World Socialist Web Site www.wsws.org |
The US and Thailand’s military coup அமெரிக்காவும், தாய்லாந்து இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதியும்Peter
Symonds தாய்லாந்தின் கடந்த வார இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு அமெரிக்காவின் விடையிறுப்பு முற்றிலும் ஆத்திரமூட்டுவதாக இருந்தது. தாய் இராணுவம், அரசியலமைப்பைக் கலைக்க மற்றும் அரசாங்கத்தின் மீது கட்டுப்பாட்டை எடுக்க முடிவெடுத்ததன் மீது அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பதாக" அறிவித்த அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை செயலர் ஜோன் கெர்ரி, “ஜனநாயகத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டுமென" வலியுறுத்தியதோடு, இராணுவ மற்றும் ஏனைய உதவி திட்டங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் எச்சரித்தார். கெர்ரியின் "ஏமாற்றம்" தாய்லாந்து மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான எந்தவொரு அக்கறையோடும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக பாங்காக்கின் கடந்த ஏழு மாதகால அரசியல் மேலெழுச்சியின் மீது ஒபாமா நிர்வாகத்தின் மேலோங்கிய அக்கறை, அதன் பரந்த "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" மற்றும் சீனாவிற்கும் அப்பிராந்தியம் முழுவதிற்கும் எதிரான இராணுவ கட்டமைப்பின் பாகமாக, தாய் இராணுவத்துடனான நீண்டகால அதன் நெருங்கிய உறவுகளைக் காப்பாற்றி வைப்பதற்கானதாகும். மே 22இல் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியமை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிஹியு தாய் அரசாங்கத்திற்கும் அதன் தலைமை பாதுகாவலரான முன்னாள் பிரதம மந்திரி தாக்சின் ஷினவத்ராவிற்கும் எதிராக கடுமையான விரோதம் கொண்டிருக்கும், முடியாட்சியை மையமாக கொண்ட தாய்லாந்தின் பாரம்பரிய மேற்தட்டுக்களால் கவனமாக நடத்தப்பட்ட ஒரு ஆட்சி கவிழ்ப்பு சதியாக மட்டுமே வர்ணிக்கப்படக்கூடிய ஒன்றின் விளைபொருளாகும். தாக்சினின் சகோதரியான பிரதம மந்திரி இன்ங்லக் ஷின்வத்ராவை பதவியிலிருந்து தூக்கியெறிய நவம்பரில் தொடங்கிய அரசாங்க-விரோத போராட்டங்களோடு, அரசாங்கத்தை இறுக்கிய ஒருதலைபட்சமான நீதிமன்ற முடிவுகளும் இணைந்து கொண்டன. அரசாங்க-விரோத போராட்டங்களால் இடர்படுத்தப்பட்ட மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியால் புறக்கணிக்கப்பட்ட பெப்ரவரி 2 தேர்தல்களின் முடிவுகளை அரசியலமைப்பு நீதிமன்றம் செல்லாதென்று மார்ச்சில் தீர்ப்பளித்தபோது, ஒபாமா நிர்வாகம் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அந்த நீதிமன்ற தீர்ப்பு மட்டுப்படுத்தப்பட்ட காபந்து அதிகாரங்களோடு அரசாங்கத்தை அந்தரத்தில் தொங்க விட்டது. இன்ங்லக் மற்றும் ஒன்பது கேபினெட் மந்திரிகளை ஜோடனை குற்றச்சாட்டுகளின் மீது வெளியேற்றிய மே 7இன் அரசியலமைப்பு நீதிமன்ற முடிவையும் வாஷிங்டன் விமர்சிக்க வில்லை, அது ஒரு நீதித்துறை ஆட்சி கவிழ்ப்பாக இருந்தது. மே 20இல், இராணுவம் கொண்டு வந்த இராணுவ சட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்ததோடு, அதுவொரு "ஆட்சி கவிழ்ப்பு சதி அல்ல" என்ற இராணுவ தலைமை தளபதி பிரயுத் சான்-ஓச்சாவின் (Prayuth Chan-ocha) வார்த்தைகளை ஏற்றுக் கொண்டது. பிரயுத் காபந்து அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு, அரசியல் தலைவர்களைக் கைது செய்து, ஒட்டுமொத்தமாக தணிக்கையைத் திணித்து, பொது இடத்தில் ஒன்று கூடுவதற்கு தடை விதித்து, பிரதம மந்திரியாக அவரை அவரே அதிகாரத்தில் நிறுத்திய இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் கெர்ரி அவரது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஒபாமா நிர்வாகம் சட்டரீதியில் செயல்பட கடமைப்பட்ட நிலைமைக்கு கொண்டு வரப்பட்டு, ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி நடக்கவில்லை என்று இனியும் அமெரிக்காவால் பாசாங்கு செய்ய முடியாது என்றானது. வெளிநாட்டிற்கு வழங்கும் உதவிகள் மீதான சட்டத்தின்படி, “முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க தலைமை இராணுவ ஆட்சி சதியால் பதவியிலிருந்து விலக்கப்படும்" நாடுகளுக்கு வழங்கும் உதவிகளை வெள்ளை மாளிகை வெட்டி ஆக வேண்டும். அமெரிக்கா இதுவரையில் தாய்லாந்திற்கான இராணுவ உதவியில் 3.5 மில்லியன் டாலர் என ஒரு சிறிய தொகையை நீக்கி உள்ளது, கடந்த வாரம் நடந்து வந்த ஒருவித கூட்டு கடற்படை இராணுவ ஒத்திகையை நிறுத்தி உள்ளது, ஒரு பொலிஸ் பயிற்சி திட்டம் மற்றும் இரண்டு உயர்மட்ட பரிவர்த்தனைகளை இரத்து செய்துள்ளது. எவ்வாறிருந்த போதினும், எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு விரைவாக முழு உறவுகளும் மீண்டும் தொடங்கப்படும் வரையில், இராணுவத்துடனான பெண்டகனின் நெருங்கிய ஒத்துழைப்பு, திரைக்குப் பின்னால் குறைவின்றி தொடரும் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை. இவை அனைத்தும் முன்கூட்டியே ஒபாமா நிர்வாகத்திற்கும், தாய் தளபதிகளுக்கும் இடையே திட்டமிடப்பட்டிருக்கும். அமெரிக்க உதவி வெளியுறவுத்துறை செயலர் டானியல் ரஸ்செல் "பல தலைவர்களையும், பங்குதாரர்களையும்" சந்திக்க கடந்த மாதம் பாங்காங்கில் இருந்தார். அவர் நாட்டை ஒரு தேர்ந்தெடுக்கப்படாத "மக்கள் குழுவைக் கொண்டு" நடத்தக் கோரும் முடியாட்சி ஆதரவிலான அரசாங்க எதிர்பாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட பகிரங்கமாக முறையிட்டார். எவ்வாறிருந்த போதினும், சந்தேகத்திற்கு இடமின்றி திரைக்குப் பின்னால் இராணுவ தலைவர்களால் அமெரிக்க அதிகாரிகளுக்கு விவரங்கள் அளிக்கப்பட்டன. கடந்த வார ஆட்சி கவிழ்ப்பு, 2006இல் இராணுவம் தாக்சினை பதவியிலிருந்து வெளியேற்றியதைப் போன்ற அதே வடிவத்தில் இருந்தது. அமெரிக்க தூதர் ரால்ஃப் போய்சேவிற்கு (Ralph Boyce) இராணுவம் கைப்பற்ற இருப்பது குறித்து பல வாரங்களுக்கு முன்னரே கூறப்பட்டிருந்ததையும், அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்ததையும் பின்னர் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தின. வெளிப்பார்வைக்கு அங்கே அமெரிக்க உதவிகளில் வெட்டுக்கள் இருக்கும் என்பதை இரண்டு தரப்பும் புரிந்து வைத்திருந்தன. இருந்த போதினும், சட்டம் ஒழுங்கு, பயங்கரவாத-எதிர்ப்பு மற்றும் ஆயுத-பரவல் தடை திட்டங்களுக்கான அமெரிக்க நிதியுதவி தொடர்ந்தது. தாய்லாந்து நேட்டோவில் அல்லாத ஒரு பிரதான கூட்டாளியாக அதன் விருப்பத்திற்கேற்ப கையாள்வதற்காக வைக்கப்பட்டிருந்தது, அத்தோடு இராணுவத்தின் கீழ் திட்டமிடப்பட்ட உலகின் மிகப் பெரிய கூட்டு இராணுவ ஒத்திகைகளில் ஒன்றான கோப்ரா கோல்டு இராணுவ ஒத்திகையும் 2007இல் தடையின்றி நடத்தப்பட்டது. ஒபாமா நிர்வாகம் சந்தேகத்திற்கு இடமின்றி 2006இல் அது செய்ததைப் போலவே சமீபத்திய ஆட்சி கவிழ்ப்பு சதிக்கும் பச்சைக்கொடி காட்டி இருந்தது. இராணுவத்தின் நடவடிக்கைகள் முதன்மையாக ஆளும் வர்க்கத்தின் தாக்சின்-ஆதரவிலான கன்னைக்கு எதிராக நோக்கம் கொண்டிருக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிராக நோக்கம் கொண்டதாகும். எதிர்மறை பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் சிக்கன வெட்டுக்கான பெருநிறுவன கோரிக்கைகள் ஆகிய நிலைமைகளின் கீழ், நீடித்து வரும் கன்னை உள்மோதல்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒரு இயக்கத்திற்கு கதவைத் திறந்துவிடக் கூடும் என்பதே தாய் ஆளும் வட்டாரங்களிலும், ஏன் வாஷிங்டனிலும் கூட, நிலவும் அச்சமாக உள்ளது. ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு மறைமுக ஆதரவு அளித்த அதேவேளையில், இராணுவத்துடனான உறவுகளால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கவும் அமெரிக்கா முனைந்து வருகிறது. தாய்லாந்து அதன் ஒரு உத்தியோகபூர்வ இராணுவ கூட்டாளியாகும், அத்தோடு கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க நவ-காலனித்துவ யுத்தங்களில் சண்டையிட தாய்லாந்து துருப்புகளை அனுப்பி இருந்தது. வியட்நாம் யுத்தத்தின் போது, 50,000 அமெரிக்க துருப்புகள் தாய்லாந்தில் நிறுத்தப்பட்டிருந்ததோடு, அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் தாய் விமானத்தளங்களில் இருந்து பறந்தன. பென்டகனின் யுத்த திட்டங்களுக்கு தாய்லாந்தின் முக்கியத்துவம் அமெரிக்க தூதர் எரிக் ஜோன்னின் 2009 விக்கிலீக்ஸ் ஆவணத்தால் அடிகோடிடப்படுகின்றன. “ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய செயல்பாடுகள் உட்பட அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விமானங்களைப் பறக்க விடுவதற்கு எங்கள் இராணுவம் சத்தமில்லாமல் [உடாபோ] விமான தளத்தை ஆண்டுக்கு 1,000 தடவைகளுக்கு மேல் பயன்படுத்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டார், "உளவுவேலைகளுக்கான இலக்குகளைக் குறி வைத்து விமானங்களைப் பறக்கவிடவும்" அதே விமான தளத்தை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியது, இந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் விமானங்கள் ஏன் எதற்காக பறக்கவிடப்படுகின்றன என்ற எந்த கேள்வி-பதிலும் இல்லாமல், ஒரு வழக்கமான விடயமாக பயன்படுத்த அனுமதி பெற்றிருந்தோம். வேறெந்த ஆசிய நாடும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தளவிற்கு எளிமையாக அனுமதி அளிப்பதைக் கற்பனை செய்து பார்ப்பதும் கடினமாகும். வெளிநாட்டினர் விமானத்தளமாக பயன்படுத்துவதன் மீது தாய்லாந்திற்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உடாபோவை பயன்படுத்தியதை நாம் பகிரங்கப்படுத்த தவிர்த்து வந்தோம் என்றாலும், உடாபோ மற்றும் தாய்லாந்தின் ஏனைய விமானத் தளங்களும், கடற்படை துறைமுகங்களும் தென்கிழக்கு ஆசியாவில் நமது படையின் திட்டமிட்ட நோக்கங்களுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளன,” என்றார். தாய்லாந்தின் கடந்த வார இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு வாஷிங்டனின் மறைமுக ஆதரவு ஆசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். ஜனநாயகத்தின் ஒரு பாதுகாவலன் என்பதிலிருந்து வெகு தூரம் விலகி, அமெரிக்க ஏகாதிபத்தியம் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" மூலமாக அமெரிக்க மேலாதிக்கத்தை அது மீண்டும் உறுதிப்படுத்த முயல்வதோடு, சீனாவிற்கு எதிரான யுத்தத்திற்கு தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அது ஷின்ஜோ அபேயின் ஜப்பானிய அரசாங்கம் மற்றும் அமெரிக்க ஆதரவிலான முன்னாள் சர்வாதிகாரி பார்க் சுன்-ஹீயின் (Park Chun-hee) மகளான தென்கொரிய ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye) போன்ற வலதுசாரி ஆட்சிகளை அதிகளவில் சார்ந்துள்ளது. இதில் தாய்லாந்து இராணுவம் சமீபத்திய ஒன்றாகும். ஜனநாயக உரிமைகளுக்கான மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தை, அமெரிக்க யுத்த உந்துதலுக்கு எதிரான போராட்டத்தோடு அவசியமாக பிணைக்க வேண்டி உள்ளது. தாய்லாந்தின் தொழிலாளர்கள் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள மற்றும் அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தரப்பில் திரும்புவதன் மூலமாக மட்டுமே அவர்களின் வர்க்க நலன்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியும். |
|