தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி How the revival of German militarism was prepared ஜேர்மன் இராணுவவாதத்தின் புத்துயிர்ப்பு எவ்வாறு தயாரிக்கப்பட்டது
By Johannes
Stern Use this version to print| Send feedback உக்ரேனில் ஜேர்மன் அரசாங்கத்தின் ஆக்ரோஷ நடவடிக்கையும் அத்துடன் கைகோர்த்து நடந்த பாரிய ஊடகப் பிரச்சாரங்களும் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஜேர்மன் அரசியல்வாதிகளும் மற்றும் கருத்து வல்லுநர்களும் உக்ரேனில் நடந்த பாசிசத் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பை ஏறக்குறைய ஒருமனதாக ஆதரித்திருக்கின்றனர். அவர்கள் மாஸ்கோவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கோருவதில் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு விஞ்சுவதற்கு முனைகின்றதோடு, பெரும்பான்மையான ஜேர்மன் மக்கள் போர் பிரச்சாரத்தை தெளிவான முறையில் எதிர்த்து நிற்பதையும் கண்டிக்கின்றனர். பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விடயங்கள் கவனமாகத் தயாரிப்பு செய்யப்பட்டிருந்தவை ஆகும். ஒரு வருடங்களுக்கும் அதிகமான காலமாய், அரசாங்கம் சார்ந்த சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜேர்மன் நிறுவனம் (Stiftung Wissenschaft und Politik - SWP) மற்றும் வாஷிங்டனில் தலைமையகத்தைக் கொண்ட சிந்தனைக் குழுமமான ஜேர்மன் மார்ஷல் நிதியம் (GMF) ஆகியவற்றின் அரவணைப்பின் கீழான ஒரு திட்டப்பணியில், முன்னணி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இராணுவ மற்றும் வணிக ஆளுமைகள் 50 பேர் ஒரு கூடுதல் ஆக்ரோசமான ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையை விவாதித்து வந்திருந்தனர். சென்ற இலையுதிர்பருவத்தில் நடந்த விவாதங்களின் நிறைவில், “புதிய சக்தி, புதிய பொறுப்பு: மாறும் ஒரு உலகத்திற்கான ஜேர்மன் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் கூறுகள்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் வடிவம் மற்றும் நேட்டோவின் மறுஆயுதபாணியாக்கம் என இப்போது நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கொள்கைகளுக்கான ஒரு திட்டவரைபடத்தை அது வழங்குகிறது. இந்த ஆவணத்தின் மூலம் ஜேர்மன் முதலாளி வர்க்கம், இரண்டு உலகப் போர்கள் மற்றும் படுபயங்கரக் குற்றங்களைப் பின்தொடர்ந்து இராணுவவாத, வல்லதிகார அரசியலுக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஜேர்மனி “வருங்காலத்தில் மிக அடிக்கடியும் மிகத் தீர்மானகரமாகவும்” தனது உலகளாவிய நலன்களைப் பின்தொடர வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்தே SWP ஆய்வறிக்கை மிகத் தெளிவாக்கி விடுகிறது. அந்த ஆவணம் கூறுகிறது: “ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கை இனியும் உலகளாவிய வகையில் அல்லாமல் சிந்திக்கப்பட முடியாது. அத்துடன் ஜேர்மன் வரலாறு, அதன் அமைவிடம், மற்றும் பற்றாக்குறையான ஆதாரவளங்கள் ஆகியவையும் அதன் குறிப்பான மூலோபாய இலக்குகள் குறித்து மிகத் தீர்க்கமாக இருக்க வேண்டியதற்கான காரணங்களாக இருக்கின்றன.” ஆளும் வர்க்கம் ”தீர்க்கமாக” இருக்க வேண்டியதாக எதைப் புரிந்து கொள்கிறது, என்பதை பொறுத்தவரை இந்த ஆய்வறிக்கை சந்தேகம் எதற்கும் இடமளிக்கவில்லை. ஒரு “வர்த்தக மற்றும் ஏற்றுமதி நாடாக” ஜேர்மனி “மற்ற வெகு சில நாடுகள் போன்று உலகமயமாக்கத்தில் இருந்து ஆதாயம் பெறுகிறது” அத்துடன் “மற்ற சந்தைகளில் இருந்தான தேவையையும், அத்துடன் சர்வதேச வர்த்தகப் பாதைகள் மற்றும் கச்சாப் பொருட்களுக்கான அணுகலையும் சார்ந்திருக்கிறது.”ஆகவே “தாராளவாத உலக ஒழுங்கினை பத்திரப்படுத்துவது, பாதுகாத்து வைப்பது மற்றும் தகவமைப்பது தான்” ”எல்லாவற்றுக்கும் மேலான மூலோபாய இலக்காக இருக்க வேண்டும்.” இந்த ஆவணம் எத்தனை திட்டவட்டமாக ஜேர்மன் செல்வாக்கு வட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றை இராணுவரீதியாக பத்திரப்படுத்துவதற்கு வெளிப்படையாக அழைக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். “நடைமுறைரீதியான ஒரு ஜேர்மன் பாதுகாப்பு கொள்கை, அதிலும் குறிப்பாக அதிக செலவுபிடிக்கத்தக்க மற்றும் நீண்ட கால இராணுவ அமர்த்தங்கள் விடயத்திலான கொள்கை” பிரதானமாக “வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு தொடங்கி மத்திய ஆசியா வரையிலும் நாளுக்குநாள் ஸ்திரமற்றதாகி வரும் ஐரோப்பிய சுற்றுப்பகுதிகளிலேயே கவனம் குவிக்க வேண்டும்” என்று அந்த ஆய்வறிக்கை அறிவிக்கிறது. ”ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கையின் சாதனங்களாக” இந்த ஆவணம் “பொதுமக்கள், போலிஸ் மற்றும் இராணுவ சக்திகளின் ஒரு கலவையை”க் குறித்து பேசுகிறது. இராணுவத் தலையீடுகள் பரந்துபட்டதாக “மனிதாபிமான உதவியில் இருந்து இராணுவ ஆலோசனை, உதவி, ஒற்று மற்றும் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் சண்டை நடவடிக்கைகள் வரைக்கும் இருக்க வேண்டும்” ஜேர்மனி “ஒரு தலைமைப் பாத்திரத்தை” ஏற்க வேண்டும் என்பதற்கான அழைப்பு இந்த ஆய்வறிக்கை முழுவதிலும் ஒரு அடிநாதம் போல் ஓடுகிறது, அத்துடன் இது நேட்டோவின் கட்டமைப்பிற்குள்ளான இராணுவ நடவடிக்கைகளுடன் வெளிப்படையாக தொடர்புபடுத்துகிறது. இராணுவக் கூட்டணியானது அதன் “நிறுவப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள், கூட்டுப் பாதுகாப்புக்கான பரந்த வகை சாதனங்கள் மற்றும் திறன்வகைகள்” ஆகியவற்றுடன் சேர்ந்து “ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கை நலன்களின் ஒரு தனித்துவமான விஸ்தரித்துச் செல்லும் கருவியாக” கூறப்படுகிறது. இந்த ஆவணம் தொடர்கிறது: “நேட்டோவின் வருங்கால நோக்குநிலைக்கு, வடிவம் கொடுப்பதில் பங்களிக்க ஜேர்மனி தனது அதிகரித்திருக்கும் செல்வாக்கினைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஒரு வலிமையான மற்றும் திறம்பட்ட நேட்டோ தொடர்ந்து இயங்குவதில் அதன் நலன்கள் இருக்கின்றன, ஏனென்றால் இந்தக் கூட்டணி அமெரிக்காவுடன் அரசியல் ஆலோசனை மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கு நிரூபணம் பெற்ற ஒரு கட்டமைப்பு ஆகும்.” ஆயினும், இறுதியில் “இராணுவ-நடவடிக்கை மட்டத்தில்” “மேலதிக பங்களிப்புகள்” அவசியமாகின்றன. ஐரோப்பாவும் ஜேர்மனியும் இதற்கேற்றவாறு சீர்செய்து கொள்வதோடு ”அமெரிக்க பங்களிப்பின் மீது அதிகம் சாராத நேட்டோ நடவடிக்கைகளுக்கான வடிவங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.” இதற்கு “இராணுவத் திறன்களில் அதிகமான முதலீடுகளைச் செய்வதும் கூடுதலான அரசியல் தலைமைத்துவமும் அவசியமாகிறது.” பரவலான வெகுஜன எதிர்ப்புக்கு முகம்கொடுக்கும் நிலையில் வெளியுறவுக் கொள்கையிலான உருமாற்றத்தை எவ்வாறு திணிப்பது என்பது இந்த திட்டப்பணியின் ஒரு இன்றியமையாத மூலபாகமாகும். “வருங்கால திசை”யை கேள்விக்குள்ளாக்கக் கூடிய “ஒரு ஐயுறவுமிக்க பொதுமக்கள்” குறித்து இந்த ஆய்வறிக்கை புகாரளிக்கிறது. “ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையின் உள்நாட்டுப் பரிமாணம்”என்ற தலைப்பிலான ஒரு பிரிவில் இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது: “உலக அரங்கில் கூடுதல் பிரதானமான ஒரு ஜேர்மன் பாத்திரமானது” “தாயகத்தில் அங்கீகாரத்துக்கான பிரச்சினைகளை மோசமாக்கக் கூடும்.” ஆகவே “கொள்கைவகுப்பாளர்களும் வல்லுநர்களும்” பொதுமக்களின் “வெளியுறவுக் கொள்கையை புரிந்து கொள்ளா நிலையை” நிவர்த்தி செய்வதற்கு இந்த அறிக்கை வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறது. ஜேர்மனியின் ”சொந்தக் குடிமக்களையும் அத்துடன் சர்வதேச பொதுக் கருத்தினையும் சமாதானம் செய்கின்ற வண்ணம் கொள்கைவகுப்பாளர்கள் தமது வெளியுறவுக் கொள்கையின் இலக்குகளையும் அக்கறைகளையும் மிகத் திறம்பட வெளிப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.” சதியாலோசனையின் விரிவுமட்டம் இந்த ஆவணம் உருவான விதமானது, அதன் உள்ளடக்கத்தின் அளவுக்கு முக்கியமானதாகும். அரசியல், ஊடகங்கள், வணிகம், பல்கலைக்கழகங்கள், அமைச்சரவைகள், அரசு சாராக் குழுக்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை சிந்தனை குழுக்கள் ஆகியவற்றில் இருந்தான முக்கிய பிரமுகர்கள் சுமார் ஒரு வருட காலம் தங்களுக்குள் ஆலோசனை செய்து ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்தடைந்துள்ளனர். பிப்ரவரி ஆரம்பத்தில் Zeit Online இல் வெளிவந்த ஒரு கட்டுரை இந்த நிகழ்முறையை விரிவாக எடுத்துரைக்கிறது. “ஒரு உலகளாவிய பாதை” (A Global Course) என்ற உட்பொருள்காட்டும் தலைப்பின் கீழ் Zeit இன் ஆசிரியர்களான ஜோஅஹீம் பிட்னர் மற்றும் மதியாஸ் நாஸ் ஜேர்மனிய வல்லரசு அரசியலுக்குத் திரும்புதல் எவ்வாறு தயாரிப்பு செய்யப்பட்டது என்பதைக் காட்டியிருந்தனர். அவர்கள் எழுதினார்கள்: “இந்த புதிய வெளியுறவுக் கொள்கை கூட்டணி என்பது தற்செயலானதல்ல. இந்த பாதை மாற்றம் ஒரு முந்தைய வரலாற்றைக் கொண்டது, அந்த முந்தைய வரலாறு மறுகட்டுமானம் செய்யத்தக்கதாகும். இது 2012 நவம்பர் வரை பின்னோக்கி செல்லத்தக்கது அத்துடன் வெவ்வேறு இடங்களில் - ஜேர்மன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இருப்பிடமான Bellevue Castle இல், Werderian Market இல் இருக்கும் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் - மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் சிந்தனைக் குழாமான அரசியல் விஞ்ஞானத்திற்கான அறக்கட்டளையின் அரவணைப்பின் கீழ் நடந்தேறியதாகும். பல மாத காலம் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட வட்டமேசை ஆலோசனைகளுக்குப் பின்னர்தான், மூனிச்சில் உச்சம் பெற்ற விடயத்திற்கான தயாரிப்புகள் செய்யப்பட்டன. லிபியாவிற்கு எதிரான இராணுவத் தலையீட்டில் ஜேர்மனி பங்குபெறாமலிருந்தது - இது அப்போதைய வெளியுறவு அமைச்சரான கீடோ வெஸ்டர்வெல குறித்து கடும் விமர்சனத்தைக் கொண்டுவந்தது - தான் இந்தப் பாதை மாற்றத்தைத் தூண்டியது. ”ஜேர்மனியின் மெத்தனத்தின் மீதான அதிருப்தி, பேர்லின் வெளியுறவுக் கொள்கை சமூகத்தில் பெருகிக் கொண்டிருந்தது” என்று இக்கட்டுரையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்தனர்: “நான்காண்டு கால வெஸ்டர்வெல பதவிக்காலம், நான்காண்டு காலம் தெளிவானதொரு பாதை இல்லாமல் சென்ற காலமாக இருந்தது, ஆனால் கூட்டணியின் கூட்டாளிகள் மத்தியில் இன்னும் அதிகமான அதிருப்தி. இவை அனைத்தும் அதிருப்தி பெருகக் காரணமாயிருந்தது. முணுமுணுப்பு தெளிவாகக் கேட்கக் கூடியதாக இருந்தது.” பின்னர் “ஒரு வருட காலம், நவம்பர் 2012 முதல் அக்டோபர் 2013 வரை, ஒரு செயற் குழு பேர்லினில் கூடி ஜேர்மனிக்கான வெளியுறவுக் கொள்கை மூலோபாயம் ஒன்றை விவாதித்தது. சான்சலரின் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிந்தனைக் குழாம்களின் பிரதிநிதிகள், சர்வதேச சட்டத்தின் பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து நாடாளுமன்றப் பிரிவுகளில் இருந்துமான முன்னணி வெளியுறவுக் கொள்கை பிரதிநிதிகள் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து கலந்து பேசினர்.” வரிந்து கொள்ளும் ஊடகங்கள் புதிய வெளியுறவுக் கொள்கையை விரிவாக்கிய செயற் குழுவில் ஜோஅஹீம் பிட்னரும் ஒரு உறுப்பினர் என்பதை குறிப்பிடுவதை Die Zeit அலட்சியமாக உதாசீனம் செய்கிறது. FAZ (Frankfurter Allgemeine Zietung) ஐச் சேர்ந்த நிகோலஸ் போஸ்ஸ இந்தத் திட்டத்தின் பங்கேற்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். பிட்னெரும் போஸ்ஸவும் ஜேர்மன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும், நேட்டோவுடனும் மற்றும் எண்ணற்ற வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுக்களுடனும் நெருக்கமான தொடர்புடைய ஜேர்மன் பத்திரிகையாளர்களில் சிலராவர். புரூசேல்ஸில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விடயங்களுக்கான FAZ இன் செய்தியாளராக இருக்கும் போஸ்ஸ, ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி அரசியல்வாதிகளுடனும் நேட்டோ இராணுவப் புள்ளிகளுடனும் நன்கு தொடர்புடையவர் ஆவார். இவர் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இராணுவப் பெருக்கம் குறித்து உள்ளிருந்தான தகவல்களை எழுதுபவர். ஏற்கனவே இவர் பிப்ரவரி 25 அன்று, அதாவது உக்ரைனில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து மூன்று நாட்களுக்கு பின்னரும் அத்துடன் கிரீமியா ரஷ்யாவுடன் இணைவதற்கு ஒரு மாதம் முன்பாகவும், “உக்ரேன் குழப்பம்: ஐரோப்பாவின் புதிய கொதிபுள்ளி என நேட்டோ அஞ்சுகிறது” (Turmoil in Ukraine: NATO Fears New Flashpoint in Europe”) என்ற தலைப்பின் கீழ் அளித்த செய்தியில், “இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக கூட்டணியின் பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கான திட்டங்களையும் கூட” இராணுவ அதிகாரிகள் அபிவிருத்தி செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். பிட்னெர் 2007 முதல் 2011 வரை ஐரோப்பா மற்றும் நேட்டோவுக்கான Zeit இன் செய்தியாளராக இருந்தார். ஜேர்மன் மார்ஷல் நிதியம் (GMF) மற்றும் பேர்டெல்ஸ்மான் அறக்கட்டளையின் கூட்டு அமைப்பான புரூசேல்ஸ் மன்றத்தில் 2008 மற்றும் 2009 இல் ஒரு பங்கேற்பாளராகவும் மற்றும் செய்தியாளராகவும் இருந்தார். சென்ற ஆண்டு நவம்பர் 4 அன்று, “ஜேர்மன் சமாதானவாதம் குறித்து மறுசிந்தனை செய்தல்” என்ற தலைப்பின் கீழ் நியூயோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரையை அவர் வெளியிட்டார். அக்கட்டுரை ஒரு கூடுதல் ஆக்ரோஷமான ஜேர்மன் வெளியுறவுக் கொள்கைக்கு ஆலோசனையளித்தது. அக்கட்டுரையில் ஜேர்மானியர்களிடையே நிலவுகின்ற “ஆழமான வேரூன்றி விட்டிருக்கிற அமைதிவாத”த்திற்கு எதிராக அவர் கிளறி விடுவதோடு கூடுதலான “இராணுவத் தலையீடுகளுக்காய்” அழைப்பு விடுக்கிறார். ஜேர்மன் ஊடகங்கள் ஏறக்குறைய ஒருமனதாக போர் முரசு கொட்டுவது ஏன், ஒரேயொரு விமர்சனக் குரலும் கூட எழுப்பாதது ஏன் என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் விரும்பினால், ஊடக ஆய்வுகள் அறிஞரான Uwe Krüger 2013 இல் வெளியிட்ட ஒரு ஆய்வினை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். ஜேர்மன் பத்திரிகையாளர்களுக்கும் ஜேர்மனி மற்றும் அமெரிக்காவில் இருக்கின்ற அரசாங்க வட்டங்களுக்கும் அட்லாண்டிக் கடந்த சிந்தனைக் குழுமங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை இந்த ஆய்வு ஆராய்கிறது. பத்திரிகையாளர்களின் “விளைபொருள்” எப்படி “அமெரிக்க மற்றும் நேட்டோ நோக்குநிலை கொண்ட சுற்றுவட்டத்துடன்” அவர்கள் கொண்டிருக்கும் தொடர்புகளால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது என்பதை அந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. Die Zeit இன் இணை ஆசிரியரான ஜோசப் ஜோஃவ்வ மற்றும் Süddeutsche Zeitung இன் ஸ்ரெஃபான் கோர்னீலியுஸ் போன்ற தொழில்முறை செய்தியாளர்கள் -இவர்கள் இருவருமே சமீப வாரங்களில் ரஷ்யாவுடன் போர் தொடுக்க அழைக்கும் பிரச்சாரத்தில் முன்னிலையில் நின்றிருந்தனர்- வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையிலும் அத்துடன் “பெரும் மட்டத்திற்கு நேட்டோ பொதுப் பாதுகாப்பு கூட்டணியின் மூலமாக பராமரிக்கப்படுகின்ற” அட்லாண்டிக் கடந்த உறவுகளை வலுப்படுத்துவதிலும் அக்கறை கொண்ட அமைப்புகளில் செயலூக்கத்துடன் பங்குபற்றி வருபவர்கள். அவர்களது தொடர்பு பரந்துவிரிந்ததாக இருக்கிறது. அவர்கள் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் தவறாது பங்குபெறுகின்றனர், அத்துடன் சமகால ஜேர்மன் ஆய்வுகளுக்கான அமெரிக்க நிறுவனம் (American Institute for Contemporary German Studies) மற்றும் ஜேர்மனிக்கான அமெரிக்க கவுன்சில் (American Council on Germany) போன்ற அட்லாண்டிக் கடந்த சிந்தனைக் குழுமங்களுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டுள்ளனர். உயரடுக்கினரின் இரகசியமான பில்டர்பேர்க் மாநாட்டில் ஜோஃவ்வ பங்கேற்கிறார் என்றால், கோர்னீலியுஸ் ஜேர்மன் அட்லாண்டிக் சமூகத்தின் (German Atlantic Society) செயற்குழு உறுப்பினராக உள்ளார். இருவருமே வெளியுறவுக் கொள்கைக்கான ஜேர்மன் சமூகத்தில் (DGAP) -இதன் இயக்குநர் எபஹார்ட் சான்ட்ஷினைடர் SWP திட்டப்பணியில் பங்குபெற்றார்- ஈடுபட்டிருப்பவர்கள். கௌக், ஸ்ரைன்மையர் மற்றும் வோன் டெர் லெயன் ஆகியோரின் எழுச்சி ஒரு புதிய ஏகாதிபத்தியக் கொள்கையின் முக்கியமான மூலபாகங்களின் விடயத்தில் ஆளும் உயரடுக்கு உடன்பட்ட அதேநேரம், முன்னாள் போதகரான ஜோஅஹிம் கௌக் அவருக்கு முன்னர் பதவியில் இருந்த கிறிஸ்டியான் வொல்ஃபிற்கு எதிராக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஒரு பிரச்சாரத்தை அடுத்து ஜேர்மன் ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டார். வெளியுறவுக் கொள்கையிலான புதிய மாற்றத்தை பகிரங்கமாய் அறிவிப்பது கௌக்கின் வேலை என்றானது. இந்த நோக்கத்திற்கு கௌக் அக்டோபர் 3, 2013 ஐ தேர்ந்தெடுத்தார். ஜேர்மன் மறுஇணைவை அனுசரிக்கும் தினத்தை ஒட்டிய அவரது உரையில் கௌக், முந்தைய ஒரு வருட காலத்தில் விவாதிக்கப்பட்டிருந்த விடயங்களை சுருங்க முன்வைத்தார். ஜேர்மனி “அரசியல், இராணுவ, மற்றும் பொருளாதார மோதல்களில்” இருந்து ஒதுங்கியிருப்பதற்கு அது ஒன்றும் “தனித்தீவு அல்ல” என்று அவர் கூறினார். அதன் பொருளாதார வலிமைக்கும் செல்வாக்குக்கும் தக்க ஒரு பாத்திரத்தை அது ஐரோப்பிய அளவிலும் உலக அளவிலும் ஆற்ற வேண்டியிருக்கிறது என்றார். கௌக்கின் சூத்திரங்கள் சில நேரடியாக SWP இன் ஆய்வறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இது வெறும் தற்செயலல்ல. கௌக்கின் தலைமைப் பணியாளரும், ஜனாதிபதி அலுவலகத்தில் மிக முக்கியமான ஆளுமையுமாக இருப்பவர் தோமாஸ் கிளைய்ன-புரோக்ஹோஃப். முன்னாளில் Die Zeit இல் அமெரிக்காவுக்கான செய்தியாளராக இருந்திருக்கும் இவர், அப்போது ஜேர்மன் மார்ஷல் நிதியத்தின் அப்போதைய இயக்குநராக SWPக்கு துவக்கமளித்தவர்களில் ஒருவராவார். “ ஜோஅஹிம் கௌக்கின் அத்தனை உரைகளும் இவரது மேசையை கடந்தே செல்கின்றன” என்று பிட்னர் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார். கௌக்கின் உரைக்கான நேரம் மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். 2013 கூட்டரசாங்கத் தேர்தலுக்கு சில நாட்களின் பின்னர் நிகழ்ந்த இந்த உரை, கூட்டணிப் பேச்சுகளுக்கான திட்டநிரலை உருவாக்கித் தந்தது. இதனை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முழுத் தெளிவாகக் காண முடிந்தது. பெரும்-கூட்டணி பதவி ஏற்றுக் கொண்ட வெகு குறுகிய காலத்திலேயே, வெளியுறவு அமைச்சரான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் (சமூக ஜனநாயகக் கட்சி) மற்றும் பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா வோன் டெர் லெயனும் (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்) மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருந்த பாதையை அறிவித்தனர். அக்டோபர் 3 அன்று கௌக் அளித்த சூத்திரத்திற்கு ஏறக்குறைய ஒத்ததாக, ஸ்ரைன்மையர், “வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் இன்னும் ஆரம்பத்திலேயே, அத்துடன் மிகத் தீர்மானகரமாகவும் மற்றும் மிகக் கணிசமாகவும் தலையீடு செய்வதற்கு” ஜேர்மனி தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவித்தார். அவருக்கு முன்பிருந்த வெஸ்டர்வெல (சுதந்திர ஜனநாயகக் கட்சி) மீதான சற்று மறைமுகமான விமர்சனமாக அவர் “ஒதுங்கியிருக்கும் கலாச்சாரத்தை” தாக்கினார், ”ஓரத்தில் நின்று கொண்டு வெளியுறவுக் கொள்கையில் கருத்துக் கூறிக் கொண்டிருக்க முடியாத அளவுக்கு ஜேர்மனி மிகப் பெரிய நாடு” என்றார். ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு வட்டத்தின் பகுதிகளாக ஸ்ரைன்மையர் நாடுகளின் பட்டியல் ஒன்றைக் கூறினார். அவர் அறிவித்தார்: “சிரியா, உக்ரேன், ஈரான், ஈராக், லிபியா, மாலி, மத்திய ஆசியக் குடியரசு, தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஆசிய பதட்டங்கள் - இவையெல்லாம் வரும் ஆண்டுகளது பரபரப்பான இடங்களின் ஒரு முழுமை பெறாத பட்டியல். வெளியுறவுக் கொள்கையும் பாதுகாப்புக் கொள்கையும் முழு நேரங்களிலும் தேவைப்படும்.” வோன் டெர் லெயனும் இதே போன்ற தொனியை வெளிப்படுத்தினார். “ஜேர்மனி போன்றதொரு நாட்டுக்கு, அலட்சியம் காட்டுவது என்பது ஒரு தெரிவாக முடியாது” என்று அவர் தெரிவித்தார். “இது கணிசமான அளவு மிகப்பெரியதொரு நாடு” எனவே அது “தன் சர்வதேசப் பொறுப்புகளை நிறைவேற்றியாக வேண்டும்”. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் சர்வதேச நடவடிக்கைகளும் இதில் அடங்கும். “மாலியில் பங்களிப்புக்கு வலுவூட்டுவதற்கும்”, “சிரியாவில் எஞ்சிய இரசாயன ஆயுதங்களை அழிப்பதில் பங்கெடுப்பதற்கும்”, அத்துடன் “மத்திய ஆபிரிக்க குடியரசில் எதிர்வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலையீட்டுக்கு ஆதரவளிப்பதற்கும்” அவர் உறுதிப்பட வாக்குறுதியளித்தார். இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் ஈடுபடுத்தப்படுதல் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளாக சொல்லப்படுபவை வெளியுறவுக் கொள்கை மாற்றத்தின் உயர் மட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. SWP ஆய்வறிக்கை தயாரிப்பில் பசுமைக் கட்சியினரின் சார்பாக Omid Nouripourம், இடது கட்சியின் சார்பாக Stefan Liebich (ஸ்ரேஃபான் லீபிக்) ம் பங்குபெற்றனர். இருவருமே தங்களது கட்சிக்கு வெளியுறவுக் கொள்கை தொடர்பான முன்னணி செய்தித் தொடர்பாளர்களாக உள்ளனர். Nouripour நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் பிரதிநிதியாவார், Liebich வெளியுறவு விவகாரக் குழுவின் ஒரு உறுப்பினராக இருக்கிறார். இது தவிர Liebich இடது கட்சியின் (Linkspartei) நிறைவேற்றுக் குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார். பசுமைக் கட்சியின் பங்கேற்பில் ஆச்சரியமேதுமில்லை. இந்த முன்னாள் அமைதிவாதிகள் தான் லிபியப் போரில் ஜேர்மனி பங்கேற்காததன் மிகப்பெரும் விமர்சகர்களாக இருந்தனர். சேர்பியா மீதான நேட்டோவின் போரில் ஜேர்மன் பங்கேற்பதற்கு அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜோஸ்கா பிஷ்சரின் மூலமாக ஒப்புக்கொண்டது முதலாகவே, அவர்கள் ஜேர்மன் இராணுவத்தின் ஒவ்வொரு வெளிநாட்டு தலையீட்டையும் ஆரவாரத்துடன் ஆதரித்திருக்கின்றனர். இடது கட்சி ஈடுபடுத்தப்படுவது குறிப்பான முக்கியத்துவம் பெற்ற விடயமாகும். ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் உலக அரங்கிற்குத் திரும்புகின்ற சமயமாகப் பார்த்து சரியாக அக்கட்சி தனது அமைதிவாத வார்த்தையலங்காரங்களை கைவிடுகிறது. Atlantic Bridge மற்றும் DGAP உள்ளிட பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் சிந்தனைக் குழாம்களில் Liebich ஒரு உறுப்பினராக இருக்கிறார். SWP நல்லாதரவின் கீழ் புதிய வெளியுறவுக் கொள்கை அபிவிருத்தி செய்யப்படுவதில் Liebich ஒத்துழைப்பு அளித்த அதேவேளையில், ஒரு கூடுதல் மூர்க்கத்தனமான வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவாக இடது கட்சிக்குள்ளாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஏற்கனவே சென்ற இலையுதிர்காலத்தில், “இடது வெளியுறவுக் கொள்கை: சீர்திருத்தத்திற்கான முன்னோக்குகள்” என்ற தலைப்புடன் WeltTrends கட்டுரைகளின் ஒரு தொகுப்பை வெளியிட்டது. அதில், இடது கட்சியின் முன்னணி அரசியல்வாதிகள் SWP மூலோபாய அறிக்கையின் அதே தொனியினில் வாதிட்டிருந்தனர். இராணுவ நிலைநிறுத்தங்கள், அமெரிக்காவுடன் நெருக்கமான அட்லாண்டிக் கடந்த உறவுகள், அத்துடன் ஜேர்மனிக்கான ஒரு கூடுதல் பெரிய சர்வதேச பாத்திரம் ஆகியவை குறித்து அவர்கள் பேசினர். இந்தப் பாதையை இடது கட்சி இப்போது நடைமுறையில் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏப்ரலில் Liebich தலைமையில் கட்சி அங்கத்தவர்கள் ஐந்து பேர், ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு ஆதரவாக அரசாங்கக் கட்சிகளுடன் இணைந்து வாக்களித்தனர். ஜேர்மன் இராணுவ நிலைநிறுத்தத்திற்கு ஆதரவாக இடது கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்தது இதுவே முதன்முறை ஆகும். பாதுகாப்பு அமைச்சரான வோன் டெர் லெயன் சமீபத்தில் ஆபிரிக்காவில் இருக்கும் ஜேர்மன் துருப்புகளை பார்வையிடச் சென்ற சமயத்தில், அவருடன் இடது கட்சியின் இன்னொரு முன்னணி உறுப்பினரும் அத்துடன் அரசு முதலாளித்துவ மார்க்ஸ் 21 குழுவைச் (state capitalist Marx21 group) சேர்ந்தவருமான கிறிஸ்டீன் புஹோல்ஸ் உம் உடன் சென்றார்.பல்கலைக்கழகங்களில் இருந்தான சித்தாந்த ஆதரவு வெளியுறவுக் கொள்கை மாற்றத்தில் ஒரு முக்கியமான மூலபாகமாக ஜேர்மன் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு இருந்தது. பேர்லின் Free University, ஜெனாவில் இருக்கும் Friedrich Schiller பல்கலைக்கழகம், பிராங்க்ஃபேர்ட்/மெயின் இல் இருக்கும் Johann Wolfgang Goethe பல்கலைக்கழகம், பிராங்ஃபேர்ட்/ஓடர் இல் இருக்கும் European Viadrina பல்கலைக்கழகம், மற்றும் பேர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்கள் SWP மற்றும் GMF ஆதரவிலான விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டனர். அரசின் போர் பிரச்சாரத்தில் பல்கலைக்கழகங்களை ஈடுபடுத்தியமை ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் சுதந்திரக் கோட்பாட்டின் மீதான ஒரு அத்துமீறலாகும். ஜேர்மன் வரலாற்றில் இத்தகைய ஒத்துழைப்புகளின் படுபயங்கரமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக மூன்றாம் குடியரசை (Third Reich) சேர்ந்த பேராசிரியர்களைக் கூறலாம். சட்டத்திற்கு நாஜிக்களின் வழியில் பொருள்விளக்கமளித்த கார்ல் ஷிமிட்த், ஹிட்லருக்கு தனது மெய்யியல் ஆசிகளை வழங்கிய மார்ட்டின் ஹேய்டெக்கர் போன்று இவர்கள் இனவாத சித்தாந்தத்திற்கு ஒரு விஞ்ஞான அடிப்படையை வழங்க பிரயத்தனப்பட்டனர். குறிப்பிடக்கூடியதாக, சட்ட அறிஞரான கியோர்க் நோல்ட இந்த விவாதங்களில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்குபெற்றார். இவர் 1986 இல் நாஜிக்களின் குற்றங்களை தணித்துக் கூறி ’வரலாற்றாசிரியர்களின் சர்ச்சை’ என்று சொல்லப்படுகின்ற ஒன்றைத் தூண்டிய வரலாற்றாசிரியர் ஏர்ன்ஸ்ட் நோல்டவின் புதல்வராவார். ஜேர்மன் இராணுவவாதம் புதுப்பிக்கப்படுவதற்கு, இருபதாம் நூற்றாண்டின் வரலாறு திருத்தி எழுதப்படுவதும் இரண்டு உலகப் போர்களில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் இழைத்த குற்றங்கள் அற்பமாக்கப்படுவதும் அவசியமாக இருக்கிறது. இந்தப் பணியில் கொஞ்ச காலமாகவே ஹம்போல்ட் பல்கலைக்கழகம் நிபுணத்துவம் பெற்றுக் கொண்டிருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத் துறையின் துறைத் தலைவரான ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி தனது பணியினை ஏர்ன்ஸ்ட் நோல்டவுக்கு புத்துயிரூட்டுவதற்காய் அர்ப்பணித்திருக்கிறார். ”நோல்டவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அவர் கூறியது வரலாற்றுரீதியாக சரியானதே” என்று பார்பெரோவ்ஸ்கி கூறியதாக சமீபத்தில் Der Spiegel மேற்கோள் காட்டியிருந்தது. பல்கலைக்கழகங்களில் இருக்கும் இந்த போர் சித்தாந்தவாதிகள், விஞ்ஞானம் என்ற போர்வையில், இராணுவவாதத்தின் சித்தாந்த படையணிப் பயிற்சியாளர்களாக சேவையாற்ற வழிசெய்யும் வண்ணம், வருங்காலத்தில், அரசும் பல்கலைக்கழகங்களும் அவர்களுக்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சி நிதிகளை அள்ளி வழங்கும். SWP ஆவணத்தில் அது கூறுகிறது: “மிகக் குறைந்த எதிர்வினையாற்று நேரத்துடனான ஒரு சிக்கலான சூழலானது சிறந்த அவதான அறிகைத் திறன்களையும், அறிவையும் அவசியமாக்குகிறது. அறிவு, தோற்றப் புரிதல், ஆழப் புரிதல், தீர்மானிப்பு மற்றும் மூலோபாய கணிப்புத்திறன்: இந்த அத்தனை திறன்களும் கற்பிக்கத்தக்கவை பயிற்சியளிக்கத்தக்கவை. ஆனால் அதற்கு முதலீடுகள் அரசின் தரப்பில் இருந்து மட்டுமல்லாது, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஸ்தாபனங்களின் தரப்பில் இருந்தும் அவசியமாக இருக்கிறது. அரசியல் படைப்புத்திறனுக்கு வழிசெய்கின்றதும் வளர்த்தெடுக்கின்றதும் மட்டுமன்றி, கொள்கைத் தெரிவுகளை துரிதமாகவும் செயல்படுத்தக்கூடியதான வடிவங்களில் அபிவிருத்தி செய்யவும் திறம்பட்டதாகவும் இருக்கின்ற ஒரு புத்திஜீவித சூழலை ஸ்தாபிப்பதே இலக்காக இருக்க வேண்டும்.” இதுவே இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புதிய ஓர்வெல்லிய மொழி ஆகும். மீண்டும் “இராணுவரீதியாக சிந்திக்கவும்” போரின் “அரசியல் படைப்புத்திறனுடனான” கொள்கைக்குத் திரும்பவுமான அழைப்பே இந்த “புத்திஜீவித சூழல்”, “அரசியல் படைப்புத்திறன்”, “மூலோபாய முன்கணிப்புத்திறன்” மற்றும் “துரிதமான மற்றும் செயல்படுத்தத்தக்க அரசியல் தெரிவுகள்” ஆகிய கருத்தாக்கங்களின் பின்னால் நின்று கொண்டிருக்கிறது. இதுவே 1930களுக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் மிக ஆழமான நெருக்கடிக்கு ஆளும் வர்க்கம் பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கும் விதமாகும். இந்த போர் சதியின் அளவும் அதன் சர்வகவனமான தயாரிப்பும் ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும். சென்ற நூற்றாண்டின் இரண்டு தருணங்களில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலகத்தை நரக பாதாளத்திற்குள் அமிழ்த்தியது. அது மூன்றாம் முறையாக நடப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் அனுமதிக்க முடியாது, அனுமதிக்கக் கூடாது. ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் புதிய, புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆற்ற வேண்டியிருக்கும் அதிமுக்கிய பாத்திரத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |
|
|