World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Dozens of “near miss” incidents bring NATO and Russia to brink of war

"மிக அருகில் தவறிய" டஜன்கணக்கான சம்பவங்கள், நேட்டோ மற்றும் ரஷ்யாவை யுத்தத்தின் விளிம்புக்குக் கொண்டு வருகின்றன

By Alex Lantier
11 November 2014

Back to screen version

இலண்டனை மையமாக கொண்ட ஐரோப்பிய தலைமை வலையமைப்பு சிந்தனைக்கூடத்தால் (ELN) நேற்று பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கையின்படி, அங்கே “மிக அருகில் தவறிய" (near misses) குறைந்தபட்சம் 40 சம்பவங்கள் இருந்துள்ளன. அத்தகைய சம்பவங்களில், கியேவில் கடந்த பெப்ரவரியில் நேட்டோ ஆதரவுடன் அதிதீவிர வலதின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டிருந்த நேட்டோ படைகளும் மற்றும் ரஷ்ய இராணுவமும் இராணுவ மோதலுக்கு மிக நெருக்கமாக வந்திருந்தன.

மார்ச் 2014க்குப் பின்னரில் இருந்து நேட்டோ-ரஷ்ய உறவுகள், "ஓர் அணுஆயுதமேந்திய அரசுக்கும் ஓர் அணுஆயுதமேந்திய கூட்டணிக்கும் இடையிலான ஒரு கொந்தளிப்பான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாடானது, அவநம்பிக்கை, அச்சம், மற்றும் தலைமைக்கு குறுகியகாலத்தில் முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஆகியவற்றால் குணாம்சப்பட்ட ஒரு நிலைமையில்" இருப்பதாக ELN எழுதுகிறது. அவ்வறிக்கைத் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இந்த அறிக்கையில் விவரிக்கப்படுகிற சூழ்நிலைகளின் யதார்த்தம் நீடித்தால், அது பெரிதும் அபாயகரமானதாகும். மிக மோசமாக, அது பேரழிவுகளை உண்டாக்கக்கூடும்."

பல ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ELNஇல் உள்ளடங்கி உள்ளனர். மூனிச் பாதுகாப்பு மாநாட்டு தலைவர் வொல்ஃப்காங் இஷிங்கர், முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் ஜாவியர் சோலானா, முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர்கள் டெஸ் பிரௌன் மற்றும் மால்கம் ரிஃப்கிண்ட் (இங்கிலாந்து), வோல்கர் ரூய்ஹி (ஜேர்மனி), மற்றும் அலன் ரிச்சார்ட் (பிரான்சு), மற்றும் ஈராக்கிற்கான முன்னாள் ஐநா சிறப்பு கமிஷனர் ரோல்ஃப் ஏகியஸ் ஆகியோரும் இதன் நிர்வாகக்குழுவில் உள்ளடங்குவர். அதன் அறிக்கையில் அது, ரஷ்யாவை வம்புக்கு வரும் நாடாக பொய்யாக சித்தரிக்கும் சம்பவங்களை மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கிறது.

இருந்தாலும் கூட, உக்ரேனில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ ஆட்சிமாற்ற நடவடிக்கைக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் நோட்டோவின் பொறுப்பற்ற தீவிரப்பாட்டால், மனிதயினத்தின் உயிர்பிழைப்புக்கு ஆழ்ந்த அபாயங்கள் முன்னிறுத்தப்பட்டிருப்பதை அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட அச்சம்பவங்களே மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

ரஷ்ய நகரங்களில் இருந்து வெறுமனே ஒரு கால்மணிநேர விமான பயண தூரத்தில் பால்டிக் குடியரசுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியில் நேட்டோ போர்விமானங்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருப்பதுடன் சேர்ந்து, உலகெங்கிலும் இராணுவங்கள் ஒரு மயிரிழையில் தூண்டிவிடப்படும் நிலையில் உள்ளன. ரஷ்ய படைகளுக்கும் நேட்டோ துருப்புகளுக்கும் இடையே மிகச்சிறிய பிழையான கருத்து பரிமாற்றங்களும் கூட, கிழக்கு ஐரோப்பாவில் வெள்ளமென நிரம்பியிருக்கும்—அல்லது "மிக அருகில் தவறிய" சம்பவங்கள் நடந்திருந்த வடக்கு அமெரிக்க மற்றும் பசிபிக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள—போர் விமானங்கள் மற்றும் யுத்தக்கப்பல்கள், மிகத் துரிதமாக ஓர் உலகளாவிய அணுஆயுத மோதலாக தீவிரமடையக்கூடும்.

செப்டம்பர் 5இல் நடந்த "உயர் அபாய" சம்பவம் என்றழைக்கப்பட்ட ஒன்று, ரஷ்யாவுக்கு எதிராக எஸ்தோனியாவுக்கு வாஷிங்டனின் "உள்ளார்ந்த ஆதரவை" மறுஉத்தரவாதப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அங்கே விஜயம் செய்து விட்டு திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடந்திருந்தது. ELN எழுதுகிறது, “செப்டம்பர் 5, 2014இல், ஓர் எஸ்தோனிய பாதுகாப்புச் சேவை உளவாளியான எஸ்தோன் கோஹ்வர், எஸ்தோனிய எல்லையோர சாவடியிலிருந்து ரஷ்ய முகவர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவர் மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, உளவுபார்த்தமைக்காக அவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டது." அது எழுதியது, “அந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், அங்கே ஓர் அபாயகரமான மற்றும் கட்டுப்பாடில்லாத தீவிரப்பாடு ஏற்பட்டிருக்கும்."

ELN குறிப்பிடுகின்ற பெரும்பாலான சம்பவங்களைப் போலவே, இந்த சம்பவமும் பிரதான போர் ஆபத்து நேட்டோவின் ஆக்ரோஷ கொள்கைகளில் இருந்து வருகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. எஸ்தோனியா, ரஷ்ய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பேர்கிற்கு அருகில் 1.3 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சிறிய, அணுஆயுதமில்லாத பால்டிக் பிரதேச நாடாகும். நேட்டோ மற்றும் அமெரிக்காவிடமிருந்து அதற்கு நேரடியாக கிடைக்கும் இராணுவ ஆதரவு உட்பட, ரஷ்யாவுக்கு எதிரான பலமான உத்தரவாதங்களும் மற்றும் ஊக்கங்களும் கிடைக்காமல் இருந்திருந்தால், அது அந்த விவகாரத்தைத் தீர்த்துக் கொள்ள தூதரகரீதியிலான வழிகளை பயன்படுத்தி இருக்குமேயன்றி, ரஷ்யாவுக்கு எதிராக இராணுவ தீவிரப்பாட்டு அபாயத்தை எடுத்திருக்காது.

மற்றொரு "உயர் அபாய" சம்பவம், ஸ்வீடனின் போர்நாடும் நடவடிக்கையாக இருந்தது, அது அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 27க்கு இடையே அதன் பிராந்திய கடல் எல்லைக்குள் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் இருப்பதாக நம்பியதோடு அதற்கான தேடுதல் வேட்டையில் இருந்தது, ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. ELN எழுதுகிறது, “அவசியமானால், அந்த வாகனத்தை மேற்பரப்புக்குக் கொண்டு வர 'ஆயுதமேந்திய படையைப்' பிரயோகிக்கவும் தயாராக இருப்பதாக தலைமை தளபதி ஜெனரல் ஸ்வெர்கர் கோரன்சன் அடிகோடிட்டு காட்டினார்." அது எழுதியது, “ஸ்வீடன் அதிகாரிகளால் படை பயன்படுத்தப்பட்டு அந்த நீர்மூழ்கிக் கப்பல் கண்டறியப்பட்டிருந்தால், அது உயிரிழப்புகளையும் மற்றும் மேற்படி ஒரு ரஷ்ய இராணுவ விடையிறுப்பையும் விளைவித்திருக்கும்."

பொதுவிமான அதிகாரிகளுக்கு அதன் இருப்பிடத்தை அறிவிக்கும் தகவல் சமிக்ஞைகளை அனுப்பாத ஒரு ரஷ்ய உளவுபார்ப்பு விமானத்திற்கும் மற்றும் ஒரு SAS பயணிகள் விமானத்திற்கும், மார்ச் 3 அன்று மிகநெருக்கமாக ஒரு மோதல் நடக்க இருந்தது என்பதே கடைசி "உயர் அபாயம்" சம்பவமாகும். ELNஇன் கருத்துப்படி, பயணிகளின் உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய ஒரு வெடிப்பானது, "பலமான முன்கூட்டிய தடைகளை அவசியப்படுத்தும் ஒரு சம்பவமாக, பதிவு-செய்யப்படாத அல்லது கண்மூடித்தனமான மேற்படி வான்வெளி நடவடிக்கை, ஐரோப்பா மீதான உயிர்பறிக்கும் சாத்தியக்கூறு கொண்ட அச்சுறுத்தலாக" அதை வகைப்படுத்த நேட்டோவை இட்டுச் சென்றிருக்கும்.

அதாவது, ரஷ்யாவுடனான யுத்த ஆபத்தை மிக வேகமாக கொண்டு வரும் வகையில், ஐரோப்பிய வான்வெளி பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் அனைத்து பொருட்களையும் கண்டறியவும் மற்றும் அழிக்கவும் நேட்டோ கடுமையான கொள்கையை ஏற்கும் என்பதாகும்.

அவ்வறிக்கையில் உயர்த்தப்பட்ட மோதல்களும் மற்றும் அணுஆயுத யுத்த அபாயமும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் பேரழிவுகரமான விளைவுகளை அடிக்கோடிடுகின்றன. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்டதும் மற்றும் முதலாளித்துவ மீட்சியையும் தொடர்ந்து, பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், ரஷ்யாவைச் சுற்றி வளைக்கவும் மற்றும் துண்டாடவும் ஏகாதிபத்திய சக்திகள் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள் இனரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், ஒரு புதிய உலக யுத்தத்திற்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தலைமையிலான நேட்டோ சக்திகளின் ஆக்ரோஷமான கொள்கையே தொழிலாள வர்க்கத்திற்கு மத்திய அபாயமாகும். கியேவில் உக்ரேனிய பாசிசவாத Right Sector குழுவின் படைகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு பதவிக்கவிழ்ப்பை அவை ஆதரித்தன. பின்னர் ரஷ்யாவைக் கண்டிக்கவும் மற்றும் போலாந்து, பால்டிக் குடியரசுகள், கருங்கடல் பிராந்தியம் மற்றும் உக்ரேனுக்கே கூட இராணுவப் படைகளை அனுப்பவும், அவை கிழக்கு உக்ரேனில் உள்ள இனரீதியிலான ரஷ்ய பகுதிகள் மற்றும் அதிவலது கியேவ் ஆட்சிக்கும் இடையே வெடித்த உள்நாட்டு போரின் விளைவுகளைக் கைப்பற்றிக் கொண்டன.

அமெரிக்க தலைமையிலான இராணுவ கூட்டணி, சுதந்திரத்தை ஆதரித்து தலையீடு செய்து வருகிறது என்ற பொய் வாதங்களோடு இந்நடவடிக்கை, நேட்டோ நாடுகளில் நியாயப்படுத்தப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் இருந்து விளையும் அணுஆயுத போர் அபாயம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உழைக்கும் மக்களிடமிருந்து மூடிமறைக்கப்பட்டது.

உக்ரேனிய நெருக்கடியில் நேட்டோவினது தீவிரத்தன்மையின் மத்திய பாத்திரத்தை அங்கீகரிப்பதென்பது, கிரெம்ளின் பிரயோகிக்கக்கூடிய பொறுப்பற்ற கொள்கைகளுக்கான ஆதரவு என்றாகாது, அது, மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் ஒரு புதிய சமரச ஏற்பாட்டை அமைக்க முயல்கிறது. சோவியத் ஒன்றியத்தின் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்ததில் இருந்து வெளிப்பட்ட மிகச் செல்வந்த தன்னலக்குழுக்களின் ஒரு அடுக்கை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஆட்சியால், யுத்தத்தை எதிர்க்குமாறு உலகளாவிய தொழிலாள வர்க்கத்திடையே அழைப்புவிட முடியாது.

அதன் ரஷ்ய தேசியவாத முறையீடுகள் பிற்போக்குத்தனமானவை. ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களுக்கு இடையே மற்றும் மிகப் பொதுவாக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் பிளவுகளைத் தூண்டிவிட அவர்களின் முயற்சிகளில் அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கு உதவுகின்றனர்.

மிக முக்கியமாக, ELN அது விவரிக்கும் சம்பவங்களில் அணுஆயுதங்களைக் குறித்து குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்கிறது. ஆனால், நேட்டோவும் சரி மற்றும் ரஷ்யாவும் சரி இரண்டுமே அவற்றின் அணுஆயுத படைகளைத் தயாரிப்பு செய்து வருகின்றன.

வாஷிங்டன் "முதலில் பயன்படுத்த மாட்டோம்" என்று அழைக்கப்படும் ஒரு வாக்குறுதியை, அதாவது ஒரு மோதலின் போது அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் முதல் சக்தியாக அது இருக்காது என்பதற்கு ஓர் உத்தரவாதத்தை, இதுவரையில் வெளியிட்டிருக்கவில்லை. ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகளோ, நேட்டோ நாடுகளுக்கு எதிராக அவர்கள் எந்த சூழ்நிலையில் அணுஆயுத தாக்குதலைத் தொடங்க வேண்டுமென்பதைத் தெளிவாக வரையறுக்குமாறு கிரெம்ளினுக்கு அழுத்தம் அளித்து வருகிறார்கள்.

மே மாதம், ரஷ்ய மற்றும் அமெரிக்க மூலோபாய அணுஆயுத படைகள் நேருக்குநேர் சண்டையிடும் ஒத்திகைகளை நடத்தி இருந்தன. கிரெம்ளின் செய்தி ஊடகம் Russia Today செய்தியின்படி, ரஷ்ய பயிற்சிகள்—சான்றாக, ஓர் எதிரியால் தரைப்படை துருப்புகளை அழிக்க அல்லது பாரிய ஏவுகணை, வான்வழி, அல்லது அணுஆயுத தாக்குதல்களின் போது—"எவ்வாறு ஏவுகணை பிரிவு சிப்பாய்கள், ஆயுததளவாடங்கள், போர்விமானங்கள், போர்விமான-எதிர்ப்பு முறைகளைப் பயன்படுத்த வேண்டுமென எடுத்துக்காட்டியது. மேலும், அணுஆயுத ஏவுகணைகளுடன் தொடங்கப்பட்ட-தாக்குதலுக்கு ஓர் எதிர்தாக்குதலை (launch-through-attack strike) எவ்வாறு நடத்துவது என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது"—அதாவது ரஷ்யா மீது நேட்டோ ஓர் அணுஆயுத தாக்குதல் நடந்தால், பதிலடியாக ரஷ்ய அணுஆயுத தாக்குதலை நடத்துவதை இது குறிக்கிறது.

செப்டம்பரில், ரஷ்யா மேலதிகமாக அணுஆயுத ஒத்திகைகளின் ஒரு சுற்றை நடத்திய போது, ரஷ்ய தளபதி யூரி யாகுபோவ் இன்டர்பேக்ஸிற்குக் கூறினார்: “எனது பார்வையில், நமது பிரதான எதிரி அமெரிக்காவும் மற்றும் வடக்கு அட்லாண்டிக் அணியும் தான் ... ரஷ்ய மூலோபாய ராக்கெட் படைகளுடன் அது ஒரு முன்கூட்டிய தாக்குதலை நடத்தக்கூடிய நிலைமைகளைப் பேசித் தீர்ப்பது அவசியமாகும்."

ELN பின்வரும் சம்பவத்தையும் குறிப்பிடவில்லை: “செப்டம்பர் 2014இன் தொடக்கத்தில், ரஷ்ய மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் கனடாவுக்கு அருகில் லாப்ரடார் கடலில் அமெரிக்கா மீது கப்பற்படை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த பயிற்சி எடுத்தன. ரஷ்ய போர்விமானம் கனடாவின் ADIZக்கு வெளியே நின்றிருந்தது, இருந்தாலும் கூட அந்த சமயத்தில் நேட்டோ உச்சிமாநாடு நடந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் அது ஒரு ஆத்திரமூட்டும் நகர்வாக இருந்தது. லாப்ரடார் கடலிலிருந்து ஏவப்படும் கப்பற்படை ஏவுகணைகளின் இலக்கில் ஒட்டாவா, நியூ யோர்க், வாஷிங்டன், சிகாகோ, மற்றும் நோர்ஃபோக் கடற்படை தளம் ஆகியவை வரக்கூடும்." ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களால் இந்த நகரங்களின் மீது வீசக்கூடிய கப்பற்படை ஏவுகணைகள், அணுஆயுத தளவாடங்களை ஏந்தக்கூடியவையாகும்.

ELN அறிக்கைக்கு முன்னதாக இந்த சம்பவம், இதழாளர் பில் கெர்ட்ஸினது Washington Free Beacon என்ற ஒரு கட்டுரையில் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. வேறு விதத்தில் கூறுவதானால், அமெரிக்காவின் உக்ரேனிய கொள்கையால் முன்னிறுத்தப்பட்ட அபாயங்களை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டும் இச்சம்பவம், முற்றிலுமாக அமெரிக்க ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது.