World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் SYRIZA grooms itself for government power in Greece கிரீஸில் சிரிசா தன்னை அரசாங்க அதிகாரத்திற்காய் வளர்த்துக் கொள்கிறதுBy
Christoph Dreier கிரேக்க அரசாங்கத்தில் நெருக்கடி பெருகிக் கொண்டிருப்பதன் பின்னணியில், தீவிர இடது கூட்டணியானது (SYRIZA) கிரேக்க மக்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணிக்கும் பொருட்டு அரசாங்கத்தைக் கையிலெடுப்பதற்காய் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. பழமைவாத புதிய ஜனநாயகம் (ND) மற்றும் சமூக ஜனநாயக PASOK இன் நடப்பு கூட்டணி அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்பட்ட தனியார்மயமாக்கம், ஆட்குறைப்பு மற்றும் நல உதவிகளைத் திரும்பப் பெறுவது ஆகியவற்றைத் திணிப்பதில் பெருகும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் அன்றாட நிகழ்வுகளாகி, திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துவதை தொடர்ந்து தாமதப்படுத்தி விட்டிருக்கின்றன. ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் 2012 கூட்டரசாங்க தேர்தலைத் தொடர்ந்து 179 ஆக இருந்ததில் இருந்து, நாடாளுமன்றத்தில் பல முக்கியமான வாக்கெடுப்புகளுக்கு பின்னரும் உட்பூசல்களுக்கு பின்னரும், வெறும் 152 பிரதிநிதிகளாகக் குறைந்து விட்டிருக்கிறது. 300 இருக்கைகள் கொண்ட ஒரு நாடாளுமன்றத்தில் இது ஆகக் குறைந்த முன்னிலையாக இருக்கிறது, அத்துடன் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் தெரிவை உத்தரவாதப்படுத்துவதற்கும் இது போதுமானதல்ல. அடுத்த ஆறு மாதங்களில் அரசாங்கம் அவசியமான 180 வாக்குகளின் ஆதரவைத் திரட்டவியலாது போனால், அப்போது ஒரு புதிய நாடாளுமன்றத் தேர்தல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகி விடும். அத்தகையதொரு தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு சிரிசாவுக்கு இருப்பதாகவே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மே மாதத்தில் நடந்த ஐரோப்பிய தேர்தல்களில், சிரிசா, ND ஐக் காட்டிலும் நான்கு சதவீத வாக்கு முன்னிலை பெற்றது. ஐரோப்பியத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிரிசா, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை விமர்சனம் செய்ததோடு வெட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கும் அறைகூவல் விடுத்தது. சிரிசா ஆட்சியைக் கைப்பற்றுவதை சிக்கன நடவடிக்கை பாதையை பராமரிப்பதற்கும் தொழிலாளர்களது எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் ஒரு கருவியாக நீண்டநாட்களாகவே ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களுக்குள் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த கூட்டரசாங்கத் தேர்தலுக்குப் பிந்தைய இரண்டு ஆண்டுகளில் சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் பல்வேறு ஐரோப்பிய பொருளாதார மற்றும் அரசாங்க நிர்வாகிகளையும் சந்தித்து கிரீஸை ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ மண்டலத்திலும் பராமரிப்பதற்காக தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட ஒவ்வொன்றையும் செய்வதற்கு அவர்களிடம் உறுதியளித்து வந்திருக்கிறார். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இத்தாலியின் Cernobbio இல் Ambrosetti Forum கூட்டத்திற்கு சிப்ராஸ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார். அரசியல் மற்றும் வர்த்தகத் துறையில் இருந்தான உயர்நிலைப் பிரதிநிதிகள் ஒன்றாக அமர்ந்து அபிவிருத்திகள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து விவாதிக்கின்ற ஒரு வருடாந்திரக் கூட்டமாகும் இது. சென்ற வாரத்தில் போப் பிரான்சிஸும் கூட சிப்ராஸை சந்தித்துப் பேசினார். ஏராளமான பிரச்சினைகளில் இருவருக்கும் பரஸ்பரம் "பெரும் ஒற்றுமைகள்" காணப்பட்டதாக அவர்கள் இருவரும் பின்னர் கூறினர். ஐரோப்பியத் தேர்தல்களில் சிப்ராஸின் வெற்றியானது "சிப்ராஸ் தன்னுடைய இடையூறு செய்கின்ற பிம்பத்தைத் தூக்கிப்போட்டு விட்டு கிரீஸின் பிரதமராக காத்திருக்கும் ஒருவராக மறுவடிவம் கொடுத்துக் கொள்வதற்குத் தூண்டியிருக்கிறது" என்று பிரிட்டிஷ் வணிகச் செய்தித்தாளான ஃபைனான்சியல் டைம்ஸ் எழுதியது. உண்மையில், தொழிலாளர்களின் எதிர்ப்பை முறிக்கும் திறனுடனான ஒரு ஸ்திரப்படுத்தும் காரணியாக நடப்பு அரசாங்கத்தை விடவும் தன்னால் மிகத் திறம்படச் செயல்பட முடியும் என்பதில் கிரேக்க முதலாளித்துவத்திற்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் நம்பிக்கையூட்டுவதற்காக சிரிசா தலைவர் மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். செப்டம்பர் ஆரம்பத்தில், Thessaloniki இல் நடந்த சர்வதேசப் பொருட்காட்சி ஒன்றில் வழங்கிய உரையில் சிப்ராஸ் உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஆளும் PASOK கட்சி மற்றும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான ஜனநாயக இடது (Dimar) ஆகியவற்றின் கடுமையாய் வறண்டு போன பதவிகளது பிரதிநிதிகளை நோக்கிய ஒரு அழைப்பாகக் கருதப்பட்ட ஒரு நடவடிக்கையில், மற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தனது தேர்தல் வேட்பாளர் பட்டியலை சிரிசா திறந்த நிலையில் வைத்திருப்பதாக அவர் அறிவித்தார். மற்ற கட்சிகளுக்கான தனது சலுகைத் திட்டத்துடன் ஒரு புதிய அரசாங்க வேலைத்திட்டம் குறித்த தனது விளக்க வரைபடத்தையும் சிப்ராஸ் சேர்த்துக் கொண்டார். சென்ற கூட்டரசாங்க தேர்தல்களுக்கு முன்பாக, சிரிசா, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான நாட்டின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோரியதோடு கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் அத்தனையையும் திரும்பப் பெறுவதற்கான கட்சியின் நோக்கத்தையும் அறிவித்திருந்தது. இந்தக் கோரிக்கைகள் எல்லாம் ஆரவாரமில்லாமல் இப்போது குப்பையில் போடப்பட்டு விட்டன. 'கட்சி என்ன விரும்புகிறது என்பதல்ல பிரச்சினை என்ன சாத்தியம் என்பதே' என்று Thessaloniki இல் தனது உரையின் ஆரம்பத்தில் சிப்ராஸ் அறிவித்தார். சமீப வருடங்களில் புரூசெல்ஸின் கட்டளையின் பேரில் நடத்தப்பட்ட பாரிய ஊதிய மற்றும் ஓய்வூதிய வெட்டுகளைத் திரும்பப் பெறுவதென்பது கொஞ்சமும் சாத்தியமில்லாதது என்று அப்போது அவர் மேலும் தெரிவித்தார். அதற்குப் பதிலாக, குறிப்பாக மக்களில் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக சில குறைந்தபட்ச சமூக மேம்பாடுகளை சிரிசா தலைவர் அறிவித்தார். இது தவிர, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு அரசாங்கக் கடன்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளில் மொத்தமாய் ஒன்பது பில்லியன் யூரோ செலவாகும் என்று சிப்ராஸ் கணக்குப் போடுகிறார் - சமீப வருடங்களில் பொருளாதாரத்தில் இருந்தும் வருவாய்களில் இருந்தும் வெட்டப்பட்ட பல பத்து பில்லியன்கணக்கான தொகையில் இது ஒரு சிறு பாகமே.
சிரிசா அரசாங்க அதிகாரத்திற்கு வரும் முன்னதாகவே, IMF மற்றும் EU உடனான கடன் ஏற்பாடுகளின் பெரும்பகுதியை கட்சி ஏற்றுக் கொண்டிருப்பதோடு, சாரத்தில் அவை திரும்பப் பெறவியலாதவை என்றும் அறிவித்திருக்கிறது. சிப்ராஸ் தனது பிரச்சார வாக்குறுதிகளுக்கு நிதியாதாரம் திரட்டுவதற்கு வைக்கும் திட்டங்களில் இருந்தும் இது தெளிவாகத் தெரிகிறது. செல்வந்தர்களுக்கு வரியை அதிகரிப்பது அல்லது வங்கிகள் மீது கூடுதல் கட்டணம் விதிப்பது ஆகியவற்றுக்கான முந்தைய அழைப்புகளும் கூட அவரது கட்சியின் வேலைத்திட்டத்தில் இருந்து காணாமல் போயிருக்கின்றன. அதற்குப் பதிலாக வரி ஏய்ப்புக் குறைப்பின் மூலமாக மூன்று மில்லியன் யூரோக்களைத் திரட்டுவதற்கும், வரிக் கடன்களுக்கான திருப்பிச் செலுத்தல் திட்டங்களை அமைப்பதன் மூலமாக இன்னுமொரு மூன்று பில்லியன் யூரோக்களுக்கும், கிரேக்க வங்கிகளுக்கான மூலதனத்திற்காய் பதினொரு பில்லியன் யூரோக்களைக் கொண்டிருக்கும் ஹெலனிக் நிதி ஸ்திரமாக்கல் நிதியத்தில் (HFSF) இருந்து திரும்பப் பெறுகின்ற வடிவத்தில் கடைசி மூன்று பில்லியன் யூரோக்களுக்கும் சிப்ராஸ் திட்ட ஆலோசனை வைக்கிறார். இது தவிர்த்து, ஈராண்டு வேலை உருவாக்க வேலைத்திட்டம் ஒன்றுக்கு நிதியாதாரம் செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐந்து பில்லியன் யூரோக்களை கடன் பெறுவதற்கும் சிப்ராஸ் கணக்குப் போடுகிறார். சிரிசா ஆலோசனையளிக்கும் இந்த நடவடிக்கைகளில் எதுவொன்றினாலும் அரை தசாப்தத்திற்கும் அதிகமான காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் சிக்கன நடவடிக்கைகளின் காரணத்தில் விளைந்திருக்கும் சமூக நாசத்தினை சரிசெய்யத் தொடங்குவதும் கூட இயலாது. உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் கிரீஸில் 27 சதவீதமாகும். இந்த அளவு ஏறக்குறைய ஐரோப்பிய வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கின் அளவு ஆகும். இக்கட்சியின் நோக்கம் வறுமைக்கு எதிராகப் போராடுவது இல்லை. மாறாக, EU மற்றும் IMF இன் நிதிக் கோரிக்கைகளது பொதுவான பின்னலமைப்பை ஏற்றுக் கொள்கின்ற அதேநேரத்தில் வசீகரத்திற்கான ஒரு சில மாற்றங்களுடன் சிரிசா தனது கோரிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ளும் என்பதை ஐரோப்பிய உயரடுக்கினருக்கு உறுதியளிப்பதே அதன் கொள்கைத் தளத்தின் பிரதான நோக்கமாக இருக்கிறது. Thessaloniki மற்றும் Cernobbio இரண்டு இடங்களிலுமே சிப்ராஸ் இதை மிகத் தெளிவாக்கி விட்டார். முந்தைய சந்தர்ப்பங்களில் செய்தது போலவே, சிரிசா தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் ஸ்தாபனங்களையும் வெளிப்படையாக பாதுகாத்து பேசினார். ஐரோப்பாவில் ஒரு புதிய உடன்படிக்கையை (New Deal) சாத்தியமாக்குவதற்காக "சுற்றுவட்ட நாடுகளுடன் கூட்டணி சேர்ந்து ஐரோப்பிய அளவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே" அவர் விரும்பியதாக பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்தார். வரவு-செலவு திட்ட வெட்டுகளைச் செய்வதற்கு தனித்தனியான நாடுகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிக் கொள்கையையும் சிப்ராஸ் பாதுகாத்துப் பேசினார். புரூசெல்ஸிடம் இருந்தான மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை உத்தரவை முடிவுக்குக் கொண்டு வருவதை அவர் வெளிப்படையாக நிராகரித்தார். பதிலாக, கடன் திருப்பிச் செலுத்தம் என்பது கிரீஸின் பொருளாதார வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டதாகும் என்பதை எடுத்துக் கூறுகின்ற நோக்கத்துடன் நாட்டிற்குக் கடன் கொடுத்தவர்களது ஒரு மாநாட்டைக் கூட்டி, அதில் கிரேக்க இறையாண்மைக் கடனுக்கான நிபந்தனைகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த அவர் விரும்புகிறார். இந்த வகையில், திருப்பிச் செலுத்த நிலுவையைத் தவிர்க்க முடியும் என்றும் குறைந்தபட்சம் நாட்டின் கடன்களில் பகுதியேனும் திருப்பிச் செலுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த முடியும் என்றும் அவர் நம்புகிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அது கோருகின்ற சிக்கன நடவடிக்கைகளுக்குமான இந்தத் தெளிவான வாக்குறுதியே கட்சியின் வேலைத்திட்டத்தில் இருக்கும் மற்ற அத்தனை புள்ளிகளையுமே பொருத்தமற்றதாக்கி விடுகிறது. வரவு-செலவு திட்ட இலக்குகளில் இருந்து சிறு விலகலையும் தங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெளிவாக்கி விட்டிருக்கின்றனர். இப்போது ஏதென்ஸில் முகாமிட்டிருக்கும் முக்கூட்டின் (சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஆணையம், மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) உயர்நிலைத் தூதர்கள் கிரேக்க அரசாங்கம் 1.8 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான அடுத்த தொகுப்பு கடன் திருப்பிச் செலுத்தத்திற்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு தங்களது விருப்பங்களுக்கு இணங்கிச் செல்கிறதா என ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கூடுதலாய் 250 சேமிப்பு, தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை அக்டோபரில் தொடங்குவதற்கு முக்கூட்டு கோரிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கம் இணங்கா விட்டால், எந்தப் புதிய கடனும் நிறுத்தப்பட்டு, நாடு திவால்நிலைக்கு அச்சுறுத்தப்படும். கிரேக்க முதலாளித்துவத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை ஆட்சிக்குமான ஒரு பாதுகாப்பு அரணாக சிரிசா அபிவிருத்தி காண்பதென்பது சர்வதேச முக்கியத்துவம் பெற்ற ஒரு நடவடிக்கை ஆகும். தோற்றகாலத்தில் இருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாத்து நின்ற பல்வேறு ஸ்ராலினிச, மாவோயிச மற்றும் போலி-இடது குழுக்களின் ஒரு கூட்டணியாகவே இக்கட்சி 2004 இல் ஸ்தாபிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்தின் ஓரளவுக்கு வசதி படைத்த பிரிவின் சமூக நலன்களையே இது பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறது. யூரோ நெருக்கடிக்கும் அதனைத் தொடர்ந்து நடந்த மிருகத்தனமான சமூகத் தாக்குதல்களுக்கும் முன்பாக, கட்சியானது தேசியத் தேர்தலில் ஒருபோதும் ஒற்றை இலக்க வெற்றிகளைத் தாண்டியது கிடையாது. சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளது ஒரு விளைவாக, கிரீஸ் வன்முறையான சமூக ஆர்ப்பாட்டங்களது வரிசையால் உலுக்கப்பட்டிருக்கிறது, சிரிசா நாட்டின் புதிய உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக படிப்படியாக தூக்கி நிறுத்தப்பட்டு வந்திருக்கிறது. பெருகும் மக்கள் எதிர்ப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் ஸ்தாபனங்களையும் பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. இப்போது கட்சி அடுத்த சுற்று சமூகத் தாக்குதல்களுக்கும், முதலாளித்துவ அரசின் ஒரு பாதுகாவலனாக அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்குமாய் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. இது வெறுமனே சிரிசா திவாலடைந்ததன் ஒரு அறிவிப்பு மட்டுமன்று, உலகெங்கும் சிரிசாவை ஒரு அரசியல் முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட எண்ணற்ற போலி-இடது அமைப்புகளுக்குமான திவால்நிலை அறிவிப்புமாகும். |
|