World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French President Hollande’s mid-term TV appearance: No shift in right-wing policies தொலைக்காட்சியில் பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்டின் இடைக்கால வருகை: வலதுசாரி கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை
By Alex Lantier பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், TF1 தொலைக்காட்சியின் "Live with the French People” என்று தலைப்பிட்ட ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் நேற்றிரவு 90-நிமிடம் கலந்து கொண்டார். இது, ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சியை (PS) அவரோடும் சேர்த்து பதவியிலிருந்து விலக்க அச்சுறுத்தி வருகின்ற அவரது ஜனாதிபதி பதவியின் பொறிவைத் தடுக்கும் ஒரு இறுதி-முயற்சியாக கணக்கில் எடுக்கப்பட்டது. இவ்வாறு தொலைக்காட்சியில் தோன்றியமை துல்லியமாக ஹோலாண்டின் ஐந்தாண்டு பதவிக்காலத்தின் மத்தியபகுதியில் வந்துள்ளது. பிரான்சில் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 5 மில்லியன் என்பதுடன் சேர்ந்து, பொருளாதார முன்மதிப்பீடுகளும் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன, மற்றும் ஹோலாண்டின் சொந்த செல்வாக்கு விகிதமே 12 சதவீதத்திற்கு பொறிந்துள்ளது. அவரது வேலைக் கொள்கைக்கு வெறும் 3 சதவீத ஒப்புதல் விகிதமே கிடைத்துள்ளது. இது 1958இல் ஜெனரல் சார்ல்ஸ் டு கோல் பதவியேற்றதற்கு பின்னர், இதுவரையிலான பிரான்சின் மிகவும் மதிப்பிழந்த ஜனாதிபதியாக ஹோலாண்டை ஆக்குகிறது. எவ்வாறிருந்த போதினும், அவரது வணிகம்-சார்ந்த, யுத்தம்-சார்ந்த நிகழ்ச்சிநிரலில் அங்கே எந்த மாற்றமும் இருக்காது என்பதற்கு ஹோலாண்ட் சமிக்ஞை காட்டினார். அவரது தவறுகளை அவர் கண்டறிந்து, அவற்றிலிருந்து பாடங்களைப் பெற்றுவருவதாக முறையிடுவதற்கு பயன்படும் வகையில், பிழைகளை ஒப்புக்கொள்ளுமாறு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அழுத்தமளித்தபோது, ஹோலாண்ட் அதற்கு மறுத்துவிட்டார். வேலைவாய்ப்பின்மை இந்தளவுக்கு அதிகரித்திருக்கக் கூடாதென விரும்பியதாக மட்டும் தெரிவித்தார். அதற்கு மாறாக, அவர் அவரது வலதுசாரி கண்ணோட்டங்களை வெட்கமின்றி பரப்பி வைத்தார். வணிகங்களை, பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாக புகழ்ந்துரைத்த அவர், ஜேர்மனியின் முன்னாள் சமூக-ஜனநாயக சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக வெட்டுக்கள் மற்றும் 50 பில்லியன் யூரோ சமூக வெட்டுக்களுடன் கூடிய அவரது சொந்த பொறுப்புறுதி உடன்படிக்கை (pacte de responsabilité) ஆகியவற்றை புகழ்ந்துரைத்தார், அத்துடன் ஆபிரிக்காவில் பிரான்சின் யுத்தங்களைத் தொடர சூளுரைத்தார். அவரது மதிப்பிழந்ததன்மை, 2017 வசந்தகாலத்தில் வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல்களில் PSஐ ஒட்டுமொத்தமாக துடைத்தெறிய இட்டுச் செல்லக்கூடுமென்பதை ஹோலாண்ட் அப்பட்டமாக ஒப்புக் கொண்டார், அந்நிலைமை ஏப்ரல் 21, 2002ஐ போலவே, பழமைவாதிகள் மற்றும் நவ-பாசிச தேசிய முன்னணிக்கு (FN) இடையிலான ஒரு போட்டிக்கு களம் அமைக்கும். “ஏப்ரல் 21 மீண்டும் நிகழக்கூடும்," என்றவர் தெரிவித்தார். தேசிய முன்னணி ஒருவேளை முழு அதிகாரத்திற்கு வரக்கூடிய சாத்தியக்கூறை எடுத்துரைக்க ஹோலாண்ட் நிர்பந்தப்பட்டதாக உணர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். “ஐரோப்பாவிலிருந்து வெளியேறும் ஒரு நாடாக பிரான்ஸ் பார்க்கப்படும்," என்று குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கூறுகையில், “ஐரோப்பா மாறவில்லையானால், அங்கே ஜனரஞ்சகவாதத்தின் அபாயம் இருக்கிறது," என்றார். எவ்வாறிருந்தபோதினும், அவரது கொள்கையின் பிரதான போக்குகளை அவர் ஏதேனும் வழியில் மாற்றுவாரா என்பதைக் குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை. அதற்குமாறாக, ஹோலாண்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெரும்பகுதி நான்கு குடிமக்களுக்கு பேட்டி அளிப்பதற்காகவே அர்பணிக்கப்பட்டிருந்தது, அவர்கள் ஹோலாண்டுடன் அவர்களின் பொருளாதார சிரமங்களை விவாதித்துக் கொண்டனர். TF1 ஒவ்வொரு நபரைக் குறித்தும் ஒரு சிறிய காணொளி தொகுப்பை வழங்கியது; அவர்கள் அனைவரும் மிகத் தெளிவாக கவனமாக ஆராயப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அங்கே 60 வயது நிரம்பிய, 16 வயதில் வேலை செய்யத் தொடங்கிய, வேலைவாய்ப்பற்ற ஒரு பெண்மணி இருந்தார், அவர் ஓய்வு பெற முடியவில்லை ஏனென்றால், ஹோலாண்டின் சமீபத்திய ஓய்வூதிய வெட்டுக்குப் பின்னர், தேசிய ஓய்வூதிய திட்டத்திற்குள் உதவித்தொகைப் பெற அவசியப்படும் மூன்றுமாதகால எண்ணிக்கையில் சற்று குறைவாக வேலை செய்திருந்தாராம்; அடுத்து, வரிகளைக் குறைக்க கோரிய மற்றும் தொழிலாளர்கள் இனியும் தொழிற்சங்கங்களை நம்பமாட்டார்கள் என்று கவலை கொண்ட, நடுத்தர உற்பத்தி நிறுவனத்தின் தலைவி இருந்தார்; அடுத்து, வடக்கு மார்சைய்யில் இருந்து வேலைவாய்ப்பற்ற சட்டம் பயின்ற பட்டதாரி இருந்தார்; அடுத்ததாக, கிராமப்புறத்திலிருந்து வந்திருந்த வேலையில் உள்ள மூன்று குழந்தைகளின் ஒரு தாய், இவர் அவரது குழந்தைகள் செல்லவிருக்கின்ற இளஞ்சிறார் உயர்பள்ளியை மூடக்கூடாதென கல்வி அமைச்சகத்துடன் போராடி வருகிறார். ஒரு தொடர்ச்சியான சிறிய கருத்து பரிவர்த்தனைகளில், அவர்களின் பிரத்யேக பிரச்சினைகளை தீர்க்கும் புதிய திட்டங்களை ஹோலாண்ட் அறிவித்தார். ஓய்வு பெறுவதற்கு அருகாமையில் உள்ள அப்பெண்மணி போதியளவுக்கு இளம் வயதிலேயே வேலை செய்ய தொடங்கி இருந்ததால், அவர் இரண்டொரு ஆண்டுகள் வேலை செய்ய ஒரு புதிய குறுகிய-கால வேலை திட்டத்தைப் பயன்படுத்தலாம், பின் ஓய்வு பெறுவதற்கு தகுதி அடைவார். நடுத்தர உற்பத்தி நிறுவனத்தின் தலைவிக்கு, புதிய வரி வெட்டுக்களுக்கு ஹோலாண்ட் உறுதி அளித்தார்; வேலைவாய்ப்பற்ற சட்டம் பயின்ற பட்டதாரிக்கு, மேற்கொண்டு 16,000 புதிய இளைஞர்களுக்கான வேலைகளை அறிவித்தார், மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கான ஒரு புதிய மானியத்திட்டத்தின் ஆதாயதாரர்களில் வேலை செய்யும் இளம் தாய்மார்களுக்கு உயர் முன்னுரிமை வழங்கப்படுமென வாக்குறுதி அளித்தார். இந்த வாய்வீச்சு பேச்சுமுறை ஹோலாண்டை "பிரெஞ்சு மக்கள் சொல்வதை கேட்பவராக" காட்ட நோக்கங்கொண்டது, எவ்வாறிருந்தாலும் அவர் முன்மொழிந்துவரும் நடவடிக்கைகள் பாரிய வேலைவாய்ப்பின்மை, மூத்த பிரெஞ்சு குடிமக்களிடையே அதிகரித்துவரும் வறுமை, மற்றும் கிராமப்புறங்களில் பொது சேவைகள் பொறிந்து வருவது ஆகியவற்றைக் கையாள முற்றிலுமாக போதுமானதல்ல, இவையெல்லாம் ஹோலாண்டினது சொந்த கொள்கைகளின் ஏதோ சிறிய நடவடிக்கையால் உருவானவை அல்ல. ஆபிரிக்காவில், சிரியா மற்றும் ஈராக்கில், மற்றும் உக்ரேன் குறித்து ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோவுடன் சேர்ந்தும், பிரான்ஸ் ஈடுபட்டுள்ள பல்வேறு மோதல்கள் மற்றும் யுத்த நெருக்கடிகள் நிலவுகின்ற நிலையில், ஆண்களுக்குக் கட்டாய இராணுவ சேவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கட்டாய பொதுச் சேவையை பிரான்ஸ் மீண்டும் தொடங்கக்கூடுமென்ற சாத்தியக்கூறையும் ஹோலாண்ட் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தகையவொரு கொள்கையை, ஒரு வெகுஜன வாக்கெடுப்பினூடாக பொதுமக்களின் ஒப்புதலைப் பெற அனேகமாக அவர் சமர்ப்பிப்பார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஹோலாண்ட்டின் செயல்பாடுகள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு "இடது" ஸ்தாபகத்தின் திவால்நிலைக்கு சான்றுபகர்கின்றது. ஒரு மிகையதார்த்த மற்றும் அபாயகரமான நிலைமை மேலெழுந்துள்ளது, அதில் ஒட்டுமொத்த முதலாளித்துவ "இடதுகளும்" PSஐ ஆதரிக்கின்றன, வலதுசாரி மக்கள் இயக்கத்திற்கான யூனியனின் (UMP) கொள்கைகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு இருக்கும் இக்கட்சியின் வணிக-சார்பு கொள்கைகளோ, தேசிய முன்னணியை பிரான்சின் ஒரே எதிர்க்கட்சியாக முன்னுக்கு வர அனுமதித்துள்ளது. ஹோலாண்டின் பத்திரிகையாளர் கூட்டமானது, 2012 ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்று போட்டியின் போது ஹோலாண்டிற்கு ஆதரவு வழங்கிய பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் ஜோன்-லூக் மெலென்சோனின் இடது முன்னணி போன்ற போலி-இடது கட்சிகளின் மீது வைக்கப்படும் ஒரு குற்றப்பத்திரிகையை உள்ளடக்கி உள்ளது. 2012இன் இரண்டாம் சுற்று போட்டியில் ஹோலாண்டிற்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்த NPA ஜனாதிபதி வேட்பாளர் பிலிப் புட்டு அவரது அழைப்பை நியாயப்படுத்தி கூறுகையில், “[பதவியிலிருக்கும் வலதுசாரி நிக்கோலா] சார்க்கோசியை வெளியேற்றுவது என்பதே சுலோகமாகும், இதற்கான கருவி ஹோலாண்ட்," என்றார். உண்மையில், ஹோலாண்டிற்கு ஒரு கருவியாக சேவை செய்ததே NPA தான் — அவரது கொள்கைகள் ஒவ்வொன்றும் சார்க்கோசியால் கொண்டு வரப்பட்ட கொள்கைகளைப் போலவே வலதில் இருந்தன — மற்றும் அவ்விதத்தில் நிதியியல் பிரபுத்துவத்திற்குரியதாக இருந்தன. இந்த பிற்போக்குத்தனமான அரசியல்வாதியை, முற்போக்கான கொள்கைகளை முன்னெடுப்பதற்கு "அழுத்தம் அளிக்கலாம்" என்ற பிரமைகளைப் பரப்பி இவ்வாறு செய்யப்பட்டது. ஹோலாண்டின் பத்திரிகையாளர் கூட்டம், சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக கட்டமைந்து வருகின்ற தொழிலாள வர்க்கத்தின் வெடிக்கும் நிலையில் உள்ள சமூக கோபத்தையும் மற்றும் பிரான்சின் முதலாளித்துவ "இடது", போலி-இடது கட்சிகளை பிரித்துவைக்கும் வர்க்க இடைவெளியையும் எடுத்துக்காட்டுகிறது. பொருளாதாரத்தின் சிதைவு மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் சிதைவு தீவிரமடைந்தாலும் சரி, தேசிய முன்னணியின் வாக்குகள் அதிகரித்தாலும் சரி, யுத்தங்கள், சுதந்திர-சந்தை கொள்கைகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களைத் தவிர, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் போலி-இடது கூட்டாளிகளிடம், வழங்குவதற்கு வேறெதுவும் கிடையாது. |
|