சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

Worldwide attendance at ICFI May Day online rally

ICFI மே தின இணையவழி கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து ஆதரவாளர்கள் பங்கெடுத்தனர்

By a reporting team
5 May 2014

Use this version to printSend feedback

ஞாயிறன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் நடத்தப்பட்ட இணையவழி மே தின கூட்டத்தில் ஆறு கண்டங்களின் 84 நாடுகளில் இருந்து தொழிலாளர்களும், இளைஞர்களும் பங்கெடுத்தனர். அவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மன், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து உரையாற்றிய பத்து பேச்சாளர்களின் உரையை செவியுற்றனர்.

யுத்தம், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு பொதுவான பொதுக்கூட்டத்தில் உலகளாவிய பார்வையாளர்களை ஒருங்கிணைத்து, அது அதன் வகையில் சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கான முதல் கூட்டமாக அமைந்திருந்தது. அது ICFIஇன் தினசரி இணையவழி வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்ததோடு, அது ஒலிபரப்பப்பட்ட இரண்டரை மணி நேரத்தின் போது 700க்கும் மேற்பட்ட கருத்துரைகள் பரிமாறப்பட்டன. இந்த பொதுக்கூட்ட அழைப்பிற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரும் விடையிறுப்பானது, யுத்தம் மற்றும் சமூக எதிர்புரட்சி கொள்கைகளுக்கு உலகெங்கிலும் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பையும், அரசியல் பகுப்பாய்வு மற்றும் ஓர் அரசியல் மாற்றீடுக்கு இருக்கும் பரந்த தாகத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய கமிட்டி அங்கத்தவரும், 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ட்ரொட்ஸ்கிச இயக்க அங்கத்தவருமான ஹெலென் ஹால்யார்ட் இதற்கு தலைமை வகித்தார்.

WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும், அமெரிக்க SEPஇன் தேசிய தலைவருமான டேவிட் நோர்த், அக்கூட்டம் எந்த அடிப்படை வரலாற்று மற்றும் அரசியல் கருத்துருவின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை விவரித்து தொடங்க உரையை வழங்கினார்.

அந்த இணையவழி கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு வித உழைக்கும் மக்களும் பங்கு பெற்றிருப்பது அளப்பரிய புறநிலை முக்கியத்துவத்தைப் பெறுவதாக தெரிவித்த அவர், பரந்த மக்களைப் பிரித்து வைக்க ஆளும் உயரடுக்கினர் பயன்படுத்துகின்ற இன, மத, தேசிய, மொழி, பால் பேதங்கள் அனைத்தும் மற்றும் வயது பேதமும் கூட, உலக முதலாளித்துவ நெருக்கடியின் தவிர்க்கவியலாத யதார்த்தம், வர்க்கப் போராட்டத்தின் அரசியல் கட்டாயங்கள், அத்துடன் நவீன சமூகத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலைரீதியான புரட்சிகரப் பாத்திரம் ஆகியவற்றின் முன்னால் கரைந்து காணாமல் போவதை இந்தக் கூட்டத்தில் காண முடிகிறது, என்றார்.

ICFIஇன் அரசியல் முன்னோக்கு, உலகளாவிய முதலாளித்துவ முரண்பாடுகளைக் குறித்த ஒரு விஞ்ஞானப்பூர்வ புரிதலின் அடிப்படையில், மற்றும் குறிப்பாக லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட ஸ்ராலினிசம் மற்றும் சீர்திருத்தவாத்திற்கு எதிரான போராட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டதைப் போல சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டதாக டேவிட் நோர்த் குறிப்பிட்டார்.

இருபதாம் நூற்றாண்டு வர்க்க போராட்டத்தின் கசப்பான படிப்பினைகள் மீண்டும் மீண்டும் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் தீர்க்கமான முக்கியத்துவத்தையும் மற்றும் அனைத்து நாடுகளின் தொழிலாளர் வர்க்க போராட்டத்தை வழிநடத்த வேலைத்திட்டம் அவசியப்படுவதையும் எடுத்துக்காட்டுகின்றன. உலகில் இன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்கு வெளியே, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதாக பகிரங்கமாக கூறும் வேறெந்த இயக்கமும் கிடையாது, என்று நோர்த் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் நிக் பீம்ஸ் கூறுகையில், வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான ஆதாரம் 2008 வோல் ஸ்ட்ரீட் நிதியியல் முறிவோடு வெடித்த உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய உடைவில் தங்கி இருப்பதை ஆய்வுபூர்வமாக விளக்கினார். (பீம்ஸ், மற்றும் ஏனைய அனைத்து பேச்சாளர்களின் உரைகளும் வரவிருக்கின்ற நாட்களில் WSWSஇல் பிரசுரிக்கப்படும்).

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இப்போது தொடரும் பொருளாதார தேக்கத்தின் நிலைமைகளை பீம்ஸ் விவரித்தோடு, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா போன்ற "எழுச்சி பெற்றுவரும் சந்தைகள்" என்றழைக்கப்படுபவை ஒரு மாற்றீட்டை வழங்க முடியாது என்பதையும் விளங்கப்படுத்தினார்.

ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அனுதாபிகளால் இந்த நெருக்கடிக்கு ஒரு உண்மையான விளக்கத்தை வழங்க முடியவில்லை, அத்தோடு அவர்கள் அதை ஒரு துரதிருஷ்டவசமான விபத்தாக கையாள முனைந்தனர். மார்க்சிஸ்டுகள் அடிப்படையிலேயே அதற்கு எதிர்விதமான முன்னோக்கை கொண்டுள்ளனர். நெருக்கடிகளும் பொருளாதார முறிவும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு வெளியிலிருந்து அபிவிருத்தி அடைவதில்லை; அவை அதன் அடிப்படை உள்ளார்ந்த முரண்பாடுகளாக உள்ளன, என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை சோசலிச சமத்துவ கட்சியின் பொது செயலாளர் விஜே டயாஸ் கூறுகையில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழ் போல்ஷ்விக் கட்சியால் தொடங்கப்பட்ட உலக சோசலிச புரட்சிகர போராட்டத்தை ICFI தொடர்கிறது. அது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை உள்ளடக்கி உள்ளது என்றார்.

சோசலிச புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்திற்கான முன்னோக்கிற்காக, முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசத்தை ஏற்ற அனைவருக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் போராடியது. எகிப்து மற்றும் தென்னாபிரிக்காவின் சமீபத்திய அனுபவங்களையும், அத்தோடு இலங்கை மற்றும் இந்திய துணை கண்டத்தில் தொழிலாள வர்க்க போராட்டத்தின் படிப்பினைகளையும் அவர் மீளாய்வு செய்தார்.

உலக சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கம் அதன் வரலாற்று கடமையைக் கையிலெடுக்க உலக தொழிலாள வர்க்கத்தை விஞ்ஞானபூர்வ சோசலிச நனவோடு மீண்டும் ஆயுதபாணியாக்க ட்ரொட்ஸ்கியால் நடத்தப்பட்ட போராட்டத்தை ICFI தொடர்கிறது, என்று அவர் தெரிவித்தார். அந்த சக்தி வாய்ந்த புரட்சிகர பாரம்பரியம் இந்த பொதுக்கூட்டத்தில் வெளிக் கொண்டு வரப்படுகிறது.

ICFIஇன் ஐரோப்பிய பிரிவுகளில் இருந்து பேசிய நான்கு பேச்சாளர்கள் உக்ரேனிய நெருக்கடியால் முன்னுக்கு கொண்டு வரப்பட்டுள்ள யுத்த அபாயங்களையும், ஐரோப்பாவில் ஒவ்வொரு அரசாங்கத்தினது, அது வலதுசாரியாக ஆகட்டும் அல்லது சமூக-ஜனநாயக கட்சிகளாக ஆகட்டும், அவற்றால் பின்பற்றப்பட்ட சிக்கன கொள்கைகள், ஒடுக்குமுறை மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக ஐரோப்பா முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்பட்ட போராட்டங்களையும் விவரித்தனர்.

ICFI இன் செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ் கூறுகையில், ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியும் (Partei für Soziale Gleichheit), பிரிட்டன் சோசலிச சமத்துவ கட்சியும் இந்த மாதம் நடைபெற உள்ள ஐரோப்பிய தேர்தல்களில், யுத்த அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னிறுத்தி ஒரு கூட்டு பிரச்சாரத்தைத் நடத்தி வருவதாக விவரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மக்களின் ஐக்கியத்தைப் பிரதிநிதித்துவ படுத்தவில்லை, மாறாக அது ஐரோப்பாவில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் நலன்களின் சர்வாதிகாரத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது, என்றார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, ICFI ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் முன்னோக்கை முன்னெடுக்கிறது.

இங்கிலாந்து சோசலிச சமத்துவ கட்சியின் பொது செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன், பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவோடு உக்ரேனின் வலதுசாரி ஆட்சியால் நடத்தப்பட்ட குற்றங்களை விவரித்தார். அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய பங்காளிகளும் ரஷ்யாவுடன் ஒரு மோதலை தூண்டிவிட்டு வருகின்றனர், அது ஒரு பேரழிவுகரமான உலக யுத்தமாக வெடிக்க அச்சுறுத்தி வருகிறது என்றார்.

ஒரு வரலாற்று நிலைப்புள்ளியிலிருந்து, உக்ரேனிய நெருக்கடி ஸ்ராலினிசத்தால் காட்டிக்கொடுக்கப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட சோவியத் ஒன்றிய பொறிவின் நீண்டகால மற்றும் பிற்போக்குத்தனமான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக அவர் விளங்கப்படுத்தினார்.

நாம் உக்ரேனிய, ரஷ்ய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக, பாசிசவாதிகள் மற்றும் செல்வந்த மேற்தட்டுகளின் இழிவார்ந்த தாக்குதல்களுக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்காக உள்ளோம், என்று அவர் முடித்தார்.

ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் உலி ரிப்பேர்ட் பேசுகையில், உக்ரேனிய நெருக்கடியை ஒரு போலிக்காரணமாக கொண்டு அனைத்து பிரதான கட்சிகள், மற்றும் ஜேர்மன் ஊடகங்களின் யுத்த ஆதரவு பிரச்சார மழையால் செய்யப்படும் ஜேர்மன் இராணுவவாதத்தின் புதுப்பிப்பைக் குறித்து பேசினார்.

அவர் குறிப்பாக பசுமை கட்சியினர், பாசிசவாதிகள் மற்றும் இடது கட்சியின் பாத்திரத்தின் மீது கவனம் செலுத்தினார், அவை அனைத்தும் கூர்மையாக வலதிற்கு நகர்வதற்காக மட்டுமே, ஏதோவொரு காலத்தில் இராணுவவாதத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டவையாகும் என்றார்.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஒரு அமைதிவாத விதத்தில் நடந்து கொண்ட வரையில் மட்டுமே இடது கட்சியும் அமைதிவாதியாக இருந்தது, என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலக அரங்கிற்குத் திரும்ப தயாரான அந்த நொடியே, இடது கட்சியும் அதன் அமைதிவாத பிடியைத் தூக்கியெறிந்து விட்டது...

இங்கிலாந்தின் துணை தேசிய செயலாளர் ஜூலி ஹைலன்ட் உரையாற்றுகையில், கண்டம் முழுவதிலும் பின்பற்றப்படும் சிக்கன கொள்கைகள், சமூக செலவின வெட்டுக்கள், மற்றும் வேலை அழிப்புகளுக்கு இடையே, ஐரோப்பாவில் நூறு மில்லியன் கணக்கானவர்கள் முகங்கொடுத்து வரும் நிலைமைகளை எடுத்துரைத்தார்.

அவர் கூறினார், உத்தியோகபூர்வமாக ஐரோப்பாவில் 120 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், ஆனால் நெருக்கடியால் உண்டான எண்ணிக்கை இன்னும் மோசமாகும். அவர் கிரீஸில் நடத்தப்பட்ட வெட்டுக்களின் பரிதாபகரமான தாக்கங்களை விவரித்தார், அங்கே மருத்துவமனைகளில் கட்டணங்களைப் பெற பிறந்த குழந்தைகள் அவர்களின் தாயிடமிருந்து பிரிக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

அவர், இந்த புதிய சர்வதேச நிலைமையின் யதார்த்தம் தொழிலாள வர்க்கத்தின் நிலைநோக்கை தீர்மானிக்க வேண்டும், என்றதோடு, மே தினம் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட அந்த புரட்சிகர பாரம்பரியங்களுக்கு தொழிலாளர்கள் திரும்ப வேண்டியதன் காரணங்களை விவரித்தார்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சியின் துணை தேசிய செயலாளர் ஜேம்ஸ் கோகன் உரையாற்றுகையில், ஜப்பான், தென் கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான ஒபாமாவின் சமீபத்திய விஜயத்தால் எடுத்துக்காட்டப்பட்ட, அமெரிக்க நிர்வாகத்தின் ஆக்ரோஷமான ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பால்" தூண்டிவிடப்பட்டிருக்கும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் யுத்த அபாயங்களைக் குறித்து எடுத்துரைத்தார்.

சீனாவிற்கு எதிராக நேரடியான இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்பில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவம் புதிய இராணுவ தளங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதேவேளையில், நாடு கடந்த பசிபிக் கூட்டுறவு (TPP) போன்ற பொருளாதார உடன்படிக்கைகளை கொண்டு "அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் அமெரிக்காவை ஆளும் அதே பெருநிறுவன செல்வந்த தட்டுகளிடம் மொத்தமாக அடிபணிய செய்ய விரும்புகிறது, என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவிலுள்ள சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் ஆண்ட்ரூ டேமன் கூறுகையில், "இந்த முதலாளித்துவ நெருக்கடியின் மிகவும் பார்வைக்கு புலப்படுகின்ற வெளிப்பாடுகளில் ஒன்று உலகெங்கிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து இலத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா வரையில் உள்ள இளைஞர்கள் முகங்கொடுக்கும் பயங்கரமான சமூக நிலைமைகளாகும். இந்தவொரு தலைமுறை, ஒரு எதிர்காலம் இல்லாமல், வேலைவாய்ப்பு, பாரிய வறுமை, நீடித்த கடன் ஆகியவற்றோடு ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு இடைவிடாத தாக்குதலை முகங்கொடுத்து வருகின்றனர்" என்றுரைத்தார்.

இளைஞர்களின் நிஜமான எதிர்காலம் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தங்கியுள்ளது என்று அவர் அறிவித்தார். இப்போதைய நிலைமைகளின் மீது அங்கே கோபம் குறைவாக உள்ளது என்பதல்ல, மாறாக இளைஞர்கள் வரலாற்று அரசியல் அறிவைப் பெற வேண்டி இருப்பதோடு, அவர்கள் தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்துள்ள புரட்சிகர கடமைகளைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் இறுதி உரையை வழங்கினார். அவர் கூறினார், இந்த பொதுக்கூட்டமே, வரலாறு முடிந்து விட்டது என்று பிரகடனப்படுத்தியவர்களுக்கு ஒரு மறுப்புரையாக அமைகிறது, ஏனென்றால் இன்றைய தினம் வரலாறு உருவாக்கப்படுகிறது என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் இந்த பொதுக்கூட்டத்தின் பல உரைகளில் மையமாக இருந்தது, அதுவும் மிக சரியாகவே இருந்தது, ஏனென்றால் உலகளவில் உள்ள எந்தவொரு புரட்சிகர இயக்கமும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் மற்றும் வன்முறையை முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் என்றார்.

அவர் கூறினார், அமெரிக்க ஏகாதிபத்தியம் பலமாக இருக்கலாம், ஆனால் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் அதையும் விட பலமாக இருக்கிறது, இந்த முரண்பாடுகள், துல்லியமாக உலகளாவிய பாத்திரத்தில் இருப்பதால், அமெரிக்காவிற்குள்ளேயே கூட அதன் மிகவும் திரண்ட வெளிப்பாட்டைக் காண்கின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வெளிப்படையான பலம் முற்றிலும் அழுகிய அடித்தளங்களில் தங்கியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் தொழில்துறை அஸ்திவாரத்தின் பொறிவோடு, ஒரு காலத்தில் வாகனத்துறை நகரமான விளங்கிய டெட்ராய்டிற்கு திவால்நிலைமையை ஏற்படுத்திய கடந்த நான்கு தசாப்த காலங்களில் ஏற்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை விளங்கப்படுத்தினார்.

அவர் தொடர்ந்து கூறினார், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளிப்படையான பலத்தைக் கண்டு மயங்கி கிடப்பவர்கள் அதன் பொருளாதார வீழ்ச்சியைக் காண்பதில்லை. அவர்கள் இன்று உலகின் மிகப் பெரிய புரட்சிகர காரணியாக விளங்கும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை தவற விடுகிறார்கள், என்றார்.

அவர் கூறினார், அமெரிக்க தொழிலாள வர்க்கம், உலக அரசியலில் உறங்கி கொண்டிருக்கும் ஜாம்பவானாக இருக்கிறது. நிதியியல் பிரபுத்துவம் இந்நாட்டின் தொழிலாளர்களை விட வேறெந்த சக்தி வாய்ந்த விரோதியையும் முகங்கொடுக்கவில்லை. இந்த மாபெரும் சமூக சக்தியின் ஆரம்ப கட்ட எழுச்சிகளும் கூட, வாஷிங்டனின் அரசு கட்டிடங்களில் ஆக்கிரமித்துள்ள வோல் ஸ்ட்ரீட்டின் அனைத்து அரசியல் கைப்பாவைகளின் கணக்குகளையும் முறித்து போட்டுவிடும்.

மே தினமே கூட, இந்த ICFI பொதுக்கூட்ட நாளிலிருந்து 128 ஆண்டுகளுக்கு முன்னர் 1886 இன் ஹேமார்க்கெட் படுகொலை நடந்த, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் முதல் மாபெரும் போராட்டங்களில் ஒன்றின் சர்வதேச விடையிறுப்பாக தொடங்கியது என்பதை கிஷோர் விளங்கப்படுத்தினார்.

அமெரிக்க தொழிலாள வர்க்கம் அதன் முக்கிய பலவீனத்தை, அதாவது அதன் நலன்களைப் பாதுகாக்க ஒரு சுயாதீனமான பாரிய அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்ட தோல்வியை இப்போது கடந்து வர வேண்டி உள்ளது.

அவர் இவ்விதத்தில் உரையை முடித்தார்: நாம் உலகெங்கிலும் உள்ள நமது தோழர்களுக்கு கூறுவது, எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: அங்கே இரண்டு அமெரிக்காக்கள் உள்ளன. அங்கே வோல் ஸ்ட்ரீட், பெண்டகன், சிஐஏ, செல்வந்த மேற்தட்டின் அமெரிக்கா உள்ளது, அது பொய்யுரைக்கிறது, அச்சுறுத்துகிறது, அட்டூழியங்களைப் புரிகிறது. அங்கே தொழிலாள வர்க்கத்தின் மற்றொரு அமெரிக்கா உள்ளது, அது அனைத்து முற்போக்குத்தன்மையையும், எதிர்காலத்திற்கான உண்மையான நம்பிக்கையையும் தாங்கி உள்ளது, என்றார்.

இந்த உரைகளின் போது, அமெரிக்கா முழுவதிலும் இருந்து, அத்தோடு கனடா, மெக்சிகோ, பெரு, உருகுவே, சிலி மற்றும் பிரேசிலில் இருந்தும் பொதுக்கூட்டத்தின் இணைய பக்கத்தில் கருத்துரைகள் பதியப்பட்டன. ஐரோப்பாவில் இருந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மால்டா, பெல்ஜியம், போலாந்து, ரோமானியா, நோர்வே, உக்ரேன் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் விவாத கருத்துக்கள் பதியப்பட்டன. ஆசியாவிலிருந்து, சீனா, இந்தியா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், கஜகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கருத்துரைகள் வந்தன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து பங்கெடுத்த டஜன் கணக்கானவர்களும் கருத்துக்களைப் பகிர்ந்தனர், மேலும் தென்னாபிரிக்கா மற்றும் துருக்கியின் ICFI ஆதரவாளர்களால் பொதுக்கூட்டத்திற்கு வாழ்த்துக்கள் அனுப்பப்பட்டன.

பொதுக்கூட்ட உரைகள் ஜேர்மன், சிங்களம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன, அதே போல பாரிஸில் கூடியிருந்த ஆதரவாளர்களின் ஒரு குழுவிற்கு பிரெஞ்சில் அங்கே மொழிபெயர்க்கப்பட்டது. ஏனைய மொழிகளோடு சேர்ந்து ஸ்பானிஷ், டகாலாக், துர்கிஷ், இத்தாலியன், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் ஆகிய மொழி கருத்துரைகள் இணையவழி உரையாடல்களில் இடம் பெற்றன.