World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Capitalism and the Ebola crisis

முதலாளித்துவமும், எபோலா நெருக்கடியும்

Niles Williamson
1 November 2014

Back to screen version

"எபோலா சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். தடுப்புமருந்துகள் இல்லாமல் மற்றும் குணப்படுத்த முடியாமல் இன்றும் சிகிச்சையாளர்கள் ஏன் வெறுங்கைகளோடு இருக்கிறார்கள்? ஏனென்றால் எபோலா வரலாற்றுரீதியில், புவியமைப்புரீதியில், வறிய ஆபிரிக்க நாடுகளுக்குள் மட்டும் ஏற்பட்டிருந்தது. ஆராய்ச்சியும் அபிவிருத்தி உதவிகளும் தோற்றப்பாட்டளவில் இருக்கவே இல்லை. இலாபத்திற்காக உந்தப்பட்ட தொழில்துறை, இலாபமில்லாத சந்தைகளுக்கான பொருட்களில் முதலீடு செய்வதில்லை."

இது உலக சுகாதார அமைப்பு இயக்குனர்-ஜெனரல் டாக்டர். மார்கரெட் சான் கூறியதாகும்

**

இம்மாத தொடக்கத்தில் டாக்டர் சான் வழங்கிய ஓர் உரையிலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட சாதாரண உண்மை, எபோலா நெருக்கடி பற்றிய மணிக்கணக்கான காட்சிகளின் மற்றும் ஆயிரக் கணக்கான பக்கங்களின் ஊடக செய்திகளில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

மருந்து உற்பத்தி மற்றும் மருத்துவ பராமரிப்பு தொழில்துறையின் தனியுடைமை மீதும், மற்றும் மிகப்பெரிய பெருநிறுவனங்களின் இலாப நலன்களின் அடிப்படையிலும் அமைந்த ஒரு பொருளாதார அமைப்புமுறையின் பகுத்தறிவற்ற மற்றும் சமூக-விரோத முன்னுரிமைகளால், மேற்கு ஆப்ரிக்காவில் அந்நோய் தோன்றுவதைத் தடுக்கக்கூடிய ஒரு தடுப்புமருந்தின் கண்டுபிடிப்பு தடுக்கப்பட்டிருந்தது. ஹூரிகேன் கேத்ரினா, ஆசிய சுனாமி, வளைகுடா எண்ணெய் கசிவு, நைஜீரியா, எதியோப்பியா மற்றும் ஏனைய நாடுகளின் பஞ்சங்கள் என அத்தகைய பேரழிவுகளின் வரிசையில் வந்திருக்கும் இந்த சமீபத்திய ஒன்றில், முதலாளித்துவத்தால் நேரடியாக அல்லது மிகவும் கொடுமையாக மற்றும் அழிவுகரமாக முடிவற்று மில்லியன் கணக்கானவர்கள் அபாயத்திற்குட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.  

இந்த இலாபகர அமைப்புமுறை ஒரு செல்வந்த மேற்தட்டால் சமூக உற்பத்திகளைச் செல்வ திரட்சிக்கு அடிபணிய வைப்பது மட்டுமல்ல, அது பெரிதும் ஒருங்கிணைந்த ஒரு உலகை எதிர்விரோத போட்டி தேசிய அரசுகளுக்குள் பிளவுபடுத்த முனைவதால், ஒரு பகுத்தறிவார்ந்த விதத்தில் சர்வதேச ஆதார வளங்களை ஒன்றுதிரட்டுவதையும் தடுக்கிறது. இப்போதைய நெருக்கடிக்கு, அங்கே ஒருங்கிணைந்த சர்வதேச விடையிறுப்பு எதுவும் இல்லை, ஏனென்றால் அதுபோன்ற எந்தவொரு ஒருங்கிணைவும் தேசியரீதியில் அமைந்த எதிர்விரோத பெருநிறுவன மேற்தட்டுக்களின் போட்டிமிகுந்த தற்போதைய நலன்களை கீழறுக்கின்றது.

உலக சுகாதார அமைப்பு தகவலின்படி, அக்டோபர் 31 வரையில் அங்கே எட்டு நாடுகளில் 4,951 இறப்புகளுடன், 13,567 எபோலா நோயாளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய நாள் வரையில் அது வேறு இடங்களில் தடுக்கப்பட்டிருக்கின்ற போதினும், அந்நோய் லைபிரியா, சியாரா லியோன், மற்றும் கினியா ஆகிய ஆழமாக வறுமைப்பட்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளில் தொடர்ந்து பரவி வருகிறது.       

மருந்து தயாரிப்பு தொழில்துறையின் இலாப நலன்களால் மருந்து கண்டுபிடிப்பு தடுக்கப்பட்டுள்ள நோய்களில், மேற்கு ஆபிரிக்கா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளைச் சூறையாடும் எபோலா மட்டுமே அல்ல. அவற்றில் பெரிதும் உயிர்பறிக்கத்தக்கதும் மற்றும் நன்கறியப்பட்டவையும் ஆன டெங்கு காய்ச்சல் மற்றும் லஸ்ஸா காய்ச்சல் ஆகியவையும் உள்ளன.  

கொசுக்களால் மனிதர்களுக்குப் பரவும் டெங்கு காய்ச்சல், பூமியின் மகர ரேகை மற்றும் கடக ரேகைக்கு இடைப்பட்ட பெரும் பகுதியில் காணப்படும் ஒரு பொதுவான நோயாக உள்ளது. இந்த நோயின் கடுமையான பாதிப்புகள் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அறியப்பட்டு, அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் முதன்முதலில் 1920களில் தொடங்கின. ஆபிரிக்காவில் தோன்றிய டெங்கு, 1950களில் ஒரு பயங்கரமான உலகந்தழுவிய பிரச்சினையாக மேலெழுந்தது.  

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் 50இல் இருந்து 100 மில்லியன் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 25,000 பேர் இறப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது. இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்க அங்கே எந்தவொரு ஒருங்கிணைந்த முயற்சியும் இல்லை. முற்றிலும் உத்திரவாதமளிக்கும் ஒரு மருந்து இந்த ஆண்டின் தொடக்கம் வரையில் மனித பரிசோதனை ஆய்வுகளுடன்வரையே இருந்தது.

எபோலாவைப் போலவே அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோய், லஸ்ஸா காய்ச்சல், இது கொறித்து உண்ணும் பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. 1969இல் மேற்கு ஆபிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட அந்நோய், அப்பிராந்தியம் எங்கிலும் பரவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கே சுமார் 5,000 மக்களின் உயிரிழப்போடு, 300,000இல் இருந்து 500,000 பேர் இதனால் தாக்கப்படுகிறார்கள். சியாரா லியோன் மற்றும் லைபிரியாவில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மக்களில் 10இல் இருந்து 16 சதவீதத்தினர் லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். அந்நோய் கண்டறியப்பட்டதிலிருந்து, நான்கு தசாப்தங்களுக்கு அதிகமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்ற போதினும், முற்றிலும் உத்திரவாதமளிக்கும் மருந்துகள் விலங்குகளில் பரிசோதனை செய்யும் கட்டத்தில் தான் இருக்கின்றன.

தற்போது எபோலா இந்தளவுக்கு வெடித்திருப்பதற்கும் மற்றும் ஏனைய உயிர்பறிக்கும் நோய்கள் தாக்குவதற்கும் ஒரு முக்கிய காரணி, ஆபிரிக்க கண்டம் முழுவதிலும் மேலோங்கி உள்ள பலமான வறுமையாகும். லைபிரியா, சியாரா லியோன் மற்றும் கினியா ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டு தனிநபர் வருமானம் முறையே $878, $1,927 மற்றும் $1,255 என்ற அளவோடு, கடந்த ஆண்டு உலகின் மிகவும் வறிய நாடுகளின் பட்டியலில் இருந்தன. இது உலகளாவிய மொத்த உற்பத்தியில் தனிநபர் வருமானத்தின் பங்கான $14,293ஐ விடவும் மிகவும் குறைவாகும். இம்மூன்று நாடுகளிலும் பெரும்பான்மை மக்கள் முன்னேற்றமடையாத கிராமங்களில் அல்லது துர்நாற்றம் நிறைந்த நகர்புற சேரிகளில் வாழ்கிறார்கள்.   

லைபிரியாவின் நகர்புற மக்களில் ஐந்து சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கே மேம்பட்ட கழிவறை வசதிகளைப் பெற முடிந்துள்ளது, அதேவேளையில் சியாரா லியோனின் 26 சதவீதத்தினருக்கும் சற்று அதிகமான கிராமப்புற மக்களால் மட்டுமே மேம்பட்ட குடிநீர் ஆதாரத்தை அணுக முடிந்துள்ளது. லைபிரிய தலைநகர் மோன்ரோவியாவின் இழிபெயர்பெற்ற வெஸ்ட் பாயிண்ட் சேரியில் கழிநீர் வெளியேற்றும் வசதி கூட இல்லை. மக்கள் அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டிய பகுதியிலும் மற்றும் பிரதான ஆறை ஒட்டிய பகுதிகளிலும் திறந்தவெளி கழிவறைகளைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்

இத்தகைய நிலைமைகள் எபோலா மற்றும் ஏனைய உயிர்பறிக்கும் நோய்கள் வேகமாக பரவுவதற்குரிய நிலைமைகளைத் தோற்றுவிக்கின்றன

இத்தகைய நோய்கள் மற்றும் அவை பரவுகின்றன பின்தங்கிய நிலைமைகள் தொடர்ந்து நீடித்திருப்பது, நீண்டகால காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியத்திலிருந்து வருகிறது. அந்நாடுகளின் ஆதாரவளங்களுக்காக அவற்றைச் சூறையாடிய ஏகாதிபத்திய சக்திகளான, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்த கொடூரமான சமூக விளைவுகளுக்கு முதன்மை பொறுப்பைத் தாங்கியுள்ளன.    

லைபிரியா, சியாரா லியோன் மற்றும் கினியா இந்த ஏகாதிபத்திய சக்திகளின் காலனிகளாக ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. அமெரிக்க காலனித்துவ சமூகம், 1822இல் சுதந்திரமளிக்கப்பட்ட அமெரிக்க அடிமைகளுக்கான ஒரு காலனியாக லைபிரியாவை உருவாக்கியது. அந்நாடு 1846இல் அதன் உத்தியோகப்பூர்வ சுதந்திரத்தைப் பெற்ற போதினும், அப்போதிருந்தும் அது அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்து வந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனால் சுதந்திரமளிக்கப்பட்ட அடிமைகளுக்கு ஒரு காலனி நாடாக சியாரா லியோன் ஸ்தாபிக்கப்பட்டு, 1960 வரையில் நேரடி காலனிய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் கினியா பிரெஞ்சு காலனியாக ஸ்தாபிக்கப்பட்டு, 1958 வரையில் பிரெஞ்சு கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது.

மேற்கு ஆபிரிக்காவின் தற்போதைய நெருக்கடிக்கு பிரதான சக்திகளின் விடையிறுப்பானது, ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அந்நாடுகளின் இரத்தம் உறிஞ்சிய அதே சூறையாடும் நலன்களால் தான் உந்தப்பட்டுள்ளது. லாடெக்ஸ் (லைபிரியா), வைரம் மற்றும் இரத்தினக்கற்கள் (சியாரா லியோன்) மற்றும் பாக்சைட் (கினியா) உள்ளடங்கிய அதன் இயற்கை வளங்கள் மீதும் மற்றும் அப்பிராந்தியத்தின் மீதும் அவற்றின் கட்டுப்பாட்டை விரிவாக்க, அமெரிக்காவில் ஆரம்பித்து ஏகாதிபத்திய சக்திகள் ஒவ்வொன்றும் எபோலா நெருக்கடியைச் சுரண்டி வருகின்றன

ஆயிரக் கணக்கான மருத்துவ சிகிச்சையாளர்களை அனுப்புவதற்கு பதிலாக, அமெரிக்கா ஆயிரக் கணக்கான துருப்புகளை நிலைநிறுத்தி உள்ளது, எதற்காக என்றால் அந்த கண்டத்தில் அதன் ஆபிரிக்க படைப்பிரிவைக் காலூன்ற வைப்பதற்காக

முதலாளித்துவத்தால் உண்டாக்கப்பட்ட சமூக சீரழிவுகளின் காரணமாகவே, எபோலா போன்ற நோய்கள் பற்றிப்பரவுகின்றன. தற்போதைய நெருக்கடியைத் தீர்க்கவும் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்றவை வராமல் தடுக்கவும், சர்வதேச தொழிலாளர் வர்க்கம் விடயங்களை அதன் கைகளில் எடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் ஏகாதிபத்திய மையங்கள் இரண்டின் மீதும் பெருநிறுவன தன்னலக்குழுக்களின் பிடியை முறிக்கக்கூடிய மற்றும் ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்கக்கூடிய ஒரே படை அது மட்டுமே ஆகும்.

மருந்து உற்பத்தி தொழில்துறையின் தனியுடைமை அகற்றப்பட்டு, உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுவுடைமையால் அது மாற்றீடு செய்யப்பட வேண்டும். வறுமையுடன்-பிணைந்த தொற்றுநோய்களைத் துடைத்தெறிய, அதைச் செய்து முடிக்க பல பில்லியன்கள் அவசியமானாலும் கூட, மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தலைமையில், தற்போதைய எந்தவொரு அரசாங்கத்தையும் சாராமல், ஒரு சர்வதேச முனைவு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். உலக பில்லியனர்களின் செல்வவளத்தைக் கைப்பற்றினாலே அதுபோன்ற ஒரு முயற்சிக்கு பல மடங்கிற்கு மேலான செல்வம் கிடைத்துவிடும்.