World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French Senate votes law facilitating impeachment of the president பிரெஞ்சு செனட், ஜனாதிபதி மீதான பதவி நீக்க குற்றவிசாரணைக்கு அனுகூலமான சட்டத்திற்கு வாக்களிக்கிறதுBy Kumaran Ira and Olivier
Laurent குடியரசின் ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்டுவதை மற்றும் பதவியிலிருந்து நீக்குவதை எளிமையாக்கும் வகையில், பிரெஞ்சு செனட் கடந்த மாதம் ஒரு சட்டமசோதா மீது வாக்களித்தது. ஜனாதிபதி "அவரது அதிகாரத்தைக் கையாள, தெளிவாக இலாயக்கற்ற விதத்தில் அவரது கடமைகளில் இருந்து தவறுகையில்", அவருக்கு எதிராக நாடாளுமன்றம் குற்ற விசாரணைகளைத் தொடங்கலாம் என அந்த சட்டமசோதா வரையறுக்கிறது. முன்னதாக ஜனவரி 2012இல் தேசிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்த இந்த சட்டமசோதா மீது, எந்தவித திருத்தமும் இல்லாமல் 324க்கு 18 என்ற பெரும்பான்மையோடு செனட் அதன் ஒப்புதலை வழங்கியது. பிரெஞ்சு அரசியலமைப்புக்கு பொருந்தியுள்ளதா என்பதைக் காண, இறுதி ஒப்புதலுக்காக அது அரசியலமைப்பு கவுன்சிலிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இதுவொரு பிரதான மாற்றமாகும். அமெரிக்க ஜனாதிபதி அவர் பதவியிலிருக்கும் போதே பொதுநல வழக்கு மற்றும் குற்றவழக்கு இரண்டையும் முகங்கொடுக்க முடியும் என்றிருப்பதைப் போலில்லாமல், பிரெஞ்சு ஜனாதிபதி அவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் போது பொதுநல வழக்கு மற்றும் குற்றவழக்கிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். தற்போது ஒரு பிரெஞ்சு ஜனாதிபதி, மிகப் பெரிய தேசத்துரோகம் அல்லது நோயினால் ஏற்பட்ட "இயலாமை" ஆகிய நிந்தனைகளின் மீது நாடாளுமன்றத்தால் குற்றஞ்சுமத்த முடியும். பின்னர் ஒரு நீதிமன்றத்தைப் போல ஒன்றுகூடிய நாடாளுமன்றத்தின் தீர்ப்பைக் கொண்டு, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும்பட்சத்தில், அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். இந்த புதிய சட்டமசோதா, அது பிரதியீடு செய்யும் 1959ஆம் ஆண்டு சட்டஆணையை விட கணிசமான அளவுக்குச் சுருக்கமாக உள்ளது, இதில் உள்ள 8 சாசனங்கள் மட்டுமே அந்த நீதிமன்றத்தில் தலைமை வகிக்கும் 22 நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவுக்கு பெரும் சட்டபூர்வ அனுகூலங்களை அளிக்கின்றன. பிரான்சின் ஐந்தாம் குடியரசு சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பிற்போக்கான முதலாளித்துவ அமைப்புமுறை என்றபோதினும் —அதாவது, ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாமலேயே ஜனாதிபதியை ஆட்சி செய்ய அனுமதிப்பதோடு, பெரும் மேலாளுமையை, குறிப்பாக வெளியுறவு கொள்கை மீது செலுத்துவதற்கும் அனுமதிக்கிறது— இந்த முறைமை ஆழமாக ஜனநாயக விரோதமானதாகும். குற்றவிசாரணைக்கு தெளிவற்ற, அகநிலை தகுதிவகைகளை ஏற்பதன் மூலமாக, அது அனைத்து விதமான ஊடக பிரச்சாரங்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு களம் அமைக்கிறது, அவற்றைக் கொண்டு ஆளும் வர்க்கம் அதற்கு ஓர் அரசியல் கடமைப்பாட்டைக் காட்டாத ஒரு அரசு தலைமையை வெளியேற்ற முடியும். முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்கால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மீதான குற்றவிசாரணை கமிஷனில் இடம் பெற்றிருந்த ஒரு சட்ட பேராசிரியரும் மற்றும் வலதுசாரி அரசியல்வாதியுமான டிடியே மௌஸ், விடுதலைக்கான முறைமையின் கீழ் குற்றவிசாரணைக்கான சூழல்களை அமைத்திருந்தார்: “ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது வழக்கமான நடைமுறையை ஏற்காதிருந்தாலோ, அதாவது அவர் நாடாளுமன்றத்தால் வாக்களிக்கப்பட்ட சட்டங்களில் கையெழுத்திடாமல் இருந்தாலோ, அரசியலமைப்பைத் தடுத்தாலோ அல்லது இழிவார்ந்த முறையில் அவரது அதிகாரத்தை பிரயோகித்தாலோ, அல்லது, அவரது தனிப்பட்ட நடவடிக்கை அவரது பதவியின் கண்ணியத்திற்குப் பொருந்தாமல் இருந்தாலோ, அவர் செய்த ஒரு குற்றம் பொது அறிக்கையிலிருந்து முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருந்தாலோ, இன்னும் இதர பிறவை." ஒரு ஜனாதிபதி "கண்ணியத்துடன்" நடந்து கொள்கிறாரா இல்லையா என்ற கேள்வி, தனிநபரது ஒழுக்கக்கேடு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்த பாதையைத் திறந்துவிடும், ஆகவே இது வெளிப்படையாக ஓர் அகநிலையான பொருள்விளக்க பிரச்சினையாகிறது. இது, அமெரிக்காவின் குடியரசு கட்சி கையாட்கள் சம்பந்தப்பட்டிருந்த ஒரு வலதுசாரி சதி மூலமாக, 1998இல், ஒரு ஜோடிக்கப்பட்ட பாலியல் முறைகேடு மீது அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் எவ்வாறு குற்றவிசாரணைக்கு உள்ளானார் என்பதை நினைவுபடுத்துகிறது. இந்த புதிய நடவடிக்கையின் அகநிலையான மற்றும் அரசியல்மயப்படுத்தப்பட்ட குணாம்சம், உண்மையில், அந்த நடவடிக்கையில் திருத்தத்தை பரிந்துரைப்பதற்காக நடந்த விவாதத்தின்போது PS கட்சி செனட்டர் ஜோன்-பியர் ஸ்வயரால் உயர்த்தப்பட்டதாகும். அவர் அறிவித்தார்: “அது ஓர் அரசியல் தீர்ப்பின் அடிப்படையில் —இது தான் உண்மை என்ற நிலையில், இதை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்— ஒரு குற்றவிசாரணையோடு கூடிய ஒரு குற்றசாட்டு நடைமுறை, குற்றஞ்சாட்டப்படுகின்ற அரசு தலைவரது குணாம்ச தவறுகளைக் கொண்டு பிரதியீடு செய்கிறது." ஸ்வயர் தொடர்ந்து கூறினார், “முந்தைய சட்ட அமைப்புமுறையைப் போலில்லாமல், [குற்றவிசாரணைக்கு வாக்களிக்கும்] நாடாளுமன்ற பிரதிநிதிகள் ... நாட்டின் உயர் நலன்களைக் காக்க ஓர் அரசியல் முடிவை எடுக்கின்றனர் என்ற இந்த புள்ளியையும் நான் வலியுறுத்துகிறேன்." இந்த குற்றவிசாரணை சட்டமசோதா 2007இல் இருந்து கிடப்பில் இருந்துள்ளது. 2001இல் அப்போது பதவியிலிருந்த ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்காக உச்ச நீதிமன்றம் (Cassation Court) அவரது பதவிக்காலத்தை இரத்து செய்ய தீர்ப்பு வழங்கிய பின்னர், 2002இல் உருவாக்கப்பட்ட ஒரு ஆலோசனை கமிஷனின் 4 ஆண்டுக்கும் அதிகமான வேலைக்குப் பின்னர் இது வந்திருந்தது. பாரிஸின் மேயராக சேவை செய்தபோது, சட்டவிரோதமாக அரசியல் நிதியளித்தமைக்காக குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் பேரில், பின்னர் இறுதியாக சிராக் 2011இல் குற்றவாளியாக கண்டு கொள்ளப்பட்டார். அந்த குற்றச்சாட்டுக்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னர் விசாரணைக்கு உள்ளாகி இருந்த போதினும், அந்த சட்டமசோதாவை புதுப்பிக்கும் ஆளும் மேற்தட்டின் இப்போதைய முடிவு, சந்தேகத்திற்கிடமின்றி, பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் நிலவும் முன்னொருபோதுமில்லாத அரசியல் நெருக்கடியுடன் பிணைந்துள்ளது. ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம், பெருவணிகங்களுக்கு சாதகமான தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதன் வலதுசாரி நடவடிக்கைகளுக்காக மற்றும் ஆபிரிக்கா, மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய யுத்தங்கள் காரணமாக ஆழமாக மதிப்பிழந்துள்ளது. இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர், ஒரு "சாதாரணமான" ஜனாதிபதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் ஹோலாண்ட், 1958இல் ஐந்தாம் குடியரசும், அந்த பதவியும் உருவாக்கப்பட்டதற்குப் பிந்தைய பிரான்சின் மிகவும் மதிப்பிழந்த ஜனாதிபதியாக, அவர் பெரிதும் வழக்கத்திற்கு மாறான நிலைமையில் தன்னைத்தானே காண்கிறார். அவரது செல்வாக்கு விகிதம் வரலாற்றிலேயே மிகக் குறைவாக 12 சதவீதத்தில் நிற்கிறது, அத்துடன் அவரது பொருளாதார கொள்கைகள் வெறும் 3 சதவீத ஆதரவே பெற்றுள்ளன. பிரான்சில் 10இல் எட்டுக்கும் அதிகமானவர்கள் அவர் 2017இல் இரண்டாவது முறையாக பதவி போட்டியில் இறங்குவதை விரும்பவில்லையென கூறுகின்றனர். மக்கள்தொகையில் 62 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், அந்த காலத்திற்கு (2017க்கு) முன்னதாகவே அவர் பதவியிலிருந்து இறங்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்பதை மற்றொரு சமீபத்திய கருத்துக்கணிப்பு காட்டியது. அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே ஹோலாண்டைத் தூக்கியெறிய அவசியமாகும் சட்டபூர்வ உள்கட்டமைப்பை உருவாக்குமாறு பிரபல அரசியல்வாதிகள் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளனர். (பார்க்கவும்: போலி-இடதில் இருந்து புதிய வலதிற்கு: பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோனின் பயணப்பாதை) புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற போலி-இடது கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட PSஇன் பிற்போக்கு கொள்கைகள், முதலாளித்துவ "இடதின்" சிதைவையும் அம்பலப்படுத்தி இருப்பதுடன், அவை நவ-பாசிச தேசிய முன்னணியை (FN) ஒரு ஸ்தாபக-எதிர்ப்பு கட்சியாக காட்டிக் கொள்ளவதற்கும் மற்றும் கருத்துக்கணிப்புகளில் அது மேலெழுவதற்கும் அனுமதித்துள்ளன. அதிகளவிலான முறைகேடுகளால் வலதுசாரி மக்கள் இயக்கத்திற்கான யூனியன் (UMP) சூழப்பட்டுள்ள நிலையில், அரசியல்வாதிகளும் ஊடக அமைப்புகளும் FN தலைவர் மரீன் லு பென்னுக்கு அனேகமாக ஹோலாண்டை வெற்றிக் கொள்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஊகித்து வருகின்றனர். ஆழ்ந்த அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ், நாடாளுமன்றத்தின் புதிய அதிகாரங்கள் —ஹோலாண்டிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்த பின்னர் அவரை வெளியேற்றுவதற்காகவா, மரீன் லு பென்னின் ஸ்திரமற்ற ஜனாதிபதி பதவி ஏற்பட்டால் அதைக் கவிழ்ப்பதற்காகவா, அல்லது வேறு ஏதேனும், இதுவரையில் முன்கணிக்கவியலாத சூழ்நிலைக்காகவா— எதற்காக பயன்படுத்தப்படுமென்று ஒருவரால் துல்லியமாக அனுமானிக்க இயலாது. எவ்வாறிருந்த போதினும், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்தமாக ஜனநாயக உரிமைகளுக்கு ஆழ்ந்த விரோதமாக உள்ள நிலையில், ஹோலாண்டின் மதிப்பிழந்த, வலதுசாரி நிகழ்ச்சிநிரலும் மற்றும் FNஇன் மேலுயர்வும் கூர்மையான எச்சரிக்கைகளாகும். பல்வேறு வகையறாக்களின் பிற்போக்குத்தனமான அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம், எவ்வாறாகினும், தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தின் அடிப்படையில், அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் சுயாதீனமாக அதன் பலத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். மேலும் மேலும் வலதை நோக்கி திரும்பி வருகின்ற ஓர் ஆளும் மேற்தட்டின் ஊழல்பீடித்த சூழ்ச்சிகளில் அது எந்தவித நம்பிக்கையும் வைக்க இயலாது. |
|