World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama at APEC: US steps up economic offensive against China

APEC இல் ஒபாமா: அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பொருளாதார தாக்குதலை அதிகரிக்கிறார்

Nick Beams
14 November 2014

Back to screen version

இவ்வார தொடக்கத்தில் பெய்ஜிங்கில் நடத்தப்பட்ட ஆசிய பசிபிக் கூட்டமைப்பின் (APEC) உச்சிமாநாடு, அதன் பொருளாதார விரோதிகளுக்கு எதிரான அமெரிக்காவினது பெருகிய ஆக்ரோஷ முனைவைப் பட்டவர்த்தனமாக வெளியே கொண்டு வந்தது.

அந்த உச்சிமாநாடு நடப்பதற்கு முன்னரே கூட, அமெரிக்கா ஏற்பாடு செய்த பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) கூட்டத்திற்கு, சீனா மற்றும் ரஷ்யா இல்லாமல், அமெரிக்காவிலுள்ள முக்கிய தூதரக அதிகாரிகளைக் கூட்டி இருந்ததன் மூலமாக, ஒபாமா APEC உச்சிமாநாட்டின் ஏற்பாட்டாளரான சீனாவுக்கு எதிராக ஓர் ஆத்திரமூட்டலை நடத்தி இருந்தார்.

ஆசிய பசிபிக்கில் ஒரு தடையற்ற வர்த்தக பகுதியை (FTAAP) ஸ்தாபிக்கும் ஒரு சீன-ஆதரவு திட்டத்தைப் பின்னுக்கு இழுக்க, அமெரிக்கா அதன் தரப்பில் ஆதரவைத் திரட்டும் ஒரு ஆழ்ந்த பிரச்சாரத்தை நடத்திய பின்னர் அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. APECஇன் நீண்டகால ஊக்குவிப்பான FTAAPயை விட TPPக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதன் மீது 12 முக்கிய TPP பங்குதாரர்களிடமிருந்து உடன்பாட்டைப் பெற்றிருந்த ஒபாமா, பின்னர், உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டு கூட்டத்திற்கு அவர் அளித்த உரையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இருந்தார். உலகளாவிய பொருளாதாரத்தில் ஏறக்குறைய 40 சதவீதத்தை ஏற்கும் TPP, "21ஆம் நூற்றாண்டில் வர்த்தகத்திற்கான ஒரு முன்மாதிரி" என்று அறிவித்தார்.

APEC கூட்டத்தில் ஒபாமா நடவடிக்கையின் அடியிலிருந்த இன்றியமையாத மூலோபாயம், அமெரிக்க வர்த்தகத்துறை பிரதிநிதி மைக்கேல் ஃப்ரோமெனால் Foreign Affairs இன் புதிய பதிப்பில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டது. சர்வதேச பொருளாதார உறவுகளைக் குறித்த அமெரிக்க கொள்கை, உலகளாவிய மேலாளுமையைப் பாதுகாப்பதற்கான அதன் நடவடிக்கையால் தீர்மானிக்கப்படுவதாகவும், வர்த்தகம், முதலீடு மற்றும் சந்தைகளை அணுகுவதை உள்ளடக்கிய ஏற்பாடுகள் யுரேஷிய நிலப்பகுதியின் இரண்டு தரப்பிலும் தீவிரப்பட்டுவரும் அமெரிக்காவினது இராணுவ முனைவுடன் பிரிக்கவியலாதபடிக்குப் பிணைந்துள்ளதாகவும் அக்கட்டுரை தெளிவுபடுத்தியது.

அமெரிக்காவிற்கு பொருளாதாரம் மற்றும் இராணுவ பிரச்சினைகள் ஒரு நீண்டு-வளைந்த மூலோபாயத்தின் இரண்டு வெவ்வேறு பக்கங்களாகும், அதில் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை வலியுறுத்துவற்குக் குறைவாக வேறொன்றுமில்லை என்பதை ஃப்ரோமெனின் அக்கட்டுரை தலைப்பே, அதாவது "வர்த்தகத்தின் மூலோபாய தர்க்கம்", எடுத்துக்காட்டுகிறது. வர்த்தகத்தால் தோற்றுவிக்கப்பட்ட "பொருளாதார வலிமை" என்பது வெறுமனே "இராணுவ துணிவுக்கு" நிதியளிக்கும் ஒரு கருவியல்ல, மாறாக அது "நாடுகளின் அதிகாரத்தை அளவிடும் மற்றும் அதிகாரத்தை பெறுவதற்குரிய ஒரு பிரதான கருவியாகும்" என்பதைத் தலைவர்களும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஃப்ரோமென் ஆரம்ப பத்திகளிலேயே குறிப்பிட்டு விடுகிறார்.

"வர்த்தக கொள்கை என்பது தேசிய பாதுகாப்பு கொள்கையாகும்," என்ற 40 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளியல்வாதி தோமஸ் ஸ்ச்செல்லிங்கின் குறிப்பை மேற்கோளிட்டுக் காட்டி, அவர் எழுதுகையில், இன்றைய உலக "சந்தைகள் இராணுவங்களுக்கு எந்தளவுக்கு செல்வாக்கு உள்ளதோ அந்தளவுக்குச் செல்வாக்கைக் கொண்டிருக்க முடியும்," என்று எழுதுகிறார்.

பின்னர் அவர் அமெரிக்க நிகழ்ச்சிநிரலின் மையப்பகுதிக்கு நகர்கிறார். வர்த்தகமானது, முதலீட்டாளர்களையும் உற்பத்தியாளர்களையும், ஒரு பாரிய சந்தையை வழங்கும் அமெரிக்காவை நோக்கி ஈர்க்கிறது என்பதைக் குறிப்பிட்டுக்காட்டி, அவர் தொடர்கிறார்: “உலகளாவிய பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கட்டுப்பாடில்லாமல் அணுகுவதற்கு உதவும் உடன்பாடுகளின் வலையமைப்பின் மையத்தில் அந்நாட்டை நிறுத்துவதன் மூலமாக, ஒபாமா நிர்வாகத்தின் வர்த்தக கொள்கை, முதலீட்டாளர்களை இன்னும் மேலதிகமாக ஈர்க்க முனைகிறது."

இது வரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்குமான பொது உடன்பாட்டால் (GATT) அமைக்கப்பட்ட இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த கட்டமைப்பையும் தகர்ப்பதைக் குறிக்கிறது. 1948இல் நடைமுறைக்கு வந்த அந்த GATT உடன்படிக்கை, 1930களின் சீரழிவுக்குப் பிந்தைய பொருளாதார விரிவாக்கத்தின் அடித்தளங்களில் ஒன்றாக இருந்தது.

GATTஇன் அடித்தளத்தில் இருந்த கோட்பாடு, "மிகவும் சாதகமான தேசிய" கொள்கை என்றழைக்கப்பட்டது, அதன்படி எந்தவொரு நாட்டின் வர்த்தக விட்டுக்கொடுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுக்கு மட்டுமல்லாமல், எல்லா நாடுகளுக்கும் பொருந்துவதாக இருக்கும். அதன் நோக்கம், வர்த்தக அணிகள் உருவாகாமல் தடுப்பதாக இருந்தது. ஏனென்றால் அத்தகைய வர்த்தக அணிகள் இரண்டாம் உலக போர் வெடிப்புக்கு இட்டுச் சென்ற 1930களின் முரண்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்திருந்தன. போருக்குப் பிந்தைய வர்த்தக முறை ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத்தை மையப்படுத்திய ஒரு வலையமைப்பாக இருக்கவில்லை, மாறாக பன்முகச்சார்பியல் (multilateralism) கோட்பாட்டின் மீது அடித்தளத்தைக் கொண்ட ஒரு அமைப்புமுறையாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே பொருளாதார உறவுகளை உள்ளடக்கி இருந்த, TPP மற்றும் அதைச் சார்ந்த T-TIP (கடல்கடந்த அட்லாண்டிக் வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டுறவு) ஆகிய இரண்டும் ஒரு எதிர் முன்னோக்கின் அடித்தளத்தில் உள்ளன. அந்த மிகவும் சாதகமான தேசிய கொள்கையை மறுத்தளித்து, அவை அமெரிக்க முறையீடுகளுக்கு உடன்பட்டுள்ள மற்றும் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே விட்டுக்கொடுப்புகளை வழங்கியதோடு, அவற்றிற்கு மட்டுமே பரந்த விதத்தில் அமெரிக்க சந்தைகளை அணுக அனுமதிக்கிறது.

உலகளாவிய பொருளாதா உறவுகளின் ஒரு வலையமைப்பின் மையத்தில் அமெரிக்காவை நிறுத்தும் ஒபாமாவினது கொள்கை, ஒரு பொருளாதார சாம்ராஜ்ஜியத்திற்கான சூத்திரமாகும். அதில் அனைத்து பாதைகளும் ரோமுக்கு, அதாவது, இந்த விடயத்தில், வோல் ஸ்ட்ரீட்டிற்கு இட்டுச் செல்கிறது.

புதிய நிகழ்ச்சிநிரல், போருக்குப் பிந்தைய கட்டமைப்பைத் தகர்ப்பதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை ஃப்ரோமென் தெளிவுபடுத்துகிறார், இருந்தாலும் கூட பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதில் பழைய முறை அதை வடிவமைத்தவர்களின் நோக்கங்களைப் பூர்த்தி செய்திருந்ததாக ஏற்றுக் கொள்கிறார். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், பூகோளமயமாக்கல், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் எழுச்சிபெற்றுவரும் பொருளாதாரங்களின் உயர்வு ஆகியவை சர்வதேச நிலப்பகுதியை மீள்வடிவு செய்துள்ளன. அவர் எழுதுகிறார்: “ஜனாதிபதி ஒபாமா இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, 'உலகம் மாறி உள்ளதைப் போல, இந்த கட்டமைப்பும் மாற வேண்டும்.'”

இது இக்கேள்வியைக் கோருகிறது: எதற்காக மாற வேண்டும்? முந்தைய வர்த்தக முறையை ஸ்தாபிப்பதில் அமெரிக்கா தான் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது, அமெரிக்க நலன்களுக்கு கடந்தகாலத்தில் சிறப்பாக சேவை செய்த பின்னர், இப்போது அந்த முறை ஏன் பொருத்தமில்லாமல் போனது?

இதற்கு அவரிடம் நேரடியான பதில் இல்லை, ஆனால் ஃப்ரோமென் அடியிலுள்ள காரணங்களை குறிப்பிட்டு விடுகிறார். “வாஷிங்டன் வணிக கொள்கையை வடிவமைப்பதில் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு சிரமங்களை முகங்கொடுக்கிறது" என்று குறிப்பிட்டு அவர் தொடர்கிறார், “அமெரிக்கா இரண்டாம் உலக போரின் முடிவில் இருந்ததைப் போல ஒரு மேலாளுமை கொண்ட இடத்தில் இனியும் அது இருக்கவில்லை என்பதோடு, நிலைப்பாடுகளை சமரசப்படுத்திக் கொண்டு வேலை செய்ய விரும்பும் வணிக கூட்டணிகளை அது கட்டமைக்க வேண்டும்," என்கிறார்.

இது அமெரிக்கா எதிர்கொண்டுவரும் இன்றியமையாத பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறது. யுத்தத்திற்குப் பிந்தைய வணிக கட்டமைப்பு ஏனைய பிரதான சக்திகளின் பொருளாதார விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றதுடன், புதிய பொருளாதார மையங்களை, குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஏறத்தாழ உயர்வைக் கொண்டு வந்தது, அதன் மூலமாக ஒருசமயத்தில்-மேலாளுமை கொண்ட அமெரிக்க பொருளாதாரத்தின் இடத்திற்குக் குழிபறித்தது.

அதிகரித்துவரும் அவசரத்துடன், இந்த சமநிலையற்றதன்மையைச் "சமரசத்தின்" மூலமாக அல்ல, மாறாக பொருளாதாரம் மற்றும் இராணுவத்தின் ஒரு கலவையான அச்சுறுத்தலைக் கொண்டு சரிக்கட்ட, அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது போராடிக் கொண்டிருக்கிறது. APEC உச்சிமாநாட்டில் இந்தளவுக்கு பகிரங்கமாக காட்சிக்கு வந்திருக்கும் அமெரிக்க பொருளாதார ஆக்ரோஷத்தன்மை, சீனாவிற்கு எதிரான யுத்த தயாரிப்புகள் நடந்து வருவதற்கு இடையே, மத்தியக்கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் மேலுயர்ந்த இராணுவவாதத்துடன் சேர்ந்து கொண்டுள்ளது என்பது எந்தவிதத்திலும் தற்செயலாக ஏற்பட்ட பொருத்தமல்ல.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஏகாதிபத்தியம் எனும் அவரது படைப்பில் லெனின், தற்போதைய நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ள அடிப்படை தர்க்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர் விளக்கினார், முதலாளித்துவ "சமாதான" காலக்கட்டங்கள் தற்காலிகமாக மட்டுமே இருக்க முடியும், ஏனென்றால் பொருளாதார நிகழ்வுபோக்குகள் அவையே சக்திகளின் சமநிலையை மாற்றும், அதன் மீது அத்தகைய காலக்கட்டங்கள் ஆரம்பத்தில் அடித்தளமிட்டவையாக உள்ளன. முதலாளித்துவத்தின் கீழ் சமாதானம் என்பது, பிரதான சக்திகள் அவற்றின் ஒப்பீட்டளவிலான பொருளாதார நிலைப்பாடுகளின் மாற்றத்திற்கு விடையிறுத்து, பங்கு போடுவதற்கான புதிய சண்டையிலும் மற்றும் உலகை மீள்பகிர்வு செய்யும் சண்டையிலும் ஈடுபடும் ஒரு புதிய யுத்தக் காலக்கட்டத்திற்கான தயாரிப்பு காலம் மட்டுமே ஆகும். அந்த போராட்டம் தான் முற்றிலுமாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டிருக்கிறது.

APEC உச்சிமாநாட்டில் அமெரிக்காவின் பட்டவர்த்தனமான ஆத்திரமூட்டல்களும் மற்றும் அவற்றிற்கு அடியிலிருக்கும் அடிப்படை மூலோபாயம் வெளிப்படுவதும், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் யுத்தத்திற்கெதிரான போராட்டமென்பது, சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் அவசர பணியாகும் என்பதற்கு மற்றொரு தெளிவான எச்சரிக்கையாக உள்ளன.