World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One year since the beginning of the crisis in Ukraine

உக்ரேனிய நெருக்கடி தொடங்கியதிலிருந்து ஓராண்டு

Peter Schwarz
28 November 2014

Back to screen version

வில்னியஸில் நடந்த கிழக்கத்திய கூட்டு உச்சிமாநாட்டின் (Eastern Partnership Summit) முதல் நினைவாண்டை நாளை சனிக்கிழமை குறிக்கிறது. அவ்விடத்தில் தான் அப்போதைய உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்தார். ஓராண்டுக்குப் பின்னர், 4,000க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்துள்ள ஒரு உள்நாட்டு போரில் உக்ரேன் சிக்கியுள்ளது. நேட்டோ, ரஷ்யாவுடன் அணுஆயுதம் கொண்டு மனிதகுலத்தை நிர்மூலமாக்க அச்சுறுத்துகின்ற ஒரு ஆயுதமேந்திய மோதலின் விளிம்பில் உள்ளது.

இது எவ்வாறு நடந்தேறியது? மேற்கத்திய பிரச்சாரம் இந்த கேள்விக்கு ஐந்து எழுத்துக்களைக் கொண்டு விடையளிக்கிறது: PUTIN (புட்டின்)

ரஷ்ய ஜனாதிபதி "மேலாதிக்க எல்லையைச்" சிந்திக்கிறார், சர்வதேச விதிகளை மீறுகிறார், “ஐரோப்பிய சமாதான கட்டமைப்பை" ஆபத்துக்குட்படுத்துகிறார், உக்ரேனை மட்டுமல்ல, ஜோர்ஜியா, மால்டோவா மற்றும் பால்டிக் அரசுகளையும் இணைத்துக் கொள்ள முனைந்து வருகிறார், இவை ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் குற்றச்சாட்டுக்கள்.

கிரெம்ளினில் உள்ள வில்லன் மட்டுந்தான் ஒரு செல்வச்செழிப்பான ஜனநாய சோலைக்குள் உக்ரேனை அபிவிருத்தி அடைய விடாமலும் மற்றும் ஐரோப்பாவை சமாதான மாளிகைக்குள் நுழைய விடாமலும் தடுத்து வருகிறார் என்று பொதுமக்களை நம்ப வைக்க, ஊடகங்களால் ஒரு நாளின் 24 மணிநேரமும் வெள்ளமென பரப்பப்படும் பிரச்சாரங்கள் முயன்று வருகின்றன.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு ரஷ்ய ஜனாதிபதியின் மீது முற்றிலுமாக எந்த அனுதாபமும் கிடையாது. அவர் ரஷ்ய தன்னலக்குழுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதுடன், சோசலிச மற்றும் சர்வதேசியவாத குறிக்கோள்களுக்கு முற்றிலும் எதிராக நிற்கும் ஒரு வலதுசாரி தேசியவாதியாவார். ஆனால் கடந்த பன்னிரெண்டு மாதங்களில் நெருக்கடியின் தீவிரத்தன்மைக்கு ரஷ்யாவை பொறுப்பாக்குவது யதார்த்தத்தை தலைகீழாக்குவதாகும்.

உத்தியோகபூர்வ பிரச்சாரத்துடன் முரண்படும் சில மேற்கத்திய குரல்களின் மத்தியில், சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் ஜோன் ஜே. மேர்ஷெய்மரின் குரலும் உள்ளது. செப்டம்பர்/அக்டோபரில் Foreign Affairs இதழில், அவர் புட்டின் வம்புச்சண்டைக்காரர் இல்லையென குறிப்பிடுகிறார். “அமெரிக்காவும் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுமே நெருக்கடிக்கான பெரும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. ரஷ்யாவின் சுற்று வட்டப்பாதையிலிருந்து உக்ரேனை நகர்த்தி, மேற்கிற்குள் ஒருங்கிணைக்கும் ஒரு மிகப்பெரிய மூலோபாயத்தின் மத்திய உட்கூறாக உள்ள நேட்டோவினது விரிவாக்கமே பிரச்சினைக்கான மூலவேராக உள்ளது."

மேர்ஷெய்மர் தொடர்கிறார்: “புட்டினின் பின்வாங்கல் ஆச்சரியத்திற்கிடமின்றி வருகிறது.... (உக்ரேனிய) சம்பவங்களில் அவரது விடையிறுப்பு தற்காப்புக்குரியதே அன்றி, வலிந்து தாக்குதலுக்குரியதல்ல.” அமெரிக்கா "அதன் எல்லைகளில் இல்லையென்றாலும், மேற்கத்திய நிலப்பரப்பின் எவ்விடத்திலும், தூர தொலைவிலுள்ள வல்லரசுகள் அவற்றின் இராணுவ படைகளை நிலைநிறுத்துவதைச் சகித்துக் கொள்ளாது. சீனா ஒரு ஆத்திரமூட்டும் இராணுவ கூட்டணியைக் கட்டமைத்து, அதற்குள் கனடா மற்றும் மெக்சிகோவை உள்ளடக்க முயன்றால், வாஷிங்டனின் கோபம் என்னவாக இருக்குமென கற்பனை செய்து பாருங்கள்," என்றவர் குறிப்பிடுகிறார்.

நவயதார்த்தவாதம் (neorealism) என்றறியப்படும் பன்னாட்டு உறவுகளின் பாடசாலையினது ஒரு ஆதரவாளரான மேர்ஷெய்மர், அரசுகளுக்கு இடையிலான மோதல்களை ஆராய்கிறார், ஆனால் உக்ரேன் நெருக்கடியில் பாத்திரம் வகிக்கும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளைக் கையாளவில்லை. எவ்வாறிருந்த போதினும், அமெரிக்கா ஒரு உலக சக்தியாக அதன் இடத்தைத் தக்க வைக்க ரஷ்யாவைச் சுற்றி வளைத்துள்ளது, அதேவேளையில் ஜேர்மனி அவ்வாறான ஒன்றாக மாற போராடி வருகின்றது என்ற அவரது வலியுறுத்தல் சரியானதே.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு ஐரோப்பிய ஊடுருவல் மேலதிகமான பரிமாணங்களைக் கொண்டுள்ளன. அது உக்ரேனை மற்றும் அதன் உடனிகழ்வாக ரஷ்யாவையே கூட அரை-காலனித்துவ வகைப்பட்ட ஒன்றாகஅதாவது, மேற்கத்திய நிறுவனங்களுக்கான மலிவு தொழிலாளர் மற்றும் மூலப் பொருட்களின் ஒரு களஞ்சியமாக, அவற்றின் பண்டங்களுக்கு ஒரு சந்தையாக மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் மேற்கத்திய வங்கிகளுக்கு இலாபமளிக்கும் ஒரு ஆதாரமாகமாற்ற நோக்கம் கொள்கிறது. இதற்காக, அவைகளுக்கு, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடிபணிந்த மற்றும் தொழிலாள வர்க்கத்தை மூர்க்கமாக ஒடுக்கும் ஓர் ஆட்சி அவசியப்படுகிறது.

இது தான் ஓராண்டுக்கு முன் யானுகோவிச் மறுத்த அந்த கூட்டு உடன்படிக்கையின் நோக்கமாக இருந்தது, அவர் வெளியேற்றப்பட்டதற்கு பின்னர் அந்த உடன்படிக்கை புதிய ஆட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்த உடன்படிக்கை, உக்ரேனிய தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் கையூட்டுகளுடன் அரசியல் மேற்தட்டை மற்றும் ஒரு சிறிய மத்தியத்தட்டு வர்க்க அடுக்கைக் கவர்ந்திழுக்கின்ற அதேவேளையில், மேற்கத்திய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு உக்ரேனைத் திறந்துவிடுகிறது. பரந்த பெருந்திரளான மக்களுக்கு அது ஒன்றும் அளிக்கவில்லை, மாறாக அது கட்டுப்பாடில்லாத அளவில் "கிரேக்க மருந்துகளைக்" கொண்டிருக்கிறதுஅதாவது IMF மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பரிந்துரைக்கப்பட்ட செலவுகுறைப்பு திட்டங்கள், சமூக நலம், கல்வி, மருத்துவம் மற்றும் நிர்வாகத்திற்கான செலவுகளில் வெட்டுக்கள், ஆலைமூடல்கள் மற்றும் தனியார்மயமாக்கல்கள் ஆகியவை.

யானுகோவிச் ஆரம்பத்தில் கூட்டு உடன்படிக்கையை ஆதரித்தார், ஆனால் இறுதியில் அதற்கு எதிராக முடிவெடுத்தார் ஏனென்றால் அவர் அவரது அரசியல் எதிர்காலத்தைக் குறித்து அஞ்சினார். ஏற்கனவே ஒரு கடும் வறிய நாடாக உள்ள அங்கே ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட வெட்டுக்களை அவர் நடைமுறைப்படுத்தினால், ஒரு சமூக வெடிப்பு ஏற்படுமென அவர் அஞ்சினார். ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக கடுமையான சேமிப்புகளை வலியுறுத்திய அதேவேளையில், அதன் பங்கிற்கு, ரஷ்யா உக்ரேனுக்கு மலிவு கடன்களை வழங்கியது.

இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவுடன் உக்ரேனைக் கட்டிபோட, ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஏற்பாடு செய்ய, பாசிச சக்திகளை ஒன்றுதிரட்ட வேண்டியது அவசியமாக இருந்தது. தொடக்கத்திலிருந்தே, மைதான் போராட்டங்கள் மேற்கத்திய பின்புல சக்திகளின் செல்வாக்கின் கீழ் இருந்தன. 1991இல் இருந்து அதுபோன்ற சக்திகளுக்கு அமெரிக்கா 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்திருந்ததாக பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை உதவி செயலர் விக்டோரியா நூலாண்ட் ஒப்புக் கொண்டார்.

முதலில், சில ஆயிரக் கணக்கானவர்கள் தான் வீதியில் இறங்கினர், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக ஒரு பரந்த உணர்வு இருந்ததற்கான எந்த ஆதாரமும் அங்கே இருக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் வெறும் 30இல் இருந்து 40 சதவீத உக்ரேனிய மக்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக இருந்ததாகவும், அதே அளவில் தான் ரஷ்யா உடனான இணைப்புக்கும் ஆதரவாக இருந்ததாகவும், பொதுக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்களின் செய்திதொடர்பாளர்கள் பரிச்சயமான நபர்களாகவே இருந்தனர்: 2004இல் அமெரிக்க ஆதரவிலான ஆரெஞ்சு புரட்சியின் பிரதிநிதி ஆர்செனி யாட்சென்யுக்; CDU உடன் இணைப்பு கொண்ட கொன்ராட் அடினவர் அமைப்புடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருக்கும், ஜேர்மனியில் வாழ்ந்த, ஒரு உத்தியோகபூர்வ குத்துச்சண்டை வீரர், விடாலி க்ளிட்ஸ்ச்கோ; மற்றும் பாசிச ஸ்வோபாடா கட்சியின் தலைவர் ஓலெஹ் தியாஹ்னெபொக் ஆகியோர். தூதரக விதிமுறைகளை முற்றிலுமாக மீறி, நேட்டோ நாடுகளின் அரசாங்க உறுப்பினர்களும் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை வெளியேற்றக் கோரிய மற்றும் அரசு கட்டிடங்களை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பகிரங்கமாக கலந்து நின்றனர்.

யானுகோவிச், ஆர்ப்பாட்டக்காரர்களின் முறையீடுகளுக்கு செவிசாய்க்க மறுத்த போது, ஆயுதமேந்திய வலதுசாரி குழுக்கள் மைதான் சம்பவங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. ஸ்வோபோடா அது பலமானபிடியைக் கொண்டிருந்த அந்நாட்டின் மேற்கில் இருந்து கியேவுக்குள் அதன் ஆதரவாளர்களைக் கொண்டு வந்தது. தோற்றப்பாட்டளவில் எங்கும் இருந்திராத Right Sector, நவ-நாஜிக்களின் ஒரு கூட்டணி மற்றும் துணைஇராணுவ குழுக்கள் மேலெழுச்சி பெற்றன. அந்த மோதல்கள் மிகவும் மூர்க்கமாக மாறியதோடு, துப்பாக்கியேந்திய வீரர்கள் டஜன் கணக்கான மக்களைக் கொன்றனர். அவர்கள், அந்த ஆட்சியின் பாதுகாப்புப்படைகளது பாகமாக இருந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது எதிர்ப்புகளின் பதவிகளில் இருந்த அரசியல் ஆத்திரமூட்டுவோராக இருந்தாலும் சரி, அது இன்று வரையில் தீர்க்கப்படவில்லை.

பெப்ரவரி 21இல் யானுகோவிச் ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கும், முன்கூட்டிய தேர்தல்களுக்கும் உடன்பட்டார். வலதுசாரி போராளிகள் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டு, அவர் அதேநாள் இரவு விமானத்தில் வெளியேறினார். பெப்ரவரி 22இல் அவரது எதிர்ப்பாளர்கள் கியேவில் அதிகாரத்தைக் கைப்பற்றினர். பின்னர் அது, மேற்கத்திய சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பாசிச கும்பல்களால் ஆதரிக்கப்பட்ட இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை, ஒரு "ஜனநாயக புரட்சியாக" சித்தரிக்க, மேற்கத்திய ஊடங்களிடமும் போலி-இடது அமைப்புகளின் ஏற்பாட்டாளர்களிடமும் விடப்பட்டது.

கியேவில் அதிதீவிர-தேசியவாதிகளால் அதிகாரம் கைப்பற்றப்பட்டமை, பெரும்பாலான ரஷ்ய-மொழிபேசும் மக்களிடேயே, அதுவும் குறிப்பாக அந்நாட்டின் கிழக்கில் இருந்தவர்களிடையே, அச்சம் மற்றும் பீதியைக் கட்டவிழ்த்துவிட்டது. கிரெம்ளினிடமிருந்து கிடைத்த ஆதரவுடன், கிரிமியா அதன் சுதந்திரத்தை அறிவித்து, ரஷ்ய கூட்டாட்சிக்குள் ஒருங்கிணைந்தது. ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகள் டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க்கில் அதிகாரத்தைப் பிடித்து, அப்போதிருந்து இன்னமும் உக்ரேனிய மத்திய அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்காவும் ஜேர்மனியும், அவை கொண்டு வந்த அந்த நெருக்கடியை, ரஷ்யா மீது இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க திட்டமிட்டு பயன்படுத்தி உள்ளன. நேட்டோ கிழக்கு ஐரோப்பாவிற்குள் துருப்புகளை நகர்த்தியுள்ளது, ரஷ்ய எல்லையோரத்தில் உளவுபார்ப்பு விமானங்களை அதிகரித்தது, ரஷ்யாவிற்கு அருகில் உள்ள நிலம் மற்றும் கடல்பகுதிகளில் இராணுவ ஒத்திகைகளை ஒழுங்கமைத்து, திட்டமிட்டு மீள்ஆயுதபாணியாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளதுடன், சர்வதேச நிதிகளை அந்நாடு அணுகாதபடிக்கு வெட்டியுள்ளது.

இந்த அபாயகரமான தீவிரப்படுத்தலின் மற்றும் சம்பந்தப்பட்ட போர் அச்சுறுத்தலுக்கான நிஜமான காரணங்களை ஒருவர் ஆராய முயலுகையில், கிரெம்ளினை விட வெள்ளை மாளிகை மற்றும் பேர்லினில் உள்ள சான்சிலர் அலுவலகத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியுள்ளது. கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்ததைப் போலவே, ஏகாதிபத்திய சக்திகள் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கும் மற்றும் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கும் போர் மற்றும் சர்வாதிகாரத்தை கொண்டே விடையிறுப்புக் காட்டி வருகின்றன.

அமெரிக்க சமூகம் ஒரு சமூக வெடிப்பின் விளிம்பில் உள்ளது என்பதையே ஃபேர்குஷன் சம்பவங்கள் காட்டுகின்றன. ஐரோப்பாவிற்கும் அதுவே உண்மையாகும், அங்கே செலவின குறைப்பின் தொடர்ச்சியான அலைகள் பரந்த அடுக்குகளை வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மைக்குள் தள்ளி வருகின்றன. ஆளும் மேற்தட்டுக்கள் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி இராணுவவாதத்தை கொண்டும், மேலாளுமைக்கான புதிய எல்லைகள், சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களின் ஆக்கிரமிப்பைக் கொண்டும் விடையிறுப்புக் காட்டுகின்றன, இத்துடன் அரசு உளவுபார்ப்பு மற்றும் அரசு ஒடுக்குமுறை எந்திரத்தின் அபிவிருத்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கே இந்த அபிவிருத்தியை எதிர்கொள்ள ஒரேயொரு வழி தான் உள்ளது: போருக்கு எதிரான போராட்டத்தை அதன் மூல காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கின்ற, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே ஆகும்.