World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian elections: Rival right-wing parties in Tamil Nadu make populist promises

இந்திய தேர்தல்கள்: தமிழ்நாட்டின் வலதுசாரி போட்டி கட்சிகள் ஜனரஞ்சக வாக்குறுதிகள் அளிக்கின்றன

By Sasi Kumar
3 May 2014

Back to screen version

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கீழ்சபையில் 39 இடங்களை கொண்டுள்ளதும், 50 மில்லியன் வாக்காளர்களைக் கொண்டுள்ளதுமான தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவின் ஒன்பது கட்ட தேசிய தேர்தல்களில் ஆறாவது கட்டமாக ஏப்ரல் 24 அன்று தேர்தல்களைச் சந்தித்தது. நாடெங்கிலுமான வாக்குகளைப் போலவே, தமிழ்நாட்டின் வாக்குகளும் மே 16இல் எண்ணப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும், கூட்டணிகளும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக), திராவிட முன்னேற்ற கழகம் (திமுக), இரட்டை ஸ்ராலினிச கம்யூனிச கட்சிகள், இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) மற்றும் அதன் பிராந்திய பங்காளிகள் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட சமூக ஆதரவு வழங்கப்படும் என நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளோடு வாக்குகளை வெல்ல முனைந்துள்ளன.

யதார்த்தத்தில் எல்லா கட்சிகளும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய பெரு வணிகங்களால் கோரப்படும் சமூகத்திற்கு கொள்ளி வைக்கும் பொருளாதார "சீர்திருத்தங்களைத்" தொடரவும், தீவிரப்படுத்தவும் பொறுப்பேற்றுள்ளன. அவை அனைத்துமே, விதிவிலக்கின்றி, நிலவும் சமூக சமத்துவமின்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையால் தோற்றுவிக்கப்பட்டு அதிகரித்து வரும் சமூக அதிருப்தி மற்றும் கோபத்தைப் பிற்போக்கான விதத்தில் திருப்பும் நோக்கில் தமிழ் தேசியவாதத்திற்கு விண்ணப்பம் செய்கின்றன. இந்தியாவின் "வளர்ச்சி" குறித்து மேற்தட்டு ஜம்பமடித்து வருகின்ற நிலையில், மக்களின் பரந்த பெரும்பான்மையோ நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான தொகையில் வாழ போராட வேண்டி உள்ளது, அதுவும் இரட்டை இலக்க விலை உயர்வுகள் மற்றும் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு இடையே அவ்வாறு இருக்க விடப்பட்டுள்ளது.

இரண்டு போட்டி பிராந்திய கட்சிகளான அஇஅதிமுக தற்போது மாநில அரசாங்கத்தில் உள்ளது மற்றும் திமுக, கடந்த மூன்று தசாப்தங்களாக அம்மாநிலத்தின் வாக்கு அரசியலில் மேலாதிக்கம் செலுத்தி உள்ளன.

அவை மீண்டும் தமிழ்நாட்டின் பெரும் பங்கான 39 இடங்களைப் பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு கட்சிகளுமே நிலம், குடிநீர், மின்சாரம் மற்றும் வரிச் சலுகைகளைத் தாராளமாக வழங்குவது மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZ) அமைப்பதன் மூலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதத்தில் தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான அவர்களின் முயற்சிகளை பற்றி புளுகுவதற்கு இந்த தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி உள்ளன.

கடந்த இரண்டு தசாப்தங்களில், போர்டு, பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், தெம்லெர், ரினால்டு-நிசான், மற்றும் மிட்சுபிஷி உட்பட முன்னனி பூகோள வாகனத்துறை நிறுவனங்கள் சென்னையில், மற்றும் அதற்கு அருகில் உள்ள ஓரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புத்தூர் SEZகளில் அவற்றின் ஆலைகளை அமைத்துள்ளன.

அவை மாநில அரசாங்கங்களின் ஆதாயமளிக்கும் சலுகைகளினால் மட்டும் ஈர்க்கப்படவில்லை, அத்துடன் தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை இரக்கமின்றி ஒடுக்க அவர்கள் தயாராக இருப்பதை திமுக மற்றும் அதிமுக முதலமைச்சர்கள் ஒன்றாக காட்டி இருப்பதாலும் ஈர்க்கப்பட்டுள்ளன.

2003இல், மாநில அரசாங்க தலைமையில் அதன் அஇஅதிமுக தலைவர் ஜெயலலிதா அவரது முந்தைய ஆட்சி காலத்தின் போது, 200,000 மாநில அரசு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை உடைக்க பரந்தளவிலான கைதுகள் மற்றும் பரந்தளவிலான வேலைநீக்கங்களைப் பயன்படுத்தினார். மத்திய தொழிலக பாதுகாப்பு படையால் (CISF) ஒரு தொழிலாளர் கொல்லப்பட்டதற்கு எதிராக நெய்வேலியில் உள்ள கிராமவாசிகள் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்எல்சி) தொழிலாளர்களின் போராட்டங்களை உடைக்க தற்போதைய அஇஅதிமுக அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாநில பாதுகாப்பு படைகளை நிறுத்தியது, அத்தோடு கூடங்குளத்தில் ஒரு அணுசக்தி மின் உலை திறப்பதற்கு எதிரான போராட்டங்களை பொலிஸ் கடந்த ஆண்டு இரக்கமின்றி ஒடுக்கியது.

அதன் பங்கிற்கு, திமுக, 2010இல் பதவியில் இருந்த போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட BYD மற்றும் பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு எதிராக மாநில பொலிஸ் படைகளைப் பயன்படுத்தியது.

தேசியளவில், தனியார்மயமாக்கல், நெறிமுறைகளைத் தளர்த்துதல், விலை-மானியம் மற்றும் சமூக-செலவின வெட்டுக்கள், மற்றும் பெரு வணிகங்களுக்கு வரி வெட்டுக்கள் என இந்திய முதலாளித்துவத்தின் நவ-தாராளவாத நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதில், திமுக மற்றும் அஇஅதிமுக ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. 1998இல் BJPஐ அதிகாரத்திற்கு கொண்டு வர அஇஅதிமுக உதவியது. 1999இல் பிஜேபி-தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து அஇஅதிமுக வெளியேறிய போது, திமுக அதன் இடத்தைப் பிடித்தது. 2004 தேசிய தேர்தலை அணுகிய போது, இரண்டு கட்சிகளுமே மீண்டும் தரப்பு மாறின, அஇஅதிமுக பிஜேபி உடன் அதன் கூட்டணியை ஏற்றுக் கொண்டது, திமுக காங்கிரஸ் கட்சியுடன் அணி சேர்ந்தது.

2004இல் இருந்து 2013 வரையில், காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் திமுக ஒரு முக்கிய பங்காளியாக இருந்து, நவ-தாராளவாத கொள்கைகளை முன்னுக்கு தள்ளியதோடு, இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுறவை உருவாக்கியது. 2013இல், UPA இலங்கை தமிழர்களுக்கு போதிய ஆதரவளிப்பதாக இல்லை என்ற போலிச்சாக்கில் திமுக அதன் ஆதரவை விலக்கி கொண்டது. எவ்வாறிருப்பினும், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவுகள் ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்னரே சீர்குலைந்திருந்தன. இது ஏனென்றால் 2ஜி தொலைதொடர்பு ஊழலின் விளைவுகளில் இருந்து அதை பாதுகாக்க காங்கிரஸ் தலைமை போதுமான அளவிற்கு ஒன்றும் செய்யவில்லை என்று திமுக உணர்ந்ததால் ஆகும். இந்த 2ஜி ஊழலில், தொலைதொடர்பு அலைக்கற்றைகள் அடிமட்ட விலைக்கு விற்கப்பட்டிருந்தன.

இந்த தேர்தல்களில் பிஜேபி வலுவான பெரும்பான்மை இடங்களைப் பெற்று வந்தால் NDAஇல் மீண்டும் சேரும் அவற்றின் விருப்பங்களை அஇஅதிமுக மற்றும் திமுக சமிக்ஞை காட்டி உள்ளன. பிஜேபி பிரதம மந்திரி வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியுடன் தனக்குள்ள நட்புறவு குறித்தும், பாராட்டியும், ஜெயலலிதா அடிக்கடி பேசி உள்ளார். அயோத்தியில் பாபரி மசூதி இடிப்பில் முடிவடைந்த 1992 கலகத்தை ஆதரித்தது உட்பட BJPஇன் வகுப்புவாத பிரச்சாரங்களில் அஇஅதிமுக பெரும்பாலும் சேர்ந்து கொண்டது. மிக சமீபத்தில், பண்டைய இந்து புராணமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட தென்னிந்தியா மற்றும் அண்டை நாடான இலங்கையை இணைக்கும் புராண கால பாலத்தை சேது சமுத்திர ஆழ்கடல் கால்வாய் திட்டம் இடித்துவிடுமென வாதிட்டு, அஇஅதிமுக அத்திட்டத்திற்கு எதிரான இந்து வகுப்புவாத பிரச்சாரத்திற்கு ஆதரவளித்தது.

இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) நீண்ட காலமாகவே தொழிலாள வர்க்கத்தை பெரு வணிக திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளுக்கு அடிபணிய செய்துள்ளன. பல ஆண்டுகளாக, அவை தமிழ் முதலாளித்துவத்தின் இந்த போட்டி கட்சிகளுக்கு இடையே மாறி மாறி அணி சேர தாவியுள்ளதோடு, "மக்கள்-சார்பான" கொள்கைகளைப் பின்பற்ற அவற்றிற்கு அழுத்தம் அளிக்க முடியுமென கூறி, அவற்றை "மதசார்பற்ற" கட்சிகள் என்று அடுத்தடுத்து புகழ்ந்துரைத்தன.

2009 தேசிய தேர்தல்களில் அஇஅதிமுக உடன் ஸ்ராலினிஸ்டுகள் ஒரு தேர்தல் கூட்டணி உருவாக்கியோடு, 2011இல் மாநில அளவில் அது மீண்டும் அதிகாரத்திற்கு வர உதவினார்கள். அவர்கள் தற்போதைய தேர்தலிலும் ஜெயலலிதா மற்றும் அவரது அஇஅதிமுக உடன் அதேபோன்ற ஒரு அணியை உருவாக்க முழுமையாக எதிர்பார்த்தார்கள். அது வரையில் அவர்கள், தமது பிஜேபி-அல்லாத, காங்கிரஸ்-அல்லாத "மதசார்பற்ற" மற்றும் "ஜனநாயக" தளத்தின் பொது விவாதங்களில், அஇஅதிமுக-க்கு பெருமைமிகு இடத்தை தொடர்ந்து அளித்து வந்தார்கள், அதுமட்டுமின்றி ஜெயலலிதா "மூன்றாவது அணிக்கான" பிரதம மந்திரி வேட்பாளராக உருவாக முடியுமென்றும் கூட அவர்கள் தெரிவித்து வந்தார்கள். (பார்க்கவும்: இந்திய ஸ்ராலினிஸ்டுகள் "மதசார்பற்ற," “மக்கள்-சார்பு" மூன்றாம் முன்னணி என்ற மோசடியை ஊக்குவிக்கின்றனர்)

அதற்கு பொருத்தமாக பெப்ரவரி தொடக்கத்தில் சிபிஎம் மற்றும் சிபிஐ, தேர்தல்களில் அஇஅதிமுக பங்காளிகளாக நிற்க இருப்பதாக அறிவித்தன. ஆனால் சில வாரங்களுக்குப் பின்னர், ஜெயலலிதாவின் அஇஅதிமுக அந்த கூட்டணியை ஏற்க மறுத்ததோடு, அது தமிழ்நாட்டின் அனைத்து 39 இடங்களிலும், அத்தோடு பெருமளவிற்கு தமிழ் பேசும் புதுச்சேரி யூனியன் பகுதியிலும் அதுவே போட்டியிடும் என்று அறிவித்தது.

அனைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதன் மூலமாக தேர்தலுக்குப் பிந்தைய, அரசாங்கத்தை உருவாக்கும் சூதாட்டத்தில் அஇஅதிமுக-இன் பேரம்பேசும் அதிகாரத்தை அவரால் அதிகரித்து கொள்ள முடியுமென்று ஜெயலலிதா தெளிவாக முடிவெடுத்தார், அதனால் ஏற்கனவே அவரது "முற்போக்கு" கொள்கைகளுக்கு ஸ்ராலினிஸ்டுகள் அளித்த ஆதரவால் பெருமையடைந்த நிலையில்  மேற்கொண்டு அவர்கள் தேவையில்லை என்று முடிவெடுத்தார். அங்கே ஒரு மூன்றாவது அணி அரசாங்கத்திற்கான எந்தவொரு வாய்ப்பு இருந்தாலும் கூட, ஸ்ராலினிஸ்டுகள் அவரை திறந்த கரத்தோடு வரவேற்பார்கள் என்றும் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி, கணக்கிட்டார்.

ஜெயலலிதா அவர்களுடன் கூட்டணியை உடைத்து கொண்ட சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஸ்ராலினிஸ்டுகள் அடுத்து எதுவுமே சொல்லவில்லை. அவருடனும், அவரது அஇஅதிமுக உடனும் ஏதாவதொரு விதத்தில் அவர்களால் ஒட்டு போட முடியுமா என்பதைப் பார்க்க அவர்கள் திரைக்குப் பின்னால் சூழ்ச்சி செய்து வந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பின்னர் அவர்களின் சொந்த அரசியல் திவால்நிலையை மற்றும் உடந்தையாக இருந்ததை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் விதமான ஒரு அறிக்கையில் ஸ்ராலினிஸ்டுகள், ஜெயலலிதா தேர்தலுக்குப் பின்னர் சாத்தியமானால் பிஜேபி உடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த தயாராகி வருவதாக குற்றஞ்சாட்ட நிர்பந்திக்கப்பட்டார்கள்.

திமுக மற்றும் அஇஅதிமுக இரண்டுமே நம்பத் தகுந்தவை அல்ல,” இவ்வாறு சிபிஎம் மாநில தலைவர் ஜி. இராமகிருஷ்ணன் குறை கூறினார். “அவை 2003இல் இருந்து மாறி மாறி பிஜேபி சார்பாக முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.”

சிபிஐ தமிழ்நாடு மாநில தலைவர் டி. பாண்டியன், அவரது பங்கிற்கு, இந்தியாவின் முதல் தமிழ் பிரதம மந்திரியாக ஆகும் வாய்ப்பை ஜெயலலிதா தவற விட்டுவிட்டதாக புலம்பினார். தூத்துக்குடியில் சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: “தமிழ்நாட்டில், தமிழர்களின் நலன்களை ஆதரிக்கும் சில கட்சிகள் தமிழ்-விரோதிகளாக மாறி உள்ளன, அதற்கான காரணங்கள் அவர்களுக்கே நன்றாக தெரியும். பிரமத மந்திரியாகும் வாய்ப்பு, தமிழரின் மடியில் வீழ்ந்த போதிலும் கூட, அது சில மூலோபாய தவறுகளால் அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளது,” என்றார்.

பாண்டியன் அஇஅதிமுக தலைமையுடன் ஒரு நெருக்கமான அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை அனுபவித்துள்ளார் என்பதும் சேர்த்து சொல்ல வேண்டியதாக உள்ளது. பிற்போக்குத்தனமான தமிழ் தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்காகவும் அவர் இழிபெயர் பெற்றவர், அதை அவர் பல்வேறு பிராந்திய தமிழ் முதலாளித்துவ கட்சிகள் உடனான கூட்டு பிரச்சாரங்களுக்கு ஆதரவாக மட்டுமல்ல மாறாக பிஜேபி உடனான கூட்டு பிரச்சாரங்களுக்கு ஆதரவாகவும் தூண்டிவிடுகிறார்.

அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே கர்நாடகம் மற்றும் கேரளா உடனான நீர் பங்கீடு தொடர்பான மாநில பிரச்சினையில்  தமிழ் பேரினவாதத்தைத் தூண்டிவிட ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன, அத்தோடு வாக்குகளுக்காக இலங்கை தமிழர்களின் மீதான மக்கள் அனுதாபங்களைச் சுரண்டுகின்றன. அதேபோல, ஒட்டுமொத்த தமிழ் அரசியல் மேற்தட்டும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லபடுவதை மற்றும் அடிக்கடி துன்புறுத்தப்படுவதை தமிழ் வகுப்புவாதத்திற்கு தூபமிட கைப்பற்றி உள்ளன.

முக்கியமாக, தற்போதைய தேர்தலில் ஐந்து சிறிய தமிழ் தேசியவாத கட்சிகள் இந்து மேலாதிக்கவாத பிஜேபி உடன் அணி சேர்ந்துள்ளன. வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக), இராமதாஸ் தலைமையிலான ஜாதியவாத பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), மற்றும் நடிகர் விஜய காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) ஆகியவை இதில் உள்ளடங்கும்.

தமிழ்நாட்டில் பிஜேபி ஒரு வலுவான இருப்பை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை, ஆனால் "மாற்றம்" மற்றும் "வளர்ச்சியை" மீண்டும் கொண்டு வருவோம் என்ற மோடியின் வாதங்கள் மந்தநிலைமையால் பீடிக்கபட்டுள்ள மக்கள் மத்தியில் எடுபடும் என்று சிறிய தமிழ் பிராந்திய கட்சிகள் கணக்கிட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட தள்ளப்பட்டிருப்பதோடு, இதுவும்-போட்டியிட்டது என்று பொதுவாக கருதும் அளவிற்கு தான் அது இருக்கிறது. தேசியளவிலும் தமிழ்நாட்டு அளவிலும் அக்கட்சிக்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாக இருந்தன, வெகுதூரத்தில் வெளியேயிருக்கும் மாநிலத்தின் மிகவும் முக்கிய காங்கிரஸ் கட்சி அரசியல்வாதியான நிதி மந்திரி பழனியப்பன் சிதம்பரம் மீண்டும்-தேர்ந்தெடுக்கப்பட தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.