World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The revival of German militarism: One year on

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீழெழுச்சி: ஓராண்டு ஆனது

Peter Schwarz
3 October 2014

Back to screen version

இன்றிலிருந்து ஓராண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், ஜேர்மனி மீண்டுமொருமுறை ஒரு உலக சக்தியாவதற்கு முயன்றுவருவதாக அறிவித்தார்.

பேர்லின் சுவர் வீழ்ச்சியடைந்த பின்னர் அந்நாட்டின் மறுஐக்கியத்தைக் குறிக்கும் ஜேர்மன் ஐக்கிய தினத்தின் அவரது உரையில், கௌவ்க் ஜேர்மனி அதன் அளவு மற்றும் செல்வாக்கிற்கேற்ப "ஐரோப்பாவிலும், உலகிலும்" பாத்திரம் வகிக்க வேண்டுமென கோரியிருந்தார். "நெருக்கடிகளும் எழுச்சிகளும் நிறைந்த உலகில்," நாட்டுக்கு இன்னும் அதிக ஆக்ரோஷமான இராணுவ மற்றும் வெளிநாட்டு கொள்கை அவசியமாகும் என அவர் தெரிவித்தார்,

ஓராண்டுக்குப் பின்னர், இந்த நிலைநோக்கு ஜேர்மன் வெளியுறவு கொள்கையை மட்டும் தீர்மானிக்கவில்லை, மாறாக உள்நாட்டு கொள்கையையும் தீர்மானித்துள்ளது. உக்ரேனில் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய இரண்டு ஏகாதிபத்திய தலையீடுகளில் பேர்லின் செயலூக்கத்துடன் அரசியல் மற்றும் இராணுவ பாத்திரம் வகித்து வருகிறது. பிரதான கட்சிகளும், ஊடகங்களும் ஒரு சர்வாதிகாரத்தை நினைவுபடுத்தும் ஒரு சளைக்காத யுத்த பிரச்சாரத்துடன் இந்த கொள்கைக்கு முட்டுக்கொடுத்துள்ளன. அரசு உளவுவேலைகளும் மற்றும் ஒடுக்குமுறை எந்திரமும் அனைத்து எதிர்ப்புகளையும் இலக்கில் வைக்க, திட்டமிட்டு விரிவாக்கப்பட்டு வருகின்றன.

உக்ரேனில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி பிரான்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் ஹிட்லர் மற்றும் இரண்டாம் வில்ஹெல்மின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். முதலாம் உலக போரில், ரஷ்ய எல்லையை பின்னுக்குத் தள்ளுவதும் மற்றும் உக்ரேன் மீது கட்டுப்பாட்டை பெறுவதும் ஜேர்மன் குடியரசின் பிரதான யுத்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தன. இத்தகைய இலக்குகளை தடையின்றி தொடர்வதே ஹிட்லரின் கிழக்கு நோக்கிய நடவடிக்கைகளாக இருந்தன. அதேநேரத்தில், "மத்திய ஐரோப்பா " (Mitteleuropa) மீதான மேலாதிக்கம் ஓர் உலக சக்தியாக ஜேர்மனி உயர்வதற்கு முக்கியமானதாக கருதப்பட்டது. இன்றைய ஜேர்மன் அரசாங்கமும் பேர்லினின் மேலாதிக்கம் கொண்ட ஓர் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உக்ரேனை ஒருங்கிணைத்து அதே நோக்கத்தைப் பின்தொடர்கிறது.

கடந்தகாலத்திற்கு திரும்பும் வடிவத்தில், இந்த மூர்க்கமான கொள்கை மாற்றத்தின் அடிப்படைத்தன்மை, ரஷ்யாவை நோக்கிய அணுகுமுறையில் எடுத்துக்காட்டப்படுகிறது. 2001இல், ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் எழுந்துநின்று கரகோசமிட்டு வரவேற்கப்பட்டார்; இப்போதோ அவர் பிரதான துஷ்டனாக சித்தரிக்கப்படுகிறார். ரஷ்ய தன்னலக்குழுக்களுக்கு மாற்றாக, ஜேர்மன் உயரடுக்குகள் இப்போது அவர்களின் பாசிச பாதுகாவலர்களையும் சேர்த்து தமது உக்கிரேனிய தரப்பினரை அரவணைத்து வருகின்றன.

இதுவரையில் ஜேர்மனி மத்திய கிழக்கிற்கு போர்விமானங்களை அனுப்பவில்லை. ஒபாமாவின் "விருப்ப கூட்டணியில்" ஒரு சிறிய பாத்திரத்தைவிட மேலதிகமாக பங்கு வகிப்பதற்கு தேவையான இராணுவ தளங்கள் மற்றும் விமானந்தாங்கிகள் அதனிடம் இல்லை. இருந்தபோதினும் முதலில், குர்திஷ் பெஷ்மெர்காவுக்கு அதன் ஆயுதங்களை வினியோகித்ததன் மூலமாக, ஜேர்மன் அரசாங்கம் வளம்மிகுந்த அப்பிராந்தியத்தின் சூதாட்டத்தில் முதற்காயை வீசியுள்ளது. பயங்கரவாத இஸ்லாமிய அரசு போராளிகள் குழு மீது குண்டுவீசுவதென்பது மத்திய கிழக்கில் ஓர் ஏகாதிபத்திய மறுபங்கீட்டின் தொடக்கம் மட்டுமே என்பதும், அந்த போக்கினூடாக கூட்டணிகளும், முன்னணி வரிசைகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாறும் என்பதும் அதற்கு நன்றாக தெரியும். மேலும் இந்தமுறை ஜேர்மனி களத்தில் இருக்க தீர்மானமாக இருக்கிறது.

கௌவ்க்கினது உரை ஓர் அரசியல் சூழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தது. லிபிய யுத்தத்தை ஜேர்மன் தவிர்த்துக் கொண்டதற்குப் பின்னர், எல்லாதரப்பு அரசியல்வாதிகளும், முன்னணி இதழாளர்களும், கல்வியாளர்களும், இராணுவ அதிகாரிகளும் மற்றும் பெருவணிக பிரதிநிதிகளும் ஒரு புதிய, ஆக்ரோஷ ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் அவசியம் குறித்து விவாதித்தார்கள். அதன் விளைவாக, “புதிய சக்தி புதிய பொறுப்பு" என்றவொரு மூலோபாய ஆய்வறிக்கை வந்தது. உலக சக்தியாக மாறுவதற்கான ஜேர்மனியின் மூன்றாவது முயற்சியை உத்தியோகபூர்வமாக அறிவிக்க, கௌவ்க் ஜேர்மன் ஐக்கிய தினத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

ஜேர்மன் ஆளும் வர்க்கத்திற்கு யுத்தம் ஏன் மீண்டும் தேவைப்படுகிறது? அமெரிக்காவின் நிழலில் ஜேர்மன் பெரு வணிகங்கள் சத்தமில்லாமல் அதன் உலகளாவிய விவகாரங்களை நடத்தி வந்த காலம், நீண்ட காலக்கட்டத்திற்கு முன்னரே முடிந்துவிட்டது. பூகோளமயப்பட்ட நிதியியல் அமைப்புமுறையை 2008இல் பேரழிவின் விளிம்புக்கு கொண்டு வந்த உலக முதலாளித்துவ நெருக்கடி, அனைத்து சர்வதேச உறவுகளுக்கு தீவிர பதட்டமான குணாம்சத்தைக் கொடுத்துள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளாக அமெரிக்கா, அதன் பொருளாதார வீழ்ச்சியை அதன் இராணுவ மேலாதிக்கத்தைக் கொண்டு ஈடுசெய்வதற்காக ஒரு யுத்தம் மாற்றி இன்னொரு யுத்தத்தை நடத்தியுள்ளது. மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான போராட்டம் அதிகளவில் இராணுவ வழிவகைகளைக் கொண்டு போராடப்பட்டு வருகின்றன. ஜேர்மனிஉலக அரசியலை வெளியிலிருந்து வெறுமனே கருத்துத் தெரிவிப்பதுடன்" தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்வதை விட, அதனது நிலை "மிக பெரியதும் மிக முக்கியமானதுமாகும்" என்று கூறிய போது, வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ரைன்மையர் இதைத் தான் அர்த்தப்படுத்தினார். இது கலப்படமற்ற ஜேர்மன் ஏகாதிபத்திய மொழியாகும்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் புதுப்பிப்புக்குப் பின்னால், ஜேர்மன் மற்றும் ஐரோப்பாவின் கூர்மையான சமூக பதட்டங்களும் இருக்கின்றன. பேர்லின் மற்றும் புரூசெல்ஸால் ஆணையிடப்பட்ட ஈவிரக்கமற்ற சிக்கன கொள்கைகள், அந்த கண்டத்தை சமூக வெடிப்பின் விளிம்புக்கு தள்ளியுள்ளது. ஐரோப்பாவெங்கிலும் பத்து மில்லியன் கணக்கான மக்கள் மோசமான ஏழ்மையிலும், வேலைவாய்ப்பின்மையிலும் வாழ்கின்றனர், அதேவேளையில் ஒரு சிறிய மேற்தட்டு, ஐரோப்பிய சந்தைகளுக்குள் ஐரோப்பிய மத்திய வங்கி பாய்ச்சிய மலிவு பணத்துடன் ஊகவணிக விரயத்தில் விருப்பம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

லெனின் எழுதியபடி, ஏகாதிபத்தியம் என்பது "அதன் முழுநிலைப்பாட்டிலும் அரசியல் பிற்போக்குத்தனமானதாகும்". இராணுவவாதம், உள்மோதலை ஒரு வெளி எதிரியின் மீது திருப்பிவிட, சமூகத்தின் பிற்போக்குத்தனமான கசடுகளை ஒன்றுதிரட்ட மற்றும் உள்நாட்டிற்குள் அவசரகால நிலையைத் திணிக்க சேவை செய்கிறது.

இந்நிலைமைகள் அனைத்தும் மிகவும் முன்னேறிச்சென்றுள்ளன. கௌவ்க் உரையின் ஓராண்டுக்குப் பின்னர், ஜேர்மன் ஊடகங்கள் அன்றாடம் ரஷ்யாவுக்கு எதிராக ஆத்திரமூட்டி வருவதுடன், ஓயாது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க கோரி வருகின்றன மற்றும் அரசாங்கத்தின் கோழைத்தனத்தை குற்றஞ்சாட்டி வருகின்றன, ஏனென்றால் அது ஈராக் மீது அதன் சொந்த குண்டுகளை (இன்னும்) வீசவில்லை என்பதால். அதேநேரத்தில், கீழ்படிந்த பணிவான வரலாற்றாளர்களோ இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலக போர்களில் ஜேர்மன் நடத்திய குற்றங்களைக் குறைத்துக்காட்ட உழைக்கிறார்கள்.

இப்போதைக்கு, ஜேர்மன் இராணுவவாதத்தின் புதுப்பிப்பு நேட்டோ குடையின்கீழ் நடந்து வருகிறது. அதன் உறுப்பு நாடுகள் ஜேர்மன் மீள்ஆயுதமயமாவதை ஆதரிக்கின்றன என்பதுடன், ஜேர்மனி ஒரு பிரதான இராணுவ பங்களிப்பை வழங்க அழைப்புவிடுக்கின்றன. ஆனால் இந்த நல்லிணக்கம் போலியானதாகும். இந்த முகப்புதோற்றத்திற்குப் பின்னால், நேட்டோ "பங்காளிகள்" ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதோடு, ஒருவரையொருவர் உளவும் பார்க்கிறார்கள். மூன்று பிரதான யுத்தங்களின் அதன் தலையாய விரோதி, மீண்டுமொருமுறை மீள்ஆயுதமயப்படுத்துவதை பிரான்சில் கவனம்செலுத்தப்படவிடாது போகாது. மேலும் பொதுவான நலன்கள் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளுக்கும் இடையிலும், ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலும் ஜேர்மனியும் அமெரிக்காவும் ஒன்றையொன்று பொருளாதார போட்டியாளர்களாக எதிர்கொள்கின்றன.

ஜப்பானின் மீள்வருகையை போலவே, உலகின் போர்களங்களில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீள்வருகை, ஏற்கனவே ஸ்திரமற்ற உலகில் இன்னும் மோசமாக ஸ்திரமற்றதாக்கும் காரணியாக இருக்கிறது. இது என்ன வேகத்தில் நடந்து வருகிறதென்பது, எந்தளவுக்கு வேகமாக ஏகாதிபத்தியம் ஒரு புதிய உலக யுத்தத்தை முன்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அளவீடாகும்.

தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யாமல் போனால், மனிதகுலம் ஒரு பேரழிவை எதிர்நோக்குகின்றது. சர்வதேச அளவில் உள்ளதைப் போலவே, பாரிய பெரும்பான்மை ஜேர்மன் மக்கள் யுத்தம் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள். இருந்தபோதினும், இந்த எதிர்ப்பு உத்தியோகபூர்வ அரசியலில் எந்தவித வெளிப்பாட்டையும் காணவில்லை. அனைத்து கட்சிகளும், கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளில் இருந்து சமூக ஜனநாயகவாதிகள், பசுமை கட்சியினர் மற்றும் இடது கட்சி (Die Linke) வரையில், புதிய ஆக்ரோஷ வெளியுறவு கொள்கையை ஆதரிக்கிறார்கள்.

யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மூலோபாயப் பணி என்னவென்றால், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு கட்சியைஅதாவது ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit - PSG) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டுவதாகும். இராணுவவாதம் மற்றும் யுத்ததிற்கு எதிரான போராட்டம், அதன் மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாதபடி பிணைந்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீள்வருகையின் ஒவ்வொரு கட்டத்தையும் பகுத்தாராய்ந்து வந்துள்ளது. செப்டம்பர் 13 மற்றும் 14இல் யுத்தத்திற்கு எதிரான ஒரு சிறப்பு மாநாட்டில், ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சி (PSG) யுத்தத்திற்கு எதிரான ஓர் அரசியல் நிலைநோக்கை வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. நாங்கள் எமது வாசகர்களை அந்த ஆவணத்தை படிக்குமாறும், முன்னெடுக்க சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க "முடிவெடுக்குமாறும் வலியுறுத்துகிறோம்.