தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Major losses for ruling parties, gains for anti-EU parties in European elections ஐரோப்பியத் தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு பெரும் இழப்பு, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புக் கட்சிகளுக்கு முன்னேற்றங்கள்By Chris Marsden Use this version to print| Send feedback ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கின்ற, ஓரளவுக்கு வலதிலும் இடதிலும் இருக்கின்ற கட்சிகள் ஐரோப்பிய அரசாங்கங்களால் திணிக்கப்படுகின்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு குரோதம் காட்டுவதன் மூலம் பயனடைந்திருக்கின்றன. 28 நாடுகளில் நான்கு நாட்களில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருந்தது, பலரும் வாக்களிக்க வராமல் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதி-வலதுக்கு மிகக் குறிப்பிடத்தக்க முடிவு பிரான்சில் கிட்டியது. இங்கே 40 சதவீதம் பதிவாகியிருக்கும் வாக்குகளில் தேசிய முன்னணி (FN) 25 சதவீத ஆதரவுடன் முன்னிலை பெறும் என முதனிலை மதிப்பீடுகள் காட்டுகின்றன. மக்கள் வெறுப்பின் ஒரு அதிரடி வெளிப்பாடாக, பிரான்சுவா ஹாலண்டின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி வெறும் 14 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று, பாரம்பரிய மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியத்திற்கும் (UMP) பின்னால் செல்லும் என அந்த மதிப்பீடு தெரிவித்துள்ளது. பிரெஞ்சு தேசிய மன்றத்தை கலைக்க அழைப்பு விடுத்து இதற்கு FN தலைவரான மரின் லு பென் பதிலிறுப்பு செய்தார். பிரான்ஸ் “பிரெஞ்சுக்காரர்களால், பிரெஞ்சினருக்காக, பிரெஞ்சினரைக் கொண்டு” இயக்கப்படுவதையே விரும்புகிறது, புரூசேல்ஸில் உட்கார்ந்திருக்கும் “வெளிநாட்டு ஆணையர்களால்” இயக்கப்படுவதை அல்ல என்பதை பிரான்ஸ் “தெளிவாகவும் உரத்த குரலிலும்” சத்தம் போட்டு தெரிவித்திருக்கிறது என்று அவர் கூறினார். பிரிட்டனில் ஐரோப்பிய ஒன்றிய விரோத வலது-சாரி ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) பெரும் கட்சியாக எழுந்தது - முதன்முறையாக தொழிற்கட்சியோ அல்லது கன்சர்வேடிவ்களோ இந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை. நைகெல் ஃபராஜ் தலைமையிலான இக்கட்சி 28 சதவீத வாக்குகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2009 இல் இது பெற்ற 16.5 சதவீதத்தில் இருந்து ஏறக்குறைய இரட்டிப்பாகியிருப்பதைக் காணலாம். தொழிற்கட்சி 25.7 சதவீதமும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 24.5 சதவீதமும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனில் கன்சர்வேடிவ்களின் கூட்டணிக் கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சியினர் ஏறக்குறைய முழுத் தோல்வி கண்டனர், அவர்களது வாக்கு விகிதம் 7 சதவீதத்துக்குக் கீழே கொண்டு வரப்பட்டு பசுமைக் கட்சியினருக்கு அடுத்த ஐந்தாவது இடத்தில் அவர்களை வைத்தது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே கிடைக்க முடியும். ஐக்கிய இராச்சியத்தில் வாக்களிப்பு விகிதம் வெறும் 33.8 சதவீதமாக இருந்தது. ஜேர்மனியில், ஆளும் கூட்டணிக் கட்சிகள் தங்களது இடத்தைத் தக்கவைக்கின்றன, சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி அவரது கூட்டணிக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியிக்கு ஆதரவாக சற்று சரிவைச் சந்திக்கின்றது. கன்சர்வேடிவ் CDU/CSU 36.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் SPD 27.6 சதவீதம் வாக்குகளைப் பெறும் என்றும் கணிப்புகள் காட்டுகின்றன. ஆனால் ஜேர்மனியில் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கட்சிகளுக்கு வெற்றி கிட்டுவதானது, பிரான்சின் முடிவுகளைக் கொண்டு பார்த்தால், பெரும் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை. இதுதவிர, ஜேர்மனியின் யூரோ விரோதக் கட்சியான AfD (UKIP இன் மாதிரியிலானது) 6.5 முதல் 7 சதவீதம் வரை வாக்குகளும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஏழு இருக்கைகளும் வெல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அநேகமாக அதனுடன் சேர்ந்து நவ-நாஜி ஜேர்மன் ஜனநாயகக் கட்சியும் (NDP) ஒரு உறுப்பினர் இருக்கை வெல்லக் கூடும். டென்மார்க்கில் தேசியவாத புலம்பெயர்-விரோத டேனிஷ் மக்கள் கட்சி, ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPÖ) ஆகியவையும் வலதுகளின் பிற வெற்றிகளில் அடங்குவனவாகும். இவை 2009 இல் 7.3 சதவீதம் வாக்குகளை கைப்பற்றியதுடன் ஒப்பிடுகையில் இப்போது ஐந்தில் ஒரு பங்கு வாக்குகளை வென்றிருக்கின்றன. பெல்ஜியத்தின் ஃபிலமிஷ் தேசியவாத N-VA கட்சியானது ஃபிளாண்டர்ஸில் 30 முதல் 32 சதவீதம் வரை வாக்குகளைக் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டது. ஆயினும் நெதர்லாந்தில் சென்ற முறை இரண்டாம் இடத்தைப் பிடித்த கீர்ட் வைல்டர்ஸ்’ சுதந்திரக் கட்சி (PVV) இந்த முறை 12.2 சதவீத வாக்குகளுடன் நான்காமிடத்தைப் பிடிக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இது மத்திய-வலது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, டெமாக்ரட்ஸ் 66 மற்றும் பிரதம மந்திரி மார்க் ரூட்டின் லிபரல் கட்சி ஆகியவற்றுக்குப் பிந்தைய இடத்தைப் பிடிக்கிறது. பிரான்சில் FN இன் வெற்றிவாய்ப்பைக் கொண்டு பார்த்தால், மரின் லு பென் கட்சியுடன் கொண்டிருக்கும் தொடர்புகள் காரணமாக, குறிப்பாக மரின் லு பென்னின் தந்தையான ஜோன்-மரி, Ebola வைரஸின் மூலம் உலகின் மக்கள்தொகை வெடிப்பையும் பிரான்சின் புலம்பெயர்வுப் பிரச்சினைகளையும் “மூன்றே மாதங்களில் தீர்த்து விட முடியும்” என்று கருத்துக் கூறியது தொடர்பான விவகாரத்தில், வைல்டர்ஸ் வாக்குகளை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். PVV ஆனது பாசிச FN இல் இருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொண்டு UKIP உடன் ஒரு கூட்டணி உடன்பாட்டுக்கு வர வேண்டும், தேசியவாதத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவொரு செய்தியையும் இன்னும் மதிக்கத்தக்க ஒரு அங்கிக்குள் மறைப்பதற்கு அது செய்யும் முயற்சிகளை விஞ்ச வேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களில் மிக மூத்தவரான லூகாஸ் ஹர்டாங் PVV ஐ வலியுறுத்தினார். ஹங்கேரியின் ஆளும் கன்சர்வேடிவ் Fideszம் இரண்டு இருக்கைகளை இழந்திருக்கிறது, அதி-வலது Jobbik மூன்று இருக்கைகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது, ஆனாலும் முன்னேற்றம் ஏதுமில்லை. சோசலிஸ்ட் கட்சியினர் தமது நான்கு இருக்கைகளில் இரண்டை இழந்தனர், ஆயினும் இரண்டு புதிய இடது-சாரிக் கட்சிகள் மூன்று இருக்கைகளை வென்றன, பசுமைக் கட்சியினர் ஒரு இடத்தை வென்றனர். வலது-சாரியானது ஒவ்வொரு தருணத்திலுமே எல்லாவற்றுக்கும் மேலாய், சமூக ஜனநாயகக் கட்சிகளின் தரப்பில் இருந்து சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அளிக்கப்பட்ட ஆதரவினாலும், சிக்கன நடவடிக்கைகளையும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலையும் அமலாக்குவதில் தொழிற்சங்கங்கள் உடந்தையாக இருந்ததாலும், பயனடைந்து வந்திருக்கிறது. எதிர்த்துப் போராடுவதற்கான அரசியல் வழிவகைகள் இல்லாத இடங்களிலும் கூட தொழிலாளர்கள் அதற்கான வழியை எதிர்நோக்கியிருக்கின்றனர். அதனால் தான், ஐரோப்பாவெங்கிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிரியாக இல்லாவிட்டாலும் சிக்கன நடவடிக்கைகளின் எதிரிகளாய் காட்டிக் கொண்டு தங்களை “இடது” என முன்நிறுத்துகின்ற கட்சிகள் நல்ல பயனடைந்திருக்கின்றன. கிரீஸில், அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசா வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்தது. சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரானதொரு வாக்கெடுப்பில் ஆளும் புதிய ஜனநாயகக் கட்சியைக் காட்டிலும் மூன்று சதவீத முன்னிலையை இது பெற்றது. கிரீஸின் கடன்கள் மறுசெலுத்தத்திற்கான ஷரத்துகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதன் அடிப்படையிலான இதன் ஐரோப்பியஒன்றிய ஆதரவு நிலைப்பாடு பாசிச கோல்டன் டோன் (Golden Dawn) 9 முதல் 10 சதவீதம் வரை வாக்குகள் பெறுவதற்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை அது வெல்வதற்கும் பாதை திறந்து விட்டிருக்கிறது. ஒரு காலத்தில் கிரீஸின் பிரதான கட்சியாக இருந்ததும், இப்போது Elia, அல்லது Olive Tree என்றழைக்கப்படும் ஒரு கூட்டணியின் அங்கமாக இருப்பதுமான சமூக ஜனநாயக PASOK கட்சி 8-9 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்திற்கு வந்தது. ஜனரஞ்சக Potami இயக்கம் வெறும் 5-7 சதவீத வாக்குகளைப் பெற்றது, கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியும் (KKE) இதே அளவு வாக்குகளைப் பெற்றது. ஸ்பெயினில் பிரதமர் மரியானோ ரஜோயின் ஆளும் மக்கள் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PSOE) ஆகிய இரண்டு கட்சிகளுமே பெரும் இழப்புகளைச் சந்தித்தன. PP இன் வாக்குவீதம் 2009 இல் 42 சதவீதமாக இருந்ததில் இருந்து வெறும் 26 சதவீதத்திற்கு சரிந்தது, PSOE வாக்குகள் 39 சதவீதத்தில் இருந்து 23 சதவீதத்திற்கு சரிந்திருக்கிறது. 2009 தேர்தலை ஒப்பிட்டால் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஐந்து மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை இழந்திருக்கின்றன. பிரதான எதிர்ப்பு வாக்குகள் ஸ்ராலினிசத் தலைமையிலான ஐக்கிய இடதுக்கும் (10 சதவீதம்) Indignados இயக்கத்தில் இருந்து எழுந்த Podemos (நம்மால் முடியும்) என்ற சினிமாத்தனமான ஜனரஞ்சக உருவாக்கத்திற்கும் (8 சதவீதம்) சென்றது. கட்டலோனியாவைச் சேர்ந்த பிராந்தியவாதக் கட்சிகள் நன்கு வாக்குகள் பெற்றன. இத்தாலியில், பிரதமர் மத்தேயோ ரென்சியின் ஜனநாயகக் கட்சி 41 சதவீத வாக்குகளைப் பெற்றது, அதற்கடுத்து நகைச்சுவைக் கலைஞரான பெப்பே கிரிலோவின் 5 நட்சத்திர இயக்கம் 22 சதவீத வாக்குகளையும், முன்னாள் பிரதமரான சில்வியோ பெர்லுஸ்கோனியின் Forza Italia கட்சி 15.5 சதவீத வாக்குகளையும் பெற்றது. யூரோவுக்கு எதிரான Northern League 6 சதவீத வாக்குகளையும் போலி-இடது Tsipras List/Other Europe குழு (சிரிசா தலைவரான சிப்ராஸின் பெயரால் வைக்கப்பட்டது) 4.1 சதவீத வாக்குகளைப் பெற்றது. இம்முடிவுகள் நடப்பு அரசியல் கட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் மற்றும் கண்டமெங்கும் அரசாங்கங்களால் திணிக்கப்பட்ட சமூகத் தாக்குதல்களுக்கும் எதிராக எழுந்து வருகின்ற அதேசமயத்தில் முழுவடிவம் எடுத்திருக்காத எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அப்பால், எந்தவொரு தனிப்போக்கிலும் அமையவில்லை. எப்படியிருந்தாலும் ”வலதின்” பக்கத்தில் இருந்தும் “அதி வலதின்” பக்கத்தில் இருந்தும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்திற்கு எழக் கூடிய அபாயங்களை எதிர்த்து சண்டையிட வேண்டும் என ஐரோப்பாவின் பெரும்பான்மையான ஊடகங்கள் வலியுறுத்தும் என்பது நிச்சயம். சிக்கன நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்வதற்கான வெகுஜன அழுத்தங்களுக்கு தடுப்புசக்தியை வெளிப்படுத்துகின்ற அதேவேளையில் சாத்தியமானால், ஒரு “வலிமையான ஐரோப்பா”வின் பகுதியாக இருப்பதன் மூலமே தேசப்பற்றுவாதமும் தேசியவாதமும் சிறந்தமுறையில் நன்மை பெறுகிறது என்று வலியுறுத்துவதன் மூலம் வலது-சாரி ஐரோப்பியஒன்றிய-விரோத உருவாக்கங்களை சாந்தப்படுத்துவதற்கு அல்லது சமப்படுத்துவதற்குமான அழைப்புகளின் வடிவத்தை இது தவிர்க்கவியலாமால் எடுக்கும். வலது-சாரிக் கட்சிகள் பெற்றிருக்கும் வெற்றிகளானவை, உழைக்கும் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சமூக நாசத்திற்கு ஒரு பலிகடாவை வழங்கும் பொருட்டு புலம்பெயர்-விரோத நடவடிக்கைகளை கைக்கொள்ள வலியுறுத்துவதற்காய் பயன்படுத்தப்படும். நடப்பு அரசியல் கட்டமைப்பின் மீது பிரமை விலகி விட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது குரல் செவிமடுக்கப்படப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவர்களது எதிர்ப்பானது வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான மிருகத்தனமான வெட்டுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகமற்ற தன்மை அத்துடன் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக செலுத்தப்பட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் கண்ணுற்றது போல ஐரோப்பிய சக்திகள் இராணுவவாதத்தை தீவிரப்படுத்துகின்ற நடவடிக்கை ஆகிய விடயங்களிலான அவர்களது அனுபவத்தில் வேரூன்றியுள்ளது. சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கட்சிகளுக்கும் மற்றும் தேசியவாத வலது கட்சிகளுக்குமான ஒரு சோசலிச மாற்றினை வழங்குவதற்காக ஜேர்மனியில் PSGம் (The Partei fur Soziale Gleichheit) பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியும் ஐரோப்பியத் தேர்தல்களில் பங்குபெற்றன. தொழிலாளர் அரசாங்கங்களை உருவாக்குவதற்கும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்குவதற்கும் அவை அழைப்பு விடுத்தன. இராணுவவாதம் மற்றும் போர் அபாயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மிகக் குறிப்பான முக்கியத்துவத்தை அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் வழங்கின. இப்போது மிகக் கூர்மையாக உக்ரேனில் முன்நிறுத்தப்பட்டிருக்கும் போர் மீதான ஒரு வாக்கெடுப்பாக இத்தேர்தல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவை வலியுறுத்தின. |
|
|