World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

European Central Bank seeks to reassure financial markets

ஐரோப்பிய மத்திய வங்கி நிதியியல் சந்தைகளுக்கு மறுஉத்தரவாதம் அளிக்க முயல்கிறது

By Nick Beams
7 November 2014

Back to screen version

சொத்துக்கள் வாங்குவதன் மூலமாக நிதி அமைப்புக்குள் 1 ட்ரில்லியன் யூரோவை உட்புகுத்த ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) நிர்வாக கவுன்சில் தயாராக இருப்பதாக அவ்வங்கியின் தலைவர் மரியோ திராஹியால் நேற்று அளிக்கப்பட்ட ஓர் உத்தரவாதத்திற்கும், நிஜமான பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் அங்கே எந்த சம்பந்தமும் இல்லை.

மாறாக, வீழ்ச்சி அடைந்துவரும் பணவீக்க நிலைமைகளில், ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், வங்கிகள் மற்றும் நிதியியல் ஊகவணிகர்களுக்கு உதவ ECB தயாராக நிற்கிறது என்பதற்கான ஒரு சூளுரையாகும் அது.

எதிர்பார்த்தவாறே, ECB அது செப்டம்பரில் அமைத்திருந்த அதன் பிரதான 0.05 சதவீத மறுநிதி வழங்கும் வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதன் விளைவாக, திராஹியின் தலைமை பண்பின் மீது அங்கே அதிருப்தி இருப்பதாக வந்த செய்திகளுக்கு இடையிலும், அவரது பத்திரிகையாளர் கூட்டத்தின் மீது அனைத்து கவனமும் ஒருமுகப்பட்டிருந்தது. நிர்வாக கவுன்சிலால் ஒப்புதல் வழங்கப்படாத, முன்னேற்பாடற்ற கருத்துக்களை வெளியிட்ட ஒரு போக்கே அவரது தலைமை பண்பிற்குப் பிரதிபலிப்பாக இருந்தது.

சுமார் 1 ட்ரில்லியன் யூரோ விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில், 2012இல் கடைசியாக பார்க்கப்பட்ட மட்டங்களுக்கு ECBஇன் கையிருப்புகளை மீண்டும் கொண்டு வருவதற்காக நிதியியல் சொத்துக்களை வாங்குவதே நோக்கமாகும் என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்னரே திராஹி சுட்டிக் காட்டி இருந்தார். இந்த கருத்துக்களுக்குப் பின்னர், அங்கே அந்த பரிந்துரைக்கு ஒருமனதான ஆதரவு இருக்கவில்லை என்றும், ECBஇன் நிர்வாக அமைப்புக்குள்ளேயே பிளவுகள் எழுந்திருந்ததாகவும் வாதங்கள் இருந்தன.

பணத்தைப் புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளுக்கு பிரதான எதிர்ப்பு, சில வடக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன், ஜேர்மனியிலிருந்து வந்திருந்தது.

வங்கியின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்களின் முழு ஆதரவு அவருக்கு இருப்பதாக ECB தலைவர் வியாழனன்று நிதியியல் சந்தைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முயன்றார். "மிக நீண்டகால ஒரு குறைந்த பணவீக்க காலக்கட்டத்தின் அபாயங்களை மேற்கொண்டு சமாளிப்பதற்காக", சொத்துக்கள் வாங்குவது உட்பட, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைப் பிரயோகிக்கும் அதன் பொறுப்புறுதியில் நிர்வாக கவுன்சில் ஒருமனதாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் அமைப்புகள் மீதான நிஜமான கடன் சுமையை விலை வீழ்ச்சி மட்டங்கள் அதிகரிக்கின்றன என்ற உண்மையிலிருந்தே, பணவீக்க வீழ்ச்சி குறித்த கவலை மற்றும் பணச்சுருக்கத்தின் அச்சுறுத்தல் எழுகிறது.

ECB மிகவும் மெதுவாக செயல்படுகிறது என்ற நிதியியல் சந்தைகளிடமிருந்து வரும் குற்றச்சாட்டுக்களை அடிக்கடி முகங்கொடுத்திருந்த நிலையில், திராஹி "அவசியமானால் மேற்கொண்டு முறைமைகளை நடைமுறைப்படுத்த உரிய தயாரிப்பை உறுதிப்படுத்தி வைக்குமாறு" ECB பணியாளர்களை நிர்வாக கவுன்சில் பணித்துள்ளதாக தெரிவித்தார்.

"அபாயங்கள் எதிர்மறையாக சென்று கொண்டிருக்கின்றன" என்பதை திராஹி ஒத்துகொண்டிருப்பதுடன் சேர்ந்து, யூரோ மண்டல பணவீக்கத்தை 2 சதவீதமாக வைக்கும் மத்திய வங்கியின் இலக்குடன் ஒப்பிடுகையில், தற்போது அது வெறும் 0.4 சதவீதத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த பத்திரிகையாளர் கூட்டத்திற்குப் பின்னர், யூரோ 2012க்குப் பிந்தைய அதன் மிகக் குறைந்த மட்டமாக டாலருக்கு எதிராக 0.6 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது, FTSE யூரோபஸ்ட் குறியீடு 0.6 சதவீத அளவுக்கு 300 புள்ளிகள் உயர்ந்ததுடன், பங்குச்சந்தைகள் அதிகரித்தன.

அந்த கவுன்சில் கூட்டத்திற்கு முன்னர் முந்தைய மாலையின் இரவு விருந்தில் "மிகவும் அருமையான ஆர்வமூட்டும் விவாதம்" அங்கே நடந்ததாக கூறி, திராஹி பிளவுகளைக் குறித்த செய்திகளைக் குறைத்துக் காட்ட முயன்றார். அவரது தலைமை பண்பு மீதான கவலைகளைக் குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், “எனக்குத் தெரிந்த வரையில் அங்கே அவ்வாறான எதுவும் எழுப்பப்படவில்லை," என்றார்.

திராஹி குறுகிய காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தார் என்பதில் நிதியியல் சந்தைகளுக்குள் பொதுவான உடன்பாடு உள்ள போதினும், நீண்டகால ஓட்டத்தில் பிளவுகளும் நிலவுகின்றன. ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்தின் ரிச்சர்டு பார்வெல் Financial Timesக்குக் கூறுகையில், திராஹி இருப்புநிலைக் குறிப்பு இலக்கின் மீதான போராட்டத்தை வென்றுள்ளார், ஆனால் அவர் முழு போரை வென்றுவிட்டாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். “இறையாண்மை கொள்முதல்கள் மீது அந்த கழுகுகள் ஒரு நிபந்தனையற்ற சரணாகதியை வழங்கி உள்ளதாகவே நான் சந்தேகிக்கிறேன்," என்றார்.

"இறையாண்மை கொள்முதல்கள்" (sovereign purchases) என்ற இந்த வார்த்தை, மத்திய வங்கியால் அரசு பத்திரங்கள் வாங்கப்படுவதைக் குறிக்கிறது. இத்தகைய கொள்முதல்கள் தான், கடந்த மாதம் முடிவுக்கு வந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கைக்கும் மற்றும் கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்ட ஜப்பானிய மத்திய வங்கியின் மேலதிகமாக சொத்து வாங்கும் திட்டத்திற்கும் மையமாக இருந்தன. ECB அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் ECBஇன் கட்டளையை மீறுவோம் என்று வலியுறுத்திய ஜேர்மனியிடமிருந்து எதிர்ப்பு இருந்தது.

நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய வங்கி மீதான அழுத்தம், ஜப்பான் அதன் பணத்தைப் புழக்கத்தில்விடும் திட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக பேங்க் ஆஃப் ஜப்பான் (BoJ) எடுத்த கடந்த வார அதிர்ச்சி முடிவுக்குப் பின்னர் அதிகரித்திருந்தது. BoJ இப்போது ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கு சமமான ஒரு விகிதத்தில் அரசு பத்திரங்களை விலைக்கு வாங்க உள்ளது. இது யென்னின் மதிப்பைக் கீழிறக்குவதோடு, ஏனைய பிரதான செலாவணிகளின் மதிப்பை ஒப்பீட்டளவில் உயர்த்துகிறது.

BoJ முடிவை அறிவித்த நான்கு நாட்களுக்குப் பின்னர், யென்னின் மதிப்பு யூரோவுக்கு எதிராக 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இது ஜப்பானிய முடிவின் பிரதான விளைவுகளில் ஒன்றாக, ஏனைய நாடுகளின் மீது பணச்சுருக்க அழுத்தங்களின் அதிகரிப்பை அடிக்கோடிடுகிறது.

ஐரோப்பிய பொருளாதாரத்தின் மீது பணச்சுருக்கப் பிடி இறுகி வருகிறது என்பதைக் காட்டும் பல தொடர்ச்சியான செய்திகளுக்கு இடையே ECBஇன் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், யூரோ பகுதிக்கான வளர்ச்சி முன்மதிப்பீடுகளை ஐரோப்பிய கமிஷன் வெட்டியது. அது குறிப்பிடுகையில், 18 நாடுகளது பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 0.8 சதவீதமும், அடுத்து ஆண்டு 1.1 சதவீதமும் மட்டுமே உயருமென குறிப்பிட்டது, இந்த மதிப்பீடு முறையே அதன் முந்தைய முன்வரைவுகளான 1.2 சதவீதம் மற்றும் 1.7 சதவீதத்திலிருந்து குறைக்கப்பட்டதாகும்.

கமிஷனின் பொருளாதாரத்துறை தலைவர் மார்கோ பூடி கூறுகையில், “உலகாளவிய நிதியியல் நெருக்கடியின் மரபு காலங்கடந்தும் நின்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தின் சுணக்கம் பாரியளவில் இருப்பதுடன், பணவீக்கத்தின் மீது சுமையை இறக்குகிறது, பணவீக்கமோ சரிவடைந்துவரும் எரிசக்தி மற்றும் உணவு நிகழ்வுபோக்குகளால் கீழே இழுக்கப்பட்டு வருகிறது," என்றார்.

கீழ்நோக்கிய வீழ்ச்சி, வெறுமனே நிதியியல் நெருக்கடியினது "காலங்கடந்தும் நிற்கும்" விளைவுகளின் விடயமல்ல, மாறாக மேலதிகமாக ஆழமாக வேரூன்றியதாகும் என்பதை கமிஷனின் சொந்த அறிக்கையே சுட்டிக் காட்டியது. “ஆண்டின்-மத்திய பகுதியிலிருந்து நம்பிக்கை குறியீடுகள் சரிந்து வருவதுடன் சேர்ந்து, 2013இன் இறுதியில் அவை எங்கே நின்று கொண்டிருந்தனவோ இப்போதும் அவை அங்கேயே திரும்பி இருக்கின்ற நிலையில், கடுமையான புள்ளிவிபரங்களோ ஆண்டின் மீதப்பகுதியிலும் மிகவும் பலவீனமான செயல்பாடுகளே இருக்குமென்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இதனால் தற்காலிக காரணிகளது விளைவால் மட்டுமே மீட்சியில் பின்னடைவு என்று பார்க்க முடியவில்லை," என்று அது குறிப்பிட்டது.

அவ்அறிக்கையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, மிகப்பெரிய ஐரோப்பிய பொருளாதாரமான ஜேர்மனி மீதான குறைந்த வளர்ச்சி முன்வரைவுகளாகும். இந்த ஆண்டின் இரண்டாவது அரைப்பகுதியில் ஏறத்தாழ எந்தவித வளர்ச்சியும் எதிர்பார்க்கப்படவில்லை மற்றும் மே மாதத்தில் காட்டப்பட்ட அதன் 2 சதவீத அவதானிப்புடன் ஒப்பிடுகையில், 2015இல் 1.1 சதவீத வளர்ச்சியையே கமிஷன் முன்மதிப்பீடு செய்கிறது.

யூரோ மண்டலத்தின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இத்தாலி, ஆறு ஆண்டுகளில் அதன் மூன்றாவது பின்னடைவில் உள்ளது, மேலும் அதன் பொருளாதாரம் இந்தாண்டு 0.4 சதவீதம் சுருங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கமிஷன் அதன் இத்தாலிய வளர்ச்சியின் முன்அனுமானத்தை 0.6 சதவீதமாக குறைத்தது, இது மே மாதம் அது அனுமானித்ததில் பாதியாகும்.

ஐரோப்பிய பொருளாதாரத்திற்குள் ECBஆல் பணம் உட்செலுத்தப்படுவதற்கு இடையிலும், சிறிய மற்றும் மத்திய-ரக நிறுவனங்கள், இவற்றின் விரிவாக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமாகுமென்ற நிலையில், இவை கடன்களைப் பெறுவதில் தொடர்ந்து சிரமங்களை முகங்கொடுத்து வருகின்றன ஏனென்றால் வங்கிகளோ வாராக்கடன்களைச் சுமந்துள்ளன.

நாணய கொள்கை மீதான ECBஇன் நகர்வு, நிஜமான பொருளாதாரத்திற்கு ஒரு ஊக்கப்பொதியை வழங்குவதையோ அல்லது அதிகமான வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதையோ சார்ந்ததல்ல. வங்கிகள் மற்றும் நிதியியல் ஊகவணிகர்களின் நிலைப்பாட்டை ஊக்குவிப்பதே ஓர் அதிகரித்த பணஓட்டத்தின் பிரதான விளைவாகும். இதுவரையில் வெகுஜன மக்கள் விடயத்தில், ECB மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய எல்லா அமைப்புகளது வேலைத்திட்டமும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதை மற்றும் வாழ்க்கைத் தரங்களை மோசமாக்குவதை நோக்கியே திருப்பிவிடப்பட்டுள்ளது.

இது ECB கூட்டத்திற்கு முந்தைய தினங்களில் அடிக்கோடிடப்பட்டு இருந்தது. நவம்பர் 2010இல் அந்த வங்கியின் அப்போதைய தலைவர் ஜோன் குளோட் திரிஷே, அயர்லாந்து நிதி மந்திரிக்கு எழுதிய ஒரு கடிதத்தை Irish Times பிரசுரித்தது. அயர்லாந்து அரசாங்கம் செலவுகளை வெட்டாவிட்டால், மற்றும் நிதியியல் துறையில் மறுசீரமைப்பு செய்யாவிட்டால், ECB அதற்கான அவசர நிதிகளை வெட்டுமென்று திரிஷே எச்சரித்திருந்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், அயர்லாந்து அந்த நிபந்தனைகளுக்கு உடன்பட்டு ஒரு பிணையெடுப்புக்கு விண்ணப்பித்தது.

"கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" என்ற பெயரில், ECB, தேசிய அரசாங்கங்கள் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஆணையங்களால் திணிக்கப்பட்டு வருகின்றன சிக்கன நிகழ்ச்சிநிரல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

புருசெல்ஸில் ECB கூட்டம் முடிவுற்றதற்குப் பின்னர் வெகு விரைவிலேயே, புதிதாக நியமிக்கப்பட்ட பெல்ஜியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற செலவு-வெட்டு முறைமைகளுக்கு எதிராக போராட, அதே நாளின் காலையில் 100,000 பேர் கூடிய வலுவான பேரணியைத் தொடர்ந்து, அந்நகரின் மையப்பகுதியில் பொலிஸிற்கும் மற்றும் பல நூறு தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் நடந்தது.

வெறும் ஒரு மாதத்திற்கு முன்னர் அதிகாரத்திற்கு வந்திருந்த அந்த அரசாங்கம், ஓய்வூதிய வயதை உயர்த்தவும், பணவீக்கத்தோடு தொடர்புபட்ட ஊதிய உயர்வை அடுத்த ஆண்டிலிருந்து இரத்து செய்யவும், சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு வரவுசெலவு திட்டங்களில் வெட்டுக்களைத் தொடங்கவும் அது தனக்குத்தானே பொறுப்பேற்றுள்ளது.

ECBஆல் வழங்கப்பட்ட நாணய ஊக்கபொதி ஐரோப்பிய பொருளாதாரத்தை ஊக்குவிக்காது. மாறாக, மேற்கொண்டும் அதுபோன்ற "கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான" முறையீடுகளே அதைப் பின்தொடர்ந்து வரும்.