World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்

By Kapila Fernando,
15 August 2014

Back to screen version

கடந்த வாரம், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இது, கல்வி வெட்டுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடிக்கொண்டிருக்கும் மாணவர்களின் அவதானத்தை திசை திருப்புவதற்காகவும் அவர்களுக்கு இடையில் இனவாத பிளவு ஒன்றை கிளறிவிடுவதற்காகவும், இராஜபக்ஷ அரசாங்கமும் பல்கலைக்கழக நிர்வாகமும் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகும். “பயங்கரவாதஇயக்கம் மீண்டும் பல்கலைக்கழகத்துக்குள் தலை நீட்டி வருவதாக பிரச்சாரம் செய்து மாணவர் ஒடுக்குமுறையை உக்கிரமாக்குவதற்கு அரசாங்கம் இந்த சம்பவத்தை நன்கு பயன்படுத்தி வருகின்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் குமார் சுதர்சன், கடந்த மூன்றாம் திகதி இரவு, பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தங்குமிட வளாகத்தில், முகங்களை மூடிக்கொண்டு வந்த கும்பலொன்றினால் தாக்கப்பட்டு, வெட்டு கொத்து காயங்களுடன் மயங்கிக் கிடந்தபோது, நண்பர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சுதர்சன் கிளிநொச்சில் முகமாலையை வசிப்பிடமாகக் கொண்டவர்.

இரண்டு நாட்களின் பின்னர், அதாவது 5 ம் திகதி, அதே பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் யோகராஜா நிரோஷன் என்ற மற்றொரு மாணவர், மேற்குறிப்பிட்ட தாக்குதலில் சந்தேக நபர் எனக் கூறிய பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டார். சந்தேகம் சம்பந்தமாக எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்காமலே, பல்கலைக்கழக பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது நிரோஷன் கைது செய்யப்பட்டார். அவர் பல்கலைக்கழகத்துக்குள் இன ஆத்திரமூட்டல்களுடன் தொடர்புபட்டுள்ளார் என்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களின் பின்னர் யோகராஜா நிரோஷன் விடுதலை செய்யப்பட்ட போதும், தாக்குதலுக்குள்ளான சுதர்சன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று முடிந்த உடனேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டார். தாக்குதல் தொடர்பாக அவர் முன்வைத்த முறைப்பாட்டில் கேள்விகளும் சந்தேகங்களும் இருப்பதாக கூறிக்கொண்டு, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுதர்ஷனை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் கூறியது.

சுதர்சன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலானது, அவராலேயே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது என்று உணரும் கருத்தை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வெளியிட்ட பின்னரே, இந்த இரு மாணவர்களும், கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பந்தமாக கருத்து தெரிவித்த உப வேந்தர், “தமது வீடுகளுக்கு அருகில் இருக்கின்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்துகொள்வதற்காக தமிழ் மாணவர்கள் குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒரு சம்பவம் அதுஎன தான் நம்புவதாக கூறினார். உப வேந்தரின் கருத்தும் அதன் பின்னர் நடந்த கைது நவடிக்கைகள் உட்பட முழு நடவடிக்கைகளையும் ஆராயும்போது, இது திட்டமிடப்பட்ட அரசியல் நடவடிக்கை என்பது தெளிவு.

உயர் கல்வி அமைச்சர் எஸ் பி திசநாயக்க தம்புள்ளையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது, கூறிய கருத்து அதை மேலும் நிரூபித்தது. சுதர்சன் போரின் கடைசி கட்டத்தில் புலிகளில் இருந்த பிரதான செயற்பாட்டாளர் என்றும் பின்னர் அவர் அரச இராணுவத்தின் கீழ் புனர்வாழ்வு பெற்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்பெயர் குறிப்பிடாமல்தெற்கில்அரசியல் கட்சி ஒன்றை சுட்டிக் காட்டி, பல்கலைக்ழகத்துக்குள் இனவாத மோதல்களை கிளறிவிடும் சதி இடம்பெறுவதாக திசநாயக்க கூறினார்.

தமிழ் மாணவர்களை புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக் கூறியும், அவர்களை இன ஆத்திரமூட்டல்காரர்களாக முத்திரை குத்தியும், இனவாத ஆத்திரமூட்டலுக்குள் இழுத்து விடுவது மாணவர்கள் அல்ல, திசநாயக்கு உட்பட இராஜபக்ஷ நிர்வாகமே ஆகும். மாணவர்களுக்கும் பிரதானமாக தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக இனவாத பிளவுகளை கிளறிவிடுவது இலங்கை முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் வழக்கமான கொள்கையாகும்.

தனது உடலில் இருக்கும் வெட்டு கொத்து காயங்களை சுதர்ஷனே ஏற்படுத்திக் கொண்டவை என திசநாயக்க கூறுவதும் மிகவும் கொடூரமானதாகும். இது அரச இராணுவத்தின் அல்லது குண்டர் கும்பல்களின் தாக்குதல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கும், எதிர்க் கட்சி அரசியல் செயற்பட்டாளர்களுக்கும் எதிராக அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் பேர்போன தர்க்கமாகும். தாக்குதலுக்கு உள்ளானவர்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிதானே தனது உடலுக்கு சேதம் ஏற்படுத்திக்கொண்டதாக பலாத்காரமாக வாக்குமூலங்கள் பெறுவது சம்பந்தமாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு இழிபுகழ் பெற்றதாகும். சுதர்சனிடமும் அத்தகைய வாக்குமூலம் பெறப்பட்டு வருவது நிச்சயமானதாக இருக்கும்.

சுதர்சனுக்கு தாக்குதல் தொடுக்கப்பட்ட அன்று, நிரோசன் பல்கலைக்கழகத்தில் இருக்கவில்லை என்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளதோடு உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குள்சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையுடனேயே செயற்படுகின்றனர்என்றும் பிரதேசவாசிகளுடனும் அதே போன்ற உறவே இருப்பதாகவும் கூறினர். தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தில் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியதில் இருந்தே, அத்தகைய இனவாத பிளவுகள் அவர்கள் மத்தியில் இல்லை என்பது தெளிவானது என்றும், வெளியில் இருந்து வந்த கும்பலாலேய இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றும் சந்தேகப்படுவதாக அவர்கள் மேலும் கூறினர்.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல் நாளில் இருந்தே தங்குமிடத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு மரண அச்சுறுத்தல் விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். முழு பல்கலைக்கழகத்தினதும் பாதுகாப்புக்காக பாதுகாப்பு அமைச்சு சார்ந்த ரத்ன லங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு அத்தகைய ஒரு பாதுகாப்பு அரணுக்கு அருகிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைக்காக பயன்படுத்தப்பட்ட ஆத்திரமூட்டல் சம்பவங்கள் அநேகமானவற்றுக்கு, இராணுவத்தில் சேவையாற்றியவர்கள் அடங்கிய இந்த பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவு பொறுப்புச் சொல்ல வேண்டும் என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் கலாச்சார கழகத்தின் தலைவர் தினேஷ் தேவராஜா சண்டே லீடர் பத்திரிகைக்கு கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள்சரீர ரீதியில் நன்கு வளமானவரகள்என்றும் அவர்கள்பல்கலைக்கழக மாணவர்கள் அல்லஎன்றும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சுதர்சன் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

நிரோஷன் கைது செய்யப்பட்ட பின்னர், அவரைப் பற்றி விசாரிப்பதற்காக சமனல வெவ மற்றும் பதுளை பொலிஸ் நிலையங்களுக்கு சென்ற மாணவர்களிடம், “அவரைக் கைது செய்தது பயங்கரவாத விசாரணை பிரிவு”, என்றும் அவரை மீண்டும் பார்க்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர் தலைவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை மிரட்டுவது கடந்த காலத்தில் அரசாங்கம் பயன்படுத்திக்கொண்ட இன்னொரு உபாயமாகும். இந்த கைதுகளுக்கு எதிராக முன்னணிக்கு வந்த சப்ரகமுவ மாணவர் செயற்பாட்டாளர்களின் பெற்றோர்களைத் தேடிச் சென்ற பொலிஸ், ‘பிள்ளையை வீட்டுக்கு அழைக்காவிட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு சிறையில் போடுவோம்என்று கூறி, அவர்களை மிரட்டியுள்ளனர். அவ்வாறு கைது செய்வது பற்றி விசாரிப்பதறகாக, உப வேந்தரிடம் சென்ற மாணவர்களினது தேசிய அடையாள அட்டைகள், உப வேந்தர் உட்பட பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கல்வி உரிமைக்கும் இலக்கு வைக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதலே இந்த கொடூருமான மாணவர் ஒடுக்குமுறைக்கு கீழ் இருக்கின்றது. சப்ரகமுவ பல்கலைக்கழகம் அதற்கு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இது அதிகரிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு பிரதிபலிப்பாக 1980களின் பின்னர் இலங்கையில் உருவான ஆறு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இங்கு எந்தவொரு பல்கலைக்கழகமும் நிச்சயமான திட்டமிடலின் படி கட்டியெழுப்பபடவில்லை. அத்துடன், சமனலவெவ திட்டத்தில் கைவிடப்பட்ட பல கட்டிடங்களிலேயே சப்பரகமுவ பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒன்பது பிரதேசங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் 3000 மாணவர்கள் இங்கு கல்வி கற்பதோடு அவர்கள் மத்தியில் தமிழ் மாணவர்கள் 250 பேர் வரை உள்ளனர். ஆயினும் இரண்டு பீடங்களுக்கு மட்டுமே நூலக வசதிகள் உள்ளன. விரிவுரை மண்டபங்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை காரணமாக சில பீடங்களில், இரவு 7 மணி வரையும் விரிவுரைகள் இடம்பெறுகின்றன. முறையான சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு அற்ற வெளியில் உள்ள சுமார் 40 விடுதிகள், பல்கலைக்கழகத்தின் முறையின்மைக்கு பிரதான காரணியாகும்.

வசதிகள் கோரி அடிக்கடி போரட்டத்துக்கு வரும் மாணவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையை தீவிரமாக்கி, சுமார் ஒன்றரை வருடங்களாக பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் மற்றும் பீடங்களில் உள்ள மாணவர் சங்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. 7 மாணவர்களின் வகுப்புகளை தடை செய்து, சகல அரசியல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு வேலியிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் முகங்கொடுக்கும் தாங்க முடியாத கடினமான கல்வி நிலைமைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான கொடூரமான ஒடுக்குமுறையும் நடப்பில் உள்ள இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் ஒட்டு மொத்த முதலாளித்துவ முறைமைக்கும் எதிரான ஒரு குற்றப்பத்திரிகை ஆகும்.

 

வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற முதலாளித்துவ அமைப்பு முறையின் உள் முரண்பாடுகள், மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கியும் சமூக எதிர்ப் புரட்சியை நோக்கியுமே உந்தித் தள்ளுகின்றன. இராஜபக்ஷ நிர்வாகம் உட்பட உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் நிதி மூலதனத்தின் அவசியங்களின் பேரில் சகல சமூக நலன்புரி சேவைகளையும் நாசமாக்கி, இந்த சமூக எதிர்ப் புரட்சி நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தி வருகின்றன.

இந்த தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்துக்கு வருகின்ற தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவதற்காக பொலிஸ்-இராணுவ வழிமுறையில் மேலும் மேலும் தங்கயிருக்கின்ற அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இனவாதத்துக்கும் மேலாக மதவாதத்தையும் பயன்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான மூன்று தாசப்தங்களாக முன்னெடுத்த போரின் பின்னர், பொதுபல சேனா போன்ற பாசிச பாணியிலான அடிப்படைவாத கும்பல்கள், அரசாங்கத்தின் ஆதரவுடனேயே முஸ்லிம் மக்களுக்கு எதிராக வீதியில் இறக்கப்பட்டுள்ளன.

ஏகாதிபத்திய போர் உந்துதலில், “பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் சாக்குப் போக்கின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இராணுவ வாதம் உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்களால் தமது நாடுகளில் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நசுக்கித் தள்ளுவதற்கு நன்கு பயன்படுத்திக்கொள்கின்றது. பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகின்றது என்ற இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பின்னால் இத்தகைய திட்டங்களே உள்ளன.

ஆயினும், இப்போதுள்ள மாணவர் சங்கங்கள், மாணவர்களை அசியல் ரீதியில் பிற்போக்குக்குள் தள்ளி நிராயுதபாணிகளாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. அனத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் மாணவர் சங்கங்கள்மாணவர் அரசியல்என்ற மோசடியின் கீழ், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்த சமூக எதிர்ப்புரட்சியை கைவிடச்செய்ய முடியும் என்ற மாயையில் மாணவர்களை அடைத்து வைத்துள்ளன.

சப்ரகமுவ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத பிளவுகளை ஏற்படுத்துவதற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தையும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தையும் இயக்குவது, இனவாத யுத்தத்தின் இரத்தத்தில் ஊறிப் போயுள்ள தலைவர்கள் அடங்கிய முன்னிலை சோசலிச கட்சியினர் (முசோக) ஆகும். முசோக தலைவர்கள், இராஜபக்ஷ அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்து கல்வி உட்பட சமூக நலன்புரி சேவைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதலை தொடுக்கும்போது, அந்த போருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியின் பங்குதாரர்களாக இருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாணவர் சங்கத்தின் தலைவர் ரசிந்து ஜயசிங்க, இன பாகுபாடுகளுக்கு எதிராகமனிதத்தன்மையை சிந்தித்து தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்என்று தெரிவித்தார். ‘மனிதத் தன்மைக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், அவர்கள் பலம்வாய்ந்த வர்க்கப் பிரச்சினையை மூடி மறைக்கின்றனர். சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்கள், ஏனைய ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் இளைஞர்களையும் சோசலிச சர்வதேசிய வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தி தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை அதிகாரத்திற்கு கொண்டுவர போராடுவதன் மூலம் மட்டுமே இராஜபக்ஷ அரசாங்கத்தின் இனவாத பாகுபாடுகளை தோற்கடிக்கவும் கல்வி உட்பட சமூக உரிமைகளை பாதுகாக்கவும் முடியும்.