தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
French government set to impose wage cuts demanded by the banks பிரெஞ்சு அரசாங்கம் வங்கிகள் கோரிய ஊதிய வெட்டுக்களை திணிக்க உள்ளது
By Pierre Mabut
Use this version to print| Send
feedback சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆனதை குறிக்கும் முகமாக கடந்த செவ்வாயன்று அவர் தொலைக்காட்சியில் பேட்டி காணப்பட்டார். கருத்து கணிப்புகளில் வெறும் 21 சதவீத ஆதரவோடு, அவர் 1958 இல் ஐந்தாம் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் வந்தவர்களிலேயே மிக மிக மதிப்பிழந்த ஜனாதிபதியாக ஆகியுள்ளார். 2013 முடிவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதை குறைப்பதாக -நிலைமையை தலைகீழாக மாற்றுவதாக- அவர் பொய் வாக்குறுதிகள் அளித்த அதேவேளையில், தொழில் வழங்குனர்களுக்கு பாரிய வேலைநீக்கங்களைச் செய்ய அனுமதித்த அவர், வேலைவாய்ப்பின்மையை குறைக்கவில்லை என்றால் 2017 மறு-தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சபதமிட்டிருந்தார். தற்போது 10 சதவீதத்தில் நிற்பதும், OECD புள்ளிவிபரங்களின்படி இந்த ஆண்டில் 10.4 சதவீதமாக உயர உள்ளதுமான வேலைவாய்ப்பின்மை அவரது "சிந்தனை முழுவதும் ஆக்கிரமித்திருப்பதாக" அறிவிக்கிறார். தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலையிட உரிமைகள் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்தும் நோக்கத்தைக் குறிப்பிடும் விதத்தில் அவர், “இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை", என்றுரைத்தார். 2017க்குள் பொது செலவினங்களில் 50 பில்லியன் யூரோ வெட்டுக்கள் மற்றும் "பொறுப்புடமை உடன்படிக்கையில்" (responsibility pact) தொழில் வழங்குனர்களுக்கு 35 பில்லியன் யூரோ வரி குறைப்புகள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை வெறும் ஆரம்பம் மட்டுமே ஆகும். இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் ஹாலண்ட் தனது மன உழைச்சலை தெரிவிக்கிறார். அவரது மன உழைச்சல்கள், தொழிலாளர்களின் வேலைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அவரது சிக்கன நடவடிக்கை கொள்கைகளால் உருவான அவலம் ஆகியவற்றிற்காக அல்ல மாறாக அவை ஓரின சேர்க்கையாளர் திருமணம் மீதான ஒரு சட்டமசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்த தவறியமைக்கும், “நெருக்கடியின் கனத்தை" பிரெஞ்சு மக்கள் உணருமாறு செய்யாததற்கும் ஆகும். எவ்வாறிருந்த போதினும், வரலாறு சாட்சியம் கூறுவதுபோல ஹாலாண்டின் மற்றும் அவரது சோசலிஸ்ட் கட்சியின் சிந்தனை முழுவதும் நிஜமாக ஆக்கிரமித்திருப்பது என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் -விலையாக கொடுத்து- உலக சந்தையில் பிரெஞ்சு வணிகத்தின் போட்டித்தன்மையை காப்பாற்றுவதாகும். 2013 இல் தொழிற் சங்கங்கள் உடனான உடன்பாட்டுடன் "போட்டித்தன்மை மற்றும் வேலைகளின் பாதுகாப்பு (இதை வளைந்து கொடுக்கும் தன்மை என்று வாசிக்கலாம்)" உடன்படிக்கையை அவர் கையாண்ட விதம், பெரும் எண்ணிக்கையிலான பாரிய வேலை இழப்புகளுக்கு இட்டுச் சென்றது. நகரசபை தேர்தல்களில் PS இன் தோல்விக்குப் பின்னர், வலதுசாரி பிரதம மந்திரி மானுவேல் வால்ஸின் அவரது சமீபத்திய நியமனம், வேலையின்மை மீதான எந்தவொரு கவலைக்கும் எதிர்திசையில் அமைந்துள்ளது. “பிரெஞ்சு மக்களுக்காக" என்ற பகட்டான தோரணையில் உரையாற்றுகையில், அந்த தகவலோ உண்மையில் தொழில் வழங்குனர்களுக்கும், வங்கிகளுக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மறுஉறுதிவழங்குவதை நோக்கமாக கொண்டதாகும். “நாம் வேகமாக நகர வேண்டியுள்ளது ஏனென்றால் பிரெஞ்சு மக்களால் இனியும் தாங்க இயலாது, அவர்கள் தீர்வுகளைக் கோருகின்றனர். நாம் தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதில், உள்ளூர் அரசாங்க சீர்திருத்தங்களை வேகமாக்க வேண்டும்.” "ஊதியங்களை வெட்ட மற்றும் ஒரு வளைந்து கொடுக்கும் தொழிலாளர் சந்தையை உருவாக்க பிரான்சுவா ஹாலண்ட் ஐரோப்பிய ஆணைக்குழுவின் அதிகளவிலான அழுத்தத்தின் கீழ் உள்ளார். ஹாலண்ட்டும் தொழிற்சங்கங்களும் யாருடன் நெருக்கமாக இணைந்து வேலை செய்து வருகின்றனரோ அந்த பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பு மெடெஃப் (Medef) தலைவர், பியர் கட்டாஸ், மாதத்திற்கு 1,128 யூரோ என்ற குறைந்தபட்ச ஊதிய (SMIC) முறையைக் கைவிடவும், அதற்கு பதிலாக ஒரு "இடைநிலையான SMIC ஐ" கொண்டு வரவும் அவர்கள் "பேரம் பேச" வேண்டுமென இப்போது வலியுறுத்துகிறார். இது வேலைவாய்ப்பின்மையைக் குறைக்குமென கட்டாஸ் வாதிடுகிறார். “நமது தொழில் வழங்குனர்கள் வேலைக்கு ஆட்களை எடுக்க அஞ்சுகின்றார்கள். SMIC ஐ குறைப்பதன் மூலமாக இந்த அச்சத்தைக் குறைக்கலாம்” என அவர் கூறுகிறார். மக்களை மலிவு கூலி வேலைகளுக்குள் தள்ளும், வேலைவாய்ப்பு சலுகைகளை வெட்டும், பொதுவாக ஊதிய அளவுகளைக் குறைக்கும், ஜேர்மனின் ஹார்ட்ஸ் IV சீர்திருத்தங்களோடு எல்லா விதத்திலும் ஒத்திருக்கும் வகையில் அரசு அமைப்புகளால் மானியம் அளிக்கப்படும் ஒரு குறைவூதிய துறையை கட்டாஸ் விரும்புகிறார். தற்காலிக தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் தொழில் பயிற்சி பெறுநர்கள் உள்ளடங்காமல், 28.2 மில்லியன் தொழிலாளர் சக்தியில், தற்போது 3.1 மில்லியன் தொழிலாளர்கள் SMIC தர சம்பளங்களை பெற்று வருகிறார்கள். இப்போது, தனியார் துறையில் எட்டு தொழிலாளர்களில் ஒருவரே, SMIC நிர்ணயங்களில் சம்பாதிக்கிறார். இது 2011இல் இருந்ததை விட 10 சதவீதம் அதிகமாகும். இளைஞர் வேலைவாய்ப்பின்மையை குறைப்பதான ஹாலண்ட்டின் பொய் வாக்குறுதிகள் அனைத்திற்கும் மேலாக, கட்டாஸால் ஏற்கனவே உளறப்பட்டதைப் போல, ஊதிய அளவுகளை வெட்டியும் குறிப்பாக குறைந்தபட்ச ஊதிய மட்டத்தை இல்லாதொழித்து, அவர்களை வறுமை மட்டத்திலான நிலைமைகளின் கீழ் வேலைக்கு அமர்த்துவதில் தங்கியுள்ளது. 2013இல் இருந்து, தொழிற் பயிற்சி பெறுநர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை 20 சதவீத அளவிற்கு PS அரசாங்கம் குறைத்துள்ளது, இது தொழில் பயிற்சி பெறுநர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைய இட்டுச் சென்றுள்ளது. அதேவேளை இன்றுள்ள 420,000 மொத்த இடங்கள், 2017க்குள் 500,000ஆக உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவிக்கிறார். தற்போது, பிரெஞ்சு மத்திய வங்கியின் ஆளுநர், ஊதியங்களைக் குறைக்க கோரிய கட்டாஸின் அழைப்போடு அவரது அழைப்பையும் சேர்த்துக் கொள்கிறார். ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒரு அங்கத்தவருமான கிறிஸ்தியான் நுவையே, பிரெஞ்சு ஜனாதிபதிக்கு எழுதிய வங்கியின் ஆண்டு கடிதத்தில் ஹாலண்ட் இன்னும் மேலதிகமாக செல்ல வேண்டுமென மதிப்பிட்டார். “தொழில் வழங்குனர்கள் சமூகசேவைகளுக்காக வழங்கும் நிதியை குறைப்பதென்பது, போட்டித்தன்மையின் மீட்சிக்குப் போதுமானதொரு நிலைமைகள் உருவாக்க போவதில்லை என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும் ... தொழிலாளர் சந்தை மிகவும் இறுக்கமாக இருக்கிறது என்பதோடு வேலைகளை உருவாக்குவதில் நிறுவனங்கள் எடுக்கும் ஆபத்துக்களுக்கு அதனிடமிருந்து வெகு குறைவான ஊக்கப்பொதியையே வழங்குகிறது,” என்று அவர் எழுதினார். 2017 வரையில் 5 மில்லியன் பொதுத்துறை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போதாதென்று நுவையே கூறுகிறார். அவர் வேலை நீக்கங்களை கோருவதோடு, ஹாலண்ட் அரசாங்கம் SMICஐ மறுஆய்வு செய்ய வேண்டுமென கூறுகிறார், நுவையேயின் கருத்துப்படி அது "வேலைவாய்ப்புக்கு மிகவும் கேடு விளைவிப்பதாக" உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் நுவையே ஊடாக சாட்டையைச் சுழற்றி வருகிறது. ஹாலண்ட் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை அழிக்க வேண்டும் மற்றும் அரசு பற்றாக்குறையை 2015 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக குறைக்க வேண்டுமென அது கோருகிறது. இது கிரீஸில் சுமத்தப்பட்ட சமூக சீரழிவினை நடாத்திய வழிவகையில் மேலதிகமாக பாரிய தாக்குதல்கள் இல்லாமல் செய்யலாம் என்பது பெருமளவிற்கு சந்தேகத்திற்குரியதாக தெரிகிறது. 2015இல் 1.7 சதவீத வளர்ச்சி என்ற அதன் கணிப்புகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக ஐரோப்பிய கமிஷன் பிரான்சை எச்சரித்துள்ளது. அரசு பற்றாக்குறை 2015இல் 3.4 சதவீதத்தை எட்டும், மற்றும் அரசு கடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு-செலவு திட்ட வரம்புகளை மீறி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96.6 சதவீதமாக இருக்கும் என அது மதிப்பிட்டது. தேசிய நாடாளுமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் வெற்றுத்தனமான, அடையாள விமர்சனங்கள் இருந்தாலும், PS அரசாங்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது அனுதாபிகளின் ஆதரவோடு, புரூஸ்செல்சின் அனைத்து கட்டளைகளையும் திணிக்கும். தொழிற்சங்கங்களால் அவர்களின் நலன்கள் காட்டிக்கொடுக்கப்படுவது பற்றி தொழிலாளர்களால் உணர்ந்துகொள்ளப்படும் இந்த ஏமாற்றம் சமீபத்திய ஒரு கருத்துக்கணிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கேள்வி கேட்கப்பட்டவர்களில் 68 சதவீதத்தினருக்கு தொழிற்சங்கங்களின் மீது எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பதை அது கண்டறிந்தது — இது 2010இல் 47 சதவீதமாக இருந்ததில் இருந்து ஒரு கூர்மையான உயர்வாகும், அப்போது அவை வலதுசாரி ஜனாதிபதி சார்கோசியால் கோரப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்களைத் திணித்திருந்தன. |
|
|