World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

“Abu-Ghraib-like” torture of refugees exposed in Germany

அபு-கிரைப் சிறையில் அகதிகளுக்கு நேர்ந்தது போன்ற சித்ரவதைகள் ஜேர்மனியில் அம்பலமாயின.

By Christoph Dreier 
1 October 2014

Back to screen version

பல்வேறு ஜேர்மன் அகதிகள் முகாம்களிலிருந்து வந்துள்ள செய்திகள், குடியிருப்போர் தொடர்ச்சியான சித்ரவதை மற்றும் அவமானங்களுக்கு ஆளாவதை வெளிப்படுத்தியுள்ளன. கடந்த வார இறுதியில், ஒரு முகாமில் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அகதிகளிடம் தீவிரமான முறையில் தவறாக நடந்து கொண்டதைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியானது. ஒரு தரைவிரிப்பில் வாந்தி சூழ்ந்த நிலையில் ஒரு அகதி கிடப்பதை, குறைந்த நேரமே ஓடக்கூடிய வீடியோ ஒன்று காண்பிக்கிறது. ஒரு அகதி கேமராவிற்கு அப்பால் யாரிடமோ ஏன் இவரை அடிக்கிக்கிறீர்கள்? என்று கேட்கிறார்.

இன்னும் ஒன்று வேண்டுமா? உன் முகத்தில் உதைக்க வேண்டுமா, அல்லது? என்று அந்த பாதுகாப்பு அதிகாரி அதற்கு பதிலளிக்கிறார். பிறகு நான் உன்னை அடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவரது சக-அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்டவரை வாந்தியின் மேல் படுக்குமாறு கட்டளையிடுகிறார்.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் Burbach இல் இருக்கும் அகதிகள் முகாமில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ ஒரு பத்திரிகையாளரிடம் கசியவிடப்பட்டது, பின்னர் அவர் காவல்துறை அதிகாரிகளை உஷார்படுத்தினார். பாதுகாப்பு அதிகாரியின் அறையில் சோதனையிட்ட பொழுது, ஒரு குண்டாந்தடி மற்றும் விரல்களில் அணியும் இரும்பு வளையங்கள் கொண்ட ஆயுதம் ஒன்றை (knuckleduster) காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

பாதுகாப்பு அதிகாரியின் கைப்பேசியில் நிறைய படங்கள் இருந்ததையும் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரது பூட்ஸ் காலை தரையில், கைவிலங்கிடப்பட்டு கிடக்கும் அகதி ஒருவரின் முகத்தின் மேல் வைத்து அழுத்துவது போன்ற ஒரு படமும் WhatsApp மூலம் பரவியது.

Frankfurter Rundschau  செய்தித்தாள், அபு கிரைப் சம்பவம் போன்ற ஒன்று (A touch of Abu Ghraib) என்ற தலைப்பில் இதனை எழுதிய அதேவேளையில், இந்த புகைப்படங்கள் அபு கிரைப்பை ஞாபகப்படுத்துகின்றன என்று Bild  எழுதியது.

Burbach இல் மோசமான தாக்குதலுக்காக ஆறு பாதுகாப்பு அதிகாரிகளை காவல்துறை விசாரணை செய்து வருகிறது. அவர்களில் இருவர் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. கூடுதலாக, குடியிருப்பவர்களை அடித்து தாக்கிய காரணத்திற்காக Essen அகதிகள் முகாமில் ஒருவரையும் Bad Berleburg இல் இன்னொருவரையும் விசாரித்து வருவதாக காவல்துறை கூறியுள்ளது. மொத்தத்தில் தற்போது 11 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

WDR –ன் செய்தி நிகழ்ச்சியான Westpol , எஸ்ஸென் வீட்டில் குடியிருப்பவர்களின் காயங்கள் சம்மந்தப்பட்ட மருத்துவர் ஒருவரது சான்றிதழையும் காண்பித்தது. அந்த நிகழ்ச்சியில், அவர்கள் எங்களை தவறாக நடத்துகின்றனர் இந்த இல்லங்களை பாதுகாப்பு அதிகாரி சிறை போன்று மாற்றியிருக்கிறார். அவர்கள் எங்களை அடிக்கின்றனர், குறிப்பாக புகார் செய்தால் அவர்கள் எங்களை என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை செய்கிறார்கள். எங்களுக்கு உரிமைகளே இல்லாதது போன்று அவர்கள் எங்களை நடத்துகின்றனர் என்று அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதி செய்தித்தாளான Siegerland Kurier  செவ்வாய்க்கிழமை அன்று, Burbach இலிருந்து பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் (அவர் சொல்வதை வீடியோவில் கேட்க முடியும்) நடத்தப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத நேர்முகம் ஒன்றிலிருந்து சில பகுதிகளை வெளியிட்டது. அந்த அகதிகள் அமைப்பில், அகதிகள் தவறான வழியில் நடத்தப்படுவது திட்டமிடப்பட்டது என்பதை அந்த ஊழியர் (அவரது பெயர் (S) ஆசிரியரால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறார். வீடியோவில் ஆவணப்படுத்தப்பட்டது போன்ற தாக்குதல்கள் எப்பொழுதும் நடந்து வந்திருப்பதாக அவர் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

இது சிகரெட் மற்றும் மதுபானம் மீதான தடை மீறல்களுக்காக இருக்கலாம். இதுபோன்ற மீறல்களுக்காக குடியிருப்பவர்களைப் பிடிப்பதில், உண்மையில் இவரது சக ஊழியர் ஆர்வமாக இருந்திருக்கிறார் என்று அவர் தெரிவித்தார். கதவுகளில் மோப்பம் பிடித்தபடி அவர்கள் கூடங்களைச் சுற்றி நடந்து வருவார்கள். சிகரெட் புகையினை கண்டுபிடித்துவிட்டால், அந்த அறையை தாக்கி காலியாக்கிவிடுவார்கள் என்று S. விவரிக்கிறார். இதை செய்யும் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களை SS-குழுக்கள் என்று சொல்லிக் கொண்டனர். அதாவது, நாஜி அதிரடித்துருப்புகள். இவரது இணை-பணியாளர்களில் பலருக்கு வெளிப்படையாகத் தெரியும்படியான வலதுசாரிகளுடன் பின்புலம் இருந்தது என்றும் அவர் கூறினார்.

மேற்சொல்லப்பட்ட பிரச்சனைக்குரிய அறையில்தான் அச்சம்பங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை இவ்வீடியோ காட்சிகள் காண்பிக்கின்றன. தொல்லை கொடுத்தாலோ அல்லது கேள்விகள் கேட்டாலோ இங்குதான் குடியிருப்பவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். எட்டு மணிநேரம் வரையில் அவர்கள் இவ்வறையில் பூட்டி வைக்கப்படுவார்கள். சில சமயம், கழிப்பறையை உபயோகப்படுத்திக் கொள்வதற்கான உரிமை கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது, மேலும் அவர்கள் ஜன்னலுக்கு வெளியில் சிறுநீர் கழிக்க வேண்டி இருந்தது.

S இன் கூற்றுப்படி, குடியிருப்பவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்காக அழைக்கப்பட்ட சில காவல் துறை அதிகாரிகள் குறைந்தபட்சம் இந்த துஷ்பிரயோகத்தை வரவேற்றனர். அடுத்த முறை, நீங்கள் அவர்களுக்காக ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக வேலை செய்த பிறகு, நாங்கள் உங்களை அழைத்து செல்வோம். என்று ஒருமுறை ஒருவர் தெரிவித்திருக்கிறார் என்பதை S. நினைவு கூர்ந்தார். பாதுகாப்பு ஊழியர் ஒருவரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடியிருப்புவாசி ஒருவரை கைது செய்வதற்காக இந்த அதிகாரி அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Burbach முகாமின் புகைப்படங்களை Siegerland Kurier உம் வெளியிட்டது. மலம் மற்றும் மாதவிடாய் இரத்தங்களுடன் கலந்து காணப்படுகிறது, குப்பைகள் நிறைந்த தாழ்வாரங்கள் மற்றும் காயம்பட்ட குடியிருப்பவர்கள் இப்படிப்பட்ட நிலையில் சுகாதார வசதிகள் இருப்பதை அவை காண்பிக்கின்றன. குறைபாடுகள் சரிசெய்யப்படுவதற்கு பெரும்பாலும் பல நாட்கள் ஆகும் என்று S. தெரிவிக்கிறார். பெரும்பாலும் மருத்துவ வசதியும் அளிக்கப்படவில்லை.

பழமையான இல்லங்களில், கடந்த வருடம்தான் Burbach ல் இருக்கும் அகதிகள் முகம் நிறுவப்பட்டது. மக்கள் 500 பேருக்கு இடவசதி அளிப்பதற்காக இது அமைக்கப்பட்டது, ஆனால் தற்போது இந்த இல்லங்களில் 700 அகதிகள் வரையில் தங்கியுள்ளனர். 300 பேர்களுக்காக அமைக்கப்பட்ட எஸ்ஸென் முகாமான Acuh பெரும் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது,  அதில் இப்போது 650 பேர் குடியிருக்கின்றனர்.

இரு முகாம்களுமே இலாப நோக்குள்ள நிறுவனமான யூரோப்பியன் ஹோம்கேர் (European Homecare) ஆல் நடத்தப்படுகின்றன, அது மொத்தத்தில் 40 முகாம்களை நடத்தி வருவதுடன், இந்த பிரிவில் சந்தைத் தலைவராகவும் கருதப்படுகிறது. Burbach ல் இருக்கும் பாதுகாப்பு சேவை யூரோப்பியன் ஹோம்கேர் நிறுவனத்தால் முதன்முதலில் ESS நிறுவனத்திற்காகவும் அதன்பின் SKI செக்யூரிட்டிக்காகவும் பணியமர்த்தப்பட்டது.

அகதிகள் முகாமில் காணப்படும் பயங்கரமான நிலைமைகளும் அவர்களது வழக்கமான குணமும் ஜேர்மனி முழுவதிலுமுள்ள மக்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இழிவான முறையில் அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் இச்சம்பவங்களை மறைக்கவே முயற்சி செய்துள்ளனர்.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநில உள்துறை அமைச்சரான ரால்ப் ஜேகர், (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) பாதுகாப்பு ஊழியர்களது சித்திரவதைகளை தனிப்பட்ட குற்றவாளிகளின் தவறுகள் என்பதாக விவரித்துள்ளார். பாதுகாப்பு நிறுவனத்திற்குள் குற்றவாளிகள் ஊடுருவியிருப்பதாக அவர் ZDF ஒளிபரப்பாளர் இடம் தெரிவித்தார். இது கண்டிக்கத்தக்கது, ஆனால் சில நேரம், அனைத்து சோதனைகளும் இருந்த போதிலும், அனைத்து மேற்பார்வைகளும் இருந்த போதிலும் தடுக்க முடியாததாக இருந்தது. மேலும், எங்களுக்கு நிறைய அதிகாரங்கள் தேவை எங்களது கூட்டாளிகளுக்கு அனைத்து ஒப்பந்த நிபந்தனைகளும் இணங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய உள்துறை மந்திரி தோமாஸ் டி மைஸியரும் (CDU, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்) இந்த அவதூறை மறைக்க முயற்சித்தார். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் அரசு, இந்த குறைபாடுகளை தாமதமின்றி சரி செய்துவிடும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். திங்கட்கிழமையன்று, அரசு செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபென் சீபர்ட் தீவிர புலனாய்வு ஒன்றை அறிவித்ததுடன் ஜேர்மனி ஒரு மனிதநேயமிக்க நாடாக இருந்தது என்றும் வலியுறுத்தினார்.

குறிப்பாக எதிர்கட்சி பிரதிநிதிகள், ஜேர்மனியின் கொடூரமான புகலிட ஆட்சி பற்றிய எந்தவித தீவிர விமர்சனமும் இன்றி, அகதிகள் வசிப்பிடங்களுக்கான போதிய நிதியின்மையை  விமர்சித்துள்ளனர். அகதிகளுக்கு ஆரம்ப வரவேற்பு கொடுப்பதற்கு எந்த கட்டிடத்தை அளிக்க முடியுமென்பதை அரசாங்கம் முடிந்த வரையில் கருதுவதாக  Greens-ன் பாராளுமன்றத் தலைவரான கேத்ரின் கோரிங்-எகார்ட் கூறினார்.

இடது கட்சியின், உள்நாட்டு அரசியல் செய்தி தொடர்பாளர் Ulla Jelpke மற்றும் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியவில் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் Özlem Demirel இருவரும் அறிக்கை விடுத்தனர். Jelpke உள்நாட்டு அதிகாரிகளிடம் சிறந்த நிதி ஆதரவிற்காக கோரிக்கை விடுத்தார். இலாப-நோக்குள்ள நிறுவனங்களிடம் இப்பணியை கொடுப்பதற்கு பதிலாக, உள்நாட்டு அதிகாரிகளே புகலிடம் தேடுவோருக்கு பாதுகாப்பளிக்கும் திறமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இதற்கு பொறுப்பான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை அளிக்கப்படும் என்பது மட்டுமல்லாமல், இடவசதி மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட பிரதான விஷயங்களில் முக்கிய முன்னேற்றங்களும் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். வலதுசாரி தீவிரவாதிகள் அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் சீருடையிலோ சீருடையின்றியோ பணியாற்ற முடியும் என்பது நீக்கப்பட வேண்டும் என்று Demirel தெரிவித்தார்.

யதார்த்தத்தில், பாதுகாப்பு ஊழியர்களது கொடூர நடவடிக்கைகளுக்கு இடவசதிகளுக்காக குறைவான நிதியளித்ததோ அல்லது கட்டுப்பாடுகள் இல்லாததோ காரணமில்லை. 1993-ல் புகலிட சட்ட மாற்றத்திலிருந்து, ஜேர்மனியில் புகலிடம் தேடுவோருக்கான நிலைமைகள் படிப்படியாக சீரழிந்துள்ளது. மனிதநேயமற்ற அணுகுமுறையின் பயன்பாடு என்பது மேலும் அகதிகளை தடுப்பதற்கும் குடியேற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் வேண்டுமென்றே தீட்டப்பட்ட திட்டமிட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கடந்த வருடத்தின் இறுதியில், லம்படுசாவின் இத்தாலிய தீவுகளை சேர்ந்த 350 அகதிகள் Hamburg Senate ஆல் (நகர/மாநில அரசு) தீவிரமாக தாக்கப்பட்டார்கள். அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது, மேலும் தேவாலயம் கூட இதனை வழங்குவதை தடை செய்தது. அதே நேரத்தில், நகரில் Hamburg காவல்துறை அனைத்து கறுப்பின மக்களையும் அடையாள கட்டுப்பட்டுகளுக்கு உட்படுத்திய, பெருமளவிலான செயல்பாட்டு ஒன்றை ஒருங்கமைத்தது.

பேர்லினில் கோடைக்காலத்தில் அகதிகளுக்கு எதிராக காவல்துறை பல கொடூர சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது. Jelpke இன் கோரிக்கையான அகதிகள் முகாம்களில் இலாப நோக்குள்ள நிறுவனங்களுக்கு பதிலாக பொதுத்துறையை பயன்படுத்துவது என்பதோ அல்லது பாதுகாப்பு ஊழியர்களுக்கான சிறந்த நிர்வாக அமைப்பிற்கான Demirel இன் கோரிக்கையோ சிடுமூஞ்சித்தனத்தின் உச்சமாகும்.

சில காலங்களாக அறியப்படும் அகதிகள் முகாம்களில் காட்டுமிராண்டித்தனமான நிலைமைகள் வேண்டுமென்றே செய்யப்படுபவை. அகதிகளை பாழடைந்த முகாம்களில் வைப்பது மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளின்றி இருப்பது போன்றவை அதிகரித்து வருவதை முந்தைய அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. அகதி குழந்தைகளுடன் சம்மந்தப்பட்ட ஐ.நா குழந்தைகள் மாநாட்டில், அளவில்லாத விதி மீறல்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதிய (UNICEF) அறிக்கை ஒன்று ஜேர்மன் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்திருக்கிறது.