World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French neo-fascist victory in European elections exposes bankruptcy of ruling elite ஐரோப்பிய தேர்தலில் பிரெஞ்சு நவ-பாசிஸ்டுகளின் வெற்றியானது ஆளும் உயரடுக்கின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறதுBy Alex
Lantier ஞாயிறன்று நடைபெற்ற ஐரோப்பியத் தேர்தல்களில் பிரான்சில் நவ-பாசிச தேசிய முன்னணி முதலிடத்தைப் பிடித்திருப்பதானது, பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் திவால்நிலையினது பேரழிவுதரும் வெளிப்பாடாகும். சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் குறித்தும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்தும் கோபம் பெருகி வருகிறது. ஆயினும், இந்த நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த “இடதும்” உடந்தையாக இருப்பதால், அதி-வலதே ஆதாயமடைந்திருக்கிறது. பிரிட்டனின் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) மற்றும் டேனிஷ் மக்கள் கட்சி உள்ளிட பல வலது-சாரிக் கட்சிகள் வெற்றி பெறுவதைக் கண்டிருக்கும், ஐரோப்பாவெங்கிலும் நடந்த இந்த வரிசையான தேர்தலின் மிக முக்கிய அம்சமாக, பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பாரம்பரியமான கட்சிகளை FN நிலைகுலையச் செய்ததானது இருந்தது. நேற்று வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, FN 24.85 சதவீத வாக்குகளை பெற்று வலது-சாரி மக்கள் பெரும்பான்மைக்கான ஒன்றியத்தை (UMP) இரண்டாமிடத்திற்கு தள்ளியது. UMP 20.80 சதவீத வாக்குகள் பெற்றது, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அவமதிப்பான வகையில் வெறும் 13.98 சதவீதம் வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டது. போலி-இடதுகளான இடது முன்னணி வெறும் 6.33 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றது. இது 2012 ஜனாதிபதித் தேர்தலில் அது பெற்ற 11 சதவீத வாக்குவீதத்தில் இருந்து வீழ்ச்சியாகும். பசுமைக் கட்சி 8.95 சதவீதம் வாக்குகளும் வலது-சாரி ஜனநாயகக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியினருக்கான ஒன்றியம் (UDI) 9.92 சதவீத வாக்குகளும் பெற்றன. பிரான்சின் பிரதான 96 தொகுதிகளில் 71 இல் FN முதலிடம் பிடித்தது. FN தனது வாக்குகளில் கணிசமான பகுதியை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து பெற்றுள்ளது. 35 வயதுக்குக் கீழானவர்களின் 30 சதவீத வாக்குகள் (ஒப்பீட்டில் PSக்கு வெறும் 15 சதவீதம் மட்டுமே கிடைத்தது), ஊழியர்களின் 38 சதவீத வாக்குகள் (PSக்கு 16 சதவீதம்), மற்றும் தொழிலாளர்களின் 43 சதவீத வாக்குகள் (PSக்கு 8 சதவீதம்) இதில் அடங்கும். வாக்களிக்காதவர் எண்ணிக்கை மிகப் பாரிய அளவாய் 57.57 வீதத்தை எட்டியது என்ற அதேநேரத்தில், இது FN வாக்குகளை செயற்கையாக அதிகரித்திருக்கவில்லை. வாக்களிக்க வராதவர்கள் வாக்களித்திருந்தாலும் அதில் பெருமளவு வாக்குகள் FNக்கு கிட்டியிருக்கும் என்பதை வாக்களிக்காதவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் கண்டறிந்தன. தன்னை “பிரான்சின் முன்னணிக் கட்சி” என பிரகடனப்படுத்தும் சுவரொட்டிகளை FN அச்சிட்டிருந்தது. ஞாயிறன்று மாலை ஹாலண்டைச் சந்தித்த FN தலைவரான மரின் லு பென் தேசிய சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு புதியதொரு சட்டமன்றத் தேர்தலை நடத்தக் கோரினார். ”சட்டமன்றம் தேசியமயமானதாக, மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக, அத்துடன் மக்கள் இன்றிரவு தேர்ந்தெடுத்திருக்கும் சுதந்திரக் கொள்கையை அமல்படுத்த திறம்பட்டதாக இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை குடியரசின் ஜனாதிபதி இப்போது எடுக்க வேண்டும்” என்று லு பென் தெரிவித்தார். “பிரான்ஸ் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஜனநாயகத்தில் பாடங்கள் எடுப்பதை நிறுத்த வேண்டும்” மற்றும் நாட்டின் நிர்வாகத் தலைமை தேர்தலுக்கு தயாரிப்பு செய்தாக வேண்டும், அது “இன்னும் கூடுதலாய் நசுக்கும் கைதுறப்பாய் இருக்கும்”. தேர்தலுக்கு முன் வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் FN இன் வெற்றி என்பது ஆளும் வட்டாரங்களில் முன்கூட்டியே பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றபோதும், அரசியல் ஸ்தாபகத்தில் அது அதிர்ச்சி அலைகளை அனுப்பத் தவறவில்லை. UMPக்குள்ளாக, இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது குறித்தான கவலைகள் ஜோன்-பிரான்சுவா கொப்பே பதவியிறங்க நெருக்குதலை அதிகப்படுத்துகின்ற அதேசமயத்தில், முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசி UMP க்கு தலைமை கொடுக்க மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்புவார் என்ற ஊகங்களும் மேலெழுப்பப்படுகின்றன. 1958 இல் பிரான்சின் தற்போதைய குடியரசு உருவாக்கப்பட்டது முதலாக, அதன் மக்களது வெறுப்பை அதிகம் சம்பாதித்த ஜனாதிபதியாக ஹாலண்ட் இப்போது இருக்கிறார். 2017 மறுதேர்வுக்கான போட்டியில் அவருக்கு வெறும் 11 சதவீதம் ஆதரவு தான் இருக்கிறது. நேற்றிரவு அவர் மாலைச் செய்திகளில் ஒரு சம்பிரதாயமான, முன்கூட்டிப் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு காணொளி உரையை ஒளிபரப்பை வெளியிட்டார். “ஐரோப்பா குறித்த, அரசாங்கத்தின் கட்சிகள் குறித்த பரந்தவொரு அவநம்பிக்கை”யை தேர்தல் சமிக்கையளித்திருக்கிறது என்று ஒப்புக்கொண்ட ஹாலண்ட், மக்களின் கோபத்தை புறந்தள்ளி விட்டு நிதிச் சந்தைகளின் ஒரு செயற்பட்டியலை தான் வலிந்து திணிக்க இருப்பதை தெளிவாக்கினார். “பிரான்சை சீர்திருத்துவதும் ஐரோப்பாவை சீர்திருத்துவதும் எனது கடமை” என்று கூறிய ஹாலண்ட் மேலும் கூறினார்: “இந்த நடத்தை வழி சூழ்நிலைக்கேற்றவாறு தடம்புரள முடியாதது”. 50 பில்லியன் யூரோ வெட்டுகளை உத்தரவிடுகின்றதும் பத்து பில்லியன்கணக்கான யூரோ வெட்டுகளைக் கொண்ட உள்ளூர் அரசாங்க ”சீர்திருத்த”த்தை உள்ளடக்கியதுமான “பொறுப்புடமை ஒப்பந்த”த்தை அமல்படுத்த அவர் அழைப்பு விடுத்தார். PS பிரதமரான மானுவேல் வால்ஸ் இந்த தேர்தல் முடிவை ஒரு “பூகம்பம்” என்று குறிப்பிட்டார், ஆனாலும் PS இன், வரிகள் மற்றும் சமூக வெட்டுகளது பிற்போக்குத்தனமான செயற்பட்டியலை தான் தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதை சுட்டிக்காட்டினார். லு பென் கேட்பது போல புதிய சட்டமன்ற தேர்தல்களுக்கு PS ஏற்பாடு செய்யாது என்றும் அவர் தெரிவித்தார். "ஹாலண்ட் வாகனத்தை விட்டு இறங்கி, அரசாங்கத்தை கலைத்து விட்டு, அதி வலதுகள் நாட்டின் கடிவாளத்தை எடுத்துக் கொள்ளும்படி விட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்கிறார்கள்” என்றார் வால்ஸ். “நாங்கள் அடையாள நெருக்கடிக்கு, பிரான்ஸ் இப்போது உட்சென்று கொண்டிருக்கும் அறரீதியான நெருக்கடிக்கு மேலும் துயரத்தைச் சேர்க்கும் வகையில் தேர்தல் மூலமான ஒழுங்கின்மைக்கு, ஆட்சி செய்ய முடியாத ஒரு நாட்டிற்கு வழிவகுக்க மாட்டோம்.” FNக்கு கிட்டியிருக்கும் வாக்குகள், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வரலாற்றுத் திவால்நிலைக்கும் வரவிருக்கும் வர்க்கப் போராட்ட வெடிப்பிற்கும் கட்டியம் கூறும் சமிக்கையாக இருக்கிறது. மக்கள் வெறுப்பைச் சம்பாதித்திருக்கும் PS தேசிய சட்டமன்றத்தில் அதன் நடப்பு பெரும்பான்மையின் அடிப்படையில் தனது சிக்கன நடவடிக்கை மற்றும் போரின் செயற்பட்டியலை முன்செலுத்தினாலும் சரி, அல்லது அது கடைசியில் தேர்தலைக் கொண்டு வந்து வலதுசாரிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஆட்சி செய்ய முனைந்தாலும் சரி, அது அதிகமான எதிர்ப்பை முகம்கொடுக்க இருக்கிறது. இந்த வாக்குகள், FN இன் வெறிகொண்ட புலம்பெயர்-விரோத மற்றும் பாதுகாப்புவாத செயற்பட்டியலுக்கு பரந்த ஆதரவைக் குறிப்பிடுவதல்ல என்னும்போது, அதன் அரசியல் முன்னோடிகளான இரண்டாம் உலகப் போர் காலத்து விச்ஷியின் பாசிச ஆட்சி மற்றும் 1954-62 இல் அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனியாதிக்கப் போருக்கு ஆதரவளித்தவர்கள் ஆகியோரை எல்லாம் பற்றிக் குறிப்பிடவும் வேண்டாம். சமூக வெட்டுகளையும் இனவாதக் கொள்கைகளையும் திணிப்பதற்கு FN தலைமையிலான அரசாங்கம் ஒன்று செய்யக் கூடிய முயற்சிகளானவை, பிரான்சின் நகரங்களது ஏழ்மைப் பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இளைஞர்களிடம் இருந்து வெடிப்பு மிகுந்த கோபத்தை வெகுவிரைவில் தூண்டிவிடும். “இடது” கட்சிகளின் அழுகிப்போன தன்மையின் காரணத்தாலேயே, FN இயல்பாக வாக்குகளை வெல்ல முடிந்தது. PS ஐச் சேர்ந்த முதல் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் 1981 இல் அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்த தசாப்தங்களில், PS, அதன் போலி-இடது கூட்டாளிகளின் ஆதரவுடன், தொடர்ந்து வலது-சாரிக் கொள்கைகளையே திணித்து வந்திருக்கிறது. 1983 இல் மித்திரோனின் “சிக்கன நடவடிக்கைத் திருப்பம்” தொடங்கி PS தொழிலாள வர்க்கத்தின் மீதான சுதந்திரச் சந்தைத் தாக்குதல்களையும், போர்களையும், அத்துடன் 2009 இல் பர்தா மீதான தடை உள்ளிட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையுமே முன்தள்ளியுள்ளது. PS, இந்தக் கொள்கைகளுக்கு எதிரான ஒவ்வொரு வேலைநிறுத்த அலையையும் அல்லது மாணவர் ஆர்ப்பாட்டத்தையும் உடைப்பதற்கு போலி-இடது கட்சிகளையே நம்பி வந்திருக்கிறது. இவை PS உடன் அரசியல் கூட்டணிகளை பராமரித்துக் கொண்ட அதேவேளையில் சோசலிசத்திற்கான வாய்ப்புவளங்கள் குறித்து அவநம்பிக்கைகளை விதைத்து வந்தன. மக்கள்தொகையின் மிகப்பரந்த அடுக்குகள் அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து முன்னெப்போதையும் விட மிகவும் அந்நியப்பட்டு விட்ட நிலையில், FN “வழக்கமானதாக”வோ அல்லது எதிர்ப்பானதாகவோ தனது சொந்த வலது-சாரிக் கொள்கைகளை முன்வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கூர்மையான எச்சரிக்கை அவசியமானதாகும்: ஒட்டுமொத்த பிரெஞ்சு ஆளும் வர்க்கமும் அதி-வலது கொள்கைகளை நோக்கியும் ஜனநாயக விரோத ஆட்சி வடிவங்களை நோக்கியுமான ஒரு நீண்டகால பரிணாம வளர்ச்சி கண்டதன் மிக அதிர்ச்சிகரமான வெளிப்பாடே FN இன் எழுச்சியாகும். ஏதேனும் ஒரு முதலாளித்துவக் கன்னையை நம்புவதால் இதனை நிறுத்தி விட முடியாது. பாசிசத்தின் அச்சுறுத்தலை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான போராட்டத்திற்கு தலைமை கொடுக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இன் பிரிவுகளாக புரட்சிகர சோசலிசக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதே பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் முன்நிற்கின்ற அதிமுக்கியமான பிரச்சினை ஆகும். இந்த வார இறுதியின் தேர்தல், ஒரு உயர் அரசியல் வெப்பநிலையில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 2002 ஏப்ரல் 21 அன்று பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் நடந்த நிகழ்வுகளை எதிரொலிக்கிறது. அப்போது PS இன் வேட்பாளரான லியோனல் ஜோஸ்பன் அவரது பன்மை இடது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்திருந்த காரணத்தால், UMP இன் ஜாக் சிராக் மற்றும் FN இன் ஜோன்-மரி லு பென்னிடம் தோற்று வெளியேறினார். இரண்டாவது சுற்றில் சிராக்கிற்கும் லு பென்னிற்கும் இடையில் ஒரு மோசடியான “தெரிவுவாய்ப்பு” உருவாக்கப்பட்டதை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. சிராக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் திணிக்கவிருக்கும் போர்கள் மற்றும் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை உருவாக்குவதன் அடிப்படையில், தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்க ICFI அழைப்பு விடுத்தது. போலி-இடது LCR (NPA இன் முன்னோடி), தொழிலாளர் போராட்டம் (LO), மற்றும் தொழிலாளர் கட்சி (இப்போது சுயாதீன தொழிலாளர் கட்சி -POI) ஆகியவை இந்த அழைப்பை நிராகரித்தன. அதற்குப் பதிலாக, அவை PS உடன் சேர்ந்து கொண்டு, சிராக்கிற்கு வாக்களித்தால் அது FN இன் எழுச்சியைத் தடுத்து நிறுத்துவதோடு சிராக்கின் கொள்கைகளையும் மட்டுப்படுத்தும் என்பதான பிரமைகளை ஊக்குவித்தன. ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர், போலி-இடது கட்சிகள் ஊக்குவித்த இந்த முதலாளித்துவ ஆதரவு பிரமைகள் அனைத்தும் நடப்பு சம்பவங்களால் ஈவிரக்கமற்ற வகையில் மறுதலிக்கப்பட்டிருக்கின்றன. FN இன் எழுச்சியைத் தடுத்து நிறுத்துவது என்பதற்கெல்லாம் வெகுதூரத்திற்கு அப்பால், அவை ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் வெகுதூரம் வலதின் பக்கமாய் நகர்த்துவதற்கு கருவிகளாய் சேவை செய்திருக்கின்றன. பிற்போக்குத்தனமான ஹாலண்ட் அரசாங்கம் தேர்வு செய்யப்படுவதற்கு அவை அழைப்பு விடுத்தன. போர்களிலும் ஏகாதிபத்திய தலையீடுகளிலும் —பிரான்ஸ், அமெரிக்கா, மற்றும் ஜேர்மனி அப்பட்டமாக பாசிஸ்டுகளுடனும் வலது பிரிவு (Right Sector) ஆயுதக் குழுக்களுடனும் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் உக்ரேன் தலையீடு உட்பட— PS களமிறங்குகின்ற வேளையில் அதனை இவை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. |
|