தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் European Union threatens to veto France’s 2015 budget ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சின் 2015 வரவு-செலவு திட்டத்தை தடைசெய்ய அச்சுறுத்துகிறது
By Stéphane Hugues and Alex Lantier Use this version to print| Send feedback தேசிய நாடாளுமன்றத்தில் இந்த வாரம் 2015 வரவு-செலவு திட்டம் விவாதிக்கப்படுமென்பது, தொழிலாள வர்க்கம் மற்றும் பிரெஞ்சு மக்கள் மீதான ஒரு பாரிய தாக்குதலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. எவ்வாறிருந்த போதினும், ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் யூரோ மண்டல அமைப்புகளும் பிரெஞ்சு வரவு-செலவு திட்டத்தில் பற்றாக்குறை குறைப்பு போதாதென்றும், தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் சமூக தாக்குதல்களை பாரிஸ் தீவிரப்படுத்தவில்லையானால் புதனன்று அவை வீட்டோ அதிகாரத்தைப் (தடைவிதிக்கும் அதிகாரம்) பயன்படுத்துமென்றும் கூறி வருகின்றன. புதனன்று புருசெல்ஸில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் வரவு-செலவு திட்டத்தை நிராகரிக்க திட்டமிட்டிருப்பதாக ஐரோப்பிய கமிஷன் வட்டாரங்கள் கடந்த வாரம் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருந்தன. அவை பிரெஞ்சு அரசின் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அபராதங்களை விதிக்கக்கூடும். ஐரோப்பிய அரசுகளின் வரவு-செலவு திட்டக்கணக்கு, "ஸ்திரப்பாடு மற்றும் வளர்ச்சி உடன்பாட்டு விதிமுறைகளுக்கு பொருந்தி" இருக்க வேண்டுமென ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைவர் மரியோ திராஹியும் அறிவித்தார். அந்த உடன்படிக்கையானது, வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மூன்று சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டுமென ஆணையிடுகிறது. ஆனால் பிரான்சின் 2015 வரவு-செலவு திட்டக்கணக்கோ, GDPஇல் 4.3 சதவீத பற்றாக்குறையை அனுமானிக்கிறது. இந்த வாரயிறுதியில், ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ் தரமதிப்பீட்டு நிறுவனமும், அதன் சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பாரிஸூக்கு அழுத்தம் அளிக்கும் வகையில், கடன்வழங்கு பட்டியலில் பிரான்சின் AA இடத்தை கீழிறக்க அச்சுறுத்தி இருந்தது. ECB கவர்னர்கள் குழுவின் ஓர் அங்கத்துவரும் ஜேர்மன் நாடாளுமன்ற தலைவருமான ஜென்ஸ் வைட்மான், நேற்று, அதிக வெட்டுக்களுக்காக பிரான்சுக்கு அழுத்தம் அளிக்குமாறு கமிஷனைக் கேட்டுக் கொண்டார். பிரான்ஸ் GDPஇன் மூன்று சதவீதத்திற்கு அதன் பற்றாக்குறையைக் குறைத்துக் கொள்ளவில்லையானால், “விதிமுறைகள் மீதான நம்பகத்தன்மை கடுமையாக பலவீனப்படுமென" அவர் அறிவித்தார். “என்னுடைய பார்வையில், ஒன்றுபட்ட பாதையிலிருந்து விலகிச் செல்வதன் மூலமாக நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது," என்றார். இத்தகைய சர்வதேச விமர்சனங்களை முகங்கொடுத்த நிலையில், பிரதம மந்திரி இமானுவெல் வால்ஸ், “வரவு-செலவு திட்டக்கணக்கு மீது முடிவெடுக்க வேண்டியவர்கள் நாங்கள் தான். நாங்கள் ஐரோப்பியர்களிடம் கேட்கும் ஒரே விடயம் என்னவென்றால் துரதிருஷ்டவசமாக நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் யதார்த்தத்தை, அதாவது, யூரோமண்டலத்திற்கு குழிபறித்துவரும் நெருக்கடியை அவர்கள் கணக்கில் எடுத்து பார்க்க வேண்டும். பிரான்ஸ் ஒரு தலைச்சிறந்த நாடு, அதற்கு மதிப்பளிக்க வேண்டும். எங்களுடைய விவகாரங்களை எவ்வாறு நடத்துவதென்று சொற்பொழிவுகள் நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது," என்று கூறி, ஒரு சுதந்திர நிலைப்பாட்டைக் காட்ட முயன்றார். உண்மையில், அதன் பிற்போக்குத்தனமான சிக்கன கொள்கைகளுக்காக வெறுக்கப்படும் பிரெஞ்சு அரசாங்கம் அதன் செல்வாக்கை இழந்திருப்பதற்கு இடையே, சோசலிஸ்ட் கட்சியின் (PS) மந்திரிகள் வேலைவாய்ப்பின்மை காப்பீடு, குடும்பத்திற்கான சலுகைகள், மற்றும் ஏனைய சமூக சேவைகளின் மீதான கூடுதல் தாக்குதல்களுக்காக இப்போது விவாதித்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னர், தொழிலாளர்துறை மந்திரி பிரான்சுவா ரெப்சமென், வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களின் பெரும்பாலான வேலைவாய்ப்பின்மை சலுகைகளை மறுக்கும் விதத்தில், அவர்கள் மீது புதிய பரிசோதனைகளை நடத்த ஒரு பரிந்துரையை வெள்ளோட்டமிட்டார். இப்போது, முன்னாள் ரோத்ஸ்சைல்ட் முதலீட்டு வங்கியாளரான பொருளாதார மந்திரி எம்மானுவெல் மாக்ரோன், வேலைவாய்ப்பற்றோர் மீது இந்த யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் Journal du Dimancheக்கு அளித்த ஒரு பேட்டியில், வேலைவாய்ப்பின்மை சலுகைகளின் காலம் மற்றும் அளவு இரண்டையும் வெட்ட அவர் திட்டமிடுவதாக விவரித்தார். இது ஜேர்மனியில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான ஹார்ட்ஸ் IV வெட்டுக்கள் போன்ற மாதிரியில் அமைந்த வெட்டுக்களின் ஒரு முறையை திணிப்பதாகும். 2008இல் தொடங்கிய பூகோளமயப்பட்ட பொருளாதார நெருக்கடி பிரான்சில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்பற்றோர் மற்றும் தகுதிகுறைந்த வேலையில் இருப்போரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் ஒரு பேரழிவுகரமான சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தைக் கொண்டிருக்கும். இத்தகைய புதிய தாக்குதல்களின் தயாரிப்பை, "ஒரு நியாயமான விவாதமாக" வர்ணித்து, மாக்ரோனின் முனைவுக்கு வால்ஸ் அவரது ஆதரவைக் காட்டினார். மாக்ரோன் அவற்றை ஆறு மாதங்களில் கொண்டு வர பரிந்துரைத்து வருகிறார். தேசிய நாடாளுமன்றத்தில் உள்ள PS நிர்வாகிகள், அனைவருக்கும் உரிய தன்மை கொண்ட குடும்ப சலுகைகளை கைவிட்டு விடுவதற்கான வாய்ப்புகள் மீது வேலை செய்து வருகிறார்கள், அவை அனேகமாக தகுதியுடையவர்களுக்கு மட்டும் அளிக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்படக்கூடும். இது மத்தியதர வர்க்கங்களில் அதிக சம்பாதியம் பெறுபவர்கள் உட்பட மக்களின் பெரும் பிரிவினரைப் பாதிக்கும். இந்த புதிய தாக்குதல்கள், முன்மொழியப்பட்டுள்ள PSஇன் பிற்போக்குத்தனமான வரவு-செலவு திட்டக்கணக்கில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் தாக்குதல்களுக்கு மேலதிகமாக வருகின்றன. இந்த வரவு-செலவு திட்டக்கணக்கு செலவினங்களில் 21 பில்லியன் யூரோவுக்கும் அதிகமாக குறைத்திருப்பதுடன், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் பொறுப்புடைமை ஒப்பந்தம் என்றழைக்கப்பட்டதில் குறிப்பிடப்பட்ட பெருநிறுவன முதல் வரியில் வெட்டுக்களையும் உள்ளடக்கி உள்ளது. அரசின் செயல்பாட்டு செலவுகளில் 7.7 பில்லியன் யூரோ அளவில், மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கான அதன் நிதியுதவிகளில் 3.7 பில்லியன் யூரோ அளவில் குறைப்பு செய்யப்பட உள்ளன. முழுவதுமாக 9.6 பில்லியன் யூரோ, அல்லது திட்டமிடப்பட்ட மொத்த வரவு-செலவு வெட்டுக்களில் ஏறக்குறைய பாதி, நேரடியாக சமூக சேவைகள் மற்றும் சலுகைகளைத் தாக்குகிறது. மருத்துவ அமைப்புமுறையில் 3.2 பில்லியன் யூரோ செலவினங்கள் குறைக்கப்படுகின்றன, அதேவேளையில் குடும்பங்களுக்கான சலுகைகளில் 700 மில்லியன் யூரோ வெட்டப்படுகின்றன. பிராந்திய மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு 3.7 பில்லியன் யூரோ வெட்டு என்பது உள்ளாட்சி மட்டங்களில் நிதியுதவி வழங்கப்படும் பள்ளிக்கூட மதிய உணவு திட்டம் மற்றும் பகல்நேர குழந்தைகள் கவனிப்பு மையங்கள் போன்ற ஏனைய சமூக சேவைகளுக்கு குழிபறிக்கும். PS மற்றும் ஐரோப்பிய கமிஷனால் கட்டளையிடப்பட்ட இந்த சிக்கன நடவடிக்கைகளே முதலாளித்துவ திவால்நிலைமையை எடுத்துக்காட்டுகின்றன. அவை கிரீஸ், அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் 2008இல் இருந்து பின்பற்றப்பட்ட பின்னோக்கிய சமூக திருப்பத்தின் பாதைக்கு இப்போது பிரான்ஸை அழுத்தி வருகிறது. அவர்களின் குறிப்பிடத்தக்க வர்க்க இறுமாப்புடன், அதிக ஊதியம்பெறும் வங்கியாளர்களும் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும், தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பெரும்பகுதியினரை வறுமைக்குள் தள்ள கோரி வருகின்றனர். அதேநேரத்தில், ஐரோப்பிய பொருளாதாரமோ ஒரு புதிய பொறிவின் மற்றும் பணச்சுருக்கத்தின் விளிம்பில் உள்ளது, குறிப்பாக ஜேர்மனியின் ஆகஸ்ட் ஏற்றுமதி 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், யூரோமண்டலத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான அந்நாடு மந்தநிலைமைக்குள் திரும்பி வருகிறதென்ற ஆச்சரியமான அறிவிப்புகளும் அங்கே உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் நெருக்கடி, பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே, முக்கியமாக ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு இடையே வெடித்து வருகின்ற, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பதட்டங்களை மேலுயர்த்திக் காட்டுகிறது. ஆகஸ்டில், இரண்டு மந்திரிகள், ஆர்னோ மொண்டபூர்க் மற்றும் பெனுவா அமோன், பாரீசின் சிக்கன கொள்கைகளை விமர்சித்த போது, வால்ஸ் தலைமையிலான முதல் பிரெஞ்சு அரசாங்கம் பொறிந்தது. அக்கொள்கைகள் பேர்லினால் கட்டளையிடப்பட்டு வருவதாகவும், அவை பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) வளர்ச்சிக்கு பொறுப்பாவதாகவும் அவர்கள் கண்டித்திருந்தனர். இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி அக்டோபர் 2இல், இந்த விவகாரத்தில் "பாரிஸ் கூறுவதே சரி" என்று கருத்து தெரிவித்த பின்னர், பாரிஸ் ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளில் அதன் வரவு-செலவு திட்டகணக்கைப் பாதுகாக்க ரோமிடமிருந்து ஆதரவைக் கணக்கிட்டு வருவதாக தெரிகிறது. இந்த திசையில், ECBஇன் இத்தாலிய தலைவர் மரியோ திராஹியால் பாரிஸிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையானது, PS இந்த பிரச்சினையில் அதீத-நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு குறிப்பாக உள்ளது. ஆனால் பிரான்கோ-இத்தாலிய பேச்சுவார்த்தைகளின் முடிவு என்னவாக இருந்தாலும், புருசெல்ஸில் புதனன்று நடக்கவுள்ள ஐரோப்பிய உச்சிமாநாட்டின் நிகழ்ச்சிநிரலில், அதுவும் குறிப்பாக ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய யூரோமண்டலத்தின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளுக்கு இடையே, ஒரு வெடிப்பார்ந்த மோதல் உள்ளது. |
|
|