தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The Mideast war and the US election மத்தியகிழக்கு யுத்தமும், அமெரிக்க தேர்தலும்
Patrick Martin Use this version to print| Send feedback பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 உறுப்பினர்களையும் மற்றும் செனட்டின் மூன்றில் ஒரு பங்கினரையும் தேர்ந்தெடுக்கும், அமெரிக்க காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னதாக இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான ஒரு புதிய பிரதான யுத்தம் தொடங்கப்பட்டதைக் குறித்து அமெரிக்க மக்கள் எதுவும் கூறுவதைத் தடுக்க ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் ஓர் ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சண்டையிட்டுவரும் சிரிய "கிளர்ச்சியாளர்கள்", ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) எதிராக அவர்களின் ஆயுதங்களைத் திருப்புவார்கள் என வாதிட்டு, (அதே ISIS தான் அசாத்திற்கு எதிரான உள்நாட்டு போரில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்களின் கூட்டாளியாக இருந்தது), அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சண்டையிட்டு வரும் அத்தகைய குழுக்களுக்கு அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் இராணுவ பயிற்சிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜனாதிபதி ஒபாமாவின் முறையீட்டுக்கு, தங்களின் ஆதரவை வழங்கி வாக்களித்த பின்னர் கடந்த மாதம் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஒத்தி வைக்கப்பட்டது. சிரியா மற்றும் ஈராக் இரண்டிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் பரந்த பிரச்சினை மீது அங்கே ஒரு முழு அளவிலான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென விரல்விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை, இருகட்சிகளின் காங்கிரஸ் தலைவர்களும் நிராகரித்தனர். காங்கிரஸ் ஐந்து-வாரகால விடுப்பில் சென்ற பின்னர் உடனடியாக—ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒபாமா நிர்வாகம் ஈராக்கில் ISIS இலக்குகள் மீது குண்டுவீசுவதைத் தொடங்கியது, அத்துடன் செப்டம்பர் இறுதியில் சிரியாவில் உள்ள இலக்குகள் மீதும் குண்டுவீச்சை விரிவாக்கியது. அங்கே யுத்த அறிவிப்போ அல்லது இத்தகைய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்க ஏனைய காங்கிரஸ் வாக்கெடுப்போ இருக்கவில்லை, இது ஒபாமாவின் புதிய மத்திய கிழக்கு யுத்தத்தை முற்றிலுமாக அரசியலமைப்புக்கு விரோதமாக ஆக்குகிறது. பிரதிநிதிகள் சபையின் அல்லது செனட் சபையின் சில வேட்பாளர்கள் மத்திய கிழக்கின் பிரச்சினையை எழுப்பி இருந்தார்கள். அவ்விதத்தில் இருந்த ஜனநாயக கட்சியினர், 2006 அல்லது 2008இல் "யுத்த எதிர்ப்பு" வேட்பாளர்களாக களமிறங்கிய இவர்கள், பெரும்பாலும் அவர்கள் பங்கிற்கு, இப்போது ஈராக் மற்றும் சிரியா மீதான குண்டுவீச்சுக்கு மும்முரமான ஆதரவாளர்களாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். “தாராளவாத புறாக்கள் யுத்த கழுகுகளைப் போல பறக்கின்றன” என்று தலைப்பிட்டு Politico.com இல் வெளியான ஒரு செய்தி அதுபோன்ற மூன்று ஜனநாயகக் கட்சியினரின் விபரங்களை வழங்கியிருந்தது: வடக்கு கரோலினாவின் செனட்டர் கேய் ஹாகன், நியூ ஹாம்ப்ஷேரின் செனட்டர் ஜீன் ஷாஹீன், மற்றும் லோவாவில் செனட் வேட்பாளராக நிற்கும் காங்கிரஸ் உறுப்பினர் புரூஸ் பிரேலி ஆகியோர். பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஜோன் பொஹ்னெர், உயர்மட்ட காங்கிரஸ் குடியரசு கட்சியினரான இவரும், செனட் சபையின் பெரும்பான்மையினர் தலைவரும் உயர்மட்ட ஜனநாயக கட்சியினருமான ஹாரி ரெய்டும், இருவருமே ஒபாமா நிர்வாகம் உத்தியோகபூர்வமாக முறையிட்டால், ஈராக் மற்றும் சிரியாவில் இராணுவ படைகளைப் பயன்படுத்துவதற்கான காங்கிரஸின் ஒப்புதலை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். அந்த வாக்கெடுப்பு டிசம்பரில் தொடங்கவுள்ள தேர்தலுக்கு பிந்தைய காங்கிரஸ் அமர்வில் நடத்தப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யுத்தம் குறித்த எந்தவித வாக்கெடுப்பும், நவம்பர் 4 காங்கிரஸ் தேர்தல்களுக்குப் பின்னர் நடத்தப்படும். இதன்மூலம் அந்த முடிவின் மீது அமெரிக்க மக்களது எந்தவொரு தாக்கமும் இல்லாதவாறு பறிக்கப்பட்டிருக்கும். புதிய மத்திய கிழக்கு யுத்தம் மீதான எவ்வித விவாதத்தையும் தவிர்க்கும் இருகட்சியினது இந்த முயற்சி, வன்முறை மட்டத்தின் மற்றும் தாக்குதல் அளவின் ஒரு வெடிப்பார்ந்த தீவிரத்தன்மை உடனடியாக நிகழவிருப்பதற்கு அதிகரித்துவரும் அறிகுறிகளுக்கு இடையே வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும்: * மேலதிகமாக நான்கு நாடுகள் யுத்தத்தில் இணைந்தன. ஈராக்கில் ISIS இலக்குகள் மீது குண்டுவீச போர் விமானங்கள் மற்றும் விமானிகளுக்கு கனடா, ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் பொறுப்பேற்று கொண்டன, அதேவேளையில் துருக்கியின் நாடாளுமன்றம் தரைப்படை துருப்புகள் உட்பட சிரியா மற்றும் ஈராக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்க வாக்களித்தது. * ISIS படைகள் குர்திஷ் போராளிகள் குழுவுடன் சண்டையிட்டுவரும் நிலையில், சிரியா மற்றும் துருக்கிக்கு இடையிலான எல்லையில் தற்போது தீவிரமடைந்துவரும் மோதல் தெறித்து பரவினால், நேட்டோ சாசனத்தின் 5வது ஷரத்தின்கீழ், துருக்கிக்கு பாதுகாப்பாக நேட்டோ தலையீடு செய்ய நியாயப்பாட்டை வழங்குமென நேட்டோ பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் எச்சரித்தார். * அன்பார் மாகாணத்தில் ISISக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இணைந்திருப்பதாகவும், ஈராக்கிய இராணுவ துருப்புகளுக்கு நெருக்கமான வான் ஆதரவை வழங்கி வருவதாகவும் பென்டகன் அறிவித்தது. இது, ஈராக்கிய "மண்ணில்" அங்கே அமெரிக்க "தரைப்படை" நுழையாது என்ற ஒபாமாவின் வாதத்தை நகைப்புக்குரியதாக்குகிறது. * காங்கிரஸின் ஒரு முன்னணி குடியரசு கட்சியினரும், பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையினர் தலைவருமான கெவின் மெக்கார்தே, ஈராக் மற்றும் சிரியா இரண்டிலும் தரைப்படை துருப்புகளின் பயன்பாட்டை ஆதரித்தார், அத்துடன் "தளபதிகள் அதை தான் கூறுகிறார்கள் என்றால், அதை நாம் செய்து தானே ஆக வேண்டும்," என்று கூறி, ISISஉம் அத்துடன் சிரிய இராணுவத்தையும் இலக்கில் வைக்க விமான தாக்குதல்களை விரிவாக்குவதையும் ஆதரித்தார். திங்களன்று பிரசுரிக்கப்பட்ட USA Today இன் ஓர் அசாதாரண நேர்காணலில், ஒபாமாவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் லியோன் பானெட்டா ஈராக் மற்றும் சிரியாவில் போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக இல்லாததற்காக ஒபாமா மீது சீறி வெடித்திருந்தார். ஜனாதிபதி "அவரது வழியைத் தவறிவிட்டு விட்டு", இப்போது தான் அதை மீண்டும் கண்டுபிடித்து வருகிறார் என்று தெரிவித்தார். அமெரிக்க ஆளும் மேற்தட்டால் இராணுவவாதம் தழுவப்பட்டிருப்பதை அடிக்கோடிடும் வகையில், வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் முஸ்லீம் மக்கள் நிறைந்த நாடுகளில் அமெரிக்க தலையீடு தசாப்தங்களுக்கு தொடருமென அவர் தெரிவித்தார். “30 ஆண்டுகால ஒருவித யுத்தத்தை நாம் பார்த்து வருகிறோம் என்று நான் கருதுகிறேன்," என்று தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், அந்த சண்டை ஆபிரிக்காவின் மிகவும் மக்கள்தொகை நிறைந்த நாடான யேமன், லிபியா, சோமாலியா மற்றும் நைஜீரியாவிற்கும் பரவக்கூடும் என்றார். மனித உயிர்கள் மற்றும் ஆதாரவளங்களின் விரயம் ஆகியவற்றை மலைப்பூட்டும் அளவுக்கு விலையாக கொடுத்து, அவ்விரு கண்டங்கள் முழுவதிலும் தசாப்தகால ஏகாதிபத்திய யுத்தத்தை, அமெரிக்க மக்கள் ஆதரிக்கிறார்களா என்று யாருமே அவர்களிடம் கேட்கவில்லை. இந்த முடிவுகள் எல்லாம் மூடிய கதவுகளுக்குப் பின்னால், இராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்களால் எடுக்கப்பட்டு, பின்னர் அதற்கு முத்திரை-குத்த ஒபாமா மற்றும் காங்கிரஸிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. மெக்கார்தேயின் அறிக்கை குறிப்பிடுவதைப் போல —"தளபதிகள் அதைத் தான் கூறுகிறார்கள் என்றால், அதை நாம் செய்து தானே ஆக வேண்டும்"— ஏகாதிபத்திய யுத்த முனைவு என்பது அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு வடிவங்களின் பொறிவு என்பதை, மற்றும் மிக அரிதாகவே மூடிமறைக்கப்பட்ட இராணுவ சர்வாதிகாரம் எழுச்சி பெறுகிறது என்பதையே அர்த்தப்படுத்துகிறது. நவம்பர் 4, 2014இல், அமெரிக்க மக்கள் வாக்களிக்க விடப்பட்டாலும் கூட, அந்த தேர்தல் எந்தவித உண்மையான ஜனநாயக உள்ளடக்கத்தையும் இழந்திருக்கும், ஏனென்றால் மிக முக்கிய பிரச்சினைகள் மீதான முடிவுகள், அனைத்திற்கும் மேலாக யுத்தம் மற்றும் சமாதானம் மீதான முடிவுகள், ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டம் என்பது, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்தை எல்லா பெருவணிக அரசியல் கட்சிகளுக்கும் எதிராக, ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஐக்கியப்படுத்துவற்கான ஒரு போராட்டத்தைக் குறிக்கிறது. யுத்தத்திற்கு எதிரான போராட்டம், யுத்தத்திற்கு மூலக்காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தைக் கோருகிறது. சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எமது சக-சிந்தனையாளர்களும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை, அதாவது தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பகுத்தறிவார்ந்த மற்றும் ஜனநாயக முறையில் திட்டமிட்ட உற்பத்தியை முன்னெடுக்க, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஐக்கியத்திற்கு அழைப்புவிடுக்கிறோம். யுத்தம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்கான எமது வேலைத்திட்டத்தை வாசித்து, சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை கட்டியெழுப்ப இப்போதே முடிவெடுக்குமாறு நாம் தொழிலாளர்களையும், இளைஞர்களையும் வலியுறுத்துகிறோம். |
|
|