World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Neo-fascist National Front calls for rearming of French imperialism

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மீண்டும் ஆயுதமேந்துவதற்கு நவ-பாசிச தேசிய முன்னணி அழைப்புவிடுக்கிறது

By Francis Dubois
13 November 2014

Back to screen version

முதலாம் உலக போரில் ஜேர்மனியை ஏகாதிபத்திய நேச படைகள் வெற்றி கொண்டதன் நினைவு தினமான நவம்பர் 11இல், செவ்வாயன்று, தேசிய முன்னணியின் (FN) தலைவர் மரீன் லு பென், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மீண்டும் ஆயுதமேந்துவதற்கு அழைப்புவிடுத்து ஒரு யுத்தவெறியூட்டும் உரையை நிகழ்த்தினார்.

லு பென்னின் கருத்துக்கள் செய்தியிதழ்களிலும் மற்றும் அச்சு பத்திரிகைகளிலும், அத்துடன் வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டதுடன், அதற்கு ஆதரவான கருத்துக்களும் கூறப்பட்டன. அவை, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தால் நடத்தப்பட்டு வருகின்ற இராணுவவாத-சார்பு பிரச்சாரத்திற்கு ஓர் உத்தியோகபூர்வ செய்தி தொடர்பாளரைப் போல அவரைக் கையாண்டன.

அவர் குறிப்பாக, பாதுகாப்புத்துறையின் வரவு-செலவு திட்டகணக்கில் வெட்டுக்களை உடனடியாக நிறுத்துமாறும், இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை படிப்படியாக உயர்த்துவதை நோக்கி ஒரு மாற்றம் எடுக்குமாறும், மற்றும் மீண்டும் ஆயுதமேந்துவதை நோக்கி வேகமாக திரும்புமாறும் அழைப்புவிடுத்தார்.

பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இரண்டு சதவீதத்தைக் கொண்ட ஒரு குறைந்தபட்ச இராணுவ வரவுசெலவு திட்டக்கணக்கு, மற்றும் பிரெஞ்சு பாதுகாப்புத்துறை செலவுகளில் காலவரையின்றி ஆண்டுக்கு 2 பில்லியன் யூரோ உயர்வு ஆகியவற்றை கோரினார். “மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 2 சதவீதத்திற்குக் கீழ் குறைவதைத் தடுக்கும் ஓர் அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு, பாதுகாப்பு வரவுசெலவு திட்டக்கணக்கைக் பாதுகாப்பதற்கும்" அவர் அழைப்புவிடுத்தார். அந்நாட்டின் 2014 பாதுகாப்புத்துறை வரவுசெலவு திட்டக்கணக்கு, 31.4 பில்லியன் யூரோவுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.5 சதவீதமாக உள்ளது. லு பென் இரண்டாவது பிரெஞ்சு போர்விமானத்தைக் கட்டமைக்கவும் முறையிட்டார்.

இராணுவத்தின் படை ஆயத்தநிலை, படுமோசமாக இருப்பதாக FN தலைவர் வாதிட்டார், இது பாதுகாப்பு செலவுகளில் பிரதான அதிகரிப்பை ஏற்கச் செய்வதில் மக்களை மிரட்ட முயலும் விதத்தில், தற்போது ஜேர்மனியில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஓர் உத்தியாகும். பிரெஞ்சு இராணுவம் “சீருடை கலைந்து ஆடிக்கொண்டிருப்பது", "அது நமது சொந்த நலன்களை விட ஏனையவர்களின் நலனுக்கு சேவை செய்யும் ஒரு பின்புல தலையீட்டு படையாக அதன் நிலையைக் குறைத்துவிட" அச்சுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

அனைவருக்கும் இராணுவ சேவையை நோக்கித் திரும்புமாறும் அவர் அழைப்புவிடுத்தார். ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அவரே நவம்பர் 6அன்று பதவியின் இடைக்காலத்தில் தொலைக்காட்சியில் தோன்றிய போது, அனைவருக்குமான இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைத்திருந்தார்.

தேசிய முன்னணி வெளிநாட்டு எதிரிகளுடனான யுத்தத்திற்கு மட்டும் தயாரிப்பை செய்து வரவில்லை, மாறாக உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உள்நாட்டு யுத்தத்திற்கும் தயாரிப்பை செய்து வருகிறது. லு பென் ஒரு "தேசிய பாதுகாப்புப் படையை" உருவாக்க அழைப்புவிடுத்தார், அத்தகையவொரு படை வெளியில் தலையீடு செய்வதற்கல்ல, மாறாக பிரான்சுக்கு உள்ளேயே ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தப்படும். “ஒரு புதுப்பிக்கப்பட்ட அனைவருக்கும் இராணுவ சேவையின் தறுவாயில், இராணுவத்தாலும் மற்றும் ஆட்களை நியமிப்பவர்களாலும் துரிதமாக தேர்வு செய்யக்கூடிய [மற்றும்] நகர்த்தக்கூடிய விதத்தில், 50,000 நபர்களை" அது கொண்டிருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அளித்த ஓர் உரையில், “24 மணி நேரத்திற்கும் குறைவாக, ஒரு குறுகியகால அறிவிப்பில் ஒன்றுதிரட்ட கூடிய, தெரிவு செய்யப்பட்ட 50,000 ஆண்கள் மற்றும் பெண்களின் ஒரு தேசிய படையை உருவாக்குவது உட்பட ... நமது நாட்டு எல்லை பாதுகாப்புக்கு முன்னுரிமை" அளிக்குமாறு லு பென் பரிந்துரைத்தார். பொலிஸ் படைகளுக்கு ஒத்துழைக்க செய்வதும் மற்றும் குறிப்பாக அதிமுக்கிய மூலோபாய நலனின் முனைகளைப் பாதுகாப்பதன் மூலமாக, எல்லைப் பாதுகாப்பில் பங்கெடுக்க செய்வதுமே அதன் உள்நோக்கமாகும்.

லு பென்னின் தலையீட்டை உந்திவரும் அரசியல் அபிலாஷைகள், மிகத் தெளிவாக உள்ளன. பிரான்சுவா ஹோலாண்டின் ஆழ்ந்த செல்வாக்கிழந்த சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அதிகளவில் கையாள முடியாத ஆட்சி நெருக்கடிக்குள் மூழ்கி வருகின்ற நிலையில், இப்பெண்மணி தன்னைத்தானே அரசியல் மாற்றீடாக காட்டி வருகிறார், அதேவேளையில் ஆளும் வர்க்கம் ஆதரிக்கின்ற மறு ஆயுதமேந்தும் கொள்கையை முன்னெடுத்து வருவதோடு, இராணுவத்திற்கு ஓர் அரசியல் முறையீட்டையும் செய்து வருகிறார்.

கடந்த மே மாதம், ஹோலாண்ட் அரசாங்கத்தையும் மற்றும் இராணுவ வரவுசெலவு திட்டக்கணக்கில் பரிந்துரைக்கப்பட்ட வெட்டுக்களையும் எதிர்த்து, பல உயர்மட்ட அதிகாரிகள் பகிரங்கமாக முன்னொருபோதும் இல்லாத நடவடிக்கையை எடுத்தனர். ஐந்து-நட்சத்திரம் கொண்ட நான்கு தளபதிகள், மூன்று இராணுவ சிப்பாய்களின் தலைவர்கள் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே ஆகியோர் அடுத்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு வரவுசெலவு திட்டக்கணக்கில் திட்டமிடப்பட்டு இருந்த 6 பில்லியன் யூரோ வெட்டை எதிர்த்து, இராஜினாமா செய்ய விருப்பதாக அச்சுறுத்தினர். (பார்க்கவும்: French president backs generals revolt against cuts to military budget)

இந்த தளபதிகள், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஓர் ஆழ்ந்த நெருக்கடியில் தலையீடு செய்திருந்தனர். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவர் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வருகின்ற அதேவேளையில், ஹோலாண்ட், ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து மாலி வழியாக மத்திய ஆபிரிக்க குடியரசு வரையில், பல தொடர்ச்சியான ஏகாதிபத்திய தலையீடுகளை நடத்தி வருகிறார். இருப்பினும் கூட, பிரான்ஸ் இராணுவ பலத்தைப் பொறுத்த மட்டில் ஜேர்மனிக்குப் பின்னால் தான் நிற்கிறது.

அவ்விரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஜேர்மனியின் இராணுவ வரவுசெலவு திட்டக்கணக்கு பிரான்சினதை விட சற்று மேலதிகமாக உள்ளது. நான்காண்டுகளில், அது [ஜேர்மன்] 32.4 பில்லியன் யூரோவாக 7 சதவீதம் உயர்ந்துள்ளது, அதேவேளையில் பிரான்ஸ் அதேகாலகட்டத்தில் 31.4 பில்லியன் யூரோவாக 2.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. எவ்வாறிருந்த போதினும், ஆண்டு வரவுசெலவு திட்டக்கணக்கில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளவாடங்களுக்கான செலவுகளைப் பொறுத்த மட்டில், ஜேர்மனியின் 7.9 பில்லியன் யூரோவுடன் ஒப்பிடுகையில், 12.9 பில்லியன் யூரோவுடன் ஜேர்மனியை விட பிரான்ஸ் தான் முன்னால் உள்ளது.

இது, பிரான்சிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையை உள்ளடக்குகிறது. பெருமந்தநிலைக்குப் பிந்தைய மிகப்பெரிய முதலாளித்துவ நெருக்கடிக்கு இடையே, 20ஆம் நூற்றாண்டு யுத்தங்களில் பத்து மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பறித்த பழைய ஏகாதிபத்திய போட்டிகள், மீண்டும் திரும்பி வந்துள்ளன.

தற்போது ஜேர்மனியின் மீள்-ஆயுதமேந்தும் நடவடிக்கையால் தலைமை எடுக்கப்பட்டுள்ள ஐரோப்பாவின் மீள்-இராணுவமயமாக்கலில், பிரெஞ்சு முதலாளித்துவம் முழுமையாக பங்கெடுக்க தீர்மானகரமாக உள்ளது. அன்னிய நாடுகள் மீதான ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் மற்றும் சொந்த நாட்டில் உள்நாட்டு யுத்தத்திற்குமான இத்தகைய தயாரிப்புகளுக்கு அவசியப்படும் முன்னொருபோதும் இல்லாதளவிலான மிகப்பெரிய செலவுகளோ, ஊதியங்கள் மற்றும் வேலையிட நிலைமைகள் மீதும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதும் கூட இன்னும் மேலதிகமான ஆக்ரோஷமான தாக்குதல்களால் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறிஞ்சப்படும்.

நவ-பாசிசவாதிகள் இத்தகைய பரிந்துரைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவைப் பெற்றுள்ள, ஆளும் வர்க்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை தொழிலாளர்கள் மீது அரசியல்ரீதியாக திணிக்க தேசிய முன்னணியே சரியான இடத்தில் உள்ளது என்பதில் ஆளும் வர்க்கம் பெரிதும் சமாதானப்பட்டுள்ளது. அனைவருக்கும் இராணுவ சேவையளிக்க திரும்புவதை அறிவுறுத்துவதற்கு அப்பாற்பட்டு, பல PS அதிகாரிகள் ஏற்கனவே பாரீஸ் மற்றும் மார்சைய்யின் வன்முறை பகுதிகளில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

லு பென்னின் பரிந்துரைகள், மக்கள் இயக்கத்திற்கான யூனியனில் (UMP) இருந்து PS மற்றும் போலி-இடது புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி வரையில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் எந்தவொரு கட்சிகளாலும் நிறைவேற்றப்படும் என்றபோதினும், நேட்டோவில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவதற்கு அழைப்பு விடுப்பதன் மூலமாகவும், அவ்விதத்தில் வாஷிங்டனிலிருந்து தன்னைத்தானே தூர விலகிக்கொண்டும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான அவரது விமர்சனத்தின் வடிவத்தில் ஜேர்மனிக்கு அவரது எதிர்ப்பு மூலமாகவும், லு பென் தன்னைத்தானே அவற்றிடமிருந்து சற்று வேறுபடுத்திக் கொள்கிறார்.

"பராக் ஒபாமா நமக்கு என்ன செய்ய சொல்லுவார் அல்லது என்ன செய்ய வேண்டாமென சொல்லுவார் என்பதைப் பார்க்க நாம் விறைப்போடு காத்துக் கொண்டிருக்கிறோம், இதை நாம் லிபியாவில் பார்த்திருக்கிறோம், இதை நாம் சிரியாவில் பார்த்திருக்கிறோம்." இது லு பென் சாடியது. “சுதந்திரமாக இருக்கும், மற்றும் தூதரகரீதியில் சுதந்திரமாக தொடர்பு கொண்ட, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டில் இருந்தும் சுதந்திரமாக இருக்கும்" ஓர் இராணுவ கொள்கைக்கு அவர் அழைப்புவிடுத்தார்.

தேசிய முன்னணி ஏகாதிபத்தியத்தின் ஒரு மூர்க்கமான ஆதரவாளராகும். அது பிரான்சின் சொந்த ஏகாதிபத்திய தலையீடுகளில் வாஷிங்டன் அல்லது நேட்டோ தலையிட்டன என்ற காரணத்திற்காக மட்டுமே, அவற்றின் தலைமையிலான யுத்தங்களில் பிரான்சின் பங்கெடுப்பை விமர்சிக்கிறார். இவ்விதத்தில், லு பென் அச்சத்துடன் குறிப்பிடுவது என்னவென்றால் விரைவிலேயே, “நம்மால் மாலியில் கூட ஒரு நடவடிக்கையை நடத்த முடியாமல் போய்விடும்," என்கிறார்.

லு பென் மிகத் தெளிவாக ஆயுதப்படைகளின் ஒரு பிரதிநிதியைப் போல தன்னைத்தானே முன்னுக்குக் கொண்டு வருகிறார். செய்தியிதழ் Marianneஇன் செய்தியின்படி, டிசம்பர் 2011இல் இராணுவ கொள்கைகள் மீது அவர் அவரது முந்தைய பரிந்துரைகளை அளித்த போது, “முதல் [பிரெஞ்சு] நீர்மூழ்கிக்கப்பல் Redoutableஇன் முன்னாள் தளபதி ரியர் அட்மிரல் ஜோன்-ஈவ் வாக்கே இன் ஆய்வுகளின் மீது அவர் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டிருந்தார் என்பதோடு, பிரெஞ்சு இராணுவத்தின் ஆதரவுக்கான அமைப்பினது (ASAF) தலைவர் ஜெனரல் ஹென்றி பினார்-லுகிரியின் பிரசன்னத்தைப் புகழ்ந்துரைத்தார்."

அதேநேரத்தில், அவர் கூறுகையில், “அணுசக்தி தடுப்புமுறையின் நமது கருதுகோளை நாம் வலியுறுத்துவோம், மற்றும் மீள்உறுதிப்படுத்துவோம், அதுவே நமது பாதுகாப்பு மூலோபாயத்தின் அடித்தளத்தில் தங்கியிருக்கும்," என்றார்.