World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India and Pakistan trade warnings over escalating border clashes தீவிரமடைந்துவரும் எல்லை மோதல்கள் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் அச்சுறுத்தல்களைப் பரிமாறுகின்றன
By Kranti Kumara
and Keith Jones ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் மிகத்தீவிர எல்லை போர்கள் என்று வர்ணிக்கப்பட்டு வருவது தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் யுத்த அபாய எச்சரிக்கைகளைப் பரிமாறியுள்ளன. சில புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னர் இஸ்ரேல் வழக்கமாக வார்த்தைஜாலத்தைப் பயன்படுத்துவதைப் போல, பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லியும் வியாழனன்று அறிவிக்கையில், இந்தியா "ஒரு பொறுப்பான நாடு," அது "ஒருபோதும் வலிந்துதாக்குபவராக இருந்ததில்லை" என்றார். பின்னர், இந்திய மக்களையும் அதன் எல்லையையும் "பாதுகாக்கும் பாரிய கடமைக்கு" அழைப்புவிட்டு, ஜெட்லி “பாகிஸ்தான் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையில் விடாப்பிடியாக இருந்தால், நம்முடைய படைகளும் சண்டையிடுவதைத் தொடரும்", "இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்காக தாங்கவியலா விலைகொடுக்க வேண்டியதிருக்கும்" என சூளுரைத்தார். அனைத்து எல்லை-தாண்டிய துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டு அது திருப்தியடையும் வரையில் பாகிஸ்தானுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட புது டெல்லி மறுத்து வருகிறது. இதில், குறைந்தபட்சம் தற்காலிகமாக, முன்னணி இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான "கொடிமரியாதை பேச்சுவார்த்தைகள்" இரத்து செய்யப்படுவதும் உள்ளடங்குகிறது. அவ்விரு அணுஆயுதமேந்திய நாடுகளுக்கு இடையே எல்லையோர பதட்டங்களைக் குறைக்க பொதுவாக அதுபோன்ற பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இஸ்லாமாபாத், அதன் பங்கிற்கு, துப்பாக்கிசூட்டை துப்பாக்கிசூட்டுடன் சந்திக்க சூளுரைத்து வருகிறது. “அணுஆயுதமேந்திய அண்டைநாடுகளின் எல்லைகளது நிலைமையை மோதலுக்குள் தீவிரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை," பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை ஒன்று தெரிவித்தது. “இந்தியா பொறுப்போடு நடந்துகொள்ள எச்சரிக்கை விடுக்க வேண்டும்," அது குறிப்பிட்டது. ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒவ்வொரு இரவும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை மற்றும் இந்தியா-வசமிருக்கும் ஜம்மு & காஷ்மீரை பிரிக்கும் எல்லைக்கோடு முழுவதிலும் பீரங்கி குண்டுவீச்சுக்களும் மற்றும் எந்திர துப்பாக்கிச்சூடுகளும் நடந்துள்ளன. அந்த துப்பாக்கிச் சண்டைகளில், பத்து பாகிஸ்தானியர்கள் மற்றும் பன்னிரெண்டு இந்திய பொதுமக்கள் என, குறைந்தபட்சம் இருப்பத்திரெண்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் எல்லையின் இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர். இந்திய மற்றும் பாகிஸ்தானிய இரண்டினது இராணுவ-பாதுகாப்பு படைகளுமே கண்மூடித்தனமான துப்பாக்கிச் சண்டையில் வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைத்திருக்கின்றன. இதனால் சுமார் 30,000 ஏழை கிராமத்தவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகை செய்திகளின்படி, இந்த செவ்வாயன்று இரவு, பாகிஸ்தானிய துருப்புகள் 63 இந்திய எல்லை பாதுகாப்பு படை புறச்சோதனைசாவடிகள் மீது குண்டுவீசி இருந்தன, அதேவேளையில் இந்திய தரப்பு 70 பாகிஸ்தானிய இராணுவ சாவடிகள் மீது ஒரு ஆயிரம் சிறுபீரங்கி குண்டுகளை (mortar shells) வீசியதன் மூலம் "பதிலடி" கொடுத்திருந்தது. இதுபோன்ற மோதல்களில் ஏறத்தாழ எப்போதும் போலவே, 2003இல் அவ்விரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான போர்நிறுத்த உடன்படிக்கையை யார் முதலில் மீறியது என்று கூறுவது சாத்தியமில்லாமல் உள்ளது. மறுக்க முடியாததாக இருப்பது என்னவென்றால் இந்தியாவின் புதிய பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம் சமீபத்திய வாரங்களில் பாகிஸ்தானுடன் பதட்டங்களை அதிகரித்திருந்தது என்பதுடன், புதிய "நடைமுறை விதிகளை" திணிக்க இந்த எல்லை மோதல்களை இப்போது பயன்படுத்த முனைந்து வருகிறது என்பதாகும். இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது உயர்மட்ட மந்திரிகளும், விடயங்கள் "மாறியிருப்பதை" அவர்கள் இஸ்லாமாபாத்துக்கு எடுத்துக்காட்ட விரும்புவதாக மீண்டும் மீண்டும் அறிவித்து வந்திருக்கிறார்கள். அக்டோபர் 15இன் மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மோடி வியாழனன்று பேசுகையில், “தாக்குதலுக்கு பொருத்தமான பதிலிறுப்பு கொடுத்ததற்காக" இந்திய இராணுவத்தைப் பாராட்டினார். “நான் பேச வேண்டியதே இல்லை," என்று தொடர்ந்த மோடி, எதிர்கட்சியாக இருந்தபோது முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் பாகிஸ்தானை "சாந்தப்படுத்தி வருவதாக" தொடர்ந்து குற்றஞ்சாட்டி இருந்தார். “எனது ஜவான்கள் (படைவீரர்கள்) துப்பாக்கியில் எப்போதும் விரலை வைத்து கொண்டே தான் அனைத்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். விடயங்கள் இப்போது மாறிவிட்டன என்பது எதிரிக்குத் தெரிந்திருக்க வேண்டும், அவர்களின் பழைய பழக்கங்கள் இனியும் தொடர முடியாது," என்றார். இந்த வாரத்தின் தொடக்கத்தில், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் அதேவிதத்தில், “இந்தியாவினுள் நிலைமை மாறியுள்ளதை" பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன், தாலிபானை இலக்கில் வைத்த ஒரு பிரதான இராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் இருப்பதால், இந்த மிரட்டலுக்கு இயைந்து கொடுக்குமென தெளிவாக புது டெல்லி கணக்கிடுகிறது. சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்தும் மற்றும் சுற்றி வளைக்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பானினது முயற்சிகளில் இந்தியாவை ஒரு தூணாக உருவாக்கும் அவற்றின் முனைவாலும் இந்தியா ஊக்கம் பெற்றிருக்கிறது. அந்த நிகழ்வுகள் தெற்காசியாவில் இராணுவ-மூலோபாய அதிகார சமநிலையை மேலதிகமாக இந்தியாவுக்கு சாதகமாக சாய்த்துள்ளதால், பாகிஸ்தானின் ஒரு நீண்டகால நெருங்கிய கூட்டாளியான கவலைகொண்டுள்ள பெய்ஜிங்கை இந்தியாவைத் இணக்கப்படுத்தும் அதன் சொந்த பிரச்சாரத்தைத் தொடங்க செய்திருந்தது. பாகிஸ்தானின் ஆளும் மேற்தட்டின் குழப்பநிலையால், பாகிஸ்தானில் நடந்துவரும் அரசியல் நெருக்கடி பற்றிய பாதுகாப்பு கவலைகளைக் காரணங்காட்டி, கடந்த மாதம் இந்தியா உட்பட தெற்காசியாவிற்கான தனது பயணத்தின்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவரது இஸ்லாமாபாத் பயணத்தை இரத்து செய்தார். பிஜேபி அரசாங்கமும் இந்திய இராணுவமும் பாகிஸ்தானுடன் ஒரு நீண்டகால மோதலுக்கு தயாராக இருப்பதாக புதனன்று Times of India குறிப்பிட்டது. அது பெயரிட விரும்பாத ஒரு இந்திய இராணுவ ஆதாரநபர் கூறியதை எழுதியிருந்தது, “நாங்கள் நீண்டகால போக்கிற்கும் தயாராக உள்ளோம்... நமது பாரிய மற்றும் இலக்கை பார்த்து கொடுக்கும் பதிலடி நிற்கப் போவதில்லை. பேச்சுவார்த்தைகளோ அல்லது கொடிமரியாதை சந்திப்புகளோ நடத்தப்பட வேண்டுமானால், அது நம்முடைய நிபந்தனைகளின்படி இருக்கும், அதுவும் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தியதற்குப் பின்னர் மட்டுமே நடக்கும்," என்றார். இந்திய அரசாங்கத்தின் ஆக்ரோஷ கொள்கையும் அத்துடன் பாகிஸ்தானைச் சுற்றிவளைத்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளும் நிலவுகின்ற நிலையில், தற்போதைய குறைந்த-மட்டத்திலான இராணுவ மோதல் இந்திய மற்றும் பாகிஸ்தானிய மக்களுக்கு கூறமுடியாத விளைவுகளோடு அங்கே கட்டுபாட்டை மீறி வெளிப்படும் ஒரு மரணகதியிலான அபாயமும் இருக்கிறது. தற்போதைய எல்லை மோதல்களுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக, மோடியும் அவரது இந்து மேலாதிக்க BJPஉம், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கடுமையான புதிய போக்கைப் பின்பற்ற இருப்பதாக தெளிவுபடுத்தி இருந்தார்கள். ஆகஸ்ட் 25இல் திட்டமிடப்பட்டிருந்த இருநாட்டு வெளியுறவு செயலர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பை அது ஆகஸ்டின் மத்தியில் திடீரென இரத்து செய்தது. இந்த நகர்வுக்கு இந்திய அராசங்கத்தால் அளிக்கப்பட்ட பாசாங்குத்தனமான காரணம் என்னவென்றால், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் புது டெல்லியால் உத்தியோகப்பூர்வமாக சகித்துக் கொள்ளப்பட்டிருக்கும் இந்திய-விரோத காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களின் தலைவரைச் சந்தித்தார் என்பதாகும். பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் உட்பட முந்தைய இந்திய அரசாங்கங்கள், இதுபோன்ற கூட்டங்கள் நடக்க அனுமதித்திருந்தன என்பதுடன், பாகிஸ்தான் அதுபோன்ற சந்திப்புகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஒரு கோரிக்கைக்கு, அவ்விரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்துவரும் "சமாதான பேச்சுவார்த்தைகளை" ஒருபோதும் பிணையாக முன்வைத்ததில்லை. கடந்த மாத இறுதியில் ஐநா பொது அவையின் கலந்துரையாடல்களில் பங்கெடுக்கவும், ஜனாதிபதி ஒபாமா மற்றும் ஏனைய அமெரிக்க அரசியல் மற்றும் வணிக தலைவர்களைச் சந்திக்கவும் மோடி அமெரிக்கா பயணித்திருந்த போது, அவர் இஸ்லாமாபாத் மீதான அழுத்தத்தை தொடர்ந்து அதிகரித்திருந்தார். பாகிஸ்தானிய பிரதம மந்திரி நாவாஸ் ஷெரீப்பை சந்திக்க திட்டவட்டமாக மறுத்த அவர், அதேவேளையில் பங்களதேஷ், இலங்கை மற்றும் நேபாளின் தலைவர்களைச் சந்தித்தார். மேலும் பாகிஸ்தானுடன் இந்தியாவின் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருக்கும் "சமாதான பேச்சுவார்த்தையை" மீண்டும் தொடங்குவதென்பது இஸ்லாமாபாத் அதன் நடவடிக்கையை மாற்றிக் கொள்வதன் மீது நிபந்தனைக்குட்பட்டிருப்பதாக ஐநா பொது அவையில் தெரிவித்துடன், அமெரிக்காவினது முன்னணி வெளியுறவுத்துறை சிந்தனைக்கூடத்தில் ஓர் ஆத்திரமூட்டும் உரையும் அளித்தார். இந்தியா நீண்டகாலமாகவே பாகிஸ்தானை உலக பயங்கரவாதத்தின் "குவிமையமாக" முத்திரை குத்தி ஒதுக்கிவைக்க முனைந்துள்ளது. நியூ யோர்க்கில் வெளியுறவு விவகாரங்களுக்கான அவையில் வழங்கிய ஓர் உரையில் மோடி வலியுறுத்துகையில், இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாதமும் "ஏற்றுமதி செய்யப்பட்ட" பயங்கரவாதமாகும், இதன் தவிர்க்கமுடியாத விளைவாக பாகிஸ்தானே அதற்கு குற்றவாளியாகுமென அறிவித்தார். இந்து மேலாதிக்கவாதிகளின் வன்முறைகளை கண்டுங்காணாதது போல இருந்த, 1947 உபகண்டத்தின் வகுப்புவாத பிரிவினையிலிருந்து தொடங்கி, இந்திய அரசின் நீண்டகால வரலாறை அவர் சுலபமாக ஒதுக்கித் தள்ளினார். அந்த பிரிவினையிலிருந்து தான் ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் பெருபான்மை இந்துக்களுக்கு இடையே பிற்போக்குத்தனமான மூலோபாய மோதல் வெடித்தெழுந்தது என்பதுடன், அந்த வன்முறைகளில் இந்து மேலாதிக்க ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் நேச அமைப்புகள், அவற்றுடன் BJPஉம் உள்ளடங்கி இருந்தது என்றளவில், அவற்றால் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் ஏனைய பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறித்து கூற வேண்டியதே இல்லை. புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையிலான உறவுகள் சமீபத்திய வாரங்களில் மோசமடைந்து வந்துள்ள நிலையில், வாஷிங்டன் தொடர்ந்து அதன் கைகளை முறுக்கிக் கொண்டிருந்தது. எல்லை மோதல்களும், முற்றுமுழுதான யுத்த அச்சுறுத்தலும் ஒருபுறம் இருக்கட்டும், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் அதன் துருப்புகளின் எண்ணிக்கையைத் திரும்ப பெற்றுவரும் நிலையில், அதிகரித்துவரும் பதட்டங்களே ஆப்கானிஸ்தானை மூலோபாயரீதியில் மறுகட்டமைக்கும் வாஷிங்டனின் முயற்சிகளுக்கு குழிபறிக்கின்றது. ஆனால் புது டெல்லியும் இஸ்லாமாபாத்தும் அவற்றின் கருத்துவேறுபாடுகளைத் தீர்க்க எவ்வாறு வேலை செய்ய முடியுமென்பது குறித்து கடமைப்பூர்வ அறிக்கைகளை வெளியிடுவதோடு அவ்விதத்தோடு தன்னைத்தானே ஒபாமா நிர்வாகம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. சீனாவிற்கு எதிரான அதன் மூலோபாய முனைவில் இந்தியாவைக் கட்டிப்போடுவதே வாஷிங்டனின் பிரதான அக்கறை, அதைநோக்கி பாகிஸ்தானைக் கையாளும் அவரது அணுகுமுறையில் அது மோடிக்கு ஒரு நீண்ட விட்டுக்கொடுப்பை வழங்குவதாக தெரிகிறது. விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட்டர்கள் திமோதி கைய்னெ மற்றும் அன்கஸ் கிங் வியாழனன்று புது டெல்லியின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், அவர்கள் எல்லை மோதல்களால் "கவலை அடைந்திருப்பதாக" தெரிவித்தார்கள். ஐநா ஒருவேளை ஒரு பாத்திரம் வகிக்க முடியுமென்ற அவர்களின் அடுத்தடுத்த பரிந்துரை இப்போதைக்கு நடக்காத காரியமாகும்—ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் அந்த எல்லை மோதல்களுக்கு ஒரு இராஜாங்க தீர்வுக்காக அழைப்புவிடுத்து முன்னதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். பாகிஸ்தான் உடனான அதன் உறவுகளில் ஐக்கிய நாடுகள் சபையோ, அமெரிக்கவோ அல்லது ஏனைய ஏதேனும் மூன்றாவது தரப்போ ஒரு மத்தியஸ்த பாத்திரம் வகிக்க புது டெல்லி, தசாப்தங்களாக, கோபத்துடன் மறுத்து வந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான BJP அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு, மேலாதிக்க பிராந்திய சக்தியாக இந்தியாவின் உரிமைகோரலை வலியுறுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தானை "நசுக்குவது" மோடியின் கரத்தை அரசியல்ரீதியாக உள்நாட்டில் பலப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது, அதன் மூலமாக இந்தியாவின் தள்ளாடும் பொருளாதாரத்தை முன்னுக்கு நகர்த்த பெரு வணிகங்களால் கோரப்படும் மக்கள்விரோத நவ-தாராளவாத "சீர்திருத்த" நடவடிக்கைகளுக்கு அவரால் அழுத்தமளிக்க முடியும். மோடி, பாகிஸ்தானுக்கு எதிரான அவரது ஆக்ரோஷமான பிரச்சாரத்தில் காங்கிஸ் கட்சியால் தூண்டிவிடப்பட்டு வருகிறார். BJPஐ வலதுசாரி நிலைப்பாட்டிலிருந்து தாண்டிச்செல்லும் முயற்சியில், காங்கிரஸ் கட்சி துணை-தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தானிடமிருந்து வரும் "தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை" நிறுத்த BJP அரசாங்கம் "ஒன்றுமே" செய்யவில்லையென குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த வாரம் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசுகையில், மோடி "சீனா மற்றும் பாகிஸ்தானை நோக்கி ஓர் ஆக்ரோஷமான அணுகுமுறையை மேற்கொள்ள இருப்பதாக பேசி வந்தார். இப்போதோ, பல ஆத்திரமூட்டல்களுக்கு இடையிலும், பிரதம மந்திரி எதுவும் செய்வதாக இல்லை," என்றார். |
|