World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை A million people hit by drought in rural Sri Lanka கிராமப்புற இலங்கையில் வரட்சியால் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
By Sujeewa Amaranath and
Ratnasiri Malalagam ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள், அல்லது கிட்டத்தட்ட 120,000 குடும்பங்கள், எட்டு மாவட்டங்களில் ஆறு மாதங்களாக நிலவும் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் முறையே பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, வவுனியா போன்ற பிரதேசங்கள் பாதிக்கப்பட்டவற்றில் அடங்கும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தனது அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவுவதாக கூறிக்கொண்ட போதிலும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அற்ப வரட்சி நிவாரணத் தொகையின் மூலம் இந்தப் பொய் அம்பலத்திற்கு வந்துள்ளது. கடந்த மாதம் அரசாங்கம் 1.9 பில்லியன் ரூபா நிவாரண பொதியை அறிவித்தது. இந்த தொகை ஒரு நபருக்கு சுமார் 2,000 ரூபா (15 அமெரிக்க டாலர்) ஆகும். அண்மைய ஊவா மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெருகிவரும் சீற்றத்தை தணிக்கும் ஒரு முயற்சியாக, அரசாங்கம் மொனராகலையில் ஒரு குடும்பத்துக்கு 2,500 ரூபா வரட்சி நிவாரணம் அறிவித்தது. உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், அண்மையில் பொலன்னறுவை மாவட்டத்தில் தம்சோபுற, தலகொலவெவ, மெதிரிகிரிய, பிசோபந்தர ஆகிய வரட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருந்தனர். பெரும்பாலான மக்கள் ஏழைகள், நெல் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை விவசாயிகள் ஆவர். விவசாயிகளும் இளைஞர்களும் தம்மை அரசாங்கம் கீழ்த்தரமாக நடத்துவதையிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தம்சோபுற, அரைவாசி கட்டப்பட்ட பல செங்கல் வீடுகளைக் கொண்ட சுமார் 400 குடும்பங்கள் வாழும் ஒரு மாதிரிக் கிராமமாகும். இங்கு குடிமக்கள் சோளம் மற்றும் இதர தானியங்களை உற்பத்தி செய்யும் மேட்டு நில பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதோடு பருவ மழையையே சார்ந்துள்ளனர். நிலங்கள் ஒவ்வொரு தலைமுறை குடும்பங்களுக்கும் பகிரப்படுவதால் வேளாண்மைக்கு உகந்தது காணிகளின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு சேனை விவசாயி எஸ்.எம். ரன்பண்டா கூறியதாவது: "மார்ச் மாதம் முதல் எமக்கு மழை கிடைக்கவில்லை. இது எங்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ள போதிலும், இதுவரை எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து 1,500 ரூபா பெருமதியான அத்தியாவசிய பொருட்களின் பொதி மட்டுமே கிடைத்துள்ளது." கிராமத்திற்கு தண்ணீர் விநியோகம் மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் வரத் தொடங்கியது என அவர் விளக்கினார். "ஒவ்வொரு நாளும் ஒரு தண்ணீர் பவுசர் ஐந்து ஆறு பீப்பாய்களுடன் வருகிறது. அக்கறை கொண்ட மக்கள் நன்கொடைகளாக அனுப்பிய குடிநீர் போத்தல்கள் ஒன்று அல்லது இரண்டை குடும்பங்கள் பெற வேண்டும்." ரண்பண்டா எட்டு ஆண்டுகளாக சிறுநீரக நோயில் அவதிப்படுகிறார். அவர் நோய் சிகிச்சைக்கு போதுமான அளவு மருந்துகள் மருத்துவமனைகளில் இல்லை, அதனால் நோயாளிகள் சொந்தமாக வாங்க தள்ளப்பட்டுள்ளனர் என்றார். ஆயிரக்கணக்கான மக்கள் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுகின்றனர் (பார்க்க: "கடுமையான சிறுநீரக நோய் கிராமப்புற இலங்கையில் பரவுகிறது"). பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாயிகள் வழக்கமாக சிறு போகம் மற்றும் பெரும் போகம் என்று ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பருவங்களில் தங்களது நிலங்களில் பயிரிடுகின்றனர். பெரும் போகத்துக்கு தேவைப்படும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக செப்டம்பரில் தொடங்குகிறது. சிறு போகமானது செயற்கை குளங்களில் அல்லது ஏரிகளில் சேமிக்கப்படும் மழை பயன்படுத்துகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொஞ்சமே பெய்தது, அதனால் தாங்கி தண்ணீரும் போதவில்லை. பெரும்பாலான தம்சோபுற மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். அவர்கள் மாதாந்தம் வழங்கப்படும் அற்பத் தொகையான அரசாங்கத்தின் சமுர்த்தி நலன்புரி திட்டத்தில் தங்கியிருக்கின்றனர். சமுர்த்தி கொடுப்பனவு, வறுமையில் வாடும் கிராமவாசிகள் மத்தியில் பெருகும் அதிருப்தியை திசை திருப்பும் பொருட்டு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு அதன் அளவை குறைத்தன. அந்த பணத்தை பெறுபவர்களும் வீதிகள் மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்தல் போன்ற "சமூக பணிகளை" செய்ய வேண்டும். மற்றொரு விவசாயியான ஜயந்த பத்மசிறி கூறியதாவது: "சமுர்த்தி திட்டத்தின் கீழ் சமூகசேவை செய்ய எங்கள் கிராமங்களில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. நாங்கள் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய்க்கு வேலை செய்வோம், ஆனால் வேலை 12 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாம் இதற்கு 6,000 ரூபாய் (46 அமெரிக்க டாலர்) பெறவிருந்தாலும், அது மாதக் கணக்காக கொடுக்கப்படவில்லை. "நான் சமுர்த்தி வங்கியில் இருந்து 75,000 ரூபாய்க்கு (575 அமெரிக்க டாலர்) கடன் பெற்றுள்ளேன். ஆனால் போதிய வருமானமில்லாததால் என்னால் அதை திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால், அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடும். “எங்களைப் பற்றி அக்கறை செலுத்துவதாக அரசாங்கமும் ஊடகங்களும் கூறிக்கொண்டாலும், ஆளும் கட்சி அரசியல்வாதிகள் எவரும் இங்கே வந்தது கிடையாது. மற்றும் எமது விவசாயிகளால் நிலங்களில் பயிரிட முடியாத நிலையில், அரிசியை கடையில் வாங்கத் தள்ளப்பட்டுள்ளனர். "அரசாங்கம் எங்களை பொறுமையாக இருக்குமாறும் யுத்தம் [பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டு கால இனவாத மோதல்] முடிந்த பிறகு நிலைமைகள் முன்னேற்றமடையும் என்றும் கூறியது. ஆனால் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் எங்கள் பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்படவில்லை." விவசாய இரசாயன பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதன் காரணமாக உள்ளூர் நீர் விநியோகம் மாசடைந்திருந்த நிலையில், வரட்சிக்கு முன்னரும் கூட பாதுகாப்பான குடிநீர் அரிதாகவே இருந்தது. அதிக மழை காலங்களில் கூட, நீர் வழங்கல் போதுமானதாக இருக்கவில்லை. மக்கள் தண்ணீர் எடுக்க ஒவ்வொரு நாளும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். சிறுநீரக நோய் தொற்றுநோய் மட்டத்தை அடைந்த நிலையில், மக்கள் லீட்டருக்கு இரண்டு அல்லது நான்கு ரூபாய் வரை கொடுத்து வடிகட்டப்பட்ட தண்ணீரை வாங்கத் தள்ளப்பட்டனர். மற்றொரு வரட்சியால் பாதிக்கப்பட்ட தலகொலவெவ கிராமத்தில் 180 குடும்பங்கள் உள்ளன. 120 குடும்பங்களுக்கு மட்டுமே நெல் விளையும் நிலம் உள்ளது. நான்கு குழந்தைகளின் தாயார் தனது நிலைமையை விவரித்தார். "இல்லை, எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் உள்ளோம், ஆனால் எங்களுக்கு மொத்தமாக 3.5 ஏக்கர் மட்டுமே வயல் நிலம்தான் உள்ளது," என அவர் கூறினார். "சாகுபடிக்கு ஒரு வயல் நிலத்தைத் தயார் செய்ய ஏக்கருக்கு 8,000 ரூபாய் செலவிட வேண்டும். ஒரு உரப்பை மானிய விலையில் கூட 1,300 ரூபாய், மற்றும் களைக்கொல்லிகளுக்கு ஏக்கருக்கு 2,300 ரூபாய் செலவாகும். எமது முழு நிலத்திலும் விவசாயம் செய்ய இன்னும் செலவாகும். பயிர்களை அறுவடை செய்ய ஒரு ஏக்கருக்கு 8,500 ரூபாய் செலவாகிறது, ஆனால் ஒரு ஏக்கரில் எமது மொத்த அறுவடைக்கு 65 புஷல்கள் (1,365 கிலோகிராம்) மட்டுமே. "அரசாங்கம் கிலோகிராமுக்கு 32 ரூபாய் செலுத்த உத்தரவாதம் கொடுத்திருந்தாலும், எங்களால் அரச அதிகாரிகளுக்கே அனைத்தையும் விற்க முடியாது. தனியார் வாங்குவோர் கிலோவுக்கு 28 ரூபாய் மட்டுமே கொடுப்பர். அதாவது அநேகமான நேரங்களில் நாம் செலவு செய்தவற்றை திரும்ப பெற முடியாது." சிலர் அவர்களின் நகைகளை அடகு வைத்து விட்டனர். சமுர்த்தி உதவியில் இருந்து மாதத்திற்கு 615 ரூபாய் மட்டுமே தனக்கு கிடைப்பதாகவும் தனது தாயார் சிறுநீரக நோயில் அவதிப்படுவதாகவும் ஒரு பெண் கூறினார். தலகொலவெவ கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு நபருக்கேனும் சிறுநீரக வியாதி உள்ளது. கிராமத்தில் பொது போக்குவரத்து இல்லாததால் சிகிச்சை பெறுவது சிரமம். மக்கள் நகரத்துக்கு ஒரு பஸ்சை பிடிக்க சுமார் நான்கு கிலோமீட்டர் நடக்க வேண்டும். மெதிரிகிரியவைச் சேர்ந்த 22 வயதான பெண் அனுராதா, தனது நிலைமையை விவரித்தார். "நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்தர பரீட்சை எழுதினேன். நான் மெதிரிகிரிய தேசிய பாடசாலையில் உயர் கல்வியை முடித்தேன்," என்று அவர் கூறினார். "என் இலட்சியம் ஆசிரியர் கல்விக் கலாசாலையில் சேர்வதாக இருந்தது. ஆனால் புதிய பாடத்திட்டம் செய்தவர்கள் மட்டுமே சேரவேண்டும் என அதிகாரிகள் முடிவு செய்திருந்ததனால் நான் அந்த எண்ணத்தை கைவிட நேரிட்டது. நான் இப்போது ஒரு தாதியாக ஆவதற்கு முயற்சிக்கின்றேன்." "இளைஞர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் மங்கி வருகின்றன. வரட்சி தொடர்பாக கூறுவதெனில், இந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் எமது துன்பங்களை தீர்ப்பது ஒருபுறம் இருக்க, எங்களுக்கு என்ன நடந்தது என்று கூட பார்க்க வரவில்லை." வலதுசாரி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபி) வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பதோடு அரசாங்கத்தின் நிவாரண பற்றாக்குறைகளை விமர்சிக்கின்றன. எவ்வாறெனினும், இந்த கட்சிகள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் அதே சாதனைகளையே செய்துள்ளன. யூஎன்பீ ஆட்சியில் இருந்தபோது அது விவசாயிகளுக்கான மானியங்களை வெட்டியதுடன் அடிப்படை விவசாய பொருட்களுக்கான செலவை கூட்டியது. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீலசுக) யூஎன்பியும் அரிசி ஆலை உரிமையாளர்களின் ஆதரவைக் கொண்டுள்ளதோடு பெரிய நிறுவனங்கள் பாதுகாக்கின்றன. விவசாயிகளின் பாதுகாவலர்களாக ஜேவிபி தோரணை காட்டியபோதும், அது 2004ல் ஸ்ரீலசுக உடன் கூட்டரசாங்கத்தில் நுழைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த ஒப்புக்கொண்டது. அது இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தையும் ஆதரித்தது. வரட்சியானது மதிப்பீட்டின் படி சுமார் 280,000 மெட்ரிக் டொன் அரிசி உற்பத்தி இழப்புடன், கிட்டத்தட்ட 84,000 ஹெக்டர், அல்லது இலங்கையின் மொத்த நெல் சாகுபடியில் 13 சதவீதத்தை பாதித்துள்ளது. வரட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நெல் விவசாயிகளில் 44 சதவிகிதத்தினர் கடந்த சிறு போகத்தில் கடன்கள் எடுத்துள்ள போதிலும், 27 சதவீதத்தினர் மட்டுமே அவற்றை திருப்பி செலுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளனர். பெரும் போகத்தில், கடன் வாங்கியவர்களில் 18 சதவீதமானவர்கள் மட்டுமே தங்கள் கடன்களை திருப்பி செலுத்தினர். இந்த சீரழிந்த நிலைமைகளும் பயிர்ச்செய்கைக்கான நிலங்கள் இல்லாமையும், பெரும்பாலான கிராமப்புற இளைஞர்களை, குறிப்பாக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் மேல் மாகாணத்தில் உள்ள நகரங்களுக்கு வேலை தேடி செல்ல நிர்ப்பந்தித்துள்ளன. இளைஞர்கள் இந்த நடவடிக்கைகளின் மலிவு உழைப்பாளர்களாக மாறிவிட்டனர். சமீபத்திய வரட்சி, கிராமப்புற வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை, முதலாளித்துவ இலாப முறையின் கீழ் தீர்க்க முடியாது என்பதையே நிரூபிக்கின்றது. |
|