World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Police attack immigrant camp in Calais, France பிரான்ஸ் கலே நகரில் போலிஸ் புலம்பெயர்ந்தோர் முகாம் மீது தாக்குதல் நடத்துகிறதுBy Pierre Mabut புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதே, இந்த வாரத்தில் நடந்த ஐரோப்பியத் தேர்தல்களில் நவ-பாசிஸ்டுகளுக்கான வாக்குகள் அதிகரித்ததற்கு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அளித்த பதிலிறுப்பாக உள்ளது. புதனன்று காலை 8 மணிக்கு, நூற்றுக்கணக்கான பிரான்சின் கலகத் தடுப்பு போலிசார் ஆங்கிலக் கால்வாயில் இருக்கும் துறைமுக நகரான கலேயில் அமைந்திருக்கும் தற்காலிக புலம்பெயர்ந்தோர் முகாம்களுக்குள் திடீரென நுழைந்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆவணங்களற்ற 800 புலம்பெயர்ந்த மக்கள் -அநேகம் பேர் சிரியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் ஆபிரிக்கர்கள்- தங்கியிருந்த மூன்று முகாம்கள் போலிசாரால் தகர்த்தெறியப்பட்டது. அவற்றில் தங்கியிருந்தவர்கள் கைதைத் தவிர்க்க சிதறியோட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தங்கியிருந்த புலம்பெயர்ந்தோரில் அநேகம் பேருக்கு போலிஸ் நடவடிக்கை குறித்து செவிவழிச் செய்தி கசிந்து விட்டதால், அவர்கள் போலிஸ் வரும் முன்பாகவே அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். புலம்பெயர்ந்தோர் மீது பிரெஞ்சு அதிகாரிகள் இங்ஙனம் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதானது மூன்று நாட்களுக்கு முந்தைய ஐரோப்பிய தேர்தல்களில் பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) பெற்ற வெற்றிக்கு பிரதமர் மானுவேல் வால்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அளிக்கின்ற பதிலிறுப்பாகும். அரசாங்கமானது, தேசிய நாடாளுமன்றத்தில் இருக்கும் UMP போன்ற வழக்கமான எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு, புலம்பெயர்ந்தோரை துன்புறுத்துவதன் மூலம் பதிலிறுப்பு செய்து FN இன் வேலைத்திட்டத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்தோரிடையே சிரங்குநோய் வகை (Scabies) பீடித்திருப்பதால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையிருப்பதாகக் கூறி புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மீதான சோதனைக்கு சாக்கு கூறப்பட்டது. ஆயினும் போலிஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிச் செல்ல நிர்ப்பந்தம் பெற்றவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட குளியல் வசதிகளோ சுத்தமான ஆடைகளோ கிடைக்கப் பெறவில்லை. “வெளியேற்றுபவர்களுக்கு என கொடுக்கப்பட வேண்டிய எந்த குளியல் வசதிகளையும் அவர்கள் வழங்கவில்லை” என உலக டாக்டர்கள் என்னும் தொண்டு அமைப்பைச் சேர்ந்த செசில் போஸி தெரிவித்தார். இடம் குறிப்பிடப்படாத ஒரு இடத்திற்கு அவர்களைக் கொண்டுசெல்ல பேருந்துகள் அணிவகுத்து நின்றன. ஆனால் கலேயில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான ஒரு சூழ்ச்சி நடவடிக்கை தான் இது என்று கருதியதால் வெகு சிலர் மட்டுமே இந்தப் பேருந்துகளில் ஏறினர். ஆதரவுக் குழுக்களின் உதவி கிட்டிய புலம்பெயர்ந்தோர் சிலர் போலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போர் மற்றும் பட்டினியால் துன்புறும் ஆயிரக்கணக்கான அகதிகள் கால்வாயைக் கடந்து இங்கிலாந்தை அடைவதற்கு முயற்சி செய்யும்போது அவர்களின் கடைசி நிறுத்தமாக இருப்பது இந்த கலே துறைமுகமாகும். கலே துறைமுக முகாம்கள் பலமுறை நாசப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடைசியாக 2009 இல் இந்த முகாம்கள் ஒரு “காடு” என குறிப்பிடப்பட்டதொரு சமயத்தில், வலதுசாரி கன்சர்வேட்டிவ் ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசியால் நாசப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டில் மட்டும், கால்வாயைக் கடந்து இங்கிலாந்து செல்லும் முயற்சியில் டிரக்குகளிலும் பேருந்துகளிலும் ஏற முயன்று நசுங்கி உயிர்விட்ட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் எட்டு இருக்கும். மூன்று வாரங்களுக்கு முன்பாக, ஆஸிஃப் ஹூசைன்கில் என்ற 23 வயது ஆப்கானியர் தற்காலிக தோணி ஒன்றில் உடல்சூடு மிகுந்து ஆபத்தான நிலையில் பயணித்துக் கொண்டிருந்த போது பிடிபட்டார். அந்த பாய்மரத் தோணி வெறுமனே மரப் பலகைகள், ஒரு மிதவை, தார்பொலித்தீன் மற்றும் படுக்கை விரிப்பைக் கொண்டு செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்நிலையில் பிடிபட்டாலும் அவர் மனம்தளரவில்லை மறுபடியும் செல்ல முயற்சிப்பேன் என்று கூறினார். FN மற்றும் UMP இன் அதே பிற்போக்குத்தன பாதையில் தான் சோசலிஸ்ட் கட்சியும் (PS) பயணம் செய்து கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிறன்று நடந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பிரான்சின் வட மேற்குத் தொகுதியில் FN தலைவரான மரின் லு பென் 33.6 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதற்குப் பின்னர் —இது FN க்கு மிகப் பெரும் வெற்றியாக இருந்தது, பிரான்ஸ் முழுவதிலும் FN பெற்ற 25 சதவீத வாக்குகளை விட இது மிக அதிகமாகும்— புலம்பெயர் மக்களுக்கு எதிரான இந்த சமீபத்திய நடவடிக்கை வந்து சேர்ந்திருக்கிறது. கலேக்கு அருகிலுள்ள Hénin-Beaumont நகரத்தில் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) ஆதரவுடன் சோசலிஸ்ட் கட்சி நடத்தி வந்த நகரசபையில் பல தசாப்த கால ஊழல் நடைபெற்று வந்ததை அடுத்து, இந்நகரும் தேர்தலில் FN இன் கைவசம் சென்று விட்டது. கலே நகரமும் கூட 2008 இல் வலது சாரி கோலிசவாத UMP இன் கைகளுக்கு செல்கின்ற வரையில் PCF ஆல் தான் பல தசாப்தங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. பாரம்பரியமான தொழில்துறைகளை இழுத்து மூடி, பாரிய வேலைவாய்ப்பின்மையை உருவாக்குவதில் இந்தக் கட்சிகள் புரிந்த சாதனையின் காரணமாக, ஒரேயொரு எதிர்ப்புக் கட்சியாக நவ-பாசிச FN தனது வாய்வீச்சைக் கொண்டு தன்னை முன்நிறுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் 14 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்ற PS அரசாங்கத்தால் கலேயில் புலம்பெயர்ந்தோர் நடத்தப்பட்டிருக்கும் விதம், பிரான்ஸ் முழுவதிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துச் சென்று கொண்டிருப்பதன் ஒரு கூர்மையான அடையாளமாகும். ரோமாக்களை கூட்டம் கூட்டமாக நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வந்திருக்கும் PS அரசாங்கம் மார்ச் மாதத்தில், முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த மானுவல் வால்ஸை பிரதமராக பரிந்துரைத்ததன் மூலமாக, சட்டம்-ஒழுங்கு கொள்கை தொடர்பாக அதி-வலது மனோநிலைக்கு அழைப்பு விட்டுக் கொண்டிருக்கிறது. |
|