World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Central bank decisions deepen global capitalist disorder

மத்திய வங்கி முடிவுகள் உலகளாவிய முதலாளித்துவ சீர்குலைவை ஆழப்படுத்துகின்றன

Nick Beams
8 November 2014

Back to screen version

பூகோளமயப்பட்ட நிதியியல் அமைப்புமுறை அதிகளவில் ஒரு பைத்தியக்கார கூடாரத்தைத் ஒத்திருக்கிறது, அதில் நாணய கொள்கைக்குப் பொறுப்பேற்றிருக்கும் பிரதான அமைப்புகள் ஒவ்வொன்றினது நடவடிக்கைகளும் இன்னும் மேலதிகமாக குழம்பிய வடிவங்களை ஏற்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானின் மத்திய வங்கிகள், அவற்றின் முதலாளித்துவ எதிர்போட்டியாளர்களை மற்றும் உலக பொருளாதாரத்தையே ஒட்டுமொத்தமாக விலையாக கொடுத்து, அவற்றின் சொந்த நலன்களுக்காக பின்பற்றப்படும் கொள்கைகளின் விளைவுகளைக் குறித்து அக்கறையின்றி, பொறுப்பற்ற விதத்தில் அவற்றை முன்னெடுத்து வருகின்றன.

அக்டோபர் 31இல், பேங்க் ஆஃப் ஜப்பானின் ஆளுநர் ஹருஹிகோ குரோடா, அந்நாட்டின் மத்திய வங்கி அரசு பத்திரங்களை விலைக்கு வாங்குவதை ஆண்டுக்கு 750 பில்லியன் டாலராக அதிகரிப்பதாக அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.

அந்நடவடிக்கையின் வீச்சு பல தொடர்ச்சியான புள்ளிவிபரங்களால் எடுத்துக்காட்டப்படுகிறது. பேங்க் ஆஃப் ஜப்பான் அந்நாட்டின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15 சதவீதத்திற்கு சமமான விகிதத்தில் பத்திரங்களை வாங்க உள்ளது, இதன்மூலம் அதன் மொத்த கையிருப்பு GDPஇல் 80 சதவீதமாக உயருகிறது என்பதுடன், இது அமெரிக்க பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி அல்லது பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகியவற்றினதை விட மிக உயர்ந்த விகிதமாகும்.

இந்த புதிய பணத்தைப்புழக்கத்தில் விடும் சுற்று என்ன அர்த்தப்படுத்துகிறதென்றால், ஜப்பானிய மத்திய வங்கி அதன் கடன்களை அடைக்க வெளியிடும் அரசு பத்திரங்களை விட, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக பத்திரங்களை விலைக்கு வாங்க உள்ளது. இதுபோன்ற எதையும், முந்தைய பொருளாதார வரலாற்றில் பார்க்க முடியாது.

பேங்க் ஆஃப் ஜப்பானின் முடிவு அதன் நிர்வாக குழுவிற்குள் இருக்கும் ஆழ்ந்த வெடிப்புகளை வெளிப்படுத்தியது, அது 5க்கு 4 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அந்நடவடிக்கைக்கு உடன்பட்டது. இதுவே நிதியியல் வட்டாரங்களில் பெருகிவரும் குழப்பங்களுக்கு ஒரு அறிகுறியாகும்.

இதே நிகழ்வுபோக்கு வியாழனன்று, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தலைவர் மரியோ திராஹி ஓர் அறிவிப்பை வெளியிட்ட போதும் மெய்பிக்கப்பட்டது. அவ்வங்கியின் நிர்வாக கவுன்சில் தற்போது வங்கியின் சொத்து அடித்தளத்தைக் குறைந்தபட்சம் 1 ட்ரில்லியன் யூரோ அளவிற்கு விரிவாக்க பொறுப்பேற்றிருப்பதாக திராஹி அறிவித்தார். அந்த முடிவு "ஒருமித்து" எடுக்கப்பட்டு இருந்தது, ஆனால் அக்கூட்டத்திற்கு முன்னதாக அங்கே கவுன்சிலுக்குள் இருந்த ஆழ்ந்த பிளவுகளைக் குறித்த செய்திகள் வெளியாயின ஜேர்மனியுடன் வடக்கு-தெற்காக பிளவு இருந்தது மற்றும் ஏனையவர்கள் மேற்படி நடவடிக்கையை எதிர்த்தனர் மற்றும் திராஹிக்கு எதிராக "பதவியைக் கவிழ்க்கவும்" கூட பேச்சுக்கள் இருந்தன.

அமெரிக்காவில், பெடரல் அதன் பணத்தைப் புழக்கத்தில்விடும் திட்டத்தை நிறுத்தி உள்ள போதினும், அதன் வட்டிவிகித வரம்பை ஒரு "கணிசமான காலத்திற்கு" பூஜ்ஜியத்திற்கு அண்மித்தளவில் வைத்திருக்க உறுதியளித்து, நிதியியல் அமைப்புமுறைக்குள் அதிமலிவு பண ஓட்டம் தொடர்வதை உறுதி செய்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஜப்பானிய பொருளாதாரத்தைக் கீழிழுத்து வைத்துள்ள பணச்சுருக்க அழுத்தங்களைக் கடுமையான நடவடிக்கை மட்டுமே முடிவுக்குக் கொண்டு வருமென்ற அடிப்படையில், பேங்க் ஆஃப் ஜப்பானின் நகர்வு எடுக்கப்பட்டது. ஆனால் 2008 நிதியியல் நெருக்கடியுடன் தொடங்கிய பொருளாதார முறிவு தீவிரமடைந்து வருகின்ற நிலையில், பணச்சுருக்கம் என்பது அதிகளவில் ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்காக உள்ளது. இதனால் ஜப்பானிய நடவடிக்கைகள் உலகளாவிய தாக்கத்தை இன்னும் மேலதிகமாக அதிகரிக்கின்றன.

யென்னின் மதிப்பைக் கீழே கொண்டு வருவது இதன் ஒரு விளைவாகும், அதன் மூலமாக ஒப்பீட்டுரீதியில் ஏனைய பிரதான நாடுகளது செலாவணிகளின் மதிப்பை அதிகரித்து, அவை ஏற்கனவே அனுபவித்துவரும் பணச்சுருக்க அழுத்தங்களோடு இதையும் சேர்ப்பதாகும். இதைக் கொண்டு, ஜப்பான் அதன் பணச்சுருக்க பொறியை ஏற்றுமதி செய்து அதிலிருந்து விடுபட முயல்கிறது.

அதன் நடவடிக்கைகள் ஒரு தேசிய வினோதம் அல்ல, மாறாக ஒரு மிகப் பொதுவான அபிவிருத்தியின் அறிகுறியாகும்.

முதலீடு மற்றும் ஏனைய செலவினங்கள் கடுமையாக குறைக்கப்பட்டதால் உண்டான தேக்கநிலை நிலைமைகளின் கீழ், யூரோ மண்டலத்தின் பணவீக்கத்தைத் தூக்கி நிறுத்த இது அவசியமாகும் என்ற அடித்தளத்தில், ஒரு சொத்து வாங்கும் திட்டத்தை மேற்கொள்ளும் ECBஇன் முடிவு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இத்தகைய முறைமைகள் நிஜமான பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் வெகு குறைவாகவே வேலை செய்யும். அதற்கு மாறாக, அவை ஐரோப்பிய வங்கிகளின் நிலைமைக்கு முட்டுக்கொடுக்க நோக்கங்கொண்டிருக்கின்றன, விலைகளின் தொடர்ச்சியான வீழ்ச்சியால் அவற்றின் நிஜமான கடன்கள் அதிகரித்து வருகின்றன.

உலகளாவிய நாணய ஊக்கப்பொதி திட்டங்கள், அவை எவ்வாறு முடிவுறும் என்ற எந்தவித ஆலோசனையுமின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெடரல் ரிசர்வ் பத்திரம் வாங்குவதை முடித்துக் கொண்டாலும், 2007இல் 800 பில்லியன் டாலராக இருந்த அதன் இருப்புநிலைக் கணக்குடன் (balance sheet) ஒப்பிடுகையில், அது இப்போது 4 ட்ரில்லியனுக்கும் அதிகமாக இருக்கிறது. பெடரல் அதன் கடனைக் குறைப்பதற்கோ, மற்றும் சந்தைகளில் ஒரு பங்களிப்பாளராக இல்லாமல், அவற்றிற்கு வெளியே நிற்கும் அதன் பாரம்பரிய நிலைப்பாட்டிற்கு திரும்புவதற்கோ எந்தவித முயற்சியும் எடுத்தால், அது ஒரு நெருக்கடியைத் தூண்டிவிடும்.

இது ஏனென்றால் முக்கிய பகுதிகளில் பெடரல் தான் இப்போது, இதுவரையில் இல்லாத வகையில் பிரதான பங்களிப்பாளராக இருக்கிறது. மிக அதிகளவில் பத்திரங்கள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்கள் வைத்திருப்பவர் வெளியேறுகின்ற அதேவேளையில், எந்த முதலீட்டு வங்கியோ அல்லது ஹெட்ஜ் நிதியமோ பலமாக முதலீடு செய்ய விரும்பாத நிலையில், பெடரலின் பாகத்திலிருந்து வரும் பிரதான சொத்து விற்பனைக்கான எந்தவித அறிகுறியும், வெளியேறுவதற்கான ஓட்டத்தைத் தூண்டிவிடும்.

ஆனால் பண ஓட்டம் இருக்கும் வரையில், மற்றும் ஊகவணிகத்திலிருந்து பெரும் இலாபங்கள் ஈட்ட முடிகிற வரையில், நிதியியல் சந்தைகள் அந்த சந்தர்ப்பத்தின் பரவச நிலையை அனுபவித்துக் கொண்டு, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரைப் போல நடந்து கொள்கின்றன, அதேவேளையில் அடியிலுள்ள பொருளாதார நிலைமைகள் சீரழிந்து வருகின்ற நிலையில் நீண்டகால விளைவுகளைப் புறக்கணிக்கின்றன.

அங்கே அரசு கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 240 சதவீதத்திற்கு சமமாக உள்ள நிலையில், ஜப்பானின் நிலைமை, இன்னும் அதிகமாகவே இயல்புக்குமீறி உள்ளது. நீண்டகால நிதியியல் ஸ்திரப்பாடு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதற்கு இடையே, அவை மேற்கொண்டும் சொத்து வாங்குவது குறித்த பேங்க் ஆஃப் ஜப்பானினது நிர்வாக குழு மீதான எதிர்ப்பில் பிரதிபலித்தது, பங்கு விலைநிர்ணய சந்தைகளோ குரோடாவின் "அதிர்ச்சியூட்டும் அதிரடி" அறிவிப்பைத் தொடர்ந்து கூர்மையாக உயர்ந்தன.

ஆனால் கணக்கெடுக்க வேண்டிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்ற உணர்வு, அங்கே அதிகரித்து வருகிறது.

பேங்க் ஆஃப் ஜப்பான் எடுத்த முடிவின் மீது கருத்துத் தெரிவித்து, Bloomberg பொருளாதார கட்டுரையாளர் வில்லியம் பெசக் குறிப்பிடுகையில், வரலாற்றில் மிகவும் வெளிப்படையான பத்திரக் குமிழிக்கு அந்த மத்திய வங்கி மேற்கொண்டும் எண்ணெய் வார்த்துள்ளதாகவும், பங்குச்சந்தையில் அதுபோன்றவொன்றை உருவாக்க உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டார். “நிதியியல் விதிகள், மற்றும் ஈர்ப்புவிசை, மீண்டுமொருமுறை, தம்மைத்தாமே மறுஉறுதிப்படுத்துகையில், ஜப்பானின் கடன் சந்தை அதன் வழிகளில் பொறிந்து போகும் என்பதோடு, அது 2008 லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவையே கூட சாதாரணமானதாக ஆக்கிவிடும்," என்று எழுதினார்.

ஏனைய பிரதான மையங்களின் நிதியியல் சந்தைகளுக்கும் இதையே கூறலாம்.

கடிவாளமற்ற நாணய ஊக்கப்பொதி குறித்த முதலாளித்துவ விமர்சனங்களிலோ, ஆழமடைந்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு எந்த தீர்வும் கிடையாது. மத்திய வங்கிகளிலிருந்து பணத்தை உட்செலுத்துவதுடன் சேர்ந்து, முன்னில்லாத அளவில் சிக்கன முறைமைகளுக்கான அவற்றின் முறையீடு, ஒரு முழு-அளவிலான மந்தநிலைமையின் நிஜமான சாத்தியக்கூறுடன் சேர்ந்து, பணச்சுருக்க அழுத்தங்களை மட்டுமே ஆழப்படுத்த முடியும். பணத்தை அச்சிடுவதைப் போன்ற, இந்த பாதை, நிதியியல் சந்தைகள் மற்றும் வங்கிகளின் ஒரு பொறிவுக்கு இட்டுச் செல்கிறது.

2008இல் வெடித்த நெருக்கடி உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒரு உடைவாகும், அது ஒரு "மீட்சியைக்" காணக்கூடிய ஒரு சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்ட சரிவல்ல என்பதையே அதிகரித்துவரும் நிதியியல் பைத்தியக்காரத்தனம் அடிக்கோடிடுகிறது. அந்த உடைவின் விளைவுகள் மேலும் மேலும் தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன.

2008 நெருக்கடிக்குப் பின்னர் உடனடியாக, பிரதான பொருளாதார சக்திகள் 1930களின் படிப்பினைகளைக் கற்பது குறித்தும், குறிப்பாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் மற்றும் பெருமந்தநிலைமையின் உலகளாவிய தாக்கத்தைத் தீவிரப்படுத்திய அயல்நாட்டவரைப் பலிகொடுத்து தான் செழிக்கும் கொள்கைகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும் பேசின. அதுபோன்ற கொள்கைகள் 1939இல் இரண்டாம் உலக போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்று, சர்வதேச பதட்டங்களுக்கு எண்ணெய் வார்த்தது என்பது மத்திய வங்கிகளுக்கும் மற்றும் அரசாங்கங்களுக்கும் நன்கு தெரியும்.

அவை அனைத்தும் முற்றிலுமாக, உண்மையாகவே கப்பலேறிவிட்டன. அவரவர் நலனே அவரவருக்கு முன்னே, அடுத்தவர் கதி என்னவானால் நமக்கென்னே என்பதே நடைமுறையில் இருக்கும் நிகழ்ச்சிநிரலாகும்.

அதேநேரத்தில், நிதியியல் மூலதனம் இலாபத்திற்கான அதன் இரக்கமற்ற உந்துதலினால் ஒவ்வொரு சமூக வெற்றிகளும் வெட்டப்பட வேண்டுமென கோருகின்ற நிலையில், நிதியியல் ஊகவணிகத்தின் தீவிரப்பாடு சர்வதேச அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நிலைமையின் மீதான தாக்குதலை ஆழப்படுத்துவதன் மூலமாக சமன்படுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான முதலாளித்துவத்தின் அனைத்து கொள்கைகளினது முட்டுசந்தும் எதை பிரதிபலிக்கிறது என்றால், தற்போதைய முட்டுச்சந்து முதலாளித்துவ அமைப்புமுறையிலேயே ஏற்பட்டிருக்கும் அமைப்புரீதியிலான நெருக்கடியாகும், வர்க்க போராட்ட முறைகள் மற்றும் சோசலிச புரட்சியால் அல்லாமல் அதிலிருந்து வெளியே வருவதற்கு அங்கே வழியே இல்லை என்பதையே ஆகும்.