World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan SEP to contest presidential election இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றதுBy
Socialist Equality Party (Sri Lanka) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), 2015 ஜனவரி 8 இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளது. எமது வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன ஆவார். அவர், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக போராடுவதில் நீண்ட கொள்கைப் பிடிப்பான வரலாற்றைக் கொண்ட ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியரும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் ஆவார். உலகப் போர் அபாயத்துக்கும் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் அவற்றைச் சூழ தொங்கிக்கொண்டிருக்கும் போலி இடதுகளுக்கும் எதிராக, இந்த தேர்தலில் சோசலிசத்துக்காகவும் தொழலாள வர்க்கத்தின் நலன்களுக்காகவும் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுகள், ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சியை பாதுகாப்பதிலும் மற்றும் அதற்காக வக்காலத்து வாங்குவதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. தாமதமானால் தனது ஆதரவு மேலும் சரிந்துவிடும் என்று அஞ்சி, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமாக தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர் பிரிவினர் மத்தியில் பரந்த அளவில் சீற்றம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மிகுந்த பதட்டமான அரசியல் சூழ்நிலையிலேயே ஜனவரி 8 தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதன் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையையும் சீனாவுக்கு எதிரான இராணுவத் தயாரிப்புகளையும் உக்கிரமாக்கியுள்ள நிலைமையில், கொழும்பில் உள்ள ஆளும் உயரடுக்கின் பிரிவுகள், வாஷிங்டனுடன் நெருக்கமான உறவைப் பேணுமாறும் பெய்ஜிங்குடன் இராஜபக்ஷ ஏற்படுத்திக்கொண்டுள்ள உறவுகளை முறித்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்கின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்ததோடு தான் “எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக” இராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) செயலாளராகவும் இருந்த சிறிசேனவுடன் இன்னும் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர். அரசாங்க உறுப்பினர்கள் மத்தியில் கொந்தளிப்பை பெரிதுபடுத்துவதற்காகவும் மேலும் பலரை வெளியேறச் செய்வதற்காவும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூஎன்பீ) முன்கூட்டியே இந்த நகர்வு தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடந்த வாரம் வரை பாதுகாத்த சிறிசேன, திடீரென நாட்டில் “மூடிமறைக்கப்பட்ட சர்வாதிகாரம்” நிலவுவதாக கண்டனம் செய்து, “மோசடி, ஊழல் மற்றும் அநியாயங்களும் செல்வாக்குச் செலுத்துவதாக” பிரகடனம் செய்தார். அவரது கருத்துக்கள், பெய்ஜிங் உடனான உறவுகளை முறித்துக்கொள்ளுமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்ட வாஷிங்டனின் போலி “மனித உரிமைகள்” பிரச்சாரத்தின் வழியில் முழுமையாக நிற்கின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் அமெரிக்க ஈடுபாட்டிற்கான ஆதாரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளின்டன் மன்றத்தில் செயற்படும் அவர், சிறிசேன ஒரு ஜனாதிபதி போட்டியாளராக திடீரெனத் தோன்றுவதில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார். கொழும்பில் நிலவும் அரசியல் நெருக்கடியானது, ஏகாதிபத்திய சதிதிட்டங்களிலும், மற்றும் 2008 பூகோள நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து மோசமடைந்து வரும் பொருளாதார வீழ்ச்சியால் எரியூட்டப்பட்டுள்ள போரை நோக்கிய உந்துதலிலும், உலகின் ஒவ்வொரு பகுதியும் அகப்பட்டுக்கொண்டுள்ளதை தெளிவாகத் தெரியும் படி, வெளிப்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும், யுத்தத்துக்கான தோற்றுவாயான இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசவும் மற்றும் உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிக்கவும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பப் போராடுகின்றன. யூரேசியன் பெரு நிலப்பரப்பை கைப்பற்றும் வாஷிங்டனின் பரந்த குறிக்கோள்களின் பாகமாக உள்ள, அமெரிக்காவின் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையினால் உருவாக்கப்பட்டுள்ள புவிசார்-அரசியல் நீர்ச்சுழிக்குள் ஒட்டு மொத்த தெற்காசியாவும் சிக்கிக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு பூராவும், உக்ரேன் சம்பந்தமாக அமெரிக்கா ரஷ்யாவுடன் மோதல்களை ஈவிரக்கமற்று உக்கிரமாக்கி வந்துள்ளதோடு மத்திய கிழக்கில் ஒரு புதிய யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன், ஆசியாவில் சீனாவுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களையும் உக்கிரமாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானை தசாப்த காலங்களாக அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளமை, நாட்டினுள் முடிவில்லாத ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கிவிட்டுள்ளது மட்டுமன்றி, பக்கத்தில் உள்ள பாகிஸ்தானில் ஒரு எளிதில் கையாள முடியாத பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியும், அமெரிக்கா மற்றும் அதன் இரு ஏகாதிபத்திய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியவை மிகவும் நெருக்கமாக நகர்த்தியுள்ளமை, போர் அபாயத்தை இன்னும் உக்கிரமாக்கியுள்ளது. அரசாங்கம், எதிர் கட்சிகள் மற்றும் பல்வேறு போலி இடது அமைப்புகளுமாக முழு இலங்கை அரசியல் ஸ்தாபகமும், போர் அச்சுறுத்தல் தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வேண்டுமென்றே இருட்டில் வைத்துள்ளன. இந்த மௌனமான சதியை தகர்ப்பதற்கும், போர் மற்றும் இந்த அனைத்துக் கட்சிகளதும் நிகழ்ச்சி நிரலான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளும். இலங்கையில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தபோது இலங்கை இராணுவம் இழைத்த யுத்தக் குற்றங்களை பற்றிக்கொண்டுள்ள அமெரிக்கா, கட்டுப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு வழிவகுக்கக் கூடிய ஒரு சர்வதேச விசாரணையுடன் இராஜபக்ஷவை அச்சுறுத்துகின்றது. புலிகளுக்கு எதிரான போரை உச்சகட்டம் வரை ஆதரித்த வாஷிங்டனின் இலக்கு, பெய்ஜிங்கில் இருந்து தூர விலகிக்கொண்டு தனது “முன்னிலை” கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தை நெருக்குவதாகும். அரசாங்கத்தினதும், எதிர் கட்சிகளதும் பிரதிபலிப்புகள் சரிசமமாக போலியானவையாகும். இராஜபக்ஷ “சர்வதேச சதியில்” பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டிக்கொண்டாலும், சதிகாரர்களை பெயர் குறிப்பிடாததோடு, தனது அரசாங்கத்தை வாஷிங்டனுக்கு உகந்ததாக்குவதற்கு முயற்சிப்பதன் பேரில், அமெரிக்க அரசியல் செல்வாக்கு அமைப்புகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகின்றார். அதே சமயம், வாழ்க்கைத் தரங்கள் மீதான அதன் கடுமையான தாக்குதல்களையிட்டு தொழிலாள வர்க்கத்தில் இருந்து எழும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காக, இனவாதத்தை கிளறிவிடுவதையும் பொலிஸ்-அரச வழிமுறைகளை மேலும் பலப்படுத்துவதையும் அரசாங்கம் உக்கிரமாக்கியுள்ளது. சிறிசேனவும் யூஎன்பீயும் அரசாங்கத்தின் எதேச்சதிகார வழிமுறைகளை கண்டனம் செய்த போதிலும், தொழிலாள வர்க்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டங்களை திணிப்பதில் இராஜபக்ஷவைப் போலவே ஈவிரக்கமற்றவர்களாக இருப்பர். உலகில் சந்தை சார்பு கொள்கைகளை முதலில் அமுல்படுத்திய அரசாங்கங்களில் யூஎன்பீ அரசாங்கமும் ஒன்றாகும். தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக வேலைநிறுத்தங்களை தகர்ப்பதிலும் கொடூரமான பொலிஸ் அடக்குமுறைகளை முன்னெடுப்பதிலும் அதற்கு நீண்ட வரலாறு உண்டு. உள்நாட்டுப் போருக்கு தொடக்கமாக இருந்த 1983 இனவாத படுகொலைகளை தூண்டிவிட்டது யூஎன்பீயே ஆகும். “ஜனநாயகத்துக்கான” சிறிசேனவின் அழைப்பானது, அமெரிக்காவினதும், சீனாவுக்கு எதிரான அதன் “முன்னிலை” கொள்கையினதும் பக்கம் இலங்கையை உறுதியாக இருத்துவதை சாதாரணமாக சமிக்ஞை செய்கின்றது. நீண்டகாலத்துக்கு முன்னரே தனது ஏகாதிபத்திய-விரோத தோரணையை கைவிட்டுவிட்ட எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபீ), “எதிர் கட்சிகளின் பொது வேட்பாளருக்குப்” பின்னால் –அதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் பின்னால்- அணிதிரண்டுள்ளது. முன்னர் இராஜபக்ஷவுக்கும் அவரது கொடூர யுத்தத்துக்கும் ஆதரவளித்தமையினால் பரந்தளவில் அதிருப்திக்குள்ளாகியுள்ள ஜேவிபீ, தனது சொந்த வேட்பாளரை நிறுத்தாமல் இருக்க முடிவெடுத்துள்து. சிறிசேனவுக்கு பகிரங்கமாக ஆதரவளிக்காவிட்டாலும், “இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை தோற்கடிப்பதே” பிரதான இலக்காக இருக்க வேண்டும் என பிரகடனம் செய்ததன் மூலம், அது எங்கு நிற்கின்றது என்பதை சமிக்ஞை செய்துள்ளது. சோசலிச மற்றும் சர்வதேசியவாத கோட்பாடுகளுக்காக போராடுவதில் சோசலிச சமத்துவக் கட்சி கறைபடியாத சாதனையைக் கொண்டுள்ளது. உள்நாட்டுப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்ட போராடிய சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், வடக்கு மற்றும் கிழக்கின் யுத்த வலயங்களில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிவந்தன. தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் அனைத்து ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக, தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான ஒன்றிணைந்த போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தப் போராடுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, சர்வதேச சோசலிச முன்னோக்குக்கான அர்ப்பணிப்பு கொண்ட போராளி என்ற வகையில் தனது முழு இளமைக் காலத்தையும் அதற்காகவே செலவிட்டுள்ளார். அவர், ஆசிரியர்கள் மத்தியிலும் மற்றும் தனது அநேக முன்னாள் மாணவர்கள் மத்தியிலும், அவர்களது உரிமைகளுக்காகவும் ஏனைய தொழிலாளர் மற்றும் ஏழைகள் தட்டினரது உரிமைகளுக்காவும் சளைக்காமல் போராடுபவராகவும், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் காட்டிக்கொடுப்புகளையும் கொள்கை ரீதியில் எதிர்ப்பவராகவும் அறியப்பட்டுள்ளார். ஒரு அரசியல் குழு உறுப்பினர் என்ற வகையில், அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் (wsws.org) கொழும்பு ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் கட்சியின் கொள்கைகளை விளக்கும் விவரமான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதோடு நாடு பூராவும் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்களை, எமது பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் உத்வேகத்துடன் அதில் பங்கேற்குமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேர்தல் பிரச்சாரத்துக்காக 600,000 ரூபா நிதி சேகரிப்பைத் தொடங்கியுள்ளதோடு ஆகக்கூடிய நிதி உதவிகளைச் செய்யுமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எமது வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கில் உடன்பாடு கொண்ட அனைவரையும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கின்றோம். |
|