World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் The European elections in France பிரான்சில் ஐரோப்பியத் தேர்தல்கள்By Peter Schwarz ஞாயிறன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பியத் தேர்தல்களில் அதி-வலது தேசிய முன்னணி (FN) வெற்றி பெறும் என பல மாதங்களாய் பிரான்சில் கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. சமீபத்திய கருத்துக்கணிப்புகளின் படி FNக்கு 21 முதல் 23 சதவீதம் வரையும், பழமைவாத மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியத்திற்கு (UMP) 20 முதல் 21 சதவீதம் வரையிலும் அவற்றுக்கெல்லாம் அடுத்து ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கு 17-18 சதவீதம் வரையிலும் வாக்குகள் கிடைக்கலாம் என அக்கணிப்புகள் கூறுகின்றன. இக்கருத்துக்கணிப்புகள் சரியாக இருக்குமாயின், FN முதன்முறையாக பிரான்சில் ஒரு தேசிய அளவிலான தேர்தலில் மிக வலிமையான கட்சியாக ஆகவிருக்கிறது. FNக்கான வாக்குகள் வளர்ச்சி கண்டிருப்பதானது எல்லாவற்றுக்கும் முதலாய் ஸ்தாபகக் கட்சிகள் மீதான அதிருப்தியின் ஒரு விளைவாக இருக்கிறது. பிரெஞ்சு வாக்காளர்களில் 88 சதவீதம் பேருக்கு அவர்களது அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என்பதும், 80 சதவீதம் பேர் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதும் ஐரோப்பிய ஆணையத்தின் ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மூன்று வருடங்களாக FNக்கு தலைமை தாங்கி வரும் மரின் லு பென் சமூகப் பிரச்சினைகளை தனது பிரச்சாரத்தின் மையத்தில் இருத்துவதில் மிகக் கவனம் காட்டினார். சமூக நெருக்கடிக்கும், அதிக அளவிலான வேலைவாய்ப்பின்மைக்கும் பொறுப்பானதாக அநேக பிரெஞ்சு மக்கள் கருதிய யூரோவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் FN வெளிப்படையாக எதிர்த்தது. அதற்காக FN தனது பாசிச அணுகுமுறைகளை கைவிட்டுவிட்டதாக அர்த்தமாகாது. இந்த வாரத்தில் தான், தென்கிழக்கில் கட்சியின் முன்னணி வேட்பாளரும், கட்சியின் 85 வயதான ஸ்தாபகருமான ஜோன்-மரி லு பென், பிரான்ஸ் புலம்பெயர்ந்தவர்களால் “அமிழ்ந்து கொண்டிருப்பதற்கு” எதிராக சாடியதோடு Ebola வைரஸின் துணைகொண்டு இந்தப் பிரச்சினையை மூன்று மாதங்களில் தீர்த்து விட முடியும் என்று அறிவித்தார். நீண்டதொரு காலமாய், FN, கடும் வேலைவாய்ப்பின்மை சூழ்ந்திருக்கக் கூடிய சிதைவு கண்டு வரும் முன்னாள் தொழிற்துறைப் பகுதிகளிலும் அத்துடன் அதிக தொழிற்துறைமயப்படாத தெற்குப் பகுதிகளிலும் நல்ல தேர்தல் முடிவுகளை ஈட்டி வருகிறது. மார்ச் மாதத்தில் நடந்த உள்ளூர் தேர்தல்களின் முதல் சுற்றில், 10,000 பேருக்கு மேல் வசிக்கக் கூடிய 17 நகரங்களில் FN முதலாம் இடத்தில் வந்தது. இதற்குக் காரணம் ஊடகங்கள் கூறுவது போன்று மக்களின் பரந்த அடுக்குகள் வலது நோக்கி நகர்ந்ததால் அல்ல, வாக்களிப்பில் கலந்து கொள்வதைப் புறக்கணிக்க இருப்பவர்களின் சதவீதம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் (பிரான்சில் முன்கண்டிராத அளவு) என்ற கணிப்புடன் ஒப்பிட்டால் FNஇன் வாக்கு சதவீதத்தின் முக்கியத்துவம் மங்கிப் போவதைக் காணலாம். அதன் தேர்தல் வெற்றிகள் என்பது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம், மற்றும் குறிப்பாக அதன் “இடது” மறைப்புகளின் வலதுநோக்கிய நகர்வின் ஒரு விளைவாகும். UMP இன் சில பிரிவுகள் FN உடன் நேரடி கூட்டுழைப்புக்கு ஆதரிக்கின்ற அதேவேளையில், ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் அந்நியர்-குறித்த-அச்சம் மற்றும் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளின் காரணத்தாலும் FN வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. வருகின்ற மாதங்களில், மானுவேல் வால்ஸின் அரசாங்கம் ஊதியச் செலவுகள் மற்றும் நிறுவனச் செலவுகளைப் பெருமளவு குறைக்கவும் மற்றும் பொதுச் செலவினங்களை 50 பில்லியன் யூரோக்கள் வரை வெட்டவும் விரும்புகிறது. இந்தச் சூழ்நிலைகளின் கீழ், FN வலுப்பெறுவதென்பது ஆளும் வட்டாரங்களில் விரும்பப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. அதி-வலதுகள், தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர்க் கொள்கைகளுக்கான எதிர்ப்பை ஒடுக்குவதும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்கு அவசியமாக இருக்கிறது. இந்த விடயத்தில், கியேவில் ஸ்வோபோடா மற்றும் வலது பிரிவின் பாசிஸ்டுகளுடன் கூடிவேலை செய்து ஒரு வலது-சாரி, ஐரோப்பிய ஒன்றிய-ஆதரவு ஆட்சியை உக்ரேனில் அதிகாரத்தில் அவர்கள் அமர்த்தியிருப்பதானது ஒரு எச்சரிக்கையாகும். ஞாயிறன்றான தேர்தலில் FN முதலிடம் பிடிக்குமானால், ஸ்தாபகக் கட்சிகள் மேலும் வலது நோக்கி நகரும். Le Monde தினசரி எழுதியது: “அத்தகையதொரு தேர்தல் முடிவு நிச்சயமாக முழுமையாக இரண்டு பிரதான கட்சிகளையும் பலவீனப்படுத்தும் அத்துடன் அதீத சுறுசுறுப்புடன் இயங்கும் தேசிய முன்னணியைச் சுற்றிய ஒரு அரசியல் மறுசீரமைப்புக்கு ஆதரவாக அமையும்.” FN உடன் சேர்ந்து வேலை செய்ய ஏற்கனவே பழமைவாத UMP இல் வலுவான போக்குகள் தென்படுகின்றன. ”2017 நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக தெற்குப் பிராந்தியத்தில், ஒரு தேசிய முன்னணி வேட்பாளரை எண்ணி அச்சம் கொள்கிறார்கள். எனவே அவர்கள் மரின் லு பென் ஆதரவாளர்களுடன் ஒரு உடன்பாட்டுக்குச் செல்ல தங்களது தலைவர்களை நெருக்குகிறார்கள். UMPக்கும் அதீத வலதின் கட்சிக்கும் இடையில் இப்போதும் நிலவுகின்ற முட்டுக்கட்டைகளை வெல்ல வேண்டும் என்பதே பின்னமைந்த கருத்தாக இருக்கிறது" என்று The Nouvel Observateur குறிப்பிட்டிருந்தது. ஸ்தாபகக் கட்சிகளின் வலதுநோக்கிய திருப்பத்தால் மரின் லு பென் மேலும் வலுப்பெறும் உணர்வு பெற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவர் தனது கட்சி ஐரோப்பியத் தேர்தலில் வென்றால் “பிரான்சில் அரசியல் வாழ்க்கை என்பது முற்றிலும் புதிதான ஒன்றாக வரையறுக்கப்படும்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் நாடாளுமன்றத்தை கலைக்க நிர்ப்பந்தம் பெற்று 2017 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே கூட புதிய தேர்தலுக்கு உத்தரவிடலாம் என்று அவர் நம்புகிறார். FN தனது செல்வாக்கை விரிவாக்கிச் செல்ல முடிந்திருக்கின்றதென்றால் அதற்கு போலி-இடதுகள் மற்றும் குட்டி-முதலாளித்துவக் குழுக்களின் பிற்போக்குத்தன அரசியலே பிரதான காரணமாகும். பிரெஞ்சு அரசியல் வாழ்வில் குறிப்பாக இவை முக்கியமானதொரு பாத்திரத்தை ஆற்றுகின்றன. இவை, தொழிற்சங்கங்கள் ஊடாகவும், தேர்தல் கூட்டணிகள் ஊடாகவும் மற்றும் எண்ணற்ற பிற உருப்படாத வழிவகைகளினூடாகவும் தாம் நெருக்கமான பிணைப்பு கொண்டிருக்கும் ஹாலண்ட் மற்றும் வால்ஸின் அரசாங்கத்தையும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியையும் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகின்றன. ஜோன்-லூக்-மெலோன்சோனின் Front de Gauche (இடது முன்னணி), LO (தொழிலாளர் போராட்டம்) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவை தத்தமது சொந்த வேட்பாளர்களுடன் ஐரோப்பிய தேர்தல்களில் பங்குபெறுகின்றன. இவை சுமார் 10 சதவீத வாக்குகளை வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் தேர்தல் அறிக்கையில் வால்ஸ் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகள் குறித்த விமர்சனங்கள் நிறைய இடம்பெற்றுள்ளன. ஆயினும் இந்த விமர்சனங்கள் ஒரேயொரு முன்தடுப்பு நோக்கத்திற்கே சேவைசெய்கின்றன: பரவலான அதிருப்தியை திசைதிருப்புவதும் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக செலுத்தப்படக் கூடிய வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெடிப்பைத் தடுப்பதுமே அதன் நோக்கமாய் இருக்கிறது. லிபியா, சிரியாவிலான போர்கள் மற்றும் உக்ரேனிலான பாசிசத் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு ஆகியவை தொடர்பாக சோசலிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கையின் மிகப் பிற்போக்கான அம்சங்களை NPA ஆதரிப்பதால் (அவற்றை ஜனநாயகப் புரட்சியாக அது போற்றுகிறது) அரசாங்கத்தை அது காத்திரமான முறையில் எதிர்ப்பதென்பது முடியாதது. மெலோன்சோன் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக, சோசலிஸ்ட் கட்சியின் அரசாங்கம் ஒன்றில் அமைச்சராகவும் கூட இருந்துள்ளார். அவரது Front de Gauche இன் மிக முக்கியமான தூணான கம்யூனிஸ்ட் கட்சி பல இடங்களில் சோசலிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடுகளை உருவாக்கி உள்ளது. சர்வதேச அளவில் அது, ஐரோப்பிய ஒன்றியத்தை வெளிப்படையாகப் பாதுகாக்கும் ஐரோப்பிய இடதின் உயர்மட்ட வேட்பாளரான சிரிசாவின் அலெக்சிஸ் சிப்ராஸ் உடன் நெருக்கமாக வேலை செய்கிறது. இந்த அமைப்புகளின் இலக்கு, சோசலிஸ்ட் கட்சி மற்றும் தேசிய முன்னணிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அல்ல. அவை, வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயலுவதன் மூலமாக தமது சிறப்புச் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்கின்ற நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளுக்காக பேசுகின்றன. |
|