தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை இலங்கை: மீரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர்
By S.K. Jayanthy and R.M. Gunathilake Use this version to print| Send feedback இலங்கையின் மத்திய மலையகப் பிரதேசமான பண்டாரவளையில் மீரியபெத்த பெருந்தோட்டத்தில் கடந்த 29ம் திகதி நடந்த மண்சரிவில் அகதிகளானவர்கள் தங்கியிருக்கும் பூணாகலை தமிழ் மஹா வித்தியாலயத்திற்குச் சென்ற உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்களுக்கு, பேரழிவுக்கு இரையானவர்களின் சமூகப் பொருளாதார பின்னணி மற்றும் விபத்து சம்பந்தமாகவும் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள முடிந்தது.
பண்டாரவளையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த இடம்பெயர்ந்தவர்கள் முகாமில், மீரியபெத்த தோட்டத்தின் 64 கும்பங்களுக்கு மேலதிகமாக, மண்சரிவு அபயாத்தை எதிகொண்டுள்ள தியகல தோட்டத்தின் 157 குடும்பங்களும் தங்கியிருந்தன. இரு தோட்டங்களும், மஸ்கெலியெ பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமானவையாகும். இடப் பற்றாக்குறை காரணமாக 400 சதுர அடி அளவிலான ஒரு வகுப்பறைக்குள் 33 பேர் அளவில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மண்சரிவில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பத்தில் செய்திகள் தெரிவித்திருந்தாலும், இப்போது அரசாங்கம் அந்த எண்ணிக்கையை 34 ஆக குறைத்துள்ளது. பேரழிவு ஏற்பட்ட பிரதேசத்துக்குள் 330 பேர் இருந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆரம்ப அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 31ம் திகதி அளவில் அந்த எண்ணிக்கை 100 வரை குறைந்தது. இந்த 100 பேரில் 78 பேர் பற்றிய தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், அதில் 34 பேர் உயிரிழந்தும் 40 பேர் ஒரு இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக நம்புவதாகவும் இப்போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இதற்கு மேலதிகமாக அனாதைகளான சிறுவர்கள் 75 பேரும் அகதி முகாம்களில் இருப்பதாக இந்த நிலையம் கூறுகின்றது. தமது உயிர் மீது காட்டும் அலட்சியம் பற்றியும், அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகம் சம்பந்தமாகவும் தொழிலாளர் மத்தியில் நிலவும் கடும் எதிர்ப்பை அவர்களுடனான கலந்துரையாடலில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.
மீரியபெத்த தோட்டத்தில் வேலை செய்து அங்கிருந்து விலகிச் சென்ற மாரிமுத்து இராஜவீரர், தனது கோபத்தையும் வேதனையையும் பின்வருமாறு வெளிப்படுத்தினார்: “முதியோர்களுக்கு அரசாங்கத்திடமோ தோட்ட நிர்வாகத்திடமோ இருந்து எந்த சலுகையும் கிடைக்கவில்லை. மண்சரிவு ஏற்படக் கூடிய இடத்தில் வாழ்கின்றோம் என்பதை நாம் தெரிந்துகொண்டுதான் இருந்தோம். ஆனால் என்ன செய்வது? போவதற்கு இடம் கொடுக்காவிட்டால் எங்கே போவது? செத்தாலும் பரவாயில்லை என்றுதான் முதியவர்கள் அங்கு இருந்தனர். கடைசியில் அது நடந்தது. மாரிமுத்து, ராசமுத்து, முருகதாஸ், லீலாவதி, மாரியா, தெய்வானை போன்ற அனைவரும் முதியவர்கள். ரஞ்சிதம், துக்ஷிகா போன்ற ஏனையோரும் உள்ளனர்.” “சொல்வது அதிகம் செய்வது குறைவு. உண்மையில் ஒன்றுமே செய்வது கிடையாது. வாக்குகளைப் பெறுவதற்கு மட்டுமே அரசாங்கம் உள்ளது.” விபத்துக்குள்ளான நாளில் இருந்து, மக்களிடம் இருந்து கிடைக்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிகளை பாராட்டி பேசிய அவர், இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரும் தோட்டத் தொழிலாளர்களின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இதொகா) தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் பற்றி பின்வருமாறு கூறினார்: “இன்னமும் தொண்டமானோ அரசாங்கமோ தோட்ட முகாமையாளரோ எங்களுக்கு வாழக் கூடிய இடத்தில் வீடு கட்டிக் கொடுப்பதாக முறையாக சொல்லவில்லை. தோட்ட முகாமையாளரும் சின்னத் துரையும் வந்தனர். தமக்கு நட்டம் ஏற்படுவதாகக் கூறி வேலைக்கு வருமாறு கூறினர். அவர்களுக்கு பணம் மட்டுமே தேவை. எமது பரம்பரையே அவர்களுக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இவ்வாறு பிரச்சினையில் விழுந்துள்ள போதும் அவர்கள் சம்பாதித்துக்கொள்ளவே நினைக்கின்றனர். வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறினர். அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மண்சரவு ஏற்பட்டு நாசமாகிய இடமாகும். ஒருமுறை விபத்துக்குள் அகப்பட்ட எங்களை மீண்டும் அழிவுக்குள் தள்ள முயற்சிக்கின்றனர். நாங்கள் அவர்களை விரட்டி அடித்தோம். சிலர் அடிக்கவும் முயன்றனர். அவர்கள் ஓடித் தப்பினர்.” உடுத்திய உடையுடன் ஓடி வந்தவர்களின் முக்கியமான ஆவணங்கள் மற்றும் சம்பாதித்த அனைத்தும் நாசமாகிவிட்டதாக கூறிய அவர், “உடைந்து விழாத, வாழக்கூடிய வீடுகளைக் கொடுக்கும் வரை நாங்கள் போகமாட்டோம். எங்களுக்கு வீடுதான் வேண்டும். கூலி வேலை செய்து வாழ முடியும். இது ஒரு பாடசாலை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனாலும் நாம் என்ன செய்வது? எங்களை இந்த தோட்டத்தின் பழைய தொழிற்சாலைக்குள் அனுப்பப் போகின்றனர் போல் தெரிகிறது. என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்,” என்றும் அவர் கூறினார். தனது தொழில் அனுபவத்தை விளக்கிய இன்னொரு தொழிலாளி, தோட்டத்தில் வசித்திருந்த அநேக தொழிலாளர்களுக்கு 16 நாட்களுக்கும் அதிகமாக வேலை கிடைப்பதில்லை என தெரிவித்தார். “ஒரு நாளுக்கு கிடைப்பது 450 ரூபா. தோட்டத்துக்கு வெளியில் கூலி வேலைக்கு அநேகமானவர்கள் சென்றனர். 600 ரூபா அல்லது 650 ரூபா கிடைத்தது. ஆயினும் அன்றாடம் அங்கு வேலை கிடைக்காது. எனினும் நாம் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் எப்படியோ சிரமத்துடன் வாழ்ந்தோம். இரு மடங்கு செலவுகளால் அன்றாடம் கடன். சும்மா இருந்த நாட்களில் கிடைத்த நிலத் துண்டில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிய வீடும் இப்போது மண்ணுக்குள் போய்விட்டது.” தியகல தோட்டத்தில் வசிக்கும் திருமணம் முடித்த இளம் தோட்டத் தொழிலாளியான ஆர். பிரதீபன் கலந்துரையாடலில் பங்குகொண்டு, இதொகாவின் நடவடிக்கைகள் தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டார்: “இதொகா 20, 25 வீடுகளைக் கட்டிக்கொடுத்தது தான். அவற்றில் பெரும்பாலானவை அவர்களின் ஆதரவாளர்களுக்கே கொடுக்கப்பட்டன. “பணம் இருக்கும் என்றால் நாங்களும் இப்படி கேட்க மாட்டோம். காணி வாங்கி வீடுகள் கட்டிக்கொள்வோம். “எங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு என்ன நடக்கும்? எனது ஒன்பது மாத குழந்தை குளிரில் கீழே இருக்கின்றது. இன்னும் எத்தனை பிள்ளைகள் இவ்வாறு இருப்பர். பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்று யாருக்கும் தெரியாது. பெற்றோர் இல்லாத இரு சிறு பிள்ளைகளும், இரு இளம் பிள்ளைகளும் இங்குள்ளனர். அவர்களுக்கு என்ன நடக்கும்?”
தனது தாய் இறந்து போனதால் எஸ். ஜயகாந்தி அதிர்ச்சியில் இருந்தார். “நாங்கள் அதிஷ்ட இலாபச் சீட்டு விற்றே வாழ்ந்தோம். அம்மா பிள்ளைகளை பார்த்துக்கொண்டார். அம்மா மண்சரிவில் அகப்பட்டுவிட்டார். இப்போது நாங்கள் பிள்ளைகளை யாரிடம் விட்டுச் சென்று சம்பாதிப்பது?” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார். 75 வயதான ஆறுமுகம் முத்து மண்சரிவில் இறந்து போனார். அவரது இறப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவரது மனைவி கந்தையா மாரியாய்க்கு, “அவரின் காது கேட்கவில்லை. நான்தான் பார்த்துக்கொண்டேன். அவர் போய்விட்டார்...” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. மனிதர்கள் உயிரோடு புதைக்கப்படுவதற்கு இடமளித்து, எஞ்சியவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாக அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகள் தொடர்பாக அந்த மக்கள் மத்தியில் தணிக்க முடியாத கோபம் இருந்தது. திருத்தப்பட்ட புள்ளி விபரங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததோடு அழிவின் அளவை குறைத்துக் காட்டுவதற்கு இராபக்ஷ அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் கூறினர். அவ்வாறு குறைப்பதன் மூலம், விபத்துக்கு ஆளானவர்களுக்காக ஏற்கவேண்டிய செலவை குறைத்துக்கொள்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக, இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் ஒட்டு மொத்த ஆளும் முதலாளித்தவ வர்க்கத்தினதும் கொடூரமான அலட்சியமே இந்தக் கருத்துக்களில் இருந்தும் வெளியான ஊடக செய்திகளில் இருந்தும் அம்பலத்துக்கு வருகின்றது. 2005ல், அப்போதைய பதுளை மாவட்டத்தின் செயலாளரின் வேண்டுகோளின் பேரில், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மீரியபெத்த தோட்டம் தொடர்பாக பரிசோதனை ஒன்றைச் செய்துள்ளது. இத்தைகைய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து மாவட்ட செயலாளருக்கு கொடுத்த அந்த பரிசோதனை அறிக்கையின் பிரதி ஒன்று மீரியபெத்த தோட்டத்துக்குரிய வரையறுக்கப்பட்ட மஸ்கெலிய பெருந்தோட்டக் கம்பனிக்கும் கொடுக்கப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது. நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார, விபத்துக்குள்ளான நிலப் பிரதேசமானது மண் சரிவுக்கான "கடும் ஆபத்தில்" இருந்தது என்பது அந்த அறிக்கையில் விசேடமாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார். தசாப்த காலங்கள் கடந்திருந்த போதும், தோட்ட முகாமைத்துவம் மற்றும் அரசாங்கமும் இந்த ஆபத்து பற்றி எந்தவொரு பூரண நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது மிகவும் தெளிவானது. 29 அன்று விபத்து நடப்பதற்கு 24 மணித்தியாலத்திற்கு முன்னர், மீரியபெத்தவில் இந்த ஆபத்து தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்து "கடுமையானது" என்று அந்த எச்சரிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததாக பண்டார தெரிவித்திருந்தமை முக்கியமான விடயம் ஆகும். மேற்குறிப்பிட்ட அறிக்கையின் பின்னர், முறையான எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகள் அந்த ஆபத்துப் பிரதேசத்தில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டதா என மஸ்கெலிய தோட்டக் கம்பனியின் பிரதான நிர்வாகியிடம் கேட்ட போது, அவர் அதற்கு பதில் அளிப்பதை நிராகரித்ததாக சண்டே டைம்ஸ் தெரிவித்தது. தோட்ட நிர்வாகம் மற்றும் அரச நிறுவனங்களும் இந்த ஆபத்து பற்றி அறிந்திருந்தும் அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்த இந்த வறிய தொழிலாளர் குடும்பங்களை உடனடியாக அகற்றுவது ஒரு புறம் இருக்க, அவர்களுக்கு எச்சரிக்கை கூட விடுக்காத நிலையில், தொழிலாளர்கள் இந்த விபத்திற்கு இரையாக நேர்ந்துள்ளது என்பது மிகவும் தெளிவாகின்றது. மீரியபெத்த மட்டுமன்றி மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் கண்டுள்ள நூற்றுக்கணக்கான பிரதேசங்களில் வாழும் ஆயிரக்கணக்கான வறியவர்கள் இத்தகைய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கையில் 10 மாவட்டங்கள் மண் சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், அதில் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்படக்கூடும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் 2013ல் அம்பலப்படுத்தியுள்ளது. அத்துடன் மலையகப் பிரதேசங்களிலான கட்டுமானங்களில், முன்னேறிய நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவற்றை குறைத்துக்கொள்ள முடியும் என நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. பாதுகாப்பான வீட்டில் வாழ்வது என்ற இந்த மிக அத்தியாவசியமான தேவையை முழுமையாக அலட்சயம் செய்யும் அரசாங்கம், இந்த அழிவுகளுக்கு பிரதானமாக பொறுப்புச் சொல்ல வேண்டும். அது மட்டுமன்றி, மத்திய மலையகப் பிரதேசங்களில் தேயிலை நிறுவனங்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆபத்துக்கள் அற்ற நிலத்தில் பாதுகாப்பான வீட்டை கட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்து முழுமையாக கைகழுவிக்கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்திற்கு இடம் கொடுத்துள்ளமை தொடர்பாகவும் இராஜபக்ஷ அரசாங்கமே பொறுப்புச் சொல்ல வேண்டும். |
|
|