World Socialist Web Site www.wsws.org |
Capital punishment and the brutality of the American ruling class மரணதண்டனையும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் காட்டுமிராண்டித்தனமும்
Kate Randall நான் அதை முழுவதுமாக பார்த்தேன். மெலானியை குறிப்பிட்டதக்களவு உறுதியாக வைத்திருக்க உதவிய அவரது கால்களைக் கட்டியிருந்த தோல் பட்டியை நீக்குதல் மற்றும் அவரது செருப்புகளை அவர் அமைதியாக கழற்றியது போன்ற ஒவ்வொரு விபரத்தையும் நான் குறிப்பெடுத்துக் கொண்டேன்—இனி ஒருமுறை அதை நான் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. ஒருபக்கமாக திரும்பிய, கறுத்த துணியால் மூடிக்கட்டப்பட்ட தலையோடு, கைகளின் வழியே ஓடும் அந்த கருநீல கோடுகளோடு, அவர்களின் முன்னால் உயிரான சதையின் நிறம் மாறிக் கொண்டிருக்கும் அந்த நேராக விறைத்த சடலம் தொங்கி கொண்டிருப்பதை என்னால் இன்னமும் பார்க்க முடிகிறது. ஆ! (இது நெவாடாவின் வெர்ஜினியா நகரில், ஏப்ரல் 24, 1868இல் ஜோன் மெலானி மரண தண்டனை குறித்து மார்க் ட்வைன் எழுதியது.) ஒரு இளம் செய்தியாளராக Chicago Republicanஇல் மார்க் ட்வைன் இந்த வார்த்தைகளை எழுதி சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஒரு நெவாடா சுரங்கத்தொழில் நகரில் பொதுமக்கள் பார்வைக்கு முன்னால் தூக்கில் தொங்கவிடப்பட்ட போது எழுதப்பட்ட அவரது எழுத்துக்கள் அப்போது என்ன தோன்ற செய்ததோ அதே பயங்கரத்தை இன்றும் ஏற்படுத்துகின்றன. ஆனால், சுமார் 146 ஆண்டுகளுக்குப் பின்னர், பூகோளம் எங்கிலும் பரந்த பெரும்பான்மை தொழில்துறைமயமான தேசங்களால் ஒரு காட்டுமிராண்டித்தனமாக கண்டிக்கப்படும், சட்டத்திலிருந்து நீக்கப்பட்ட, அந்த உச்சக்கட்ட தண்டனையை நிறைவேற்றுவதை அமெரிக்க ஆளும் வர்க்கம் பெருமளவிலான கருத்தொற்றுமையோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 29இல் ஓக்லஹோமா மாநிலத்தில் கிளேட்டன் டி. லாக்கெட்டின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது, கண்கள் மிரட்சியோடும் வெறுப்போடும் அமெரிக்காவைப் பார்த்து கொண்டிருந்தன. பரிசோதிக்கப்படாத மூன்று இரசாயன மருந்துகளின் ஒரு கலவையை முதலில் அவரது கை நரம்புகளிலும், பின்னர் அவரது இடுப்பிலும் ஏற்றும் போது அந்த மரண தண்டனை கைதி ஒரு சக்கர நாற்காலியில் கட்டப்பட்டிருந்தார். ஒரு மயக்க மருந்தான முதல் மருந்து வெளிப்படையாக முழு செயல்பாட்டை அளிக்கவில்லை, அந்த கைதி கட்டுப்பாடு இழந்து சுமார் 15 நிமிடங்கள் அந்த கோரமான நடைமுறைக்குள் உடலை உதறி துடித்தார்; பற்களைக் கடித்தார்; முணுமுணுத்தார். சிறை அதிகாரிகள் திடீரென அந்த மரண தண்டனையை நிறுத்தியதோடு, பார்வையாளர் அறையிலிருந்து பார்க்க முடியாதபடிக்கு அதை மறைத்தனர். பின்னர் அந்த பேரச்சமூட்டும் நிகழ்வுகள் தொடங்கிய சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பின்னர், லாக்கெட் ஒரு மாரடைப்பால் இறந்துவிட்டதாக அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தனர். ஜேர்மன் சான்சலர் ஆங்கெலா மெர்கேல் உடனான ஒரு கூட்டு வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தின் போது பராக் ஒபாமாவிடம் அந்த அரைகுறை மரண தண்டனை குறித்து ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளரால் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த சம்பவம் "ஆழ்ந்த கவலையளிப்பதாக" கூறிய ஜனாதிபதி, உச்சக்கட்ட தண்டனையைப் பாதுகாப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். “சில குறிப்பிட்ட சூழல்களில் ஒரு குற்றம் மிகவும் பயங்கரமானதாக இருக்கும், அதற்கு மரண தண்டனையைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கலாம்,” என்றார். ஓக்லஹோமா சம்பவங்கள் "மரண தண்டனை எவ்வாறு நடத்தப்பட்டு வருகின்றன என்பதன் மீது முக்கிய கேள்விகளை" எழுப்பி இருப்பதாக அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாம், ஒரு சமூகமாக, இந்த பிரச்சினைகளைச் சுற்றியுள்ள சில சிக்கலான மற்றும் ஆழ்ந்த கேள்விகளை நமக்குநாமே கேட்டுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்,” என்றார். ஆம், உண்மை தான் திரு. ஜனாதிபதி அவர்களே. ஆனால் துல்லியமாக இந்த "ஆழமான கேள்விகள்" தான் என்ன? மேலும் அமெரிக்க ஆளும் மேற்தட்டால் நடத்தப்படும் இந்த தொடர்ச்சியான நடைமுறையும், உச்சக்கட்ட தண்டனையின் பாதுகாப்பும் நமக்கு 21ஆம் நூற்றாண்டு அமெரிக்கா குறித்து என்ன கூறுகின்றன? மரண தண்டனையை "இரக்கத்தோடு" நடத்த வேண்டும் என்பதன் மீதான தற்போதைய விவாதம் ஒரு வெட்கக்கேடானதாகும். அமெரிக்காவில் மரண தண்டனைகளை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் மருந்துகளை வினியோகிக்க ஐரோப்பிய மருந்து உற்பத்தியாளர்கள் மறுத்து வருகின்ற நிலையில்—வெவ்வேறு புதிய மருந்துகளின், பரிசோதிக்கப்படாத கலவைகளை—உயிர்பறிக்கும் ஊசிகளில் பயன்படுத்துவதற்கு மாற்று தர நெறிமுறைகளை உருவாக்க மாநிலங்கள் முண்டி அடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த கொடூரமான "விவாதம்" ஒரேயொரு விஷயத்தில் ஒருமுனைப்பட்டுள்ளது: அதாவது, அரச படுகொலை எந்திரத்தை செயல்பாட்டில் வைத்திருப்பது என்பதாகும். ஒருவரை கொல்லும் நோக்கத்தோடு விஷ இரசாயனங்களை அவர்களுக்குள் செலுத்துவதில் அங்கே "இரக்கம்" என்பதொன்றும் இருக்க முடியாது. முன்னாள் நீதியரசர்கள், பொலிஸ் தலைவர்கள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மரண தண்டனை உத்தரவாணையில் கையெழுத்திட்ட ஆளுநர்கள் உள்ளடங்கிய ஒரு குழுவான Consititution Projectஇன் ஒரு புதிய அறிக்கை, அமெரிக்க மரண தண்டனை வளாகங்களில் தற்போது பயன்படுத்தப்படும் "மூன்று மருந்து முறை" “கைதியின் தவிர்க்கக்கூடிய வலிக்கும் மற்றும் துன்பத்திற்கும் ஒரு அபாயத்தை கொண்டிருக்கின்றது" என்று தீர்மானித்துள்ளது. இதுபோன்ற தர நெறிமுறைகள் விலங்குகளின் கருணைக் கொலைகளில் கூட பயன்படுத்துவதை பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன, ஏனென்றால் அவை விலங்குகள் விழிப்போடு இருக்கும் போதே முடமாக்கி மூச்சுத்திணறலை உண்டாக்கக்கூடும். ஜனாதிபதி ஒபாமா, அவரது பங்கிற்கு, மரண தண்டனைகளில் மத்திய அரசால் பயன்படுத்தப்படும் முறைகளைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை, “மாநில அளவிலான தரமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட கொள்கை பிரச்சினைகளின் மீதான ஒரு ஆய்வை உள்ளடக்கிய" ஒரு விரிவான புனராய்வை மேற்கொள்ளுமாறு நீதித்துறைக்கு பரிந்துரைத்திருப்பதாக ஒரு அரசுத்துறை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். மீண்டும் இந்த புனராய்வின் நோக்கம் மரண தண்டனை அளிப்பதன் மீது விசாரணை செய்வதல்ல, மாறாக அதை எவ்வாறு "செய்வது" என்பதாக உள்ளது. மரண தண்டனையை இரக்கத்தோடு பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதில் ஜனாதிபதி அவரது போலிக் கவலைகளை வெளியிடுகின்ற நிலையில் — இது வார்த்தையளவில் முரண்பாடாக உள்ளது என்பதோடு — ஏனைய அரசியல்வாதிகளோ பழிவாங்கும் அந்த நடவடிக்கைக்கு அவர்களின் இரத்த வேட்கையை மிகப் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர். பிரதிநிதிகள் சபையின் ஓக்லஹோமா அங்கத்தவரான குடியரசு கட்சியின் மைக் கிறிஸ்டியன் ஏப்ரல் 29 மரண தண்டனையைத் தொடர்ந்து கருத்துரைக்கையில், “இது கொடூரமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், ஆனால் ஒரு தகப்பனாக மற்றும் முன்னாள் சட்டத்துறை நபராக, அதுவொரு உயிர்பறிக்கும் ஊசியினால், மின்சார நாற்காலி மூலமாக, துப்பாக்கியால் சுடும் படையைக் கொண்டு, தூக்கிலிடுவதனால், வெட்டும் கருவியினால் அல்லது சிங்கங்களுக்கு இரையாக்குவதன் மூலமாக நடத்தப்பட்டாலும் உண்மையில் எனக்கு கவலை இல்லை,” என்றார். வர்க்க பிளவுகளால் கிழிக்கப்பட்டிருக்கும் மற்றும் வன்முறையாலும் காட்டுமிராண்டித்தனத்தாலும் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஒரு சமூகத்தை வழிநடத்தும் அரசியல் ஆளும் அமைப்பு முறையின் கண்ணோட்டத்தை இதுபோன்ற அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. கிளேட்டன் லாக்கெட்டின் கொடூர அரசு படுகொலை போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் வர்க்க உறவுகளின் நிலையை மற்றும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பயங்கர யதார்த்தங்களை உயர்த்திக் காட்டுகின்றன. வரிசையான மரண தண்டனைகளும் பரந்த அமெரிக்க சிறைக்கூட அமைப்புமுறையும் இத்தகைய யதார்த்தங்களுக்கு சான்றுகளாக விளங்குகின்றன. வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தில் இருந்த ஒரு செய்தியாளர் மேலே குறிப்பிட்டதை மேற்கோளிட்டு காட்டும் விதத்தில் கூறுகையில், “மரண தண்டனைகளின் நிறைவேற்றம் என்று வரும்போது, மனித உரிமைகள் குழுக்கள் சீனா, ஈரான் மற்றும் சவூதி அரேபியாவின் மோசடி அமைப்புகளுக்குள் அமெரிக்காவையும் கொண்டு வந்து நிறுத்துகின்றன,” என்றார். நாடெங்கிலும் 3,000க்கும் மேற்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட கைதிகள் மரண தண்டனை வரிசையில், கிளேட்டன் லாக்கெட்டின் தலைவிதியைப் போன்ற ஒன்றிற்காக காத்து நிற்கின்றனர். அமெரிக்க சிறைக்கூடங்களிலும், காவல் முகாம்களிலும் 2.4 மில்லியன் கைதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது, இது வேறெந்த தேசத்தையும் விட மக்கள்தொகையில் பெரும் பங்காகும். அந்த கைதிகளில் பெரும்பான்மையினர் தொழிலாள வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள், லத்தீனோஸ் மற்றும் ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், மனநோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்கள், முன்னாள் சிப்பாய்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் என பொருத்தமற்ற விகிதாசாரத்தில் உள்ளனர். நாடெங்கிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய நகரங்களில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் சீறி பெருகி உள்ளது. அமெரிக்காவில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் மற்றொரு உயிரிழப்பு என்ற செய்தி இல்லாமல் ஒரு நாள் அரிதாகவே கழிகிறது, ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு பேர் பொலிஸால் கொல்லப்படுகின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் சுற்றி வளைக்கப்படுகின்றனர், இரக்கமற்ற நிலைமைகளின் கீழ் பாரிய தடுப்புக்காவல் மையங்களில் அவர்கள் அடைக்கப்படுகின்றனர், பின்னர் அதிகளவிலான எண்ணிக்கையில் நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர். இந்த வன்முறையான யதார்த்தம், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் அதிகரித்துவரும் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் சீரழிவோடு கை கோர்த்து செல்கிறது. மரண தண்டனை என்பது எதன் ஒரு முக்கிய பாகமாக விளங்குகிறதோ அந்த பரந்த பொலிஸ்-அரச எந்திரம் உட்பட அரசு ஒடுக்குமுறையே அடிமட்டத்திலிருந்து எழும் கிளர்ச்சியின் அச்சுறுத்தலுக்கு ஆளும் மேற்தட்டின் விடையிறுப்பாக உள்ளது. அமெரிக்க இராணுவம் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் தலையீடு செய்கின்ற நிலையில், அமெரிக்கா உலகம் முழுவதற்குமான ஜனநாயகத்தின் காவலன் என்ற அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் வாதங்கள் தொடர்ந்து அம்பலப்படுகின்றன, ஆனால் இவை அடிமை ஊடகங்களால் கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ஒபாமா நிர்வாகம் அதற்கு ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷால் ஒப்படைக்கப்பட்ட சித்திரவதை, உளவுபார்ப்பு மற்றும் உலகளாவிய இராணுவ தாக்குதலின் வலையை பாதுகாக்கின்றது, விரிவாக்கி வருகின்றது. உச்சக்கட்ட தண்டனையை அமெரிக்க அமைப்புமுறைக்கானது என ஒபாமா நிர்வாகம் பாதுகாப்பதானது இலக்கில் வைக்கப்பட்ட டிரோன் படுகொலைகளின் மற்றும் விசாரணையின்றி அமெரிக்க பிரஜைகளைப் படுகொலை செய்வதற்கு உத்தரவிடும் உரிமையை அவர் ஏற்றிருப்பதன் ஒரு சிறிய பகுதியாகும். அமெரிக்க சமூகத்தின் ஜனநாயக பாசாங்குத்தனங்கள் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு அதிகமாக இற்று போயுள்ளன. அதன் சொந்த பிரஜைகளை ஒரு நோக்கத்திற்காக படுகொலை செய்வதை அரசின் ஒரு சட்டப்பூர்வ நடைமுறையாக நியாயப்படுத்துவதன் மூலமாக, அமெரிக்க ஆளும் மேற்தட்டு, இன்னும் நீடிப்பதற்கு எந்தவொரு முற்போக்கான காரணமும் இல்லாத ஒரு வர்க்கமாக தன்னைத்தானே குற்றவாளி ஆக்கிக் கொண்டுள்ளது. உச்சக்கட்ட தண்டனையை எதிர்ப்பதென்பது தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதோடு கை கோர்த்து செல்கிறது. தொழிலாளர்களின் அரசாங்கத்தின் கீழ் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய உட்கூறாக, உலக சோசலிச வலைத் தளம் மரண தண்டனையை ஒழிக்க அழைப்பு விடுக்கிறது. |
|