World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் French Left Front makes hypocritical criticisms of Hollande's policy in Ukraine crisis உக்ரேன் நெருக்கடி தொடர்பாக ஹாலண்டின் கொள்கை மீது பிரெஞ்சு இடது முன்னணி இரட்டைவேட விமர்சனங்கள் செய்கிறதுBy Kumaran Ira உக்ரேனில் பிப்ரவரியில் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்த பாசிச ஆட்சிக்கவிழ்ப்பை வழிமொழிந்து ஆதரித்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மீண்டும் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் பின்னால் அணிவகுத்து நின்று கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவுப் படைகளை ஒடுக்குவதில் இறங்கியுள்ள கியேவ் ஆட்சியின் துருப்புகளையும் Right Sector ஆயுத குழுக்களில் இருக்கும் அதன் பாசிசக் கூட்டாளிகளையும் அது ஆதரிக்கிறது என்பதோடு ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலுக்கான அபாயத்தையும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியானது “ஜனநாயக”த்திற்கான எழுச்சியாக இந்த ஆட்சிக்கவிழ்ப்பை நேரடியாக வழிமொழிந்திருக்கின்ற அதேவேளையில், இடது முன்னணியின் ஒரு தலைவரும் PS இன் முன்னாள் அமைச்சருமான ஜோன்-லுக் மெலன்சோன், PS இன் வெளியுறவுக் கொள்கை குறித்தும் அது உக்ரேனிய பாசிஸ்டுகளின் பக்கமாய் அணிசேர்ந்திருப்பது குறித்தும் இரட்டைவேடமான விமர்சனங்களைச் செய்து கொண்டிருக்கிறார். ஏப்ரல் 24 அன்று ”உக்ரேன், அரசியல் பகுத்தறிவின் நிலைகுலைவு” என்ற தலைப்பிலான ஒரு வலைப்பதிவுக் கட்டுரையில் அவர் எழுதினார்: “அதனையொட்டி, அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யாவுடனான மோதல் போக்கை அதிகரிக்கும் ஒரு அபத்தமான மூலோபாயத்தை தொடக்கியிருக்கின்றன.”கியேவில் “நமக்கு நன்கு தெரியும், ஸ்வோபோடா கட்சியைச் சேர்ந்த நவ-நாஜி அமைச்சர்களைக் கொண்ட”ஒரு ஆட்சியை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரித்துக் கொண்டிருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார். “ஸ்வோபோடா கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம், அல்லது அதனுடனான கூட்டணிகளை உருவாக்கவோ ஒப்புதலளிக்கவோ வேண்டாம் என்று உக்ரேனிய நாடாளுமன்றத்தில் இருந்த ஜனநாயகக் கட்சிகளுக்கு” 2012 இல் ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் ஒன்று அழைப்பு விடுத்திருந்ததை அவர் மேற்கோளிட்டுக் காட்டினார். PS மீது மெலன்சோன் கூறும் விமர்சனங்கள் வெற்று வாய்வீச்சுக்களே. அவர் எழுப்பும் கேள்விகள் எல்லாம் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஒரு ஆழமான குற்றவியல்தனமான மற்றும் பொறுப்பற்ற கொள்கையில் ஈடுபட்டிருப்பதை காட்டுகின்றன என்ற அதேசமயத்தில், அனைத்துக்கும் முதலாய் மெலன்சோனது சொந்த பிற்போக்குத்தன பாத்திரத்தின் மீதான ஒரு குற்றப்பதிவாகவும் அவை அமைகின்றன. PS உக்ரேனில் பாசிஸ்டுகளை ஆதரிக்கின்றதும் ஒரு உலகப் போரில் முடியத்தக்க ரஷ்யாவுடனான ஒரு மோதலைத் தூண்டி விடுகின்றதுமான நிலையில், அதற்கு ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), மெலன்சோனின் இடது கட்சி (PG), மற்றும் NPA இன் பல்வேறு பிளவுக் கட்சிகள் போன்ற நெடுநாள் PS கூட்டாளிகளைக் கொண்ட இடது முன்னணியின் ஆதரவு இருக்கிறது. மெலன்சோனும் கூட 2012 ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச் சுற்றில் ஹாலண்டிற்கு நிபந்தனையற்று வாக்களிக்க அழைத்திருந்தார். மெலன்சோனின் விமர்சனங்களைக் கொண்டு மனதில் தோன்றக் கூடிய ஒரு இடது-சாரி ஆளுமை உலகப் போர் மற்றும் பாசிசத்தின் அபாயம் குறித்து எச்சரிப்பதாக, முதலாளித்துவம் மற்றும் PS அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அணிதிரட்ட முயலுவதாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, மெலன்சோனும் இடது முன்னணியின் மற்ற பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ வாய்வீச்சாளர்களும் தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்தியத்துடன் கட்டிப் போடுவதற்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்கின்றனர். ஹாலண்டின் கொள்கைகள் எழுப்பக் கூடிய படுபயங்கரமான அபாயங்கள் குறித்து நன்கு தெரிந்து வைத்துக் கொண்டே, அவர்கள் PS ஐ ஆதரிக்கின்றனர். ஒடெசாவில் வெள்ளியன்று ஏகாதிபத்திய-ஆதரவு நவ-பாசிச Right Sector ஆயுத குழுவைச் சேர்ந்தவர்களால் ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் குறித்து மெலன்சோன் முழு மவுனம் காத்து வருகிறார். அரசாங்கக் கொள்கை குறித்து சிடுமூஞ்சித்தனமான, எல்லைக்குட்பட்ட விமர்சனங்கள் செய்வதிலும் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய-ஆதரவு அரசியலின் எல்லைகளுக்குள்ளாக தொடர்ந்து இருப்பதிலும் மெலன்சோன் கைதேர்ந்தவராய் இருக்கிறார். “சர்வதேசக் கொள்கையில் அமெரிக்காவின் பின்னால் பிரான்சுவா ஹாலண்ட் அணிவகுத்து நிற்பதால், உக்ரேன் நெருக்கடியில் பிரான்ஸ் பெருமளவுக்கு செவிமடுப்பின்றி ஆகியிருக்கிறது.” ரஷ்யாவை ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் பிரான்ஸ் கருங்கடலில் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி விட்டதன் பின் மெலன்சோன் எழுதினார்: “அமெரிக்காவின் போக்கினை ஒட்டி நடத்தப்பட்டிருக்கும் பிரான்சின் இராணுவ நடவடிக்கைத் தீவிரம் என்பது ஒரு அரசியல் தவறு ஆகும். நான் அதைக் கண்டனம் செய்கிறேன். அது நமது நாட்டின் நலன்களுக்கும் அத்துடன் ரஷ்யாவுடனான நமது உறவுகளின் இயல்புக்கும் முற்றிலும் நேரெதிரானது ஆகும்.” ஒரு புத்திசாலித்தனமான, சமாதானவாத கண்ணியவான் போன்று மெலன்சோன் காட்டிக் கொள்வதென்பது ஒரு மோசடியாகும். பேரினவாத அமெரிக்க-விரோத வாய்ஜாலத்தை அவ்வப்போது அவர் சளைக்காமல் மேற்கொள்கிறார்(அது சர்வதேசத் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவதற்கு அவர் கொண்டுள்ள குரோதத்தை விளங்கப்படுத்துகிறது) என்றபோதிலும் சமீப காலங்களில் அமெரிக்காவும் பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் இணைந்து நடத்தியிருக்கக் கூடிய அத்தனை போர்களையும் மெலன்சோன் ஆதரித்திருக்கிறார். 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான நேட்டோ ஆக்கிரமிப்பில் பிரான்ஸ் இணைந்து கொண்டபோது மக்கள் வெறுப்பைச் சம்பாதித்த PS தலைமையிலான “பன்முக இடது” அரசாங்கத்தில் அவர் ஒரு அமைச்சராக இருந்தார். மிகச் சமீபத்தில் அமெரிக்காவின் தளவாட மற்றும் உளவுத்துறை உதவியுடன் நடத்தப்பட்ட லிபியாவில் 2011 நேட்டோ போர் மற்றும் 2013 இல் ஹாலண்டின் கீழ் மாலியில் நடத்தப்பட்ட பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இரண்டையும் அவர் ஆதரித்தார். மாலி போர் தொடங்கியபோது, மெலன்சோன் ஹாலண்டை வலதின் பக்கத்தில் இருந்து விமர்சனம் செய்தார். பிரான்சின் போருக்கான நோக்கங்கள் அதன் முன்னாள் காலனிகளில் இருந்து யுரேனியத்தை கொள்ளையடிப்பது தான் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு அவர் ஹாலண்டைக் கோரினார். அவர் கூறியதாவது: “பிரான்சின் அணு உலைகள் யுரேனிய விநியோகத்திற்காக நம்பியிருக்கும் பிராந்தியத்தின் பிற நாடுகள் ஆபத்தில் விடப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது என்பதால் தான் நாம் அங்கு இருக்கிறோம். அதனை நாம் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும்!” பிரான்ஸ் நடத்திய அடுத்தடுத்த போர்கள் PS அரசாங்கங்களில் சேவை செய்கின்ற மெலன்சோனின் வேட்கையை அதிகரிக்கவே செய்திருக்கின்றன. சென்ற ஆண்டில் மாலி போர் தொடங்கிய சமயத்தில் ஹாலண்டின் ஏற்பு விகிதம் கருத்துக்கணிப்புகளில் நிலைகுலைந்தபோது, மெலன்சோன் அவரது பிரதம மந்திரியாக விருப்பம் தெரிவித்தார்: “ஹாலண்டிற்கு சில நல்ல விடயங்கள் செய்ய வாய்ப்பு கிட்டியது, அவர் தவற விட்டு விட்டார். இப்போதும் அதை அவர் சரிசெய்யலாம். அவர் என்னைப் பிரதமராக்கலாம், எனக்கு பயம் கிடையாது.” ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விடவும் இப்போது ஹாலண்ட் கூடுதலாய் மக்கள்வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார் என்ற நிலையில், ரஷ்யாவுடன் மோதலைத் தூண்டுகின்ற PS இன் முடிவு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வெடிப்பதைத் தூண்டக் கூடும் என்பதே மெலன்சோனின் அச்சம். எல்லாவற்றுக்கும் மேல், PS க்கும் மெலன்சோன் உள்ளிட அதன் சுற்றுவட்டத்தில் இருக்கக் கூடிய சக்திகளுக்கும் தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்பு அபிவிருத்தி காண்பதைத் தடுப்பதற்கான ஒரு வேண்டாவெறுப்பான முயற்சியிலேயே, அவர் ஹாலண்ட் குறித்த தனது வெற்று விமர்சனங்களை வைக்கிறார். PS மற்றும் அதன் ஒட்டுமொத்த பிரெஞ்சு ”இடது” ஸ்தாபகத்தின் வலது-சாரிக் கொள்கைகளும் ஆழமாய் மதிப்பிழந்து சென்று கொண்டிருப்பதன் மத்தியில், நவ-பாசிச தேசிய முன்னணி, இடது முன்னணி உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு தட்டை வென்றெடுத்துக் கொண்டிருப்பது குறித்த அவரது கவலையையும் இது பிரதிபலிக்கிறது. சென்ற மாதத்தில் ரஷ்யாவுக்கு விஜயம் செய்த FN தலைவரான மரின் லூ பென் ரஷ்யா ”பூச்சாண்டி”யாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் ஐரோப்பாவில் அமெரிக்க ஆதரவுடன் ரஷ்யாவுக்கு எதிரானதொரு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். “ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யா மீது ஒரு பனிப் போர் அறிவிக்கப்பட்டிருப்பது கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்” என்று அவர் அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோ நாணயமதிப்பையும் கண்டனம் செய்து பிரெஞ்சு பிராங்க் நாணயமதிப்பை மீண்டும் கொண்டுவர அழைப்பு விடுக்கின்ற FN அதேவேளை, உக்ரேன் நெருக்கடியில் PS அமெரிக்காவின் பின்னால் அணிவகுப்பதை விமர்சனம் செய்கிறது. கியேவில் அமர்த்தப்பட்டிருக்கும் அமெரிக்க கைப்பாவை ஆட்சியின் உள்ளே வேலை செய்கின்ற ஸ்வோபோடா (Svoboda )என்ற ஒரு பாசிச கட்சியுடன் அது கொண்டுள்ள உறவுகளை அது தணித்துக் காட்டுகிறது. 1992 இல் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதலாக, அதிலும் குறிப்பாய் 2003 இல் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு தொடங்கி, பிரான்சின் ஆட்சிக்கான முதலாளித்துவக் கட்சிகளும் மற்றும் அதன் போலி-இடது கட்சிகள் அனைத்தும் தமது வெளியுறவுக் கொள்கை திட்டநிரல்களில் ஒரு முக்கியமான நகர்வை முன்னெடுத்தன. பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசியலின் மரபுகளைக் கொண்டு பார்த்தால், அவை தமது வழக்கத்திலிருந்து மாறுபட்ட வகையில் இப்போது அமெரிக்கப் போர்களுடனும் வலிமையான யூரோவை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் கடினப் பண கொள்கையுடனும் வெளிப்படையாகவும் நெருக்கமாகவும் அணிசேர்ந்திருக்கின்றன. மெலன்சோன் இந்தக் கொள்கைகளை ஆதரித்து வந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததாகும். FN இதற்கு நேரெதிரான வகையில் இவற்றை விமர்சனம் செய்கின்ற ஒரே முதலாளித்துவக் கட்சியாக ஆகியிருப்பதோடு இடது முன்னணி போல் அல்லாமல் நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு எதிர்க்கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்ளவும் முயற்சி செய்கிறது. FN இன் வெளியுறவுக் கொள்கை வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியை திடீரென்று தானும் திருப்பிச் செய்ய மெலன்சோன் எடுத்திருக்கும் முடிவானது அவரது அரசியலின் இயல்பில் எதனையும் மாற்றி விடவில்லை. இப்போதும் அவரது பிரதான எதிரி தொழிலாள வர்க்கம் தான், அவரது பிரதான கவலை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் அணிதிரண்டு விடாமல் எப்படித் தடுப்பது என்பது தான். |
|