World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan minister quits ruling party to contest presidential election

இலங்கை அமைச்சர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியில் இருந்து வெளியேறினார்

By K. Ratnayake
24 November 2014

Back to screen version

இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஜனவரி 8 இடம்பெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிரான "எதிர்க்கட்சி பொது வேட்பாளராக" களம் இறங்குவதற்காக இராஜினாமா செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். சிறிசேனவின் முடிவானது ஜனாதிபதிக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் ஒரு திட்டமிட்ட அடியாகும்.

இராஜபக்ஷ அவரை சனிக்கிழமை அகற்றும் வரை, சிறிசேன, ஆளும் கூட்டணியில் பிரதான பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) நீண்டகால பொதுச் செயலாளராக இருந்தார். ஏனைய மூன்று அமைச்சர்களும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட ஸ்ரீலசுகவில் இருந்து விலகினர். டஜன் கணக்கான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வரும் நாட்களில் அரசாங்கத்தில் இருந்து விலகி தன்னுடன் வந்து சேர்வார்கள் என்று சிறிசேன கூறினார்.

இராஜபக்ஷ தேர்தலுக்கு அழைப்புவிட்டு மறுநாள் வெளியான சிறிசேனவின் அறிவிப்பானது தேர்தல் நெருங்கும் நிலையில் ஸ்ரீலசுகவை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட கவனமாக உருவாக்கப்பட்ட ஒரு சதியாகும். மூத்த ஸ்ரீலசுக புள்ளியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக முயலும் இராஜபக்ஷ, தனது அரசாங்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை சுமத்துகின்ற நிலையில், எந்தவொரு தாமதமும், மேலும் தனது ஆதரவை அரித்துவிடும் என்று அஞ்சி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை அறிவித்துவிட்டார். அவர், ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு முறைக்கு மட்டும் வரையறுக்கப்படுவதை நீக்குவதன் பேரில், 18வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக தனது பாராளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டார்.

வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிறிசேன, "கடந்த சில வருடங்களாக நாடு ஒரு மறைமுகமான சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது," என தெரிவித்தார். "ஊழல், மோசடி மற்றும் அநீதியும் பரவலாக இடம்பெறுகின்றன. நீதித்துறையின் மேலாதிக்ம் தகர்ந்து போகின்றது... பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தினை ஒரே குடும்ப உறுப்பினர்கள் இயக்குவதால் நாடு ஒரு மறைமுகமான சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளதுஎன அவர் மேலும் தொடர்ந்தார்.

சிறிசேன 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதியளித்தார். "மோசடியான தேர்தல் முறை" மற்றும் 18வது திருத்தத்தையும் அகற்றுவதாகவும் அவர் கூறினார். தான் ஒரு புதிய அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக யூஎன்பீ தலைவர் விக்கிரமசிங்கவை நியமிக்கவிருப்பதாக அறிவித்தார் -முன்கூட்டியே இது பற்றி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு இராஜபக்ஷவை பாராட்டியதன் மூலம், சிறிசேன தன்னுடைய சிங்கள இனவாத சான்றுகளையும் வெளிப்படுத்தினார்.

கடந்த வெள்ளி வரை, சிறிசேன மற்றும் அவருடன் வெளியேறிய ஏனையவர்களும் இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத செயல்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். அவரது இராஜினாமாவனது இராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி மற்றும் எதேச்சதிகார ஆட்சி முறைகள் சம்பந்தமாக, ஆளும் கூட்டணிக்குள்ளும் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளும் காணப்படும் ஆழ்ந்த அதிருப்தியை பிரதிபலிக்கின்றது.

இராஜபக்ஷ, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் தனது விரிவான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தனது சகோதரர்களான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்ஷ மற்றும் இராணுவ உயரதிகாரிகள் ஒரு சிலரும் அடங்கும் ஒரு சிறிய குழுவின் ஊடாக இயங்கிவருகின்றார். அவர்கள் ஒன்றாக இணைந்து, தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் 45 சதவீதத்தை கட்டுப்படுத்துவதுடன் பெருவணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அணுகுவதற்கு சிறப்புரிமையும் பெற்றுள்ளனர். பாராளுமன்ற சபாநாயகர் சமல் இராஜபக்ஷ, ஜனாதிபதியின் சகோதரர்களில் மற்றொருவராவார்.

மிகவும் குறைந்தபட்சமேனும், இராஜபக்ஷவுக்கு எதிரான நடவடிக்கை வாஷிங்டனுக்கு தெரிந்தும் அதன் ஒப்புதலுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம், புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இலங்கை இராணுவம் செய்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக பெருமளவில் ஆக்கிரோசமான "மனித உரிமைகள்" பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்கா யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததுடன் இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை கண்டும் காணாதது போல் இருந்தது. எவ்வாறெனினும், புலிகளின் தோல்வியின் பின்னர், உதவிகளையும் முதலீடுகளையும் வழங்கும் சீனாவிடமிருந்து அவரது அரசாங்கத்தை விலகியிருக்க இராஜபக்ஷவை நெருக்குவதற்கு முயற்சிப்பதற்காக, வாஷிங்டன்மனித உரிமைகள்விவகாரத்தை சுரண்டிக்கொள்கின்றது.

மார்ச் மாதம், போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்து .நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது இதன்படி, சர்வதேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தி, பொருளாதார தடைகள் விதிக்கப்படக்கூடிய ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிரான தனது ஆக்ரோஷமான "ஆசியாவில் முன்னிலைகொள்கையின் ஒரு பகுதியாக, இராஜபக்ஷவைப் போல், சீனாவுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் சமநிலையை பேணும் முயற்சியை விட, பிராந்தியம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அமெரிக்காவின் பின்னால் அணிதிரளுவதற்கு ஒபாமா நிர்வாகம் நெருக்குகிறது.

சிறிசேனவின் இராஜிநாமாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஈடுபாடானது வாஷிங்டன் தலையீட்டைக் காட்டுகிறது. தனது இருமுறை ஜனாதிபதி ஆட்சி முடிந்த பின்னர், குமாரதுங்க அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளின்டன் மன்றத்தில் இணைந்ததோடு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராஜதந்திரிகளுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த பல வாரங்களாக, அவர் அரசாங்கத்தை விட்டு விலகியவர்களுடன் ஒரு "பொது முன்னணியை" தயார் செய்வதற்காக, வெளிநாட்டிலும் இலங்கையிலும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவர் சிறிசேனவின் செய்தியாளர் மாநாட்டுக்கு தலைமை வகித்ததோடு, ஸ்ரீலசுகவை கீழறுத்ததாகவும் தன்னையும் பிற கட்சி தலைவர்களையும் மோசமாக நடத்தியதாகவும் இராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டினார்.

மங்கள சமரவீர, கரு ஜயசூரிய மற்றும் ரவி கருணாநாயக்க உட்பட யூஎன்பீ தலைவர்கள், "செவ்வாய்க்கிழமை [நவம்பர் 4] கொழும்பில் உள்ள சில செல்வாக்கு மிக்க வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்ததோடு, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கட்சியின் மூலோபாயம் தொடர்பான விஷயங்களையும் கலந்துரையாடியதாகவும்நவம்பர் 6 அன்று டெய்லி மிரர் பத்திரிகை எழுதியிருந்தது. "சம்பந்தப்பட்ட இராஜதந்திரிகளின் பெயர்களைக் குறிப்பிடாவிட்டாலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியாவுமே அந்த இராஜதந்திரிகள் என்பது தெளிவு.

யூஎன்பீ மற்றும் ஸ்ரீலசுகவில் இருந்து பிரிந்த குழுவினரும், அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளிடம் இருந்து அன்னியப்படுவதன் பொருளாதார மற்றும் மூலோபாய விளைவுகளையிட்டு பீதியடைந்துள்ள பெருநிறுவன உயரடுக்கின் சக்திவாய்ந்த தட்டினரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். பெரிய வணிகர்கள், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 45 சதவீதத்தை பெறும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பிரதான சந்தைகளில் இதன் தாக்கத்தைப் பற்றி கவலை கொண்டுள்ளனர்.

சிறிசேனவுடன் வெளியேறிய முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, அழித்துவிடும் "சர்வதேச சூழ்ச்சியில்" பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் இராஜபக்ஷவின் ஜனரஞ்சகவாத வார்த்தை ஜாலங்கள், நாட்டின் மதிப்பைச் சரித்துவிடும் என்று எச்சரித்தார். "சர்வதேச சமூகத்திற்கு எதிராக முரட்டுத்தனமாக சத்தமிடுவது அல்லது வலுவான அடைமொழிகளைப் பயன்படுத்துவதும் தேசப்பற்று அல்ல," என்று அவர் கூறினார்.

ஏனைய கட்சிகளும் எதிர் கட்சியை ஆதரிப்பது பற்றி பரிசீலித்து வருகின்றன. இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளியான சிங்கள பெளத்த அதி தீவிரவாத ஜாதிக ஹெல உறுமய, சிறிசேனவைச் சூழவுள்ள பொது முன்னணிக்கு ஆதரவை வெளிப்படுத்தியது. ஜாதிக ஹெல உறுமய, சமீபத்தில் ஜனாதிபதி அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற அதன் கோரிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கத்தை விமர்சித்ததுடன் அதன் இரு அமைச்சர்களும் இராஜிநாமா செய்தனர்.

2010 தேர்தலில் இராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சித் தலைவருமான சரத் பொன்சேகா, சிறிசேனவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி ஆராய்வதாக அறிவித்தார். எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் இதையே தெரிவிக்கின்றது.

இராஜபக்ஷ தனது கட்சியில் மேலும் விரிசல்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் தோன்றிவரும் நெருக்கடியை தவிர்க்கவும் ஏக்கம் கொண்டுள்ளார். அவர், வார இறுதியில் ஒரு பொதுக் கூட்டத்தில், வெளியேறியவர்களுக்கும் மற்றும் பிரிந்துசெல்ல விரும்புபவர்களுக்கும் எதிராக ஒரு மூடிமறைத்த அச்சுறுத்தலை விடுத்தார். ஊழல்களில் அவர்களின் ஈடுபாடு குறித்த விரிவான தனிப்பட்ட "கோப்புகள்" தன்னிடம் இருப்பதாகவும், ஆனால் அவற்றை "திறக்க மாட்டேன்" என்றும் இராஜபக்ஷ கூட்டத்தில் கூறினார். சேதமேற்படுத்தும் விபரங்களை கசியவிடுவதற்கு வழி தேடப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசாங்க அமைச்சர்கள் அவசர அவசரமாக ஒரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி, கட்சி தாவல் தொடர்பாக யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சாட்டினர். "நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்காக எதிர்க் கட்சி மற்றும் மேற்கத்திய சதியினாலும் மைத்திரிபால சிறிசேன தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்," என அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடகத்திடம் கூறினார்.

விலைவாசி உயர்வு, வாழ்க்கைத் தர சீரழிவு மற்றும் ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பாக பரவலாக மக்களிடையே வளர்ந்துவரும் எதிர்ப்பை சுரண்ட முயன்று வரும் "பொது முன்னணி" மீதோ அல்லது அரசாங்கம் மீதோ உழைக்கும் மக்கள் எந்த நம்பிக்கையும் வைக்கக் கூடாது. சிறிசேன ஆட்சிக்கு வந்தால், அவர், ஆளும் தட்டுக்களின் சிக்கன திட்டத்தை அமுல்படுத்துவதில் இராஜபக்ஷவை போலவே இரக்கமற்றவராக இருப்பார்.