தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை விஜே டயஸ் ஆற்றிய உரை: தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டங்களும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கும்
By Wije Dias
Use this version to print| Send feedback நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் மே 4 அன்று ஏற்பாடு செய்திருந்த சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்துக்கு, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் விஜே டயஸ் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்துள்ள இணையவழி சர்வதேச மே தினக் கூட்டத்தில் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் பெரும் உற்சாகத்துடன் பங்குபற்றுகின்றனர். இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், அனைத்துலகக் குழுவானது மே தினத்தின் மாபெரும் வரலாற்று பாரம்பரியத்துக்கு வெளிப்பாட்டைக் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிஸ்டுகளால் கொண்டாடடப்பட்டவாறு, அனைத்து தேசிய, வகுப்பு மற்றும் இனப் பிளவுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின் நாளாக இது வெளிப்பட்டுள்ளது. இந்தப் பாரம்பரியங்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம், உலகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரே உண்மையான சர்வதேச சோசலிச கட்சியாக மீண்டும் நான்காம் அகிலம் தன்னை நிரூபித்துள்ளது. எனக்கு முன்னர் உரையாற்றியவர்கள் ஏற்கனவே சுட்டிக் காட்டியவாறு, முதலாம் உலக யுத்தம் வெடித்து நூறு ஆண்டுகளின் பின்னர், அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், உலகத்தை இன்னுமொரு காட்டுமிராண்டி யுத்தத்தின் விளிம்புக்கு கொண்டுவந்துள்ளன. இரண்டு உலக யுத்தங்கள், உலகின் பல பாகங்களில் பாசிசம் மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தின் பின்னர், முதலாளித்துவத்தின் எந்தவொரு அடிப்படை முரண்பாடுகளும் தீர்க்கப்படவில்லை என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகின்றன. தொழிலாள வர்க்கம் சீரழிந்துவரும் முதலாளித்துவ உலக ஒழுங்கை தூக்கி வீசி, உலக சோசலிசத்தால் அதை பதிலீடு செய்ய வேண்டும் என்ற முரண்பாடற்ற முடிவுக்கு வரவேண்டும். 1917ல் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சியின் தலைமையிலான ரஷ்யப் புரட்சி, முதலாளித்துவத்துக்கு எதிரான இந்த அனைத்துலக சோசலிச மாற்றீட்டை அடைவதை நோக்கிய முதல் அடியெடுத்து வைப்பாக இருந்தது. அதை வழிநடத்திய முன்னோக்கு, 1905 ரஷ்யப் புரட்சியின் தோல்வியின் அனுபவத்தை ஆழமான மார்க்சிச பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், 1906ல் ட்ரொட்ஸ்கியினால் உருவாக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நிரந்தரப் புரட்சி தத்துவமானது தேசிய ஒருமைப்பாடு, காலனித்துவம், நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதிய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவது போன்ற காலங்கடந்த ஜனநாயகப் பணிகளை பூர்த்தி செய்ய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான முன்னணி அரசியல் பாத்திரத்தை வலியுறுத்தியதோடு, அந்த பணிகள் சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்துடன் வலராற்று ரீதியில் பிரிக்கமுடியாமல் பிணைந்துள்ளது என்பதையும் வலியுறுத்தியது. ரஷ்யாவுக்கு அப்பால், உலக மட்டத்தில் புரட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கை தடுக்கப்பட்டது, ஏகாதிபத்தியத்தின் எந்தவொரு உள்ளார்ந்த பலத்தினாலும் அல்ல. மாறாக, சமூக ஜனநாயகவாத சந்தர்ப்பவாத தலைவர்கள் செய்த காட்டிக் கொடுப்புகள் மற்றும் பின்னர் “தனிநாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத வேலைத்திட்டத்தின் சார்பில் சர்வதேசியவாதத்தை நிராகரித்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் செய்த காட்டிக்கொடுப்புகளுமே காரணமாகும். எமது இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, நான்காம் அகிலத்துக்குள் தலைநீட்டிய பப்லோ-மன்டேலின் திருத்தல்வாத போக்கைத் தோற்கடிப்பதற்காக 1953ல் ஸ்தாபிக்கப்பட்டது. போருக்குப் பிந்திய முதலாளித்துவ ஸ்திரப்படுத்தலுக்கு அடிபணிந்து போன பப்பிலோவாதிகள், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்தனர். தொழிலாள வர்க்கம், அதன் வரலாற்றுப் பணியான உலக சோசலிசப் புரட்சியை பொறுப்பேற்பதன் பேரில், அதை விஞ்ஞான சோசலிச நனவில் மீண்டும் ஆயுதபாணியாக்குவதற்காக ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த போராட்டத்தை அனைத்துலகக் குழு தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது. இந்தக் கூட்டத்தில் புத்துயிர் பெறும் பலம்வாய்ந்த புரட்சிகர பாரம்பரியம் இதுவே ஆகும். துரிதமாக ஆழமடைந்து வரும் உலக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, கடந்த ஆறு தசாப்தங்கள் பூராவுமான எமது தத்துவார்த்த அரசியல் போராட்டத்தின் சரியான தன்மையை உறுதிப்படுத்துகின்றது. சகல சந்தர்ப்பவாதிகளாலும் தூக்கிப் பிடிக்கப்பட்ட போருக்குப் பிந்திய ஸ்திரப்படுத்தல் மட்டுமன்றி, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட உடன் அறிவிக்கப்பட்ட “வரலாற்றின் முடிவும்” முற்றிலும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரலாறு பிரமாண்டமான பதட்டங்களுடன் நகர்கின்றது. உலகின் ஒவ்வொரு பாகத்திலும் சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள் வெடிக்கும் அதேவேளை, அனுவாயுத யுத்தத்தின் கருப்பு மேகங்களும் சூழத் தொடங்கியுள்ளன. மனிதகுலத்தின் முன்னால், மாற்றீடு பற்றிய பிரச்சினை பலமான முறையில் தோன்றியுள்ளது; அது சர்வதேச தொழிலாள வர்க்த்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட சோசலிசமா, அல்லது முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமா என்பதாகும். சோசலிசம் ஒரு சர்வதேச திட்டமாகும். அடுத்துவரவுள்ள புரட்சிகர எழுச்சிகளுக்கு தேவையான வரலாற்று மற்றும் சர்வதேசிய முன்னோக்குடன் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களையும் ஆயுதபாணியாக்கப் போராடும் ஒரே அரசியல் இயக்கமாக அனைத்துலக் குழு எழுவதற்கு, அது சகல வடிவிலான தேசிய சந்தர்ப்பவாதங்களுக்கும் எதிராக முன்னெடுத்த சளைக்காத போராட்டமே காரணமாகும். அண்மைய காலகட்டத்திலான போராட்டங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளவாறு, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை கிரகித்துக்கொள்வது தீர்க்கமானதாகும். 2011ல் வெடித்த எகிப்திய புரட்சியானது இராணுவம், முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் எல் பரடே போன்ற தாராளவாத நபர்கள் உள்ளடங்கலாக முதலாளித்துவத்தின் ஒவ்வொரு கன்னையும் கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் பயனற்றவை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான இழைகளால் ஏகாதிபத்தியத்துடன் கட்டுண்டுள்ளதோடு அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான இயக்கத்துக்கும் விரோதமானவர்கள். அவர்கள் அனைவரும் வாஷிங்டனின் தாளத்துக்கு ஆடுபவர்கள். முபாரக்கின் சர்வாதிகாரத்துக்கும் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனமும் ஆதரவளித்த அதன் சிக்கன திட்டத்துக்கும் எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினர். ஆனால் அவர்களது உத்வேகமான போராட்டங்கள், முதலாளித்துவத்தின் ஏதாவதொரு கன்னையின் கீழ் திசை திருப்பப்பட்டன. ஒட்டு மொத்த முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும் மற்றும் அதற்குப் பின்னால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வெகுஜனங்களை அணிதிரட்டவும் ஒரு புரட்சிகர வேலைத் திட்டமும், கட்சியும் அங்கிருக்கவில்லை. 2012ல் தென் ஆபிரிக்காவில் வேலை நிறுத்தம் செய்த பிளாட்டினம் சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்தும் படிப்பினைகள் பெறப்பட வேண்டும். இரு தசாப்தகாலங்களாக, நிறபேதவாதத்தை பதிலீடு செய்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸை தென் ஆபிரிக்க மக்களுக்கான ஒரு மிகப்பெரும் முற்போக்கு அமைப்பாக உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் பாராட்டின. நெல்சன் மண்டேலா எங்கு போனாலும் அங்கெல்லாம் அவர் வறியவர்களதும் ஒடுக்கப்பட்டவர்களதும் பெரும் தலைவனாக போற்றபட்டார். ஆனால் ஏஎன்சீ அரசாங்கத்தின் பொலிசாரால் மாரிக்கானாவில் 34 சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுத் தள்ளப்பட்டமை, தோலின் நிறம் என்னவாக இருந்தாலும், முதலாளித்துவத்தின் எந்தவொரு பகுதியின் மீதும் தொழிலாள வர்க்கம் நம்பிக்கை வைக்க முடியாது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ஏஎன்சீயின் கீழ், உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக தென் ஆபிரிக்கா ஆனது. அது ஒரு சிறிய தட்டு கறுப்பு முதலாளித்துவத்தை உருவாக்கி விட்டதோடு, உழைக்கும் மக்களின் பெரும்பான்மையானவர்களை மோசமான வறுமைக்குள் தள்ளிவிட்டது. இது ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்காவிலும் இதே நிலைமையே உள்ளது. உத்தியோகபூர்வ சுதந்திரத்தின் போது கூறப்பட்ட ஜனநாயகம் மற்றும் சிறந்த வாழ்க்கை நிலைமைகள் பற்றிய வாக்குறுதிகள், முற்றிலும் போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 1948ல் பிரிட்டிஷ் தனது உள்ளூர் கைக்கூலிகளுக்கு ஆட்சியை கையளித்ததை ஒரு போலி சுதந்திரம் என்று இலங்கையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே கண்டனம் செய்ததுடன், அதிகாரத்தைக் கைப்பற்ற தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டவும் போராடினர். முதலாளித்துவ ஆட்சி தொழிலாளர்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் ஒரு பேரழிவு என்பது ஒவ்வொரு நாட்டிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைப் பேணுவதற்காக அரசாங்கங்கள் பொலிஸ் அரச வழிமுறைகளை நாடுவதற்கு தயங்காததோடு தொழிலாள வர்க்கத்தை தடம்புரளச் செய்யவும் பிளவுபடுத்தவும் வேண்டுமென்றே இன, மத, பழங்குடி மற்றும் மொழி பேதங்களை கிளறிவிடுகின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநயாகம் என வழமையாக பாராட்டப்படும் இந்தியா, 1947ல் துணைக்கண்டத்தை பிரிப்பதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டிலேயே ஸ்தாபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த இனவாத மோதலில் பத்துலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதோடு இதன் விளைவாக இன்றுவரை தெற்காசியாவில் தொடர்ந்தும் இரத்தம் ஓடுகின்றது. 1948ல் இருந்தே இலங்கை முதலாளித்துவம் சுரண்டிக்கொள்கின்ற தமிழர்-விரோத இனவாதம், 2009ல் முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தை விளைவாக்கியது. பல முதலாளித்துவ ஆயுத விடுதலைப் போராட்டங்களை போலவே, தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த யுத்தம், தமிழ் மக்களுக்கு ஒரு பேரழிவு என்பதை நிரூபித்தது. இலங்கை படைகளின் இராணுவப் பலத்தால் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை, மாறாக அவர்களின் சொந்த பிற்போக்கு முன்னோக்கின் விளைவாகவே தோற்கடிக்கப்பட்டனர். அதன் தேசிய பிரிவினைவாத மற்றும் ஏகாதிபத்திய சார்பு வேலைத் திட்டம், சிங்கள தொழிலாளர்களுக்கு அல்லது இந்தியாவில் அல்லது உலகில் எங்கும் உள்ள தொழிலாளர்களுக்கு எந்தவொரு வேண்டுகோளும் விடுக்க புலிகள் இயல்பிலேயே இலாயக்கற்றவர்கள் என்பதை அர்த்தப்படுத்தியது. இந்த அனுபவங்களை ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்கா முழுவதிலும் காணமுடியும். இப்போது உலகம் பூராவும் தனது சவால் செய்ய முடியாத மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த ஒவ்வொரு பாகத்திலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையீடு செய்கின்ற நிலையில், ஆசியா பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள், தமது எஞ்சியுள்ள ஏகாதிபத்திய-விரோத பாசங்குகளையும் கைவிட்டு, உலக யுத்தம் என்ற காட்டுமிராண்டித் தனத்துக்குள் தொழிலாள வர்க்கத்தை இழுத்துப் போடுவதற்கு தயாராகின்றன. ஸ்ராலினிசத்துக்கும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே போராடியது. யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் ஜனநாயக உரிமைகள் மீது ஆழமடைந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு முன்வரும் புதிய தலைமுறை புரட்சியாளர்கள் இந்த முன்னோக்கிலேயே காலூன்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கண்டத்திலும் இருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் அனைத்துலகக் குழுவின் சர்வதேச மே தினக் கூட்டத்துக்கு பலம்வாய்ந்த முறையில் பிரதிபலித்திருப்பதானது புரட்சிகர அலை மீண்டும் எழுவது பற்றிய அறிகுறி என்பதில் சந்தேகம் இல்லை. நிரந்தரப் புரட்சிக்கான போராட்டத்தில் தசாப்த காலமாக ஈடுபட்டுள்ள இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, ஆசியா பூராவும் இருந்து முன்னணிக்கு வரும் அனைவருக்கும், தொழிலாள வர்க்கத்துக்கு புதிய புரட்சிகர தலைமைத்துவமாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் புதிய பகுதியை ஸ்தாபிக்க சகல உதவியையும் வழங்க வாக்குறுதியளிக்கின்றது. |
|
|