தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lanka: Leading Tamil party gives ultimatum for power-sharing deal இலங்கை; முன்னணி தமிழ் கட்சி அதிகார பரவலாக்கல் சம்பந்தமாக இறுதிக் காலக்கெடு விதிக்கின்றது.
By W.A. Sunil Use this version to print| Send feedback இலங்கையின் தமிழ் உயர்தட்டுக்களின் ஒரு கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஒரு அதிகார பரவலாக்கல் திட்டத்தினை வழங்க வேண்டுமென அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்து, தனது 15வது தேசிய மாநாட்டில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. தமிழரசுக் கட்சி, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு கூட்டான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆளுமை செலுத்துகின்ற ஒரு கட்சியாகும். இதன் கோரிக்கைகள், இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ மீது அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களது அதிகரித்துவரும் அழுத்தங்களின் வழியில் உள்ளது. இம்மாத முற்பகுதியில் மூன்று நாட்களாக வவுனியால் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டின் போது 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இறுதி தீர்மானது “எமது மக்களை அடக்குவதை, மேலும் நிலங்களை அபகரிப்பதை, எமது மக்களின் செல்வங்களை அழிப்பதை, எமது பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதை மற்றும் அரசியல் தீர்வு காண்பதை இழுத்தடிப்பதை” அரசாங்கம் தொடருமானால், “அடுத்த வருடம் ஜனவரி தொடக்கம் மாகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் எமது கட்சி போராட்டத்தினை ஆரம்பிக்கும்” என கூறுகின்றது. தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு, 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படும் வரை, அதன் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்டது. புலிகளின் தோல்விக்குப் பின்னர், “ஐக்கிய” இலங்கைக்குள் கணிசமான அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட “உள்ளக சுயநிர்ணய உரிமை” கோரிக்கு கூட்டமைப்பு அழைப்பு விடுக்க ஆரம்பித்தது. யுத்தத்துக்குப் பின்னர், ஜனாதிபதி ராஜபக்ஷ, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இராஜதந்திர அழுத்தத்தின் கீழ் இருந்தபோது, கூட்டமைப்புடன் ஒரு அதிகாரப் பரவலாக்ல் கொடுக்கல் வாங்கலுக்கு வாக்குறுதி அளித்தார். அவரது நிர்வாகம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இராணுவ ஆட்சியை இன்னமும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. கூட்டமைப்பு கடந்த வருடம் நடைபெற்ற வடக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றியீட்டிய போதிலும், கொழும்பு அந்தச் சபைக்கு உண்மையான அதிகாரங்களை கொடுப்பதை நிராகரித்து, தமிழ் முதலாளித்துவ தட்டை ஒரங்கட்டியது. தமிழரசுக் கட்சி இந்த மாகாணங்களில் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதுடன், யுத்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், நாட்டின் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தினை இரத்துச் செய்ய வேண்டும் மற்றும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும், போன்ற கோரிக்கைகள் அந்த அமைப்பினால் முன்வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், தமிழரசுக் கட்சி அடிப்டையில் அக்கறை காட்டுவது, வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் பற்றி அல்ல, மாறாக தமிழ் உயர் தட்டினருக்கு விருப்பமான கொடுக்கல் வாங்கல்களை தக்க வைத்துக்கொள்வதிலேயே ஆகும். 1987ம் ஆண்டின் இலங்கை – இந்திய ஒப்பந்த்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே, அதன் “உள்ளக சுயநிர்ணய உரிமை” கோரிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் விதிகளை மீறாமல் முழுமையாக அமுல்படுத்துவதற்காக, இந்தியா மற்றும் “சர்வதேச சமூகம்” கொழும்புக்கு அழுத்தத்தினைப் பிரயோகிக்க வேண்டும், என்று தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று அழைப்பு விடுக்கின்றது. 1987 இந்திய- இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் ஊடாக தமிழ் உயர் தட்டுக்களுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்கி, இலங்கை அரசை பாதுகாப்பதையும் புலிகளை நிராயுத பாணியாக்குவதையும் இலக்காக் கொண்டதாகும். இது ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வளர்ந்து வரும் தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மையை தடுப்பதில் புது டில்லி விழிப்புடன் இருக்கின்றது. இலங்கை தமிழ் நாட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பதுடன், அந்த மக்கள் இலங்கைத் தமிழர்களுடன் இன ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தன் மூலமே வடக்கு மாகாணசபை 1988ல் ஸ்தாபிக்கப்பட்டிருந்த போதிலும், சிங்கள் இனவாதிகளின் எதிர்ப்பின் காரணமாக அரசாங்கம் சபையைக் கலைத்தது. 2006ல், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு சாதகமான ஒரு நீதி மன்ற தீரப்பினையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. இம் மாதத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று, இலங்கையின் “தேசியப் பிரச்சினை “இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆக கூடிய அதிகாரத்தினை பகிர்வதன்” மூலமே தீர்க்கப்பட முடியும் எனக் கூறுகின்றது. அது, தமிழ் மற்றும் முஸ்லீம் குழுக்கள் மற்றும் “சகல முற்போக்கு சக்திகள்” ஒன்றிணைந்து, “புதிய அரசியலமைப்பு சீர் திருத்த்துக்காக” போராட வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது. “சாத்தியமான கூடுதல் அதிகாரப் பரவலாக்கல்”, தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் எந்தவிதமான அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போவதில்லை. அதன் உண்மையான நோக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் உழைக்கும் மக்களை சுரண்டுவதன் பேரில் சர்வதேச மூதலீட்டாளர்களுடன் நேரடி கொடுக்கல் வாங்கல்களுக்காக தமிழ் முதலாளிகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பதே ஆகும். 2014 மார்ச்சில், ஐநா மனித உரிமை பேரவையில், இலங்கை மீது கொண்டு வரப்பட்ட “சர்வதேச விசாரணைக்கான” தீர்மானத்துக்கு அமெரிக்காவுக்கும் மற்றைய நாடுகளுக்கும் தமிழரசுக் கட்சி மாநாடு வெளிப்படையாக நன்றி கூறியதோடு கொழும்பின் யுத்தக் குற்றங்கள் மீதான “சர்வதேச விசரணைக்கு உதவுவதாகவும்” உறுதியளித்தது. பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐநா மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவும் மற்றைய ஏகாதிபத்திய சக்திகளும், அதேபோல் சீனா மற்றும் இந்தியாவும் புலிகளுக்கு எதிரான யுத்த்தில் இலங்கைக்கு உதவியிருந்த போதிலும், தற்போது ஒபாமா நிர்வாகம் கொழும்பின் யுத்தக் குற்றங்களை தனது சொந்த நலனுக்காக சிடுமூஞ்சித் தனமாக உபயோகித்துக்கொள்கின்றது. வாஷிங்டன் தற்போது கூட்டமைப்புடன் ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருகின்து. இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோடி, கடந்த மாதம் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், 13வது திருத்தினை நடைமுறைப்படுத்துமாறு ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். சீனாவுக்கு எதிரான “ஆசியாவில் முன்னிலை” என்ற அதன் வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக, ஒபமா நிர்வாகம் இலங்கை மீதான யுத்தக் குற்றச் சாட்டுக்களைப் பற்றிக் அக்கறை காட்டுவது, புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது வளர்க்கப்பட்ட பெய்ஜிங்குடனான உறவுகளை கைவிடுமாறு ராஜபக்ஷவை நெருக்குவதற்கே ஆகும். சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் பூகோள அரசியல் சூழ்ச்சிகளுக்குள் சிக்கியுள்ள ராஜபக்ஷ அரசாங்கம், ஒபமா நிர்வாகத்தின் ஆதரவினைப் வெல்வதன் பேரில், சீனா-விரோத திருப்பத்துக்குப் பின்னால் அணி திரளும் சமிக்ஞைகளைக் காட்டியுள்ளது. ராஜபக்ஷ அந்த வழியில் அடி எடுத்து வைத்தால், கொழும்புக்கு எதிரான மனித உரிமை மீறல் பற்றில் தனது குற்றச்சாட்டுக்களை வாஷிங்டன் அமைதியாக கைவிட்டுவிடும். “முற்போக்குச் சக்திகளுக்கான” தமிழரசுக் கட்சியின் அழைப்பானது அமெரிக்காவின் போலி மனித உரிமை பிரச்சாரத்தினை அங்கீகரித்துக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு முதலாளித்துவ நிர்வாகத்தினை ஸ்தாபிப்பதற்கு முண்டு கொடுக்கும், நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடதுசாரிகளுக்கு விடுக்கும் அழைப்பாகும். இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, இனவாத பதட்டத்தினைக் கிளறிவிடுவதற்காக தமிழரசுக் கட்சி மாநாட்டினை உடனடியாகப் பற்றிக் கொண்டார். அவர் ஐலண்ட பத்திரிகைக்கு கூறுகையில், தமிழரசுக் கட்சி தீர்மானத்தை “2003ல் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்”, என்றார். இந்த தீர்மானங்கள், நாட்டில் புதிய “அரசியல் கொந்தளிப்புக்களை” உருவாக்கும் என பிரகடனம் செய்த அவர், “தமிழரசுக் கட்சியின் அச்சுறுத்தல்களை தடுக்க ஒரு உறுதியான பிரச்சாரத்துக்கும்” அழைப்பு விடுத்தார். ராஜபக்ஸவின் ஆத்திரமூட்டும் கருத்துக்கள், தமிழர்-விரோத இனவாத்தினை மேலும் தூண்டிவிடும் இலக்கை கொண்டனவாகும். கடந்த வருடம் முழுவதும், அரசாங்கம் சிங்கள் இனவாத குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து, புலிகள் மீண்டும் “புத்தூக்கம்” பெறுகிறார்கள் என கூறிக் கொண்டு, பல அடக்குமுறை நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்த நடவடிக்கைகள், தொழிலாளர் வர்க்கத்தினைப் பிளவுபடுத்துவதையும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்புக்களைக் கீழறுப்பதையும் இலக்காகக் கொண்டதாகும். தன் பங்கிற்கு, தமிழரசுக் கட்சி சிங்கள் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்களின் ஐக்கியத்தினை ஆழமாக எதிர்க்கின்றது. இதன் பிரதான நோக்கம், தமிழ் வெகுஜனங்களை சுரண்டுவதில் இருந்து சிறந்த இலாபத்தினைப் பெறக் கூடியவாறு, குறிப்பிடத்தக்க அதிகாரங்களுடன் ஒரு மாகாண தன்னாட்சியை ஸ்தாபிப்பதற்காக, ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை வென்றெடுப்பதே ஆகும். தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள், அரசாங்கம் மற்றும் சிங்கள அதிதீவிரவாத குழுக்களின் பேரினவாத பிரச்சாரத்தையும், அதேபோல் தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் பிற்போக்கு தேசியவாத நிகழ்ச்சி நிரல்களையும் நிராகரிக்க வேண்டும். சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்கள் தொழிலாளர் வர்க்கத்தை தங்களுடைய வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாக காணுவதுடன். தமிழர்-விரோத பாகுபாடுகள் முதலாளித்துவ இலாப முறையிலேயே வேரூன்றியுள்ளன. தெற்காசிய மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக -ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்காக- இன பாகுபாடுகளுக்கு அப்பாலான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே தமிழர் விரோத பாகுபாடுகளை அகற்ற முடியும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் புரட்சிகர சர்வதேசிய முன்னோக்காகும். சோசக, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்று கோருவதுடன், சகல வடிவிலான இனவாதங்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. நாம் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டத்தை கற்குமாறும் அதில் இணைந்துகொண்டு சோசலிச மாற்றிட்டுக்கான போராட்டத்தில் பங்குபற்றுமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். |
|
|