World Socialist Web Site www.wsws.org |
The Wall Street bonanza வோல் ஸ்ட்ரீட்டின் செல்வசெழிப்புAndre Damon அமெரிக்க பங்குச் சந்தை மீண்டுமொரு முறை செவ்வாயன்று புதிய சாதனைகளை எட்டியது, டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி மற்றும் ஸ்டாண்டர்ட் & புவர்ஸின் 500 குறியீடு இரண்டுமே புதிய உச்சத்தில் முடிவுற்றன. S&P 500 மார்ச் 2009இல் 683 புள்ளிகள் என்ற குறைந்த அளவில் இருந்து உயர்ந்து, முதல் முறையாக 1,900 புள்ளிகளைக் கடந்தது, அதேவேளையில் டோவ் 16,715 புள்ளிகளை எட்டியது. 2008 பொறிவுக்குப் பின்னர் ஆறு ஆண்டுகள் ஆகவிருக்கின்ற நிலையில், நிதியியல் சந்தைகள் அவற்றின் இழப்புகளை மட்டும் மீட்டிருக்கவில்லை, அவை 2000 மற்றும் 2008இல் அவை எட்டியிருந்த உச்சங்களுக்கும் வெகு மேலே உயர்ந்துள்ளன. 2008 பொறிவுக்குப் பின்னரில் இருந்து நடந்துள்ள, சமூகத்தின் பெரும்பான்மையினரிடம் இருந்து பெரும்-பணக்காரர்களுக்கு செய்யப்பட்ட செல்வ வளத்தின் பாரிய மறுபகிர்வு இந்த புள்ளிவிபரங்களில் வெளிப்படுகிறது. ஒரு புதிய நிதியியல் குமிழி ஊதி பெருத்து நிற்கிறது. உண்மையான பொருளாதார நிலையோடு பங்கு மதிப்புகளின் வளர்ச்சி பொருத்தமற்று உள்ளது, நிஜமான பொருளாதாரமோ இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய 3.3 சதவீத சராசரியோடு ஒப்பிடுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 1 சதவீத சராசரி அளவிற்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. வோல் ஸ்ட்ரீட், கொண்டாட்டத்தில் இருக்கின்ற அதேவேளையில், பொருளாதாரமோ பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் வீழ்ச்சி அடைந்து வரும் ஊதியங்களால் பீடித்திருக்கிறது. இது சமீபத்திய சில்லறை விற்பனை புள்ளிவிபரங்களில் பிரதிபலிக்கிறது, பண வசதியில்லாத நுகர்வோர் அவர்களின் செலவுகளை இறுக்கி பிடித்ததால், அது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அரிதாகவே அசைவு காட்டியது. மார்ச் 2009இல் இருந்து பங்கு விலைகள் அண்மித்த அளவில் மூன்று மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஒரு சாமானிய குடும்பத்தின் வருமானமோ 2007 மற்றும் 2012க்கு இடையே 8.3 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இந்த விரிசல் ஒன்றும் ஒரு தற்செயலான விபத்தல்ல, மாறாக ஒபாமா நிர்வாகம் மற்றும் பெடரல் ரிசர்வ் ஆணையத்தால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையின் விளைவாகும். 2008இல் இருந்து, பெடரல் பங்குச் சந்தையை நெருக்கமாக பின்பற்றியும், அதை உயர்த்தியும், அதன் இருப்புநிலை குறிப்பை ஐந்து மடங்குக்கும் அதிகமாக விஸ்தரித்திருந்தது. மத்திய வங்கியின் கையிருப்புகள் 2009இன் இறுதியில் இருந்து ஆண்டுக்கு 13.9 சதவீதம் என்ற அளவில் விரிவடைந்துள்ளது, அதேவேளையில் அதே காலப்பகுதியில் டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி ஆண்டுக்கு 14.1 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. பெடரல் ஆறு ஆண்டுகளுக்கு அண்மித்தளவில் வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அருகாமையில் வைத்திருக்கிறது, இந்த கொள்கைக்கு வரலாற்று முன்னுதாரணமே இல்லை. ஜூன் 2009இல் உத்தியோகபூர்வமாக தொடங்கிய ஒட்டுமொத்த "மீட்சி" காலத்தின் போது, தோற்றப்பாட்டளவில் மத்திய வங்கி வட்டியில்லா கடன்கள் வங்கிகளுக்கு எல்லையில்லாமல் பாய்வதை உறுதிப்படுத்தி உள்ளது என்ற முக்கியமான உண்மையானது, இந்த மீட்சி என்றழைக்கப்படுவது உற்பத்தி சக்திகளின் ஒரு நிஜமான விரிவாக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை, மாறாக, பெருந்திரளான மக்களின் வாழ்க்கை தரங்கள் ஒருபுறம் இருக்கட்டும், அது ஒரு ஒட்டுண்ணித்தனமான நிதியியல் மேற்தட்டின் நலன்களுக்காக சமூகத்தை சூறையாடுவதை அடிப்படையாக கொண்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பெடரல் ட்ரில்லியனுக்கு மேல் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சி உள்ளது, இது உண்மையான பொருளாதாரத்திற்குள் திரும்ப கொண்டு வரப்படவில்லை, மாறாக அவை பெரிதும் பணக்காரர்களிலேயே பணக்காரர்களின் பைகளிலும், வங்கி கணக்குகளிலும், பங்குகளுக்குள்ளும் பாய்ந்துள்ளது. நிதியியல் பிரபுத்துவத்தின் இந்த செல்வசெழிப்பு, மக்களை விலையாக கொடுத்து, அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்டதாகும். பொருளாதார மந்தநிலைமையின் அதிகரித்து வரும் அறிகுறிகளுக்கு இடையிலும், பங்குச் சந்தை ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகிறதென்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், பெடரல் சேர்மேன் ஜனெட் யெல்லெனால் தொடர்ந்து அளிக்கப்படும் வாக்குறுதியாகும். மத்திய வங்கி பெடரல் நிதி விகிதத்தின் உச்ச நிர்ணய வரம்பை காலவரையின்றி பூஜ்ஜியத்திற்கு அருகாமையில் வைத்திருக்கும் என்று அவர் உறுதி அளிக்கிறார். மலிவு பண சூதாட்டத்திற்கு அப்பாற்பட்டு, சாதனையளவிலான பங்குச் சந்தை மதிப்புகள் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் ஏற்பட்டிருக்கும் பாரிய அதிகரிப்பை பிரதிபலிக்கின்றன, ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில் இப்போது தான் இது தொடங்கி இருக்கிறது. USA Todayஇல் இந்த மாத தொடக்கத்தில் வெளியான ஒரு கட்டுரை, வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதலுக்கும் பங்குச் சந்தை ஓட்டத்திற்கும் இடையிலான நேரடி இணை தொடர்புகளை குறிப்பிட்டது. பெரும் வெகுமதிகள் மிகவும் இரக்கமின்மைக்கு செல்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் வேலைகளை வெட்டி வரும், ஸ்டாண்டர்ட் & புவர்ஸின் 500 குறியீட்டில் உள்ள பதினான்கு நிறுவனங்களின் பங்கு விலைகள் அவற்றின் போட்டியாளர்களின் பங்கு விலைகளை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு சிறப்பாக இருந்துள்ளன. இவற்றில் செல்போன் உற்பத்தியாளர் மோட்டரோலா, அலுவலக உபகரண உற்பத்தியாளர் Pitney Bowes, வீட்டு தானிய பொருள் விற்பனை அங்காடியான Safeway மற்றும் இராணுவ ஒப்பந்ததாரர் Lockheed Martin ஆகியவை உள்ளடங்கும். அந்த கட்டுரை குறிப்பிட்டது: “இத்தகைய சீர்கெட்ட வேலை வெட்டுவோரின் பங்குகள், சராசரியாக, கடந்த 12 மாதங்களில் 18.8 சதவீதம் உயர்ந்துள்ளது. அது அதே காலக்கட்டத்தில் எஸ்&பி 500 குறியீட்டின் 15.5 சதவீத உயர்வையும் கடந்து நிற்கிறது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில், வேலைகளை வெட்டும் நிறுவனங்கள் பரந்த வித்தியாசத்தில் சந்தையைக் கடந்து செல்கின்றன, எஸ்&பி 500 குறியீடு 103 சதவீதம் உயர்ந்துள்ள அதேவேளையில் அந்த நிறுவனங்களோ சராசரியாக 269 சதவீதம் உயர்வைப் பெற்றுள்ளன.” சான்றாக, 2013இல், Pitney Bowes அதன் தொழிலாளர் எண்ணிக்கையில் 41 சதவீத அளவிற்கு குறைத்தது. அதன் பங்கு விலை 73 சதவீதம் உயர்ந்தது. “மீட்சி" என்றழைக்கப்படுவதன் குணாம்சத்தை இதை விட தெளிவாக வேறெதுவும் தொகுத்து தர முடியாது — இது, வேலைகள் அழிப்பு மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை வறுமைக்கு தள்ளுவதன் அடிப்படையில் நடக்கும், பங்கு விலைகள், பெருநிறுவன இலாபங்கள், நிர்வாகிகளின் சம்பளங்களுக்கான மீட்சியாகும். 2008 நெருக்கடி மீது வெளியான ஒரு சமீபத்திய புத்தகத்தில், ஒபாமா நிர்வாகத்தின் முன்னாள் கருவூல செயலர் திமோதி கெய்த்னர், “ஏதோவொன்றை நாங்கள் செய்யவில்லை என்றால் அது வங்கியாளர்களுக்கு அனுதாபம் காட்டவில்லை என்பது தான்,” அவர்கள் வெறுமனே "உடன் ஆதாயம் அடைந்தவர்களாக" இருந்தார்கள் அவ்வளவு தான் என்று வலியுறுத்துகிறார். துல்லியமாக விடயம் அதற்கு எதிர்விதமாக இருக்கிறது. பதவிக்கு வந்த முதல் நாளில் இருந்து, ஒபாமா நிர்வாகம் (அதற்கு முன்னர் இருந்தவரின் கொள்கையைத் தொடர்ந்து கொண்டு) பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வ வளத்தைப் பாதுகாப்பதிலும், விரிவாக்குவதிலும் அதன் முயற்சிகளை குவித்திருந்தது. ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், கெய்த்னரை கருவூலத்துறை தலைவராக ஆக்குவதென்று எடுக்கப்பட்ட முடிவு (அப்போது அவர் நியூ யோர்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக மற்றும் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தார்) ஏற்கனவே அவரது நிர்வாகம் சேவை செய்யவிருக்கின்ற சமூக மற்றும் வர்க்க நலன்களுக்கு அறிகுறி காட்டி இருந்தது. வங்கி பிணையெடுப்புகளும், பெடரல் ரிசர்விடம் இருந்து கிடைத்த மலிவு பணமும் முன் அனுமானிக்கக்கூடிய விளைவைக் கொண்டிருந்தது. 2013இல் வோல் ஸ்ட்ரீட் செயலதிகாரிகளின் கொடுப்பனவு ஊதியம் 15 சதவீதம் அதிகரித்தது, அது 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் அதன் அதிகபட்ச உயரத்தை எட்டியது. சமூக சமன்பாட்டின் மறுபக்கம், அந்த நிர்வாகம் முன்னுதாரணமற்ற விதத்தில் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் சலுகைகள் மீது தாக்குதலை முன்னெடுத்தது. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் ஆலைகளின் 2009 மறுசீரமைப்பில், வாகனத்துறை உற்பத்தியாளர்களுக்கு நிதியியல் உதவி வழங்குவதற்காக என்ற பெயரில் வெள்ளை மாளிகை நாடெங்கிலும் புதிய தொழிலாளர்களுக்கு 50 சதவீத ஊதிய வெட்டைத் திணித்தது. 2009இல் இருந்து, வாகனத்துறை ஊதியங்கள் சராசரியாக 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன, இது வாகனத்துறை நிறுவனங்களுக்கு சாதனையளவிலான இலாபங்களை உருவாக்கி தந்துள்ளது, அதேவேளையில் பொருளாதாரம் முழுவதிலும் ஊதிய வெட்டுக்களுக்கு ஒரு நிர்ணயத்தை அமைத்து கொடுத்துள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு பணத்தைக் கையளித்ததில் இருந்து திரண்ட மொத்த கடன்களையும் திரும்ப செலுத்தி ஆக வேண்டும். ஆனால் அவை, இலாபங்களுக்கு சேதமில்லாமல், ஊதியங்கள், மருத்துவ பராமரிப்பு, ஓய்வூதியங்கள், பொது கல்வி அல்லது இதர அத்தியாவசிய சமூக சேவைகள் என அனைத்து செலவினங்களின் வெட்டுக்கள் மூலமாக செய்யப்படும். அரசின் நடவடிக்கைகளும், வோல் ஸ்ட்ரீட்டின் நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று கையோடு கை கோர்த்து சென்றுள்ளன, முன்னது பிந்தையதன் அரசியல் அங்கமாக மற்றும் பிரதிநிதியாக சேவை செய்கிறது. அதிகரித்து வரும் சமூக அவலங்கள், வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு இடையில் உயர்ந்து வரும் பங்குகளின் விலைகள் மற்றும் சாதனையளவிலான பெருநிறுவன இலாபங்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகளின் ஊதியங்களின் வெறுப்பூட்டும் காட்சியே, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவு கட்டுவதற்கான மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான கேள்விக்கு இடமில்லாத ஒரு வாதமாக உள்ளது. |
|