தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS:Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்காMilitary launches coup amid mass protests in Burkina Faso பர்கினா பாசோவின் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்துகிறது
By Antoine Lerougetel Use this version to print| Send feedback நான்குபுறமும் நிலத்தால் சூழப்பட்ட மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினா பாசோவின் ஜனாதிபதி பிளைஸ் கோம்போரே (Blaise Compaoré), தொடர்ந்து பதவியிலிருக்கும் வகையில் அந்நாட்டின் அரசியலமைப்பை அவர் மாற்ற முனைந்த திட்டங்களுக்கு எதிராக செவ்வாயன்று பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னர், வியாழனன்று பர்கினா பாசோவின் தலைநகர் வாகடூகு இல் இராணுவம் ஒரு ஆட்சிகவிழ்ப்பை நடத்தியது. கோம்போரே அக்டோபர் 15, 1987இல் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார், அதன் போது காஸ்ட்ரோயிச ஜனாதிபதி தோமஸ் சன்காரா கொல்லப்பட்டார். பாரிஸ் மற்றும் வாஷிங்டனின் ஆதரவை அனுபவித்து வந்த கோம்போரே இனது பதவி காலத்தின் கீழ், 2011இல் ஐவரி கோஸ்ட்டிலும் மற்றும் தற்போது மாலியில் நடந்துவரும் யுத்தத்திலும் பிரெஞ்சு இராணுவ தலையீடுகளுக்கு ஒத்துழைக்க பர்கினோ பாசோ மிக நெருக்கமாக வேலை செய்துள்ளது. அவர் ஜனாதிபதியாக, ஏழாண்டு-பதவிகாலத்தில் இருமுறையும், பின்னர் ஐந்தாண்டு-பதவிகாலத்தில் இருமுறையும் உட்பட, மொத்தம் 27 ஆண்டுகள் பர்கினா பாசோவின் அரசு தலைவராக பதவியில் இருந்துள்ளார். பிந்தைய பதவிகாலம் தான் அவரை அவற்றிற்கு நெருக்கமாக கொண்டு வந்திருந்தது. வெளிப்படையாக இராணுவம் கண்டுங்காணாதது போல இருந்த நிலையில், வியாழனன்று, நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து, அதை சூறையாடினர். அங்கே, அன்றைய தினம், ஜனாதிபதி பதவிக்கான கோம்போரே இன் தகைமையை நீடித்து பிரதிநிதிகள் வாக்களிக்க இருந்தனர். அக்கூட்டம், பிரதான டிவி மற்றும் ரேடியோ கட்டிடங்களின் மீது கட்டுப்பாட்டை எடுக்க நகர்ந்தது. கோம்போரே இன் பதவி கவிழ்க்கப்பட்டதும், அவர் ஐவரி கோஸ்டில் பிரெஞ்சு-நியமன ஆட்சியான அலாஸ்சான் ஔத்தாரா (Alassane Ouattara) ஆட்சியிடம் தப்பியோடி இருந்த நிலையில், இராணுவத்திற்குள் ஒரு சிறிய அதிகார போராட்டம் நடந்தது. பின்னர் அது சனியன்று, ஜனாதிபதி பாதுகாவலர் படையின் இரண்டாவது தளபதியாக இருந்த, கோம்போரே இன் ஒரு நெருங்கிய விசுவாசியான கேர்னல் இசாக் யாக்கூபா சீடாவை, இடைக்கால ஜனாதிபதியாக நியமித்தது. அவர் அறிவித்தார், “அரசு தொடர்ந்திருப்பதை உறுதிசெய்ய, அரசு தலைவராகவும் மற்றும் மாற்றப்பட்ட தலைவரின் பொறுப்புகளையும் மற்றும் சுமூகமான ஜனநாயக மாற்றத்திற்கான பொறுப்புகளையும் ... இப்போது நான் ஏற்கிறேன்". சனியன்று அமைதியான மதிய 1 மணி கூட்டத்தில், பல கட்சிகள் மற்றும் மக்கள் குழுக்களின் ஒரு குடையாக விளங்கும் "எதிர்ப்பின் தலைமை" என்றறியப்படும், உத்தியோகபூர்வ ஏகாதிபத்திய-சார்பு எதிர்கட்சி, வியாழனன்று பிரெஞ்சு தூதரை சந்தித்திருந்ததுடன், இராணுவ ஆட்சிக்கு பாரிய நிராகரிப்பை திசை திருப்புவதற்காக மற்றும் அந்த ஆட்சிக்கவிழ்ப்பில் அதன் சொந்த பங்களிப்பும் இருந்ததை முறையிடுவதற்காக ஞாயிறன்று காலை ஒரு பேரணிக்கு அழைப்புவிடுத்தது. அதன் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது, “அதில் பங்கெடுத்தவர்கள் ஒருமனதாக ஒற்றுமையின் அவசியத்தை மறுஉறுதி செய்தார்கள் ... இந்த மிகப்பெரிய கிளர்ச்சியின் வெற்றி மக்களையே சாரும், அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றமும் சட்டரீதியில் அதனால் ஏற்பட்டதாகும், அதை இராணுவம் பறித்துக்கொள்ள முடியாது." பின்னர் அது பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அதன் வாக்குறுதிக்கு செல்கிறது: “பர்கினா பாசோ அதன் பிராந்திய மற்றும் சர்வதேச கடமைப்பாடுகளை மதிக்கும் வகையில், இந்த மாற்றம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக மற்றும் குடிமக்கள் குணாம்சத்தை, அந்த ஆலோசனை கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியது." இது பிரெஞ்சு அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் இணைந்து நிற்கிறது, அது பர்கினா பாசோவில் "அமைதி" திரும்ப அழைப்பு விடுத்திருந்தது. அமெரிக்க அரசாங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது: "நாங்கள் வன்முறையை நிறுத்துமாறும் மற்றும் கடுமையாக வென்றெடுக்கப்பட்ட ஜனநாயக நிகழ்வுபோக்கின் [மீது] அமைதியான நிகழ்முறைக்குத் திரும்புமாறும், பாதுகாப்பு படைகள் உட்பட, அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறோம்." இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்த போராட்டக்காரர்கள், வாகடூகுவின் தேசிய சதுக்கத்தில் (Place de la Nation) ஞாயிறன்று கூடினர். அவர்கள் இராணுவ தலைமை தளபதிக்கு கண்டனம் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. “நமது நாடு துல்லியமாக யாருடைய கைகளில் இருக்கிறது? அதிகாரத்தை கையிலெடுத்திருக்கும் இந்த சிப்பாய்கள், உண்மையில் யார் இவர்கள்? அவர்கள் பிளைஸ் கோம்போரே இன் நபர்களா என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை, அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை," என்று கேள்வி எழுப்பிய போராட்டக்காரர்களை Le Monde மேற்கோளிட்டிருந்தது. டேசிரே என்ற ஒரு போராட்டக்காரர் தெரிவித்தார்: “ஒவ்வொருவரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ... எங்களுக்கு இது வேண்டாம். ... அதே அமைப்புமுறையைத் தான் அவர்கள் பாதுகாக்க விரும்புகிறார்கள், எங்களுக்கு அலுத்து போய்விட்டது, எல்லா இளைஞர்களும் அலுத்துப் போயிருக்கிறோம். நாங்கள் வெறுமனே ஜனாதிபதி வெளியேற என்று மட்டும் விரும்பவில்லை, மாறாக ஒட்டுமொத்த அமைப்புமுறையே வெளியேற வேண்டும்," என்றார். நேற்று இரவு, இராணுவம் தேசிய சதுக்கத்தைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டதுடன், தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பையும் முடக்கியது. அவர்கள் எதிர்கட்சி தலைவர்களுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கூட்டங்களையும் நடத்தினர். இராணுவமும் சரி, முதலாளித்துவ எதிர்ப்பும் சரி இரண்டுமே ஏகாதிபத்திய சக்திகளோடு நெருக்கமாக வேலை செய்துவரும் பர்கினா பாசோவின் மதிப்பிழந்த நவ-காலனித்துவ ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை நசுக்க முனைந்து வருகின்றன. கோம்போரே இன் ஆட்சிக்கும் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கும் எதிரான பல தொடர்ச்சியான போராட்டங்களில் இது சமீபத்தியதாகும், 2007இல், பின்னர் எகிப்து மற்றும் துனிசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மேலெழுச்சிகளின் போது மீண்டும் 2011இல், அத்தகைய போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. 17 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அந்த முன்னாள் பிரெஞ்சு உடைமை, உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றாகும். அது 1896இல் பிரான்சால் காலனிமயமாக்கப்பட்டது, அப்பிராந்தியமெங்கிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அது ஒரு பிரெஞ்சு இராணுவ தளமாக விளங்குகிறது. "எதிர்ப்பின் தலைமை" செய்திதொடர்பாளர் Zéphirin Diabré, தற்காலிக பிரதிநிதியாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தற்போதைய மந்திரியாகவும் உள்ளார். அவர் 2006இல் இருந்து 2011 வரையில் பிரெஞ்சு பன்னாட்டு எரிசக்தித்துறை நிறுவனம் அரேவாவின் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு பிரிவுக்கான தலைமை செயலதிகாரியாக வேலை செய்து வந்தார். “சுரங்கத்துறையின் நிதியியல் வட்டாரங்களில் ஒரு ஆலோசகராக" ஆவதற்காக அவர் அந்த பதவியை இராஜினாமா செய்திருந்தார். 2012இல் இருந்து அவர் UPC கட்சியின் (முன்னேற்றம் மற்றும் மாற்றத்திற்கான சங்கம்) தலைவராகவும் இருந்துள்ளார். ஏகாதிபத்தியங்கள் ஒரு சாத்தியமான "ஆபிரிக்க கிளர்ச்சி" குறித்தும் மற்றும் அவற்றின் வாடிக்கை ஆட்சிகளுக்கு எதிரான மக்கள் கலகங்கள் குறித்த அச்சத்தாலும் நடுங்குவது, அக்டோபர் 7ஆம் தேதி ஹோலாண்டால் கோம்போரே க்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் வெளிப்படுகிறது, அக்கடிதம் அக்டோபர் 30இல் Jeune Afriqueஇல் பிரசுரிக்கப்பட்டது. அதிகாரத்தில் தொற்றிக் கொண்டிருக்க முயல வேண்டாமென்றும், அதன் மூலமாக அப்பிராந்தியத்தை மற்றும் அதன் வளங்களை, குறிப்பாக பிரெஞ்சு நிறுவனத்தின் சாஹெலில் உள்ள யுரேனியம் சுரங்கத்தின் மீதான அதன் கட்டுப்பாட்டைத் தக்க வைப்பதில் பிரான்சின் தகைமையை ஸ்திரமின்மைப்படுத்தும் ஒரு கலகத்தை தூண்ட வேண்டாமென்றும், அக்கடிதம் அவரிடம் முறையிட்டது. ஹோலாண்ட் அவரது நண்பர் "பிளைஸ்க்கு", “இணக்கமின்றி அரசியலமைப்பு மாற்றத்தைச் செய்யும் அபாயத்தை" எடுக்க வேண்டாமென அறிவுறுத்தி இருந்தார். அந்த கடிதம் "மாலியில் ஸ்திரப்பாட்டை மீட்டமைப்பதில் பர்கினா பாசோவின் கடமைப்பாட்டிற்கு" நன்றி தெரிவித்திருந்ததுடன், "அல்ஜியேர்ஸில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உங்களின் ஆதரவு, அரசாங்கத்திற்கும் ஆயுதமேந்திய குழுக்களுக்கும் இடையே ஓர் சமாதான உடன்படிக்கைக்கு இட்டுச்செல்லுமென நாங்கள் நம்புகிறோம்," என்றும் குறிப்பிட்டிருந்தது. ஹோலாண்ட் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தார், “MINUSMA இல் [பிரெஞ்சு தலைமையில் மாலியின் ஸ்திரப்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கையில்] மாலியினது அண்டைநாடுகளின் பங்களிப்பு இன்றியமையாததாகும். ... பேர்கினபே படைப்பிரிவின் பொறுப்புறுதியும் மற்றும் அந்த மலைப்பகுதிகளைக் குறித்த அதன் அறிவும் மிகவும் மதிப்புடையன." அவர் தொந்தரவு செய்யாமல் இராஜினாமா செய்ய உடன்பட்டிருந்தால், கோம்போரேக்கு இனிப்பூட்டும் வகையில், அவருக்கு தூதரகரீதியில் ஆதாயமுள்ள உபகார ஊதியம் கிடைக்கச் செய்ய ஹோலாண்ட் வாக்குறுதி அளித்தார்: “சர்வதேச சமூகத்தின் தீர்மானத்தின் மீது உங்களின் அனுபவத்தையும், திறமைகளையும் நீங்கள் செலவிட விரும்பினால், பின் பிரான்சின் ஒத்துழைப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்." |
|
|