World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

India signals support for Vietnam in South China Sea dispute

தென்சீன கடல் பிரச்சினையில் இந்தியா வியட்நாமிற்கு ஆதரவாக சைகை காட்டுகிறது

By Deepal Jayasekera
13 May 2014

Back to screen version

தென்சீன கடலில் சீனா மற்றும் வியட்நாமிற்கு இடையிலான பிராந்திய உரிமைகோரல் போட்டியின் மீது எழுந்த சமீபத்திய சீற்றத்தில், இந்தியா வியட்நாமிற்கு ஆதரவாக சைகை காட்டி உள்ளது.

இரண்டு நாடுகளாலும் உரிமை கோரப்படும் எண்ணெய் வளமிக்க பகுதியில், அதன் பல கப்பல்களை சமீபத்தில் சீன வாகனங்கள் நெருக்கியதாக மே 7இல் ஹனாய் குற்றஞ்சாட்டியது. ஏறத்தாழ ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த நிலைமை இன்னும் அதீத பதட்டத்திற்கு வந்திருக்கிறது, இரண்டு நாடுகளும் பாரசெல் தீவுகள் அருகிலான கடலில் பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களை நிலைநிறுத்தி உள்ளன.

இந்தியாவின் ஆதரவு எச்சரிக்கையான-வார்த்தைகளோடு உள்ளது. இருந்த போதினும், சீனாவைத் தனிமைப்படுத்தும் மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் வாஷிங்டனின் மூலோபாயத்தின் பாகமாக, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உட்பட அதன் கிழக்கு ஆசிய பங்காளிகள், பெய்ஜிங்கிற்கு எதிராக அவற்றின் உரிமைகோரல்களுக்கு அழுத்தம் அளிக்க, வாஷிங்டன் அவற்றை உத்வேகப்படுத்தி வருகின்ற நிலைமைகளின் கீழ், இது எரியூட்டுவதாக உள்ளது.

ஹனாய், அதன் பங்கிற்கு, சீனா உடனான அதன் பிரச்சினைக்குள் இந்தியாவை மேலதிகமாக இழுப்பதற்காக, புது டெல்லியின் ஆதரவை ஒழுங்கு செய்ய முயன்று வருகிறது.

பாரசெல் தீவுகளுக்கு அருகில் சீன தேசிய கடலடி எண்ணெய் நிறுவனம் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் கிணற்றைத் தோண்ட ஏற்பாடுகள் செய்ய தொடங்கியபோது, ஹனாய்க்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பதட்டங்கள் சீற்றம் எடுக்க தொடங்கின.

அதன் கப்பல்களை வெளியேற்ற நீர் பாய்ச்சிகளைப் பயன்படுத்தி சீன கப்பல்கள் நெருக்குவதாக வியட்நாம் குற்றஞ்சாட்டி உள்ள அதேவேளையில், மே 3 மற்றும் 7க்கு இடையே வியட்நாமிய ஆயுதமேந்திய கப்பல்களால் அதன் கப்பல்கள் 171 தடவைக்கும் மேல் நெருக்கப்பட்டதாக சீனா எதிர்-குற்றச்சாட்டை கூறுகிறது.

பாரசெல் தீவுகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து ஹனாய் மிக பகிரங்கமான எதிர்ப்பை வெளிப்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பின்னர், இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் "தென் சீன கடலில் ஏற்பட்டு வரும் சமீபத்திய அபிவிருத்திகள்" மீது புது டெல்லி "கவலை" கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தெளிவாக கூர்ந்து ஆய்வு செய்யப்பட்ட கருத்துக்களோடு, செய்தி தொடர்பாளர் சுருக்கமான ஒரு ஊடக விளக்கத்தில் கூறுகையில், “தென் சீன கடலில் சுதந்திர போக்குவரத்து தடுக்கப்படக் கூடாது" என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது, மேலும் "கடல் பாதைகளின் பாதுகாப்பு மற்றும் கடல்வழி பாதுகாப்பைப் பலப்படுத்துதல்" ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் "கூட்டுறவை" வலியுறுத்துகிறது என்று தெரிவித்தார். “அமைதி, ஸ்திரப்பாடு, அப்பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் செல்வசெழிப்பு" “சர்வதேச சமூகத்திற்கு" அத்தியாவசியமானது என்று கூறி, அந்த இந்திய செய்தி தொடர்பாளர் "பூகோள அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளுக்கு இணங்க, அமைதியான முறைமைகள் மூலமாக" பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்திய இராஜாங்க அதிகாரிகளின் அறிக்கைகள் சீனாவையோ அல்லது வியட்நாமையோ குறிப்பிடுவதைத் தவிர்த்தன. இருந்த போதினும், “கடல் போக்குவரத்து சுதந்திரம்,” “கடல் பாதைகளின் பாதுகாப்பு,” “சர்வதேச சமூகத்தின்" நலன்கள் மற்றும் "சர்வதேச சட்டம்" என்பன சீனா அதன் கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள பிரச்சினைகளின் மீது அமெரிக்காவின் போலியான நிலைப்பாட்டை எதிரொலிக்கின்றன. நடுநிலைமைக்கு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு ஆதரவு என்ற பாசாங்குதனத்தோடு, வாஷிங்டன் தென் சீனா மற்றும் கிழக்கு சீன கடல்களில் சீனா உடனான அண்டைநாடுகளின் பிரச்சினைகளுக்குத் தூபமிட அவற்றை ஊக்குவித்து வருகிறது, ஆனால் பின்னர் பெய்ஜிங்க் தான் வலிந்து சண்டைக்கு வருவதாக சித்தரிக்கிறது.

கடல் பிராந்திய பிரச்சினைகள் ஒரு சௌகரியமான போலிக்காரணமாக சேவை செய்வதால், வாஷிங்டன் சமீபத்தில் அதன் நீண்டகால பங்காளிகளான ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் உடனான அதன் இராணுவ கூட்டுறவை வேகமாக அதிகரித்துள்ளது, அத்தோடு ஆக்ரோஷமாக வியட்நாமின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. ஹனாய் உடனான ஒரு அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையின் பரிந்துரை வாசகங்களை கடந்த வாரம் ஒபாமா நிர்வாகம் அமெரிக்க செனட்டிற்கு அனுப்பியது.

இந்தியா, அதன் அரசுக்கு சொந்தமான ONGC விதேஷ் (OVL) எண்ணெய் நிறுவனத்தின் மூலமாக, ஏற்கனவே சீனா அதற்கு சொந்தமானது என உரிமைகோரும் தென் சீன கடலின் பாகங்களில் வியட்நாமுடன் கூடி வேலை செய்து வருகிறது, அந்த நடவடிக்கைகள் மீது பெய்ஜிங் ஆட்சேபங்களை வெளிப்படுத்தி உள்ளது.

2006இல், எண்ணெய் எடுப்பதற்காக ஹனாய் பிரச்சினைக்குரிய பகுதியில் அமைந்துள்ள இரண்டு எண்ணெய் படுகைகளின் உரிமையை OVLலிடம் ஒப்படைத்தது. இருந்த போதினும் அதில் ஒன்று செல்தகைமை அற்றது என்று கைவிடப்பட்ட நிலையில், OVL கடந்த நவம்பரில் வியட்நாமுடன் எண்ணெய் எடுப்பதற்கான ஒரு புதிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

எண்ணெய் எடுப்பதற்கான இரண்டு படுகைகளை ஹனாய் மேலதிகமாக OVLக்கு வழங்கிய ஒருசில நாட்களில், சீனா பிரச்சினைக்குரிய பாரசெல் தீவுகள் அருகில் எண்ணெய் தோண்டுவதற்கான காரியங்களைத் தொடங்க நகர்கிறது.

தற்போது பெண்டகனுடன் கூட்டு பயிற்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வரும் இந்திய கடற்படை, சமீபத்தில் தென் சீன கடலில் செயலூக்கத்தோடு இறங்கி உள்ளது. டிசம்பர் 2012இல், இந்தியாவின் அப்போதைய கடற்படை தலைவர் அட்மிரல் டி. கே. ஜோஷி, தென் சீன கடலில் சாத்தியமான நடவடிக்கைக்கு இந்திய கடற்படை தயாரிப்பு செய்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார். “நாம் தயாராக இருக்கிறோமா,” அவர் வினவினார். “ஆமாம் என்பது தான் அதற்கான சுருக்கமான பதில்,” என்றார்.

சீனா உடனான சமீபத்திய சீற்றத்தை ஒட்டி, ஹனாய் அந்த மோதலில் இந்தியாவைச் சிக்க வைக்க அதன் முயற்சிகளைத் தீவிரமாக்கி உள்ளது.

மே 9இல் வியட்நாமின் இராஜாங்க விவகார பயிலகத்தால் (Diplomatic Academy of Vietnam - DAV) மெல்போர்னில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வட்ட மேஜை கூட்டத்தில், DAV தலைவரும், தூதருமான டாங் டின்ஹ் குய், “சீன தன்முனைப்பை" பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதோடு, “தூண்டுதல் இல்லாமல் சீன கடற்படை நடவடிக்கை எடுத்து வருவதாக" குற்றஞ்சாட்டினார், அத்தோடு "உயர்மட்ட சீன தலைவர்களின்" உத்தரவின் பேரில் அது அவ்விதத்தில் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் சீன-விரோத நிலைப்பாடு இருந்த போதினும், குய் சீனா உடனான வியட்நாமின் பிரச்சினை மீது ஒபாமா நிர்வாகம் போதிய "தெளிவைக்" காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டும் அளவிற்கு சென்றார், பின்னர் அவர் தொடர்ந்து கூறுகையில், “அதனால் தான் இந்தியா உடனடியாக எழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் இந்தியாவிடம் பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

குய்யின் கருத்துக்களுக்கு விடையிறுத்து, ஆஸ்திரேலிய-இந்திய பயிலகத்தின் ஆரம்ப இயக்குனரும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஸ்தாபகத்தில் பற்றுறுதி கொண்டவருமான அமிதாப் மாட்டோ சீனாவிற்கு எதிராக விளாசித் தள்ளினார்.

மாட்டோ கூறுகையில், “சீன தன்முனைப்பு ஆக்ரோஷத்தால் சூழ்ந்துள்ளது,” என்று அறிவித்தார். பெய்ஜிங்கின் நடவடிக்கை "குறுகிய பார்வை கொண்டதும், ஆக்கபூர்வமற்றதும் ஆகும்,” என்றார்.

மாட்டோ காங்கிரஸ் கட்சி மற்றும் பிஜேபி-தலைமையிலான இந்திய அரசாங்கங்கள் இரண்டிலும் வெளியுறுவு கொள்கை ஆலோசகராக சேவை புரிந்துள்ளார். அவர் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயின் கீழ் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோனை குழு அங்கத்தவராக இருந்தவர், அத்தோடு தற்போதைய இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கால் ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய மூலோபாய அபிவிருத்திகள் மீதான பணிக்குழுவின் ஒரு அங்கத்தவரும் ஆவார்.

நீண்டகாலமாக சீனாவுடன் எல்லைப் பிரச்சினைகளை கொண்டிருப்பதும், எண்ணெய் மற்றும் ஏனைய ஆதார வளங்களுக்காக அதனோடு போட்டியிட்டு வருவதுமான இந்தியா, சீனாவிற்கு எதிராக இன்னும் கூடுதலாக ஆக்ரோஷ நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமெனவும், அதை அது வாஷிங்டனுடன் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டுமெனவும் இந்தியாவிற்கு அழைப்பு விடுப்பதில் மாட்டோ மட்டும் தனி ஆள் கிடையாது.

"சீன விரிவாக்கவாதம் குறைவின்றி தொடர்கிறது" என்ற தலைப்பில் மே 7இல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பிரசுரமான ஒரு கட்டுரையில், எஸ். டி. பிரதான், “அதன் அண்டைநாட்டு பகுதிகளில் ஆக்கிரமிக்கும் சீன கொள்கை" “தென் சீன கடலில் ஒரு மோதலுக்கான ஆழ்ந்த அபாயங்களை உயர்த்தி" வருகிறது என்று குற்றஞ்சாட்டினார். சீனாவின் "வியட்நாமை நோக்கிய ஆக்ரோஷ நடவடிக்கை" இந்தியா மற்றும் ஜப்பானுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஒரு "மாபெரும் மூலோபாயத்தின்" பாகமாகும் என்று காட்ட முயன்றார், அத்தோடு "அண்டை நாடுகள் மீதான அதன் ஆக்ரோஷ கொள்கைகளைக் கைவிட சீனாவிற்கு அழுத்தம் அளிப்பதில் ... அமெரிக்கா, ஜப்பான், ஆசியான், ரஷ்யா, [மற்றும்] ஆஸ்திரேலியா ...” ஆகியவற்றோடு இந்தியா "கை கோர்க்க வேண்டுமென" ஆலோசனை வழங்கினார்.

சீனா சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் போது சீனா மீது விளைவுகளைக் கொண்டு வர" “அவை தயாராக இருக்க வேண்டும்" என்று பிரதான் கூறிய போதினும், என்ன "அபராதங்களை" அவர் எதிர்ப்பார்க்கிறார் என்பதைக் கூறாமல் தவிர்த்து கொண்டார்.

மாட்டோவை விட கூட மேலதிகமாக, பிரதான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஸ்தாபகத்தின் குரலாக ஒலிக்கிறார். கூட்டு உளவுத்துறை கமிட்டியின் தலைவர், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் பணிக்குழு தலைவர் ஆகியவை முன்னதாக அவர் வகித்த பதவிகளில் உள்ளடங்கும். உளவுத்துறை எந்திரத்தின் பணிக்குழு தலைவராக இருந்த போது அவர் இந்தியாவின் பல்வேறு உளவுத்துறை அமைப்புகளின் செயல்பாடுகளை மற்றும் தொடர்புகளை மறுசீரமைத்து இருந்தார்.

இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து ஓர் "உலகளாவிய மூலோபாய கூட்டுறவை" ஸ்தாபித்துள்ளதோடு, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து வாஷிங்டனை நோக்கி அதன் வெளியுறவு கொள்கையைத் திருப்பியது. இருந்த போதினும், சீனாவிற்கு காட்டப்பட்ட ஒரு "காப்பீட்டு கொள்கையாக" ஆட்சியிலிருந்து வெளியேறும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் வாஷிங்டனுடன் இன்னும் மிக நெருக்கமாக இணங்காததற்கு இந்தியாவின் பெருநிறுவன மேற்தட்டு மற்றும் இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்தின் பெரும் பிரிவுகள் அதை விமர்சித்துள்ளன. யதார்த்தம் என்னவென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து, அச்சுறுத்தல்கள் மற்றும் தூண்டிவிடுதல்களின் ஊடாக, இந்தியாவை அதன் இந்தோ-பசிபிக் சீன-விரோத மூலோபாயத்தின் மூன்றாவது தூணாக ஆக்க தீர்மானகரமாக உள்ளது.