World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French government prepares to slash family, health benefits பிரெஞ்சு அரசாங்கம் குடும்ப, மருத்துவ நலன்களை வெட்ட தயாரிப்பு செய்கிறது
By Stéphane
Hugues சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2015 வரவு-செலவு திட்டக்கணக்கில், சமூகச் செலவுகள் மீதான ஆழ்ந்த புதிய தாக்குதல்கள் உள்ளடங்கி உள்ளன. உள்ளூர் அரசாங்கங்களுக்கு 3.7 பில்லியன் யூரோ மானியங்கள் வெட்டப்படுவதுடன், குடும்பநல மற்றும் மருத்துவநல சலுகைகள் மீதும் கடுமையான வெட்டுக்கள் திணிக்கப்படுகின்றன. கடந்த திங்களன்று, பிரெஞ்சு சுகாதாரத்துறை மந்திரி மரிசோல் துரன் 2015க்கான அரசாங்கத்தின் சமூக பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தைச் சமர்ப்பித்தார். அது, இந்த வசந்தகாலத்தில் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் புதிய அரசாங்கத்தைக் கொண்டு வந்த போது, பிரதம மந்திரி இமானுவேல் வால்ஸ் சூளுரைத்திருந்த 20 பில்லியன் யூரோ வெட்டுக்களின் ஒரு பெரும் பாகத்தை உட்கொண்டிருந்தது. இந்த வெட்டுக்கள், 2017இல் முடிய உள்ள அவரது ஐந்தாண்டு கால ஜனாதிபதி பதவிகாலத்தின் இரண்டாம் பாதிக்காக அறிவிக்கப்பட்ட 50 பில்லியன் யூரோ வெட்டுக்களினது பாகமாக உள்ளன. இந்த பிற்போக்குத்தனமான வெட்டுக்கள், சமூக செலவுக்கான பணத்தைக் குறைப்பதன் மூலமாக வணிகங்களை "மிகவும் போட்டித்தன்மை" கொண்டதாக ஆக்குவதற்காக, பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்புடன் (MEDEF) ஹோலாண்ட் பேரம்பேசி இருந்த "பொறுப்புடமை ஒப்பந்த்த்தின்" பாகமாக இருக்கின்றன. இந்த சலுகைகளை வெட்டுவதற்கு கூறப்படும் ஒரு முக்கிய நியாயப்பாடு, சமூக பாதுகாப்பு நிதி பற்றாக்குறை என்பதாகும். இந்த பற்றாக்குறை, 2008 நிதியியல் பொறிவிற்குப் பின்னர் பெரிதும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பினால் உண்டானது, அது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வக்கிரமான தாக்குதல்கள் மூலமாக 20 பில்லியன் யூரோவிலிருந்து 2011 வரையில் 11.5 பில்லியன் யூரோவாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது நடைமுறைப்படுத்தப்படும் புதிய வெட்டுக்கள் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பரந்த அடுக்குகளைக் கடுமையாக பாதிக்கும் என்பதுடன், ஏற்கனவே வெறுக்கப்படும் PS அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தூண்டிவிடும். இந்த புதிய வெட்டுக்களில், 700 மில்லியன் யூரோக்கள் குடும்பநல கொடுப்பனவுகளில் இருந்தும் மற்றும் அதுபோன்ற சலுகைகளில் இருந்தும் குறைக்கப்படும். பிரான்சில், இத்தகைய சலுகைகள் 1930களில் கொண்டு வரப்பட்டன. பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பதால் மக்கள் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காக, அவை ஒரு குடும்பத்தின் இரண்டாவது குழந்தையிலிருந்து தொடங்கி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கொடுப்பனவு தொகையை வழங்குகின்றன. முதலில் அந்த சட்டங்கள் 1930களில் கொண்டு வரப்பட்டு, அந்த தசாப்தம் முழுவதிலும் மக்களின் புதிய அடுக்குகளுக்கு அவை விரிவாக்கப்பட்டன. குடும்பநல கொடுப்பனவுகள் அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அச்சட்டம் இன்று வரையில் தகுதியுடையவர்களுக்கு மட்டும் கிடைக்கச் செய்யும் ஆய்வைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்த புதிய வெட்டுக்கள், தொழிலாளர்களை மட்டுமல்ல மாறாக இந்த சலுகைகளை அனுபவிக்கும் மத்தியதர வர்க்கத்தின் பரந்த அடுக்குகளையும் இலக்கில் வைக்கிறது. இது ஒப்பீட்டுரீதியில் பிரான்சின் உயர்ந்த பிறப்பு விகிதத்தைக் குறைக்குமென முதலாளித்துவத்தின் குறிப்பிட்ட பிரிவுகள் கவலைக் கொண்டு, அந்த வெட்டுக்களை விமர்சித்து வருகின்றன—ஏனென்றால் அவை கத்தோலிக்க தேவாலயத்துக்கு நெருக்கமாக உள்ளன, அல்லது பிரான்சின் மக்கள்தொகை சரிவது அதன் புவிசார்மூலோபாய இடத்தைப் பாதிக்குமென கவலைப்படுகின்றன. வலதுசாரி நாளிதழ் Le Figaroஇல், தலையங்கம் எழுதிய கட்டுரையாளர் கயிட்டோன் டு கப்பெல் (Gaëtan de Capèle), பிரான்சில் "குழந்தைகளைப் பெறுவது விரைவிலேயே ஆடம்பரமாகிவிடுமென" எழுதி, வெட்டுக்களின் தாக்கங்களை அப்பட்டமாக முன்வைத்தார். உண்மையில் டு கப்பெலின் கருத்து, பிரெஞ்சு ஆளும் மேற்தட்டின் அனைத்து கன்னைகளாலும் கோரப்படும் சிக்கன கொள்கைகளின் ஜனநாயக-விரோத உள்ளடக்கத்தைத் தொகுத்தளிக்கிறது. அவர்கள் இந்த சமூக சலுகைகளை, கிரீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் எஞ்சியிருக்கும் சொற்ப சமூக செலவினங்களை விட மிகவும் தாராளமாக இருப்பதாக கருதுகிறார்கள், பல தசாப்தங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளைத் தொடர்ந்து காப்பாற்றி வைக்க அவர்களுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பதுடன், பகுப்பாய்வின் இறுதியாக, சமூக புரட்சியை தவிர்ப்பதற்காக மட்டுமே அதை தக்க வைத்திருக்கிறார்கள். குடும்பநல கொடுப்பனவு வெட்டுக்கள், குழந்தை 14 வயதை அடைந்ததும் சலுகைகளில் செய்யப்படும் அதிகரிப்பை இலக்கில் வைக்கின்றன. பெற்றோர் முதல் குழந்தையை அடுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் 1,500 யூரோ இழக்கும் விதத்தில், அந்த வயது 16ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் அங்கே ஒரேயொருமுறை பண கொடுப்பனவு வழங்கும் முறை இருக்கிறது. தற்போது, குழந்தை பிறந்தவுடன் 923 யூரோ வழங்கப்படுகிறது. 2015இல், இரண்டாவது குழந்தையிலிருந்து, அந்த தொகை அதில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே இருக்கும், அதாவது 308 யூரோவாக இருக்கும். இது வரவு-செலவு திட்டத்தில் 200 மில்லியன் யூரோவை வெட்டும். மேலும், பெற்றோரில் யாரேனும் ஒருவர் ஒவ்வொரு குழந்தைக்காகவும் ஒருமுறை குழந்தை வளர்ப்புக்கென மூன்று ஆண்டுகளுக்கு அவரது வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம், அதற்காக அவர்களுக்கு ஒரு சிறிய கொடுப்பனவு வழங்கப்படுகிறது. பொதுவாக கணவன்மார் குழந்தைவளர்ப்பு விடுப்பை எடுப்பதில்லையென அறிந்தே, அரசாங்கம் பெற்றோரில் ஒருவர் 18 மாதங்களுக்கு மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ளும் விதத்தில் விதியை மாற்றுகிறது. இது மற்றொரு 300இல் இருந்து 400 மில்லியன் யூரோவை வெட்டும். மற்றொரு சலுகை, CMG, (குழந்தை பராமரிப்பை இலவசமாக தேர்ந்தெடுக்க துணைசெய்யும்) அது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றால் அந்த மழலையைக் கவனிக்க உதவும் திட்டம், தகுதியுடையவர்களுக்கு மட்டும் கிடைக்குமாறு ஆய்வு செய்யப்படும். உயர் வருவாய் குழுவில் இருப்பவர்கள் அந்த சலுகையில் 50 சதவீதத்தை இழப்பார்கள். மருத்துவ சலுகைகள் கடுமையாக தாக்கப்படுகின்றன: வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவநல தொழில்துறையினர் மீதும் கொண்டு வரப்படும், 2015இல் மொத்தமாக இது 3.2 பில்லியன் யூரோவாக இருக்கும். வெளிநோயாளிகளுக்கான அறுவைசிகிச்சை செலவை அதிகரிப்பது, குறிப்பிட்ட பொதுவான மருந்துகளைத் திணிப்பது, சிகிச்சை முறைகளின் மீது தடைகள் விதிப்பது, மற்றும் மருத்துவமனைகளை "சீரமைப்பது" ஆகியவை இதில் செய்யப்படும். தொழிலாளர்களும் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரும் அவர்களின் தொழில் வழங்குனர்கள் மூலமாகவோ அல்லது சந்தைகளிலிருந்து காப்பீடுகளை வாங்குவதன் மூலமாகவோ கூடுதல் காப்பீட்டுத்தொகை செலுத்த அதிகளவில் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர், மருந்துகள், சிகிச்சைகள், அறுவைசிகிச்சை, பல்மருத்துவம் மற்றும் மூக்குகண்ணாடி ஆகியவற்றிற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும்—இவற்றிற்கு பிரெஞ்சு சமூக பாதுகாப்பு அமைப்புமுறை மட்டுப்படுத்தப்பட்ட பணஉதவிகளை மட்டும் வழங்குகிறது. ஆளும் வர்க்கம் மருத்துவநல செலவினங்களைக் குறைக்க கோரி வருகின்ற நிலையில், இது மேலும் விரிவாக்கம் செய்யப்படும். தொலைக்காட்சிகள் மீதான ஆண்டு வரியில் 3 யூரோ உயர்வு, மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலையில் இரண்டு சென்ட் உயர்வு உட்பட ஏனைய பிற்போக்குத்தனமான அம்சங்களும் வரவு-செலவு திட்டத்தில் உள்ளடங்கி உள்ளன. உண்மையில், பிரெஞ்சு அரசும், சமூக பாதுகாப்பு அமைப்புமுறையும் எதிர்கொண்டிருக்கும் வரவு-செலவு திட்ட நெருக்கடியானது, அடுத்தடுத்து வெற்றி பெற்றுவந்த வலது மற்றும் முதலாளித்து "இடது" அரசாங்கங்களின் வணிக-சார்பு கொள்கைகளால் உருவாக்கப்பட்டதாகும். கடந்த 15 ஆண்டுகளில் அரசாங்கங்களால் வழக்கமாக கொண்டு வரப்பட்ட புதிய வேலைவாய்ப்பு திட்டங்களிலிருந்து முதலாளிகள் அதிக அளவில் பயனடைந்துள்ளனர், முதலாளிகளுக்கு, அவர்கள் புதிய தொழிலாளர்களை வேலைக்கெடுத்தால் சமூக சலுகைகளுக்கு வழங்க வேண்டிய தொகையைக் குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதில் எப்போதுமே அளிக்கப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கைகள் சமூக பாதுகாப்பு நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் யூரோவுக்கு அதிகமாக சுமையைக் கூட்டுகிறது. முதலாளிகள் சமூக பங்களிப்புநிதியில் செய்யும் மோசடியும் ஆண்டுக்கு 20 பில்லியன் யூரோ சுமையை அளிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளிக்கு குறைந்தபட்ச ஊதியம் (SMIC) வழங்கும் ஒரு முதலாளி, சமூக பங்களிப்புநிதி செலுத்துவதிலிருந்து நிரந்தரமாக விலகியிருக்கலாம் என்பதையும் இந்த "பொறுப்புடமை ஒப்பந்தம்" (Pacte de responsabilité) உள்ளடக்கி உள்ளது. இது சமூக பாதுகாப்பு நிர்வாகத்தின் வருவாயை மேற்கொண்டும் குறைக்கிறது மற்றும் அவ்விதத்தில் பற்றாக்குறையை அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, மாறாக அது அவர்களின் பெரும்பாலான தொழிலாளர்களை குறைந்தபட்ச கூலியில் நியமிக்கவும் முதலாளிகளை ஊக்குவிக்கிறது. |
|