World Socialist Web Site www.wsws.org |
ISIS இற்கு எதிரான யுத்தத்திற்குப் பின்னால்
Bill
Van Auken ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசை (ISIS) நசுக்குவதற்காக என்ற வெளிவேடத்தில், மத்திய கிழக்கில் வாஷிங்டன் தொடங்கியுள்ள புதிய யுத்தத்தில் ஆஸ்திரேலியா மற்றும் கனடா இரண்டினது அரசாங்கங்களும் வெள்ளியன்று உத்தியோகபூர்வமாக இணைந்தன. ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போட், ஈராக்கிய விமான தாக்குதல்களில் அந்நாட்டு போர்விமானங்களை இணைக்க அவரது அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதாகவும், “ஓர் இன்றியமையா மனிதாபிமான நடவடிக்கையென" அவர் எதை வலியுறுத்தினாரோ, அதன்படி அங்கே அந்த மண்ணில் சிறப்பு படை நடவடிக்கையினரை நிலைநிறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். கனடாவின் பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பரும், அதேபோல, போர்விமானங்களை அனுப்பி இருப்பதை அறிவித்தார். ISIS கனேடியர்களை இலக்கில் வைத்து வருவதாகவும், அதை "கவனிக்காமல் விட்டால், இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிக்க மட்டுமே செய்யும்," என்றும் அறிவித்தார். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் விமான தாக்குதல்கள் மற்றும் இதர இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகின்றன. ஜேர்மனி ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்திற்கு ஆயுத தளவாடங்களையும், துணைப்படை துருப்புகளையும் அனுப்பி உள்ளது. நெதர்லாந்து குண்டுவீச்சில் இணைய F-16 விமானங்களை அனுப்பியுள்ளது. அதேவேளையில் ஏனைய பல ஐரோப்பிய அரசாங்கங்கள் அப்பிராந்தியத்திற்குள் ஆயுத தளவாடங்களையும், உபகரணங்களையும் அனுப்பி வருகின்றன. இராணுவ தலையீட்டுக்கு சட்டபூர்வத்தன்மையை வழங்க ISISஇன் நடவடிக்கைகளை பயன்படுத்தி முக்கிய மற்றும் சிறிய மேற்கத்திய சக்திகள் இவ்வாறு அசாதாரணமாக கும்பபலாக சேர்ந்திருக்கின்ற நிலையில், மனிதகுலம் இறுதியாக முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களுக்கு காரணமான ஏகாதிபத்திய துண்டாடலின் அதன் 21ஆம் நூற்றாண்டு வடிவத்தின் மீளெழுச்சியைப் பார்த்து வருகிறது. ஈராக் மீது குண்டுவீசுவதில் கனடா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஏனையவை என்ன செய்து கொண்டிருக்கின்றன? எண்ணெய் வளம்மிகுந்த மத்திய கிழக்கை மறுபங்கீடு செய்யும் போது அமெரிக்க தலைமையிலான போட்டாபோட்டியில் வணிகம் செய்வதற்கு கொடுக்கப்படும் விலையே அது, என்பது அவற்றிற்கு தெரியும். இதே முறைகள்தான் அப்பிராந்தியத்தில் முதல் பிரதான அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டில், 1990 பாரசீக வளைகுடா போரில், கடைபிடிக்கப்பட்டது. ஈராக்கினால் ஒருபோதும் தாக்கப்படாத பல நாடுகள், அந்நாட்டின் மீதான அமெரிக்க தாக்குதலை நியாயப்படுத்த அணிசேர்க்கப்பட்டிருந்தன. இப்போது போலேவே அப்போதும், கொள்ளையடிப்பதன் ஒரு பங்கு அவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டது. அந்த அனுபவத்தின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்து, 1991இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு எழுதியது: “ஈராக்கை அழித்து சூறையாட அவர்களின் உறுதிப்பாட்டில், ஏகாதிபத்தியவாதிகள் அந்த நோக்கத்திற்காக மலைப்பூட்டும் ஒற்றுமையைக் காட்டினார்கள். ஏகாதிபத்திய ஒழுக்கக்கேட்டின் விளைநிலமாக இருந்த, ஒரு இராணுவ விபச்சாரவிடுதியைப்போல் மதிப்பளிக்கக்கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளில், பல முதலாளித்துவ இராஜதந்திரிகள் பாதுகாப்புச் சபையின் கதவுக்குப்பின் வரிசையாக நின்று கொண்டு 'நடவடிக்கையில் இறங்கத் தயாராக இருந்ததுடன்', ... இந்த கூட்டில் பரந்த அளவிலான பங்களிப்பு, ஈராக்கிற்கு எதிரான யுத்தம் எல்லா ஏகாதிபத்திய சக்திகளதும் காலனித்துவக் கொள்கையை புதுப்பிப்பதை சட்டரீதியாக்கும் என்ற மறைமுக விளக்கத்தின் அடிப்படையிலேயே ஏற்பட்டது." ஈராக் மற்றும் சிரியா மீதான இராணு நடவடிக்கைக்கு விரைந்து செல்வதானது, ஒவ்வொரு நாட்டிலும், அரசாங்கங்கள் மற்றும் கீழ்படிந்த ஊடகங்கள் இரண்டினதன் பாகத்தில் செய்யப்படும் கட்டுப்பாடற்ற யுத்த பிரச்சாரத்துடன் சேர்ந்துள்ளது, அவை தகவலின்மை மற்றும் குழப்பத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, மக்களை யுத்தத்திற்குள் தள்ள முயற்சிக்கின்றன மற்றும் நெருக்குகின்றன. இது, “ISISஇன் அடிப்படை கொடூரம்" என்று தலைப்பிட்டு நியூ யோர்க் டைம்ஸால் வெள்ளியன்று பிரசுரிக்கப்பட்ட தலையங்கத்தில் வெளிப்பட்டதை போல இந்தளவுக்கு வெட்கக்கேடாக வேறெதிலும் வெளிப்பட்டிருக்காது. "இஸ்லாமிய அரசின் கொடுமை குறித்த செய்திகளில் இருக்கும் மனப்போராட்டம்," என்று அந்த தலையங்கம் தொடங்குகிறது. கழுத்தறுத்தல், சித்திரவதை, கற்பழிப்புகள் மற்றும் படுகொலைகளைக் குறிப்பிட்டுக் காட்டி, டைம்ஸ் குறிப்பிடுகிறது, ISIS “அதன் திட்டமிட்ட, வேண்டுமென்று செய்யும் மற்றும் மக்கள் மீதான மூர்த்தனத்தில் மட்டுமே நிலைத்திருக்கிறது." “ஜனாதிபதி ஒபாமாவின் பொறுத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமானால், அது பலவீனப்படுத்தப்பட்டு, இறுதியாக அழிக்கப்பட வேண்டும்," என்று அந்த தலையங்கம் முடிக்கிறது. "கொடுமை" மற்றும் "காட்டுமிராண்டித்தனம்" குறித்து யாருக்காவது உபதேசம் செய்வதற்கு இவர்கள் யார்? இதே ஆசிரியர் குழு தான், நூறு ஆயிரக் கணக்கான ஈராக்கியர்களைக் கொன்ற ஈராக்கிய படையெடுப்பைத் தொடங்குகையில் புஷ் நிர்வாகத்தை முழுமையாக ஆதரித்தது. அந்த ஆக்ரோஷ யுத்தம் 21ஆம் நூற்றாண்டின் முதன்மை குற்றமாக இருப்பதுடன், அதன் பேரழிவுகரமான சமூக அழிப்பு அப்பிராந்தியம் முழுவதிலும் தற்போது நெருக்கடியை அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நேரடியாக நடத்தப்பட்ட பாரிய படுகொலைகளைத் தவிர்த்து விட்டாலும் கூட, “கொடுமை" மற்றும் "காட்டுமிராண்டித்தனம்" என்று வரும் போது, வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்ட கூலிப்படைகள் மற்றும் வாடிக்கை ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில் ISIS வெறும் கத்துக்குட்டிகளின் ஒரு கூட்டமாக தான் இருக்கிறது. அமெரிக்க ஆதரவுடன், சிலி மற்றும் அர்ஜென்டினாவின் இராணுவ ஆட்சிக்குழுக்கள் கைதி முகாம்களிலும், சித்திரவதை கூடங்களிலும் பத்து ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றதுடன், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஹெலிகாப்டர்களிலிருந்து கடலுக்குள் வீசின, அதேபோல இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட ஓர் அரை மில்லியன் சடலங்களின் மீது ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க சிஐஏ உதவியது. அமெரிக்க அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நிதியுதவி வழங்கப்பட்ட நிக்கரகுவா கொன்ட்ராஸ் பத்து ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றது. மற்றும் பொதுமக்களின் படுகொலை, கற்பழிப்புகள், குழந்தைகளைக் கொன்றமை ஆகிய எந்த ஒவ்வொரு குற்றங்களுக்காக ISISஐ டைம்ஸ் குற்றஞ்சாட்டுகிறதோ அந்த ஒவ்வொரு குற்றமும் அங்கே நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் அனைவரும் அமெரிக்க ஜனாதிபதியால் "சுதந்திர போராட்ட வீரர்கள்" என்று புகழப்பட்டார்கள். கடந்த ஆண்டுக்கு சற்று முன்னர், ஒபாமாவால் ஆதரிக்கப்பட்டிருக்கும் எகிப்தின் இராணுவ-மேலாதிக்க ஆட்சி, ஆயிரக் கணக்கானவர்களைப் படுகொலை செய்ததுடன், பத்து ஆயிரக் கணக்கானவர்களுக்கும் அதிகமானவர்களை சிறையிலடைத்து சித்திரவதை செய்தது. மேலும் அப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் மிக நெருங்கிய கூட்டாளி இஸ்ரேல், சுமார் 2,200 பாலஸ்தீனியர்களைக் கொன்றும், 11,000க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியும் காசாவின் நிராயுதபாணியான மக்கள் மீது ஒரு காட்டுமிராண்டித்தனமான போரை நடத்தியது. "காட்டுமிராண்டித்தனம்", “வெறித்தனங்கள்" மற்றும் "முழு கொடூரங்களுக்கு" எதிரான ஓர் இராணுவ சிலுவையுத்தத்திற்கு டைம்ஸ் அழைப்புவிடுப்பதானது, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் புதிதாக எழுச்சிபெற்று வந்த உலகளாவிய சக்தியாக அமெரிக்கா மேற்கத்திய-விரோத கிளர்ச்சிக்கு எதிராக—சீனாவின் 1898-1900இன் பாக்சர் கிளர்ச்சிக்கு எதிராக—இதேபோன்ற ஏகாதிபத்திய கும்பலுடன் இணைந்த போது, மஞ்சள் பத்திரிகைகளில் (yellow press) பயன்படுத்தப்பட்ட வார்த்தைஜாலத்தை எதிரொலிக்கிறது. ஆதி-தேசியவாத இரகசிய சமூகமான பாக்சர்கள் (Boxers), மேற்கத்திய சக்திகளால் சீனா அடிமைப்படுத்தப்படுவது மற்றும் இழிவுபடுத்தப்படுவது மீதிருந்த மக்கள் சீற்றத்தின் அடிப்படையில் ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்தனர், அது அந்நாட்டை பல்வேறு "செல்வாக்கு மண்டலங்களாக" துண்டாடியது. அந்த பாக்சர்கள் வெளிநாட்டு கூலிப்படைகளைக் கழுத்தறுத்ததுடன், அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் மேலாதிக்கம் கொண்டிருந்த அன்னிய நாட்டவர்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ஓர் வன்முறை அலையில் கிறிஸ்துவத்திற்கு மாறியவர்களையும் படுகொலை செய்தனர். பின்னரும், சீன சந்தைகள் மற்றும் ஆதாரவளங்களின் மீது அவற்றின் பிடியை இறுக்க மற்றும் கிளர்ச்சியை இரத்தத்தில் மூழ்கடிக்க சுமார் 50,000 சிப்பாய்களின் ஒரு கூட்டு விரைவுப்படையை உருவாக்கி, பிரிட்டிஷ், ஜேர்மனியர்கள், ரஷ்யர்கள், அமெரிக்கர்கள், இத்தாலியர்கள், பிரெஞ்சு, ஆஸ்ட்ரோ-ஹங்கேரியர்களுடன், பல்வேறு ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றாக செயல்பட்டதாக தெரிகிறது. ரஷ்ய புரட்சிகர தலைவர் விளாடிமீர் லெனின், ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்பதில், பாக்சர்களுக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையை ஒரு புதிய "அதிதீவிர-ஏகாதிபத்தியத்திற்கு" சான்றாகவும், அதில் "சர்வதேசரீதியில் ஒருங்கிணைந்த நிதி மூலதனம்" தேசிய போட்டிகளை முடிவுகட்டும் என்றும் குறிப்பிட்ட ஜேர்மன் சமூக ஜனநாயக கார்ல் கவுட்ஸ்கியை விமர்சித்தார். லெனின் எழுதினார், அதுபோன்ற கூட்டணிகள் "தவிர்க்க முடியாமல் யுத்தங்களுக்கு இடையிலான ஒரு "தற்காலிக சமரசமேயன்றி" அதற்குமேற்பட்டு வேறொன்றுமில்லை. இந்த சமாதான கூட்டணிகள் யுத்தங்களுக்கு அடித்தளத்தைத் தயாரிக்கின்றன ..." என்றார். பாக்சர்களுக்கு எதிரான வேகப்படுத்தலைத் தொடர்ந்து வந்த சம்பவங்களால் லெனின் பகுப்பாய்வு நிரூபிக்கப்பட்டது. நான்காண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள், கூட்டாளிகளில் இருவர்—ஜப்பானும் ரஷ்யாவும்—மஞ்சூரியா மற்றும் கொரியா மீது கட்டுப்பாட்டைப் பெற இரத்தந்தோய்ந்த யுத்தத்தில் போரிட இருந்தார்கள். மேலும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்கள் அனைவரும் முதலாம் உலக போரால் மற்றும் பத்து மில்லியன் கணக்கானவர்களின் படுகொலைகளால் மூழ்கடிகப்பட்டிருந்தனர். ISISக்கு எதிரான தற்போதைய ஒருங்கிணைந்த சிலுவையுத்தமும், 114 ஆண்டுகளுக்கு முன்னர் பாக்சர் கிளர்ச்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட யுத்தத்தைப் போலவே உலக ஏகாதிபத்திய விவகாரங்களில் அதேயளவுக்கு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருக்குமென நிரூபிக்கும். "பயங்கரவாதத்திற்கு" எதிரான மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக "நாகரீகத்தைப்" பாதுகாப்பதற்கான ஒரு போராட்டம் என்ற பெயரில், எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் மீண்டும் யுத்தத்திற்கு நகர்ந்து வருகின்றன, மேலும் ஜேர்மனியின் விடயத்தைப் போலவே, மீள்ஆயுதமயமாக்கும் மற்றும் இராணுவவாதத்தை மீண்டும் தழுவிவரும் வேகமோ இழந்த காலத்தைச் சரிகட்ட நோக்கம் கொண்டிருப்பதாக தெரிகிறது. யுத்தத்தை நோக்கிய இந்த திருப்பம் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் அதன் அடிப்படை முரண்பாடுகளால், முன்முதல் சான்றாக, ஒரு பூகோளமயப்பட்ட ஒருங்கிணைந்த பொருளாதாரத்திற்கும் மற்றும் போட்டி தேசிய அரசுகளுக்குள் பூமி தொடர்ந்து பிளவுபடுவதற்கு இடையிலான முரண்பாடுகளால், உந்தப்பட்டுள்ளது. யுத்தத்தின் தோற்றுவாயாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவுகட்ட ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லையானால், ஈராக் மற்றும் சிரியாவில் தலையீடு தீவிரப்படுத்தப்பட்டு வருவதும் மற்றும் அனைத்து பிரதான சக்திகளும் இராணுவவாதத்திற்குள் திரும்புவதை வேகப்படுத்தி இருப்பதும் தவிர்க்கவியலாமல் ஓர் உலக ஏகாதிபத்திய மோதலுக்கான வரவேற்பு அறையாகிவிடும். நாம் எமது வாசகர்களை, ICFIஇன் “சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும்" அறிக்கையை படிக்குமாறும், சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க மற்றும் இக்கட்சியில் சேர முடிவெடுக்குமாறும் வலியுறுத்துகிறோம். |
|