தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan pseudo-lefts justify front with right-wing UNP இலங்கை போலி இடதுகள் வலதுசாரி யுஎன்பீ உடனான கூட்டை நியாப்படுத்துகின்றனர்
By Vilani Peiris Use this version to print| Send feedback இலங்கையில் போலி-இடது கட்சியான ஐக்கிய சோசலிசக் கட்சி (யுஎஸ்பீ), “இலங்கை தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் சவால்கள்-2014” என்ற தலைப்பில் ஒரு முன்னோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. ஐனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை எதிர்க்கின்ற போர்வையின் கீழ், அமெரிக்க சார்பான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சிக்கு (யுஎன்பீ) தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதே இந்த ஆவணத்தின் நோக்கமாகும். பெப்ரவரியில், மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்காக யுஎஸ்பீ வெளியிட்ட சுருக்கமான அறிக்கை, சோசலிசத்துக்கான போராட்டத்துக்காக ஒரு “ஐக்கிய இடதுசாரி சக்தியை” கட்டியெழுப்புவதே தனது பிரச்சாரத்தின் முதல் நடவடிக்கையாக குறிப்பிட்டிருந்தது. யுஎஸ்பீ இன்னொரு போலி-இடது கட்சியான நவசமசமாஜக் கட்சியுடன் இணைந்து மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றது. “ஐக்கிய இடது முன்னணிக்கான” யுஎஸ்பீயின் அழைப்புக்கும் சோசலிசத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதன் முன்னய சகல “கூட்டுக்கள்” போல், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தை தடுப்பதற்காகே அது முயற்சிக்கின்றது. இந்த விடயத்தில் யுஎஸ்பீ, நவசமசமாஜ கட்சிகள் இரண்டும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கத் தரத்திற்கும் எதிரான தாக்குதலில் நீண்டவரலாற்றைக் கொண்ட, பேர் போன பெரும் வர்த்தகர்கள் கட்சியான யுஎன்பீயுடன் நடைமுறையிலேயே கூட்டுச் சேர்ந்துள்ளன. யுஎஸ்பீ முன்னோக்கு பிரகடனப்படுத்தியதாவது: “அரசாங்கத்தின் ஒடுக்குமுறையான சூழ் நிலையில், நாம் ஐக்கியப்பட்ட பிரச்சாரத்தை தொடுக்க வேண்டும். இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஓடுக்குமுறை நடவடிக்கைளுக்கு எதிராக முதலாளித்துவ கட்சிகளுடனேயே கூட கூட்டுச்சேர வேண்டிய நேரம் வரும். சர்வாதிகார அரசின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக ஏகாபத்திய அடிவருடியான முதலாளித்துவ யுஎன்பீயுடன் வீதிப்போராட்டத்தில் பங்குபற்றுவதோடு ஒரே மேடையில் தோன்ற வேண்டிவரும்.” “ஏகாதிபத்திய அடிவருடி” உடனான தனது கூட்டை நியாப்படுத்துவதற்காக, யுஎஸ்பீ வரலாற்றை பொய்மைப்படுத்துவதுடன் தலைமைகளின் காட்டிக் கொடுப்பால் உருவாக்கப்பட்ட தோல்விகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் மீது குற்றம் சுமத்துகின்றது. “அமைப்பு ரீதியான தொழிலாள வர்க்க இயக்கத்தாலேயே” இராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும் என பிரகடனப்படுத்திய பின், முன்னோக்கு ஆவணம் தெரிவிப்பதாவது: “எனினும், 1980 பொது வேலை நிறுத்தத்தின் தோல்வி,” மற்றும் 1964ல் முதலாளித்துவ கூட்டு அரசாங்கத்தில் நுழைந்து “பழைய இடதுசாரி இயக்கங்களின் தலைமைத்துவங்கள் செய்த காட்டிக்கொடுப்பினால் ஏற்பட்ட ஒட்டுமொத்த அழிவில் இருந்தும் இன்னும் தொழிலாள வர்க்கம் மீளவில்லை.” 1964 மற்றும் 1980 பற்றி யுஎஸ்பீ பேசுவது, தொழிலாள வர்க்கத்துக்கான வரலாற்று படிப்பினைகளை தெளிவுபடுத்துவதற்காக அன்றி, அதை மூடி மறைப்பதற்காகவும் யுஎன்பீ உடனான கூட்டணியை நியாப்படுத்துவதற்காகவுமே ஆகும். யுஎன்பீ அரசாங்கமே பொது வேலைநிறுத்த இயக்கத்தை நசுக்கியது என்ற உண்மையை அந்த முழு அறிக்கையின் எந்த இடத்திலும் இந்த அரசியல் போலிகள் குறிப்பிடவில்லை. மேலும், லங்கா சமசமாஜக் கட்சி (லசசக), ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய “பழைய இடதுசாரி தலைமைகள்”, அதே போல் யூஎஸ்பீ ஒரு பாகமாக இருந்த நவசமசமாஜக் கட்சியும் இந்தப் பாரிய தோல்விக்கு வழிவகுத்தன. யுஎஸ்பீ தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, தொழிலாளர்களும் இளைஞர்களும் அவருடைய கட்சியின் வெட்கக் கேடான வரலாற்றை அறிந்திருக்கமாட்டார்கள் அல்லது மறந்திருப்பார்கள் என சந்தேகமின்றி நம்புகிறார். லங்கா சமசமாஜக் கட்சி 1964ல் அனைத்துலக சோசலிசக் கொள்கையை காட்டுக்கொடுத்து, இராஜபக்ஷ இப்பொழுது தலைமை தாங்குகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீலசுக) தலைமையிலான கூட்டரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்தபோது, யுஎஸ்பீ தலைவர் ஜயசூரியவும் நவசமசமாஜ தலைவர் விக்கிரம்பாகு கருணரத்தனவும் லங்கா சமசமாஜ கட்சி அங்கத்தவர்களாக இருந்தார்கள். ஜயசூரிய மற்றும் கருணரத்ன, 1964ல் கவிழ்ந்த முதலாவது கூட்டரசாங்கம் தொடங்கி இரண்டாவது கூட்டரசாங்கத்திலும் தொடர்ந்தும் பங்குபற்றியிருந்தாரகள். 1971 எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியமை, இனவாத அரசியலமைப்பையும் தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்ச கொள்கையையும் திணிதித்தமை மற்றும் வாழ்க்கைத்தரத்தின் மீதான தாக்குதல் உட்பட்ட, ஸ்ரீலசுக- லசசக-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கத்தின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அனைத்து தாக்குதலுக்குமான அரசியல் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜயசூரிய மற்றும் கருணரத்ன, தொழிலாள வர்க்கத்தின் பலத்த எதிர்ப்பின் மத்தியில் 1977ல் தேர்தலில் அழிவுகரமான தோல்வியின் பின்னரே லசசகயில் இருந்து வெளியேறினர். அதன் பெயர் அர்த்தப்படுத்துவது போலவே, நவசமசமாஜவானது லசசகயின் ஒரு புதிய முகம் மட்டுமே. யுஎன்பீ அரசாங்கத்தின் ‘திறந்த சந்தை’ பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக 1980ல் நடந்த அரசாங்க ஊழியர்களின் பொது வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுத்ததில் நவசமசமாஜ முக்கிய பாத்திரத்தை வகித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்காக, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன கொடூரமான அவசரகால சட்டத்தை பிரயோகித்து 100,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தார். சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (புகக), அனைத்துலக சோசலிச முன்னோக்கின் ஒரு பாகமாக சோசலிசக் கொள்கையின் அடிப்படையிலும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் அடிப்படையிலும் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டியது. கருணரத்னவும் ஜயசூரியவும் புககவை கடுமையாக எதிர்த்தார்கள். வேலை நிறுத்த இயக்கத்துள் “அரசியல் இருக்க கூடாது” என வலியுறுத்தியதுடன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என போலியாகக் கூறிக்கொண்டார்கள். “அரசியல் இல்லை” என்ற சுலோகமானது யுஎன்பீ அரசாங்கத்திற்கு எதிரான எந்த ஒரு அரசியல் போராட்டத்தையும் எதிர்த்த ஸ்ரீலசுக, லசசக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கங்களின் வழியை பின்பற்றுவதாக இருந்தது. இப்போது நவசமசமாஜவினதும் அதில் இருந்து பிரிந்த யுஎஸ்பீயினதும் வர்க்க ஒத்துழைப்பு மற்றும் கூட்டணிவாத அரசியல், ஒரு முழு வட்டமாக திரும்பியுள்ளது. 1980 காலத்தில், “வலதுசாரி யுஎன்பீயை” கண்டிப்பதன் மூலம் ஸ்ரீலசுகவுக்கான தனது ஆதரவை நவசமசமாஜ நியாயப்படுத்தியது. இப்போது யுஎஸ்பீயும் நவசமசமாஜவும் யுஎன்பீ உடனான தமது கூட்டை பாதுகாக்க இராஜபக்ஷவையும் ஸ்ரீலசுகவையும் கண்டனம் செய்கின்றன. இரண்டு விடயங்களிலும், எதாவது ஒரு முதலாளித்துவ கன்னைக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதே நோக்கமாகும். யுஎன்பீயுடனான பிற்போக்கு கூட்டை விமர்சிப்பவர்களை, “ஒரத்திலிருந்து கொக்கரிக்கும் சிறிய குழுவாத இடதுகள்” என யுஎஸ்பீ கண்டிக்கின்றது. யாரென பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் நவசமசமாஜவும் யுஎஸ்பீயும் கடந்த ஐந்தாண்டுகளாக சுதந்திரத்துக்கான மேடை, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, ஐக்கியத்தின் சக்தி என யுஎன்பீயுடன் ஏற்படுத்திக்கொண்ட பலவகையான கூட்டுக்களையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்தது சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மட்டுமே. நவசமசமாஜவும் யுஎஸ்பீயும் யுஎன்பீ தலைமையிலான ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை வெளிப்படையாக முன்னிலைப்படுத்துகின்றன. ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டினால்: கடந்த ஆகஸ்டில் வெலிவேரிய கிராமவாசிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராக, யுஎன்பீ ஒரு மறியல் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. தமது பிரதேசத்தில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலையை மூடுமாறு கிராமவாசிகள் கோரினார்கள். அங்கு பேசிய ஜயசூரிய கூறியதாவது: “அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், மக்கள் அமைப்புகள், ஊடகங்கள், பெளத்த அமைப்புகள் ஆகிய நாங்கள் எல்லோரும், அரசாங்கத்தை வெளியேறுமாறு அறிவித்தல் அனுப்ப இங்கு வந்துள்ளோம். ஒரு ஜனநாயக ஆட்சியை, ஒரு மக்கள் அரசாங்கத்தை கொண்டுவர நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்”. யுஎஸ்பீயும் நவசமசமாஜ கட்சியும் யுஎன்பீயை ஜனநாயகத்தையும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களையும் பாதுகாக்கும் அமைப்பாக சித்தரிக்கின்றன. 1983ல் தீவில் இனவாத யுத்தத்தை ஆரம்பித்து அதன் முடிவுவரை அதை ஆதரித்த யுஎன்பீயின் இரத்தம் தோய்ந்த வரலாற்றை அவர்கள் வேண்டுமென்றே மூடி மறைக்கின்றனர். 1980களின் பிற்பகுதியில் இருந்த யுஎன்பீ அரசாங்கம், இராணுவ-பின்னணியிலான கொலைப்படைகளால் 60,000 கிராம்புற இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டமைக்கு தலைமை வகித்ததுடன் ஏனைய எண்ணிலடங்கா ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாளியாகும். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில், தமிழ் உயர்தட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பை யுஎஸ்பீ ஆதரிக்கின்றது. யுஎஸ்பீயும் நவசமசமாஜவும் யுஎன்பீயையும் தமிழ் கூட்டமைப்பையும் ஆதரிப்பதன் மூலம், தமது ஏகாதிபத்திய சார்பு நோக்கு நிலையை காட்சிப்படுத்தியுள்ளன. இராஐபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இழைத்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரி, ஐநா மனித உரிமைகள் பேரவையில் (யுஎன்எச்ஆர்சி) அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்த எல்லாக் கட்சிகளும் ஆதரித்தன. அமெரிக்கா, “மனித உரிமைகள்” பிரச்சனையை வஞ்சத்தனமாக சுரண்டிக்கொண்டு இராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவை கைவிடுவதற்கு அழுத்தம் கொடுக்கின்றது. வாஷிங்டன் சீனாவுக்கு எதிரான யுத்தத் தயாரிப்பின் ஒரு பாகமாக பெஜிங்கை இராஜதந்திர ரீதியிலும் இராணுவ ரீதியிலும் தனிமைப்படுத்துவதில் ஆக்கிரோசமாக முன்நகர்கின்றது. அதன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரசியல் பொறிமுறையில், யுஎஸ்பீ ஒரு “பலமான இடது இயக்கத்தை” கட்டி எழுப்ப “இடது” மீள்குழுவமைவுக்கு உந்துதல் கொடுக்கின்றது. அது சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து (ஜேவிபீ) பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சியை (முசோக) குறிப்பாகப் புகழ்கின்றது. முசோக “இடதுகளை ஐக்கியப்படுத்த” யுஎஸ்பீ, நவசமசமாஜ மற்றும் சில தொழிற்சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடனும் கலந்துரையாடலை தொடங்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு, வங்கியாளர்களின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்திய ஆட்சியில் இருந்த கிரேக்க அரசாங்கங்கள் மீதான தொழிலாளர்களின் எதிர்பை தடுத்த, சிரிசா (SYRIZA) அமைப்பை முசோக பாராட்டுகின்றது. சிரிசாவைப் போன்று, யுஎஸ்பீயின் மறுகுழுவமைவு சதியும், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் நசுக்குவதே ஆகும். முசோகயின் அழைப்பை நிராகரித்து, அத்தகைய ஒரு மறுகுழுவமைவின் பிற்போக்கு பாத்திரத்தையும் தெளிவுபடுத்தியது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். போலி இடதுகள், இலங்கையிலும் உலகம் பூராவும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களையிட்டு அவர்களை குருடர்களாக்குவதற்காக, ஆளும் வர்க்கத்தின் கட்சிகளுடனும் ஊடகங்களுடன் இணைந்துகொண்டுள்ளன என சோசலிச சமத்துவக் கட்சி அதன் மாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் எச்சரிக்கை செய்தது. அமெரிக்கா தனது பூகோள ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு இராணுவ பலத்தை பிரயோகிக்கின்ற நிலையில், உலத்தை யுத்தத்திற்குள் இழுத்துச் செல்லும் புவிசார் அரசியல் பதட்ட நீர்ச்சுழிக்குள் இலங்கையும் இழுபட்டுச் செல்கின்றது என நாம் தெளிவுபடுத்தினோம். சோசலிச சமத்துவக் கட்சி, சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் யுத்தம், சமூக எதிர்ப்புரட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடுகின்றது. எதிர்வரவுள்ள போராட்டங்களுக்கு புரட்சிகரத் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு, சோசகயிலும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பிலும் இணையுமாறு தொழிலாளர் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த புரட்சிகர முன்னோக்குக்கு ஆதரவைக் காட்டுவதற்காக, மாகாண சபை தேர்தலில் சோசகக்கு வாக்களிக்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். |
|
|