தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை பாதுகாப்பு அமைச்சு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நாஷனல் ஏற்பாடு செய்த ஊடக செயலமர்வை நிறுத்தியது
By Wasantha Rupasinghe, Use this version to print| Send feedback இலங்கை பாதுகாப்பு அமைச்சு இராணுவ புலனாய்வுப் பிரிவை பயன்படுத்தி, ஊழல் விரோத ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நாஷனல் ஸ்ரீலங்கா (டீஐஎஸ்எல்) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பகுப்பாய்வு ஊடகம் தொடர்பாக ஊடகத்துறையினரை தெளிவுபடுத்தும் இரண்டு செயலமர்வுகளை பலாத்காரத்தை பிரயோகித்து நிறுத்தியுள்ளது. இராணுவ நிர்வாகம் நடைபெறும் வடக்கு பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்களை நினைவூட்டும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரானது எனக் கருதும் எந்தவிதமான செயலையும் நிறுத்துவதற்கு இராணுவத்தை பிரயோகிக்கும் என்பதற்கு ஒரு அடையாளமாகும். இராணுவ புலனாய்வுத்துறையினர் முதலாவதாக கடந்த மே மாதம் பொலன்னறுவ கிரித்தல பிரதேசத்தில் டீஐஎஸ்எல் நடாத்திக்கொண்டிருந்த செயலமர்வை நிறுத்தினர். மே 22, கிரித்தலவில் உள்ள “டியர் பார்க்” ஹோட்டலில் ஆரம்பமான செயலமர்வில், வடக்கு மற்றும் கிழக்கு அதே போல் கொழும்பில் உள்ள ஊடக நிறுவனங்களின் ஆசிரியர் குழுவில் செயற்படும் தமிழ் மற்றும் முஸ்லீம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். முதல் நாள் நிகழ்வின் பின்னர், ஹோட்டல் நிர்வாகம் நிகழ்வினை நிறுத்துமாறு இராணுவ புலனாய்வுத்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் நிகழ்வுகளை நடத்துவதாக இருந்தால் இராணுவ புலனாய்வுத்துறையிடம் அனுமதி பெறவேண்டுமெனவும் அமைப்பாளர்களுக்கு அறிவித்தது. அன்று இரவு டீஐஎஸ்எல் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகி சான் விஜயதுங்காவின் கைத்தொலைபேசிக்கு செயலமர்வை நிறுத்துமாறு “மிரட்டும்” தொலைபேசி அழைப்பும் வந்துள்ளது. இது தொடர்பாக டீஐஎஸ்எல் பிரதிநிதியொருவர் இராணுவப் புலனாய்வு துறையின் முக்கியஸ்தர் மேஜர் ஜெனரல் லால் பெரேராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, “செயலமர்வுக்கு எதிராக கிராமத்தவர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின்” அடிப்படையில், ஹோட்டல் நிர்வாகத்திற்கு அதை நிறுத்துமாறு உத்தரவிட்டதாகவும் மற்றும் “பாதுகாப்பு அமைச்சில் இருந்து கிடைத்த ஆலோசனையின் பேரில்” இதை செய்ததாகவும் குறிப்பிட்டார். “பயிற்சி பட்டறையை நடத்தினால் ஹோட்டலை சுற்றிவளைப்பதாக அருகில் உள்ள விகாரைகளின் பிக்குமார்” குறிப்பிட்டதாக, ஹோட்டல் உரிமையாளர்கள் பிரதியமைச்சர் சிரிபால கம்லத்திற்கு தொலைபேசியில் கூறியதாக, ஹோட்டல் நிர்வாகத்தினர் பின்னர் டீஐஎஸ்எல் பிரதிநிதிகளுக்கு தெரிவித்தனர். புலனாய்வுதுறையின் முக்கியஸ்தர் குறிப்பிட்ட “அந்த போலி கிராமவாசிகள்”, சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக சிங்கள பௌத்த தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இந்த பிக்குவினரானராக இருக்க வேண்டும். கடந்த மார்ச் 28ம் திகதி பொலன்னறுவையில், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் நிகழ்ந்த ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வினையும், இவ்வாறு பிக்குமார் கூட்டம் உட்புகுந்து நிறுத்தியுள்ளது. கிரித்தல பயிற்சி நிகழ்வு நடைபெற்ற தினத்தில், காலையில் இருந்து சிவில் உடையணிந்த இராணுவ புலனாய்வுத்துறையினர் இருவர், அந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்களினதும் ஏற்பாட்டாளர்களினதும் உரையாடல் தொடர்பான தகவல்களை தமது உயரதிகாரிகளுக்கு கைத்தொலைபேசி மூலம் அறிவித்து வந்துள்ளனர். அவர்கள் இராணுவ அதிகாரிகள் என குறிப்பிட்டதாக ஓட்டல் சேவையாளர்கள் கூறினர். ஹோட்டலில் தங்கியிருக்கும் சகலரினதும் விபரங்களையும் அவர்கள் செய்யும் விடயங்கள் தொடர்பாகவும் நாளாந்தம் இராணுவ புலனாய்வுத்துறைக்கு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டதாக ஹோட்டல் ஊழியர்கள் குறிப்பிட்டனர். இராணுவம் மிகவும் சுதந்திரமான முறையில் எல்லா இடங்களிலும் தலையீடு செய்வதையே இந்த நிகழ்வு காட்டுகின்றது. மிரட்டல் மற்றும் சோடித்து கூறிய “கிராமவாசிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாடு” என்ற இரு முறையையும் உபயோகித்து கிரித்தல பயிற்சியை நிறுத்திய இராணுவ புலனாய்வுத்துறை, அதற்குப் பின்னர் டீஐஎஸ்எல் ஜூன் 7ம் திகதி நீர்கொழும்பு கோல்டன் கோட்ஸ் ஹோட்டலில் நடந்து கொண்டிருந்த அதுபோன்ற இன்னுமொரு பயிற்சியில் தலையீடு செய்தது. “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையால் சீரான நிர்வாகத்தை செயல்படுத்தல் சம்பந்தமாக எழுதுதல்” தொடர்பாக, ஊடகவியலாளர்களுக்கு குறிப்பாக தழிழில் வேலைசெய்யும் ஊடகவியலாளர்களை பயிற்றுவித்தலே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற இந்த மூன்று நாள் பயிற்சியின் குறிக்கோளாக இருந்தது. டீஐஎஸ்எல் குறிப்பிட்டபடி நீர்கொழும்புக்கு வெளியில் இருந்து பஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட காடையர்கள், பொலிஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டுள்ள ஊடகவியலாளர்களின் படங்கள் பொறித்த பதாகை போன்றவற்றுடன் பயிற்சியினை விமர்சித்துக்கொண்டு ஹோட்டல் வாயிலில் கூடினர். இந்தப் பயிற்சிக்கு வந்திருப்பவர்கள் “தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே”, இதன் நோக்கம் “சர்வதேச விசாரணையின் போது இலங்கைக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கு பயிற்சி அழிப்பதே” என ஒலிபெருக்கி மூலம் குரல் எழுப்பி நிகழ்வினை நிறுத்துமாறு காடையர்களின் தலைவர் மிரட்டியுள்ளார். இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு பிரதேச ஊடகங்களில் செயல்படும் ஊடகவியலாளர்களே இவர்களின் பிரதான குறியாக இருந்தது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில், தமது குற்றங்களை மறைக்க முயன்று கொண்டிருக்கும் இராஐபக்ஷ அரசாங்கம், எந்த விதமான விமர்சனங்களையும் மௌனமாக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. யுத்தத்திற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகளின் குறியாக இருப்பது, யுத்த குற்ற விசாரணையோ அல்லது ஜனநாயக உரிமைகளோ அல்ல. மாறாக, சீனாவுக்கு எதிரான யுத்தத் தயாரிப்பை முன்னெடுப்பதன் மூலம் தமது மூலோபாய அவசியத்தை உறுதிப்படுத்திக்கொள்வதே ஆகும். அமெரிக்கா, சீனாவிடம் இருந்து விலகி தமது மூலோபாயத்தின் கீழ் அணிதிரளவேண்டும் என கொழும்பு அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறது. மாவட்ட நீதிபதி ஒருவரிடமிருந்து சட்ட ரீதியான கட்டளை இன்றி பயிற்சியினை நிறுத்த முடியாதென ஏற்பாட்டாளர்கள் கூறிய போதிலும், பொலிஸார் காடையர்கள் சார்பாக நின்றதோடு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்து பயிற்சிகளை நிறுத்திவிட்டுச் செல்லுமாறு கூறினர். அதன்படி வெளியேறிய தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புக் கருதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் இரவு தங்குமிடத்தை ஏற்பாடு செய்ய ஏற்பாட்டாளர்கள் முனைந்த போதிலும், அவர்களுக்கு தங்குமிடம் அனுமதிக்கக் கூடாது என ஹோட்டலுக்கு “ஏதோ சக்திமிக்க குழுவிடமிருந்து” மிரட்டல் தொலைபேசி வந்ததாக ஹோட்டல் நிர்வாகம் டீஐஎஸ்எல் உறுப்பினர்களுக்கு கூறியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலைமையின் கீழ் கொழும்பு நகரில் வேறு இடத்தில் இரவு நேரத்தைக் கழிக்க நேர்ந்ததாக டிஐஎஸ்எல் பின்னர் தெரிவித்தது. சம்பவத்தை கண்டித்து “ஒருங்கினைக்கப்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கம்” (IFJ) அதனுடன் இணைந்த “சுதந்திர ஊடக அமைப்பும்” அறிக்கை விடுத்தன. “இந்த சகல அபிவிருத்திகளும் இலங்கையில் சுதந்திர ஊடகத்தினை ஒடுக்குவதற்கான திட்டமிடப்பட்ட மூலோபாயம் இருப்பதையே காட்டுகிறது” என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்திருந்தது. “இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தாமை, தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் குற்றத்தில் ஈடுபடுபவர்களின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது” என ஐஎஃப்ஜே குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தை முழுமையாக கண்டித்ததோடு, “இதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரி” அறிக்கை விடுத்த டிஐஎஸ்எல் “ஆர்ப்பாட்டக்காரர்களில் இராணுவத்தினரும் இருந்ததாக” அம்பலத்துக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. டிஐஎஸ்எல் அறிக்கையில், “எமக்கு மிகவும் சக்திமிக்க சிவில் நிர்வாகம் தேவைப்படுகின்ற அதேவேளை, பாதுகாப்பு அமைச்சு தமது அதிகாரத்தை மீறி செயல்படுகிறது” என மேலும் குறிப்பிட்டது. “சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்வதனூடக மனித உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு சீரான நிர்வாகத்தினை மீறியுள்ளது. இது ஒரு தனி சம்பவமல்ல, “ஊழலுக்கு எதிராக போராட மேற்கொள்ளும் முயற்சிகளை ஜனநாயக விரோதமாக நிறுத்த எடுக்கும் முயற்சியாகும்.” உண்மையான விடயம் என்னவெனில், பாதுகாப்பு அமைச்சு அவர்களது “அதிகார வரம்பினை மீறி” செயல்படுவதல்ல. மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள விதத்தில் சிவில் நிர்வாகத்தின் சகல பிரிவுகளும் விரைவாக இராணுவமயப்படுத்தப்பட்டு வருகின்றது. முதலாளித்துவ அமைப்பிற்குள் செயற்படும் டீஐஎஸ்எல், இந்த நிலமைகளை சரிசெய்து கொண்டு முதலாளித்துவ வர்க்க நிர்வாகத்தினை நன்றாக உறுதிப்படுத்திக்கொள்ளவே முயற்சிக்கின்றது. இராணுவ புலனாய்வு பிரிவினதும் அதை இயக்கும் பாதுகாப்பு அமைச்சினதும் இத்தகைய சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கை, தொழிலாள வர்க்கத்திற்கு அரசாங்கத்தின் உந்துதலுடன் நடக்கும் இராணுவமயமாக்கல் பற்றிய ஒரு பாரிய எச்சரிக்கையாகும். |
|
|