சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military kills alleged “LTTE suspects”

இலங்கை இராணுவம் "புலி சந்தேக நபர்கள்" எனப்பட்டவர்களை கொன்றது

By S. Jayanth
16 April 2014

Use this version to printSend feedback

இலங்கை இராணுவம் புலிகளின் தலைவர்கள் எனக் கூறப்பட்ட மூவரை கொன்றதாக கடந்த வாரம் அறிவித்தது. அவர்கள் 2009ல் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை "புதுப்பிக்க" முயற்சித்தனர் என்று இராணுவம் கூறிக்கொண்டது.

ஏப்ரல் 11ம் தேதி, இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, இராணுவம் வடக்கில் வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணிக்கு அருகே உள்ள காட்டில் இரவில் ஏற்பட்ட மோதலில் கோபி என்றழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம் என்பவரை கொன்றதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கோபி, "புலிகள் சார்பு தமிழ் புலம்பெயர்ந்தவர்களுடன் புலிகளுக்கு புத்துயிரூட்டமுயன்ற தலைவர் என வணிகசூரிய தெரிவித்தார். தேவிகன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் மற்றும் அப்பன் என்றழைக்கப்படும் நவரத்தினம் நவநீதன் ஆகியோரே கொல்லப்பட்ட மற்ற இருவருமாவர். இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக இராணுவம் கூறியது.

இராணுவம் தனது கூற்றுக்களுக்கு எந்த சான்றும் வழங்கவில்லை. புலிகளின் இயக்கம் உயிர்பெறுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது பிரச்சாரத்தின் மத்தியிலேயே இந்தக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்தே, வடக்கில் ஒரு பயங்கரவாத மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருந்த இராணுவம், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 10 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டவர்களை தடுத்து வைத்துள்ளது.

உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, இந்த நபர்கள் ஒரு வீட்டில் இருந்ததுடன் அவர்கள் தப்பிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர். திட்டமிட்ட கொலைகள், சித்திரவதைகள், தடுத்து வைத்தல் மற்றும் விசாரணைக்கும் பேர் போன இராணுவம், புலிகளின் மீள் எழுச்சி என்று அழைக்கப்படுவது பற்றி விசாரிக்க இந்த தனிநபர்களை தடுத்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை.

முழு கதையையும் ஒரு சார்பற்ற அரங்கேற்றல் சம்பவமாக இருந்தோடு முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. முன்னதாக, இலங்கை இராணுவ சிப்பாய் கொல்லப்பட்டார் என கூறிய பாதுகாப்பு பேச்சாளர், பின்னர் அவர் இந்த இராணுவ நடவடிக்கைக்கு முந்தைய தயாரிப்பு பயிற்சிகளின் போது உயிரிழந்தார் என்று கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை, கோபி இராணுவத்தின் காவலில் இருந்ததாக தெரிவித்துள்ளது. இராணுவ நடவடிக்கைக்கு பின்னர் டஜன் கணக்கான சிப்பாய்களை காண்பிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு, கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை.

கோபி உடல், அவரது மாமன் எஸ். பாலகுருபரன், கைதுசெய்யப்பட்டுள்ள அம்மா எஸ். ராசமலர் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மனைவி சர்மிளாவினாலும் அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் அடையாளம் காட்டப்பட்டது. உள்ளூர் நீதவான் ஒருவர் அனுராதபுரத்தில் அரசாங்க செலவில் உடல்கள் அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

எஸ். பாலகுருபரன், தனது மருமகனின் உடலில் மார்புக்கு கீழ் மற்றும் கீழ் வயிற்றில் துப்பாக்கி சூட்டு காயங்கள் இருந்தன என்று பிபிசி தமிழ் சேவைக்கு கூறினார். கோபி அவரது திருமணத்தின் பின்னர் மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை செய்தார். "ஜனவரி மாதம் முதல் அவருடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை. இப்போது நான் அவரை சடலமாக பார்க்கிறேன்" என்று அவர் கூறினார்.

பிரிகேடியர் வணிகசூரிய, "பயங்கரவாதத்தை புதுப்பிக்கும் முயற்சி" ஒன்று யாழ்ப்பாண குடாநாட்டில் பளை பொது பகுதியில் தோன்றியுள்ளது என்றும் இந்தப் பிரச்சாரத்தை வழிநடத்தும் பிரதான சந்தேக நபர்களை பற்றி தகவல் தேடிவருவதாகவும் கூறினார்.

ஒரு உள்ளூர் குழு, "ஐரோப்பாவை தளமாகக் கொண்ட புலிகளின் தலைவர்களான நெடியவன், விநாயகம் ஆகியோரின் ஆலோசனையின் கீழ் இயங்குவதோடு மற்றொரு ஆயுதக் கிளர்ச்சிக்கு களம் அமைக்கின்றது" என்று வணிகசூரிய தெரிவித்தார். பிரிவினைவாத அமைப்பு 2009ல் தோற்கடிக்கப்படும் முன், கொல்லப்பட்டவர்கள் புலிகளின் நடவடிக்கைகளில் பங்குகொண்டவர்கள் என்றும் அவர் கூறினார்.

உத்தேசிக்கப்படும் புலிகளின் புத்துயிர்ப்பு, இலட்சக்கணக்கான படையினர் வடக்கு மற்றும் கிழக்கில் ஆக்கிரமித்திருப்பதை நியாயப்படுத்தும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கைளின் பாகமாகும்.

பெருந்தோட்ட அமைச்சரும் மனித உரிமைகளுக்கான இலங்கையின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க, "வடக்கில் இராணுவ பிரசன்னம் பற்றி கொழும்பை விமர்சிக்கின்றனர் மற்றும் ஜெனீவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC ) சர்வதேச அரசாங்கங்கள் இராணுவத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக்கோருகின்றன என்று ஊடகங்களிடம் கூறினார். எனினும், "தேசிய பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டே," இராணுவ இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்திய அவர், சமீபத்திய சம்பவம் இதற்கு "தெளிவான சான்றுகளை" வழங்குகிறது என்றார்.

சமரசிங்க, கடந்த மாதம் யுஎன்எச்ஆர்சியில் அமெரிக்க ஆதரவிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றியே குறிப்பிட்டார். புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இராணுவ தாக்குதலின் போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அந்த தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முழுமையாக அங்கீகரித்த அமெரிக்கா, அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்மானத்தை முன்நகர்த்தியது, மனித உரிமைகள் பற்றிய அக்கறையினால் அல்ல, மாறாக வாஷிங்டன் சீனாவை மூலோபாய ரீதியில் சுற்றிவளைப்பதன் ஒரு பகுதியாக, பெய்ஜிங்கில் இருந்து கொழும்பை தூர விலக நெருக்குவதற்கே ஆகும்.

புலிகளின் எழுச்சி பற்றிய இராஜபக்ஷ அரசாங்கத்தின் கூற்று, வெறுமனே வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான முயற்சி மட்டுமல்ல. அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக எழுச்சிபெறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் பெருகிவரும் எதிர்ப்பை திசை திருப்புவதற்குமே தமிழர் விரோத இனவாதத்தை தூண்டிவிடுகின்றது.

இராணுவ மற்றும் துணை இராணுவ குண்டர்கள் இலங்கையின் வடக்கு முழுவதும் மக்களை அச்சுறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விடுதலை புலி சந்தேக நபர்களாக போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு "புனர்வாழ்வின்" பின்னர் விடுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

திங்களன்று, இராணுவ புலனாய்வுத் துறையில் இருந்து வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் குண்டர் குழு, யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட யாழ் தினக்குரல், வலம்புரி மற்றும் கொழும்பை தளமாகக் கொண்ட தமிழ் தினசரியான வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் நிருபரான சிவஞானம் செல்வதீபன் மீது தாக்குதல் நடத்தியது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து பின் தொடர்ந்து வந்த நான்கு பேரால் சிவஞானம் கொடூரமாகத் தாக்கப்பட்டார். பத்திரிகையாளர் தலையில் காயங்களுடனும் ஒரு கால் உடைந்த நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

WSWS நிருபர்கள் வடக்கில் வசிக்கும் பலருடன் பேசினார். அவர்கள் இராணுவ பயங்கரவாத பிரச்சாரத்தை கண்டனம் செய்தனர். யுத்தத்தால் அழிக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஒரு மீனவர் கூறியதாவது: "நாம் நம் அன்றாட வாழ்க்கைக்கு போராட வேண்டியுள்ளது. நாம் யுத்தத்தின் போது மீன்பிடிக்க முடியாமல் வறுமையில் வாழ்ந்தோம். மீன்பிடி உபகரணங்கள் வாங்க வங்கி கடன்களை பெற நேர்ந்தது. இப்போது இந்த கடன்களை செலுத்த போராடி வருகின்றோம். மீண்டும் எங்கள் மீது இராணுவ ஒடுக்குமுறை திணிக்கப்படுகிறது.

"கடலுக்குச் செல்ல பாஸ் நடைமுறை மீண்டும் சுமத்தப்படும் என்று கேள்விப்பட்டோம். புதியவர்கள் எவரும் எங்கள் வீடுகளுக்கு வந்தால் இராணுவத்துக்கு அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளோம். அவர்கள் அடிக்கடி புனர்வாழ்வுபெற்ற இளைஞர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றனர். 'நாம் மீண்டும் போர்க்காலத்திற்கு வந்துள்ளோமோ என்று அஞ்சுகிறோம். தேர்தலின் போது எங்களை பார்க்க வரும் பல அரசியல் கட்சிகள் இந்த சூழ்நிலையில் எங்களை சந்திக்க வருவதில்லை. நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உணர்கின்றோம்."

ஒரு யாழ்ப்பாணவாசி தெரிவித்ததாவது: "ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அரசாங்கம் இனவாத பிரச்சாரத்தை நாடியுள்ளது... அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு எதிர் நடவடிக்கையும் எடுப்பதை நாம் காணவில்லை. அவர்கள் சர்வதேச சக்திகள் மற்றும் ஜெனீவா பற்றி பேசுகின்றனர், ஆனால் மக்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும்போது அவர்கள் எதுவும் செய்யவில்லை. நாம் அவர்களுக்கு அளித்த வாக்குகள் பயனற்றவை என்று நான் நினைக்கிறேன்."

ஆசிரியர் பரிந்துரை:

இலங்கை தமிழர்கள் மீதான அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்ப்பீர்