததன் மூலம் அண்மைய நடவடிக்கையை நியாயப்படுத்தினார். வங்கிகளுக்கு புதிய நிதிகளின் பெருக்கெடுப்பு, தேக்கநிலையில் உள்ள ஐரோப்பிய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு பதிலாக, பங்குச்சந்தைகளின் மீதான ஊகக் குமிழிகளை வெடிக்கும் புள்ளிக்கு ஊதிப்பெருக்கிவிடும்.

27. ஐரோப்பிய மத்திய வங்கியின் மத்திய அங்கத்தில் ஏற்பட்டுள்ள கடும் பிளவுகள் ஐரோப்பாவில் வளர்ந்துவரும் தேசிய பதட்டங்களை வெளிப்படுத்துகின்றன. ஆனால் வர்க்க உறவுகளின் நிலைப்பாட்டிலிருந்து, பணத்தை அச்சிடும் டிராகியின் கொள்கைக்கும், ஜேர்மன் அரசாங்கத்தால் கோரப்படும் கடுமையான சிக்கன நடவடிக்கை கொள்கைக்கும் அடிப்படை வேறுபாடு எதுவும் இல்லை. இரண்டும் ஒன்றுக்கொன்று உதவிசெய்கின்றன. அவை, பேரளவிலான பெரும்பான்மையை பலியிட்டு, உற்பத்தி நிகழ்வுப்போக்கிலும் சமூகத்தேவையுடனும் எந்த தொடர்பையும் இழந்துவிட்ட, தணியாத வேட்கை கொண்ட நிதிய பிரபுத்துவத்தை வளப்படுத்துவதற்கே சேவை செய்கின்றன. சூழ்நிலையானது அதிகரித்த அளவில் பிரெஞ்சுப் புரட்சியின் போது நடந்த சம்பவத்தை, ரொட்டி தட்டுப்பாட்டால் பரந்த மக்கள் பட்டினி கிடக்கையில் மரி அந்துவானெட் கேக் சாப்பிட அறிவுரை கூறியதை ஒத்ததாக இருக்கின்றது.

28. கிரீஸ், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினில் வங்கிகள் பிணையெடுப்புக்களின் செலவை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிப்பதை நிறைவேற்றுவதற்கு பேர்லினாலும் பிரஸ்ஸெல்ஸாலும் ஆணையிடப்பட்ட கடுமையான கெடுபிடி நடவடிக்கைகள் ஏற்கெனவே கடும் எதிர்ப்பைச் சந்தித்து வந்துள்ளன. ஆயினும், நிதிய நெருக்கடிக்கு பதில் நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்படும் நடவடிக்கைகள் ஜேர்மனியிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் சமூகப்பதட்டங்களை திடீரென்று உக்கிரமடையச் செய்துள்ளன.

29. ஜேர்மன் பங்குச்சந்தை குறியீட்டெண் DAX பொருளாதாரம் வெறுமனே வளர்ந்துகொண்டிருந்தாலும், 2008 நெருக்கடியின் உச்சத்தில் இருந்த அதன் முந்தைய நிலைக்கு 2000 புள்ளிகள்  மேலாக தற்போது இருக்கின்றது. மிகவும் பெரிய 30 ஜேர்மன் நிறுவனங்களின் பங்குகளின் சொந்தக்காரர்கள் விரலைக்கூட உயர்த்தாமல் 200 பில்லியன் யூரோக்கள் அளவில் தங்களின் கடன்பத்திர மதிப்புக்களை அதிகரித்துக் கொண்டுள்ளனர். அதேகாலகட்டத்தில், மக்கள் தொகையினரின் பெரும்பான்மையினரின் வாழ்க்கைத்தரம் திடீரென்று வீழ்ச்சி அடைந்தன. சுமார் 126 மில்லியன் ஐரோப்பியர், மக்கள்தொகையின் கால்வாசிப்பேர் வறுமையின் ஆபத்தில் இருந்தனர். 2008லிருந்து ஏழைக் குழந்தைகளின் எண்ணிக்கை 800,000 அளவில் அதிகரித்திருக்கிறது. ஐரோப்பாவில் 11 சதவீதம் வயது வந்தோரும் 23 சதவீதம் இளைஞர்களும் உத்தியோகபூர்வமாய் வேலை இன்றி இருக்கின்றனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒருவருக்கு சமூகநல உதவி இல்லை. கிழக்கு ஐரோப்பாவில் சமூகநிலைமையானது, ஸ்ராலினிச ஆட்சிகள் பொறிந்துபோன பொழுதான 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிடவும் மிக மோசமான நிலையில் உள்ளது. சிறிய, அடிக்கடி ஊழல் புரியும் மற்றும் குற்றப் பின்னணி உடைய சிறுபான்மை தம்மைத்தாமே பெரும்செல்வமுடையதாக்கிக் கொள்ளும் அதேவேளை, மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையானது பரந்த வேலையின்மை, ஏழ்மைக் கூலி, ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் சமூக அளிப்புக்கள் சீர்குலைந்து போன நிலைமையின் கீழ் உயிர் பிழைத்திருக்கவே போராட வேண்டி இருக்கிறது

30. இராணுவவாதத்தை புதுப்பித்தல் என்பது வெடிக்கும் சமூகப் பதட்டங்கள், ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலான வளர்ந்துவரும் மோதல்கள் இவற்றுக்கான ஆளும் வர்க்கத்தின் பதிலாக இருக்கிறது. அதன் குறிக்கோள், ஏற்றுமதியைச் சார்ந்துள்ள ஜேர்மனின் பொருளாதாரம் தங்கியிருக்கும் புதிய செல்வாக்கு மண்டலங்களை, சந்தைகளை மற்றும் கச்சாப்பொருட்களை வெற்றிகொள்ளல்; சமூகப் பதட்டங்களை வெளிப்புற பகையின்பால் திசைதிருப்புவதன் மூலம் சமூக வெடிப்புக்களை தடுத்தல்; அனைத்தையும் தழுவிய தேசிய கண்காணிப்பு சாதனத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளடங்கலாக, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இராணுவமயமாக்கி, சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்களை நசுக்கி, ஊடகங்களின் வழிக்கு கொண்டுவருவதுமாகும்.

31. முன்னாள் சிஐஏ செயற்பாட்டாளர் எட்வார்ட் ஸ்னோவ்டென், அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் உளவுத்துறைகளால் செய்யப்பட்ட பேரளவிலான அரசாங்க கண்காணிப்பை மட்டுமல்லாது, நெருக்கமாக தொடர்புடைய ஜேர்மன் உளவு சேவைகளால் செய்யப்பட்டவற்றையும் திரைவிலக்கிக் காட்டி இருக்கிறார். ஜேர்மனி, ஒரு புதிய கெஸ்டபோ (நாஜி ஜேர்மனியின் உளவு போலீஸ்) எழுவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, போருக்குப் பிந்திய அதன் அரசியலமைப்பில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த, போலீசையும் உளவு சேவைகளையும் வெவ்வேறாக வைத்திருக்கும் முறையை, பயங்கரவாதத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தையும் எதிர்த்துப் போராடல் என்ற பெயரில் பெருமளவில் ஓரங்கட்டிவிட்டது. பிரமாண்டமான, மையப்படுத்தப்பட்ட தரவுக் களஞ்சியங்கள், மில்லியன் கணக்கான சாதாரண குடிமக்களின் விவரங்களைப் பெறுவதற்கு பாதுகாப்பு முகவாண்மைகளுக்கு வசதியளிக்கின்றது. இந்த ஆர்வெல்லியன் பூதாகரத்தின் நோக்கம் அனைத்து சமூக எதிர்ப்புக்களையும் தடைகளையும் நசுக்குவதற்காகும். அமெரிக்க நகரமான ஃபேர்குசனில் 18 வயது  மைக்கல் பிரௌன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, நிராயுதபாணியான பிரதேச மக்களுக்கு எதிராக போலீசையும் தேசிய காவலர்களையும் இராணுவ உபகரணங்களுடன் அனுப்பி வைத்து அவசரநிலைப் பிரகடனமும் அமல்படுத்தப்பட்டமை, சமூகப் பதட்டங்கள் வளர்ச்சியடையும் போது பயன்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் பற்றிய ஒரு அறிகுறி ஆகும்.

அமெரிக்காவுடனான வளர்ந்துவரும் பதட்டங்கள்

32. ரஷ்யாவுடனான மோதலின் கூடுதல் நோக்கம் அதிகரித்த அளவில் உடைந்துகொண்டு போகும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒன்று சேர்ப்பதாகும். மூலதனம் மற்றும் பொருட்களதும் சுதந்திரமான நகர்வு, மற்றும் ஒரு பொதுப் பணம் போன்ற பொருளாதார குறிக்கோள்களால் முன்னர் பெரும்பாலும் வரையறுக்கப்பட்டிருந்த ஒரு பொது விரோதிக்கு எதிரான போராட்டம், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைவளர்ச்சியை உறுதி செய்வதை செயல்நோக்கமாய் கொண்டுள்ளது. குளிர் யுத்தத்தில் இருந்தது போல, ரஷ்யாவானது மீண்டும் ஒரு முறை மேற்கின்பொது எதிரியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், ரஷ்யாவிற்கெதிரான ஐரோப்பிய ஒற்றுமை என்ற திரைக்குப் பின்னே பதட்டங்கள் வளர்ந்துவருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவை யுத்தகளமாக இருமுறை மாற்றிய மோதல்கள் மீண்டும் எழுகின்றன. ஏனைய ஐரோப்பிய உறுப்பினர்கள் முஷ்டியை உயர்த்திக் கொண்டு தங்களின் சொந்த ஏகாதிபத்திய நலன்களைப் பின்பற்ற தயாரிப்பு செய்து வருகின்றன. பிரான்சில் தேசிய முன்னணி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கும் தேசிய நாணயத்திற்கு திரும்புவதற்கும் உறுதிகூறியதன் மூலம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தக் கூடியதாக இருக்கிறது. கால்வாய்க்கு அப்பால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சொந்தமாக வெளியேறுவது அதிகரித்தளவில் சாத்தியமானதாக தெரிகின்றது.

33. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவுடனான ஜேர்மனியின் தற்போதைய கூட்டானது, உள்பதட்டங்களையும் முரண்பாடுகளையும் கூட பின்விளைவாக கொண்டுவந்துள்ளது. வாஷிங்டனும் பேர்லினும் ரஷ்யாவிற்கெதிராக ஒரே பாதையை பின்பற்றுகின்றன ஆனால் வெவ்வேறு குறிக்கோள்களை கொண்டுள்ளன. யுரேஷியன் நிலப்பகுதியில் போட்டியிடக்கூடிய ஒரு உலக வல்லரசை எழவிடாமற் தடுப்பதே அமெரிக்காவின் குறிக்கோள் ஆகும். அது ரஷ்யாவிற்கு எதிரான தனது ஆசியாவில் முன்னிலைக்குமேற்கு முனையை அமைக்கிறது, அது பிரதானமாக சீனாவின் எழுச்சிக்கு எதிராக திசைவழிப்படுத்தப்பட்டதாகும். தன் பங்கிற்கு, ஜேர்மன் ஏகாதிபத்தியமானது சக்திகளின் மூலவளம் மற்றும் மலிவான கூலி, அதே போல் தனது பொருட்களுக்கான சந்தையாகவும் கிழக்கு ஐரோப்பாவையும் ரஷ்யாவையும் சுரண்டிக்கொள்ள எண்ணுகின்ற அதேவேளை, சீனாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைப் பராமரித்து வருகிறது. கிழக்கு ஐரோப்பாவில், அதிகரித்த அளவில் கருங்கடல் பிராந்தியத்தில், அதேபோல ரஷ்யாவிலும் சீனாவிலும் ஜேர்மனி அதன் மூலோபாய போட்டியாளராக அமெரிக்காவை எதிர்கொண்டுள்ளது.

34. மத்திய கிழக்கில், ஜேர்மன் ஏகாதிபத்தியமானது அதன் சொந்த நலன்களையே பின்பற்றிவருகிறது. ஜேர்மன் தொழில்துறைக்கான முக்கியமான சந்தையாக இருந்துவரும் இப்பிராந்தியம், இப்பொழுது அமெரிக்காவின் கொள்கையால் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. ஈராக்கில் அமெரிக்காவால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரழிவானது ஜேர்மனியை இந்தப் பிராந்தியத்தில் தனது மூலோபாயத்தை மறுமதிப்பீடு செய்யும்படி நிர்பந்தித்தது. அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான பதட்டங்கள் மிக அண்மையில் பேர்லினில் அமெரிக்க உளவாளி அம்பலப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வெளிப்பட்டன.

35. அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்தளவிற்கு பலவீனமாக தோன்றுகின்றதோ அந்தளவிற்கு, ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் தமது சொந்த சுதந்திரமான மூலோபாயத்தை கூடுதலாக அபிவிருத்தி செய்கின்றன. ஆசியாவில் ஜப்பான் அமெரிக்காவின் ஆதரவுடன் அதன் சொந்த மறு இராணுவமயமாக்கலை எடுத்திருக்கிறது மற்றும் அதன் போருக்குப்பிந்தைய அரசியல் அமைப்பில் அடங்கியுள்ள அமைதிவாதத்திற்கு கடப்பாடுடைய தன்மையை அழித்துவிட்டது. ஆனாலும் ஜப்பான் அதன் சொந்த சுதந்திரமான நலன்களைக் கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இரு உலக யுத்தங்களுக்கு வழிவகுத்த அடிப்படை ஏகாதிபத்திய மோதல்கள் புதியவடிவங்களில் மீளத் தோன்றி இருக்கின்றன.

இடது கட்சி, பசுமை கட்சி மற்றும் மனித உரிமைகள் ஏகாதிபத்தியம்

36. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக் கட்சிகளும் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு ஆதரவளிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்கும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) பரந்த கூட்டணியில் இந்தப் பிரச்சாரத்தின் முன்னணியில் இருக்கின்றது. ரஷ்யாவிற்கு எதிரான இன்னொரு போருக்கு தயார் செய்வதன் மூலம் அது உலகப்போருக்கு வாக்களித்த அதன் நூறாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது. ஹார்ட்ஸ் சட்டங்களை ஏற்றுக்கொண்ட பத்தாண்டுகளுக்குப் பின்னர், சமூக ஜனநாயகக் கட்சியானது அதன் இரு பாதங்களையும் பெருமுதலாளிகள் மற்றும் பெருநிதியங்களின் முகாமில் உறுதியாய் வைத்திருப்பதை மீளவும் உறுதி செய்கிறது. கட்சியின் குரலை அமைத்துக் கொடுக்கும் செல்வச்செழிப்பு மிக்க அரசியல்வாதிகள், உயர் அரசு அதிகாரிகள், சிறுவணிகர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் சமுக சீர்திருத்தங்கள் மூலம் தொழிலாளர்களை முதலாளித்துவத்துடன் சமரசப்படுத்துவதற்கு இனியும் முயற்சிக்கப்போவதில்லை. பதிலாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்களை தொடுப்பதன் மூலமும், வலியத்தாக்கும் பெரும் வல்லரசுகளின் அரசியலுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் அவர்கள் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கின்றனர்.

37. ஜேர்மன் இராணுவவாதத்தை புதுப்பித்தலில் பசுமைக் கட்சியினரும் இடதுகளும் மையப் பங்கை வகித்தனர். பெயரளவில் அவை பாராளுமன்றத்தில் எதிர்ப்பைக் கொண்டிருக்கின்றன, ஆனால் யதார்த்தத்தில் புதிய கொள்கைவகுப்பதில் உயர் மட்டத்தில் அவை ஒருங்கிணைந்துள்ளன. இரு கட்சிகளுமே விஞ்ஞானம் மற்றும் கொள்கை அறக்கட்டளையின் (Stiftung Wissenschaft und Politik)  மூலோபாய பத்திரமான புதிய அதிகாரம் புதிய பொறுப்புஎன்பதை வரைவதில் சம்பந்தப்பட்டிருந்தன மற்றும் அனைத்து முக்கிய விஷயங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவை அளித்தன. அவர்களின் சொந்த சிறப்பான பங்களிப்பு, ஜேர்மன் இராணுவவாதம் திரும்ப வருவதை அமைதி,” “ஜனநாயகம்மற்றும் மனித உரிமைகள்என்ற வெற்றுரைகளால் மூடிமறைப்பதும், இராணுவவாதத்தின் புதுப்பித்தலுக்கு எதிரான பரந்த எதிர்ப்பை நசுக்குவதும் ஆகும்.

38. பசுமைவாதிகள் நீண்டகாலத்திற்கு முன்னரே தங்களின் அமைதிவாதத்தை குப்பையில் வீசிவிட்டனர். போர் ஆதரவு அரசியலை மனிதநேயத்திற்கான போராட்டம்என்று விற்பனைசெய்த நீண்ட பதிவுச்சான்றைக் கொண்டுள்ளனர். 21ம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு 20ம் நூற்றாண்டில் அதன் வரலாற்றுக் குற்றங்களை சிடுமூஞ்சித்தனத்துடன் பயன்படுத்திக்கொள்கின்றனர். 1999ல், பசுமைக் கட்சியின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஷ்சர், கொசோவோ போரில் ஜேர்மன் பங்கேற்பை இன்னொரு அவுஸ்விட்ச் வேண்டாம்என்ற இழிந்த கூக்குரலோடு நியாயப்படுத்தினார். அதுமுதற்கொண்டு, பசுமைக் கட்சியினர் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மனித உரிமைகள்மற்றும் மனிதநேயத்தைபாதுகாத்தல் என்ற பேச்சுடன் ஆதரித்தனர்.

39. பசுமைக் கட்சியினர் வெளிவிவகாரக் கொள்கை பிரச்சினைகளில் அரசாங்கத்தை விமர்சிக்கும்பொழுது, அவர்கள் வலதுபுறத்தில் இருந்து அவ்வாறு செய்தனர். லிபியப் போரில் ஜேர்மனியின் பங்கேற்பின்மையை அவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இப்பொழுது அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கில் ஜேர்மன் பங்கேற்கும் பெரும் இராணுவ நடவடிக்கைக்கும் முரசுகொட்டி வருகின்றனர். போலந்தின் மீதாக ஜேர்மன் நடத்திய தாக்குதலின் 75ம் ஆண்டு நினைவு தினம் பற்றிய அவரது பாராளுமன்ற உரையில், பசுமைக் கட்சித் தலைவர் அன்டன் ஹோஃப்றைட்டர், புதிய ஜேர்மன் போர்க் கொள்கைக்காக அழைப்பு விடுத்தார். “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அதன் விளைவுகளை கட்டாயம் கொண்டிருக்கும்என்று அறிவித்த அவர், “புட்டின் அவரது மோசடிக்கு விலைகொடுத்தாக வேண்டும்என்று கோரினார். “ஈராக்கில் இராணுவப் படையை பயன்படுத்துவது பற்றியும் அதற்கு ஜேர்மன் என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்பது பற்றியும் கலந்துரையாடுவது சரியானதேஎன்று அவர் மேலும் கூறினார்.“அமெரிக்க வான் தாக்குதல்கள் போதாது. பாதுகாப்பதற்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஒரு அதிகமான பரந்த இராணுவத் தலையீடு அவசியம்என அவர் தொடர்ந்தார்.

40. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மன் இராணுவவாதம் உலக அரங்கிற்குத் திரும்புதலில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியதும் அதனை மனிதாபிமானம்என்ற வெற்றுரையால் பூச்சுப்பூசியதும் பசுமைக் கட்சிதான். இன்று அந்த வேலையைச் செய்வது இடது கட்சியாக இருக்கிறது. பாராளுமன்றத்தின் வெளிவிவகாரத்துறையின் கட்சிப் பிரதிநிதியான ஸ்ரெபான் லீபிச், விஞ்ஞானம் மற்றும் கொள்கை அறக்கட்டளையின் புதியவெளியுறவுக் கொள்கையை வரைவதில் உதவியாக இருந்த அதேவேளை, கட்சியில் ஒரு புதிய ஏகோபித்த கருத்து உதித்தது. அதுமுதற்கொண்டு, இடது கட்சியானது ஜேர்மன் அரசாங்கத்தின் மூர்க்கமான வெளியுறவுக் கொள்கையை ஆதரித்துவருகிறது.

41. கட்சி நிர்வாகியால் மார்ச்சில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது, ரஷ்யாவை முறுகல் போக்கிற்காககுற்றம் சாட்டியது மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவ அச்சுறுத்தலைகண்டனம் செய்தது. சரியாக அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், பாராளுமன்றத்தில் (Bundestag) இடது கட்சியின் பிரதிநிதிகள் சிரியாவிற்கு எதிரான ஜேர்மன் இராணுவப் பணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அனைத்தும் ஆயுதம் களைதல்மற்றும் அமைதிக் கொள்கைஎன்ற பெயரில் செய்யப்பட்டது. இப்பொழுது இடது கட்சியானது, வலது புறத்தில் இருந்து அரசாங்கத்தைத் தாக்கி, மத்திய கிழக்கில் மிக விரிவான இராணுவ நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்கி வருகிறது.

42. ஆகஸ்ட் தொடக்கத்தில், கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாள் Neues Deutscħland ஈராக்கில் ஜிகாதிஸ்டுகளின் கொடுமைகளுக்கு எதிராக ஐ.நா நடவடிக்கையைஏற்கனவே கோரி இருந்தது. இடது கட்சி இந்த விவாதத்தில் ஒன்றும் கூறாமல் போகமுடியாது,” என்று அது எழுதியது. குர்திஸ்களுக்கு ஆயுதம் அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஜேர்மன் அரசியல்வாதிகளுள் முதலாவது நபர் இடது கட்சித் தலைவர் கிரிகோர் கீசி ஆவார். அவர் பாராளுமன்றத்தில் ஐ.நா துருப்புக்களால் ஆன ஒரு பெரும் தலையீட்டைக் கோரினார். முதலாளித்துவ-எதிர்ப்பு இடது (AkL) என்று அழைக்கப்படுகின்ற கட்சியின் பெண்பேச்சாளர் ஊலா ஜெல்ப்க ஈராக்கிற்கு ஜேர்மன் ஆயுதம் அனுப்புவது பற்றிய ஒரு சிறப்புக் கூட்டத்தொடரில், இடது கட்சியின் நிலைப்பாட்டைத் தொகுத்துப் பின்வருமாறு கூறினார்: “ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதை விடவும் மிகக் கூடுதலாக நாங்கள் கோருகிறோம்.”

43. மார்க்ஸ்21 மற்றும் சோசலிச மாற்றீட்டு ஜேர்மனி (SAV) போன்ற கட்சியில் உள்ள போலி இடது போக்குகள் மனித உரிமைகள் ஏகாதிபத்தியம்என்பதன் தீவிர ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் விவாதங்களையும் கருத்தியல் நியாயப்படுத்தல்களையும் வழங்குகின்றனர், அவற்றை ஆளும் வர்க்கமானது அதன் போர்க்கொள்கைக்கு ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்துகிறது. பொதுக்கருத்துக்கு நஞ்சூட்டும் பொருட்டு அவர்கள் சிரிய ஆசாத் ஆட்சியின் ஏகாதிபத்திய ஆதரவு எதிராளிகளை புரட்சியாளர்கள்என விவரிக்கின்றனர், கீயேவ் மைதான் சதுக்கத்தில் பாசிஸ்டுகளின் தலைமையிலான கலகங்களை ஜனநாயக வெகுஜன எழுச்சிஎனக் காட்டினர், மற்றும் ரஷ்யாவை ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்எனக் கண்டனம் செய்கின்றனர். அவர்கள் தற்போது ஈராக்கில் ஒரு இராணுவத் தலையீட்டிற்காக கிளர்ச்சி செய்து வருகின்றனர். “இஸ்லாமிய அரசை தடுத்து நிறுத்துஎன்று தலைப்பிடப்பட்ட அவர்களது அண்மைய துண்டறிக்கைகள் ஒன்றில் உடனடியான மனிதப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட முடியும்பொழுது ஏன் உதவக் கூடாது?” என்று SAV கேள்வியெழுப்பியுள்ளது. “உதவிஎன்று அவர்கள் அமெரிக்க வான்தாக்குதலையே அர்த்தப்படுத்துகிறார்கள்.

44. பிரச்சாரத்தில் SAV சிறப்புத் தேர்ச்சி பெறுகையில், மார்க்ஸ்21 உயர்மட்டத்தில் உத்தியோகபூர்வ போர்க்கொள்கையில் தனிப்பட்ட ரீதியில் சம்பந்தப்பட்டிருந்தது. மார்க்ஸ்21 உறுப்பினர் கிறிஸ்டின புஹ்ஹோல்ஸ் பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவில் இடது கட்சியின் பிரதிநிதியாக இருக்கிறார். அவ்வம்மையாருக்கு ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்கள் பற்றிய முதல் தகவல் அளிக்கப்பட்டது. பெப்ருவரியில், அவர் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லையென் உடன் சேர்ந்து ஆபிரிக்காவில் ஜேர்மன் துருப்புக்களை ஆய்வு செய்ய இராணுவ விமானத்தில் பயணித்தார்.

45. தொன்னூற்றைந்து ஆண்டுகளுக்கு முன்னர் லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் எனும் அவரது நூலில் எழுதியதாவது: “ஏகாதிபத்திய வாய்ப்புவளங்கள் மீதான பொதுஆர்வம், அதனைக் கடுமையாகப் பாதுகாத்தல் மற்றும் பிரகாசமான வண்ணங்களால் அதனைப் பூசுதல் அத்தகையன எல்லாம் காலத்தின் அறிகுறியாக இருக்கின்றன.” ஜேர்மன் இராணுவவாதத்தின் தற்போதைய புத்துயிர்ப்புக்கு பசுமைக் கட்சி மற்றும் இடதுகளின் எதிர்வினை போன்ற சிறந்த விவரிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. மீண்டும் ஒருமுறை, லெனின் எழுதியவாறு, பொருளாதாரத்தின் அனைத்துத்துறைகளின் மீதும் மேலாதிக்கம் செய்யும் ஒரு சிலரது கரங்களில் நிதி மூலதனம் செறிந்து கிடக்கிறது, உலகை மறுபங்கீடு செய்வது மீதாக பெரும் வல்லரசுகளுக்கிடையில் வளர்ந்துவரும் மோதல்கள் சொத்துடைமை வர்க்கங்கள் முழுமையாய் ஏகாதிபத்தியத்தின் பக்கம் செல்வதற்கு காரணமாய் அமையும்.” வெறித்தனம் மற்றும் ஆர்வத்துடன் பசுமைவாதிகள், ஸ்ராலினிஸ்டுகளை பின்பற்றுவோர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பணக்கார நடுத்தர வர்க்கம் மற்றும் இடது கட்சியின் குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளும் ஏகாதிபத்திய போர்க் கொள்கையை அரவணைத்துக் கொள்வதானது முதலாம் உலக யுத்தத்திற்கு முன்னர் ஜேர்மன் நடுத்தர வர்க்கம் பரபரப்புடன் போருக்கு ஆதரவளித்ததை நினைவூட்டுவதுடன் அடிப்படை சமூக மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகளையும் எழுப்புகிறது.

PSG ன் பணிகள்

46. ஆளும் வர்க்கத்தைப் போருக்கு உந்தித்தள்ளிய அதே காரணிகள்தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலைமைகளையும் உருவாக்கும். போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஐரோப்பாவிற்கு ஓரளவு ஸ்திரத்தன்மையை வழங்கிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக இயங்குமுறைகளின் பொறிவானது, இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் நிலைகொண்டிருந்த அதே பிரச்சினைகளுடன் ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தை மோதிக்கொள்ள வைக்கிறது. ஐரோப்பாவில் மேலாதிக்கம் செய்யவும் உலக வல்லரசாய் முயற்சிக்கவும் அது தொழிலாள வர்க்கத்தின் மீது போரை அறிவித்தாக வேண்டும். பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் இதர ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கும் இதேநிலை பொருந்தும். கூலிகளின் மீதும் வேலைநிலைமைகளின் மீதும் முடிவில்லாத தாக்குதல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக அரித்தழிக்கப்படல் என ஐரோப்பா முழுதும் பொதுவிதியாகி இருக்கின்ற கடுமையான கெடுபிடி வேலைத்திட்டங்களால் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. மறு ஆயுதமாக்கலுக்கு நிதியூட்ட சமூகச்செலவினங்களில் மேலும் வெட்டுக்களை நீடித்து இருக்கச்செய்வதன் மூலம், புதிய போர்களுக்கு வெடிமருந்தை வழங்குவதன் மூலம், ஜனநாயக உரிமைகளை அழித்தல் மூலம் மற்றும் சமுதாயத்தை முற்றுமுழுதாக இராணுவமயமாக்கல் மூலம் இராணுவவாதத்திற்கான விலையை தொழிலாள வர்க்கம்தான் ஏற்றாக வேண்டும்.

47. இராணுவவாதத்திற்கும் போருக்கும் எதிரான PSG இன் போராட்டமானது, தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மூன்றாவது உலக யுத்தத்தைத் தடுக்கவல்ல ஒரே சக்தி மற்றும் சர்வதேச வர்க்கம் அது மட்டும்தான். அதன் நலன்கள் முதலாளித்துவ அமைப்பிற்கு நேர் எதிராக நிற்கின்றன. ஆயினும், சோசலிசப் புரட்சியானது தன்னியல்பான நிகழ்ச்சிப்போக்கு அல்ல. அதன் ஓட்டமும் வெற்றியும் அரசியல் செல்வாக்கெல்லையில் தீர்மானிக்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்தத்தின்போது ட்ரொட்ஸ்கி எழுதியவாறு, மனித குலத்தின் வரலாற்று நெருக்கடியானது புரட்சிகரத் தலைமை நெருக்கடியாகக் குறைக்கப்பட்டு விட்டது. இந்த நெருக்கடிக்கான தீர்வு எமது கட்சியைக் கட்டி எழுப்புவதற்கான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் சார்ந்து உள்ளது.

48. PSG தொழிலாள வர்க்கத்தின் நனவை அபிவிருத்தி செய்வதற்கு சளையாத அரசியல் வேலையைச் செய்து வருகிறது. அது ஆளும் வர்க்கத்தின் ஊடகம் அனைத்து ஊதுகுழல்களின் ஏமாற்றுக்கள், பிரச்சாரம் மற்றும் பொய்களை அம்பலப்படுத்துகிறது. அது அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் பேரினவாதங்களுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு விழைகிறது மற்றும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டத்துடன் ஐக்கியத்தை ஆதரிக்கிறது. சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக அது போராடுகிறது. அது ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரித்து அதற்குப் பதிலாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுதற்குப் போராடுகிறது. ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளைக் கட்டியெழுப்புவதே போருக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான பணிகளுள் ஒன்றாகும்.

49. ரஷ்யாவிற்கு எதிராக இயக்கப்படும் போருக்கு எமது எதிர்ப்பானது ஜனாதிபதி புட்டினின் ஆட்சிக்கான எந்த ஆதரவையும் குறிக்காது. நேட்டோவின் ஆத்திரமூட்டல்களுக்கு ரஷ்யாவின் பதிலானது அதன் அரசியல் திவாலின் வெளிப்பாடாக இருக்கிறது. புட்டின் ஆட்சி, கோர்பச்சேவ் மற்றும் ஜெல்ட்சினின் கீழ் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து எழுந்தது. கலைப்பின் அழிவுகரமான பாதிப்புக்கள் நாளாந்தம் தெளிவாகிக்கொண்டிருக்கிறன. சோவியத் ஒன்றியத்தின் அரசுடைமை ஆக்கப்பட்ட சொத்தை கொள்ளையிட்டதால் தம் நல்வாய்ப்பை பெருக்கிக் கொண்ட கோடீஸ்வர தன்னலக்குழுக்களின் நலன்களைப் பாதுகாக்கும் புட்டின் ஆட்சியானது, ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் வர்க்க நலன்களுக்காக போராடுவதைத் தூண்டுகின்ற சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அணிதிரளலைக் கண்டு அஞ்சுகிறது. புட்டின், ரஷ்ய தேசியவாதத்திற்கு அழைப்பு விடுக்கிறார். இந்தப் பிற்போக்குக் கொள்கை ஏகாதிபத்தியத்தின் போர்ப்பிரச்சாரத்தில் பிரதான துருப்புச்சீட்டுக்களுள் ஒன்றாக இருக்கிறது.

50. போருக்கு எதிரான போராட்டம் கட்சி வேலையின் அனைத்து பகுதிகளிலும் நெருக்கமாகத் தொடர்புடையதாகும். PSG போருக்கும் இராணுவவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை, தங்களின் சமூக மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுடன் இணைக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் ஆகும். புன்டேஸ்வேரை (ஜேர்மன் இராணுவம்) இரத்துச்செய்தல், வெளிநாடுகளில் இருந்து ஜேர்மன் துருப்புக்களை உடனடியாக திரும்பப்பெறல், உளவு சேவைகளைக் கலைத்துவிடல் போன்ற போருக்கு எதிரான எதிர்ப்பில் இருந்து எழும் அனைத்துக் கோரிக்கைகளும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடன் சோசலிச அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை உருமாற்றும் இலக்குடன் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் சுயாதீனமாகவும் புரட்சிகரமாகவும் அணிதிரட்டுவதை அவசியமாக்குகிறது. தனியார் இலாபத் திரட்சியை நோக்கிய உந்துதலின் இடத்தில், சமூகத்தேவையை நிறைவேற்றுவதற்காக உற்பத்தியை பகுத்தறிவுபூர்வமாகவும், ஜனநாயக ரீதியாயும் திட்டமிடுவதை பதிலீடு செய்ய வேண்டும்.

51. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் PSG ஆகியவற்றின் பலமானது, அவற்றின் வேலைத்திட்டம் பூகோள பொருளாதார அபிவிருத்தியின் தர்க்கத்துடன் பொருந்தக் கூடியதாகவும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைத் தெளிவாகக் கூறுகிறதாகவும் இருக்கிறது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்கின் நனவான வெளிப்பாடுதான் கட்சியின் வளர்ச்சி ஆகும். ஆயினும் இந்த வளர்ச்சியானது தானாகவே இடம்பெறாது. அதன் புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு போராடுவது அவசியமானதாகும். தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரும் போராட்டங்களுக்காக அடித்தளத்தையும் தலைமையையும் வழங்கும்பொருட்டு, ஒவ்வொரு உறுப்பினரும் பிரதான ஆலைகளில், வேலைத்தளங்களில், பல்கலைக் கழகங்களில் மற்றும் பள்ளிகளில் கட்சியைக் கட்டுவதன் பணியைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதன் பகுதிகளையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாகக் கட்டி எழுப்புவதே போருக்கு எதிரான போராட்டத்தில் மைய மூலோபாயப் பணி ஆகும்.