World Socialist Web Site www.wsws.org |
Europe’s 9/11 ஐரோப்பாவின் செப்டம்பர் 11
Peter
Schwarz ஞாயிறன்று Frankfurter Allgemeine Sonntagszeitung பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில் நேட்டோ பொது செயலாளர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்சென், ரஷ்யாவுடனான கிரிமியாவின் இணைப்பை 9/11 மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தோடு" ஒப்பிட்டார். இந்த ஒப்பீடு ஒருவேளை ராஸ்முஸ்செனும், Frankfurter Allgemeine Sonntagszeitung இதழும் நோக்கம் கொண்டிருந்ததை விட அதிகமாகவே கூறுகின்றது. செப்டம்பர் 11, 2001 இன் பயங்கரவாத தாக்குதல்கள், அமெரிக்க அரசாங்கத்திற்கு அதன் இராணுவ படைகளைப் பாரியளவில் கட்டிமைக்கவும், சட்டவிரோத யுத்தங்களை நடத்தவும் ஒரு போலிக்காரணமாக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதற்கு சேவை செய்துள்ளது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது; பயங்கரவாதிகள் என்று சந்தேகப்பட்டவர்களைக் கடத்தி சென்று, சித்திரவதை செய்து, கொலை செய்துள்ளதுடன், உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்களை உளவு பார்த்துள்ளதுடன் மற்றும் அமெரிக்காவில் ஒரு பொலிஸ் அரசு கட்டமைப்பைக் உருவாக்கியுள்ளது. அவர்களே தூண்டிவிட்ட அதே உக்ரேனிய நெருக்கடியைக் கொண்டு, ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள், குறிப்பாக ஜேர்மனி, அதே வழியில் பயணிக்கத் தொடங்கி உள்ளது. அவர்கள், ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி, கருங்கடல் பிராந்தியத்திலும், காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவிலும் செல்வாக்கை விரிவாக்கி, அவர்களின் தெளிவான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பின்தொடர்ந்து வருகின்றனர். இராணுவவாதத்திற்கு எதிராக ஆழமாக வேரூன்றி உள்ள மக்கள் எதிர்ப்பைக் கடந்து செல்லவும் மற்றும் எதிர்கால வர்க்க போராட்டங்களை எதிர்கொள்ள அரசு எந்திரங்களை கட்டியமைக்கும் முயற்சிக்கு அவர்கள் இந்த நெருக்கடியை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த பத்திரிகையோடு பேசுகையில் ராஸ்முஸ்சென், ஐரோப்பிய நேட்டோ அங்கத்தவர்களின் ஒரு பாரிய மீள்-ஆயுதமயமாக்கலுக்கு அழைப்பு விடுத்தார். “உங்கள் இராணுவ செலவுகளைக் குறைப்பதை நிறுத்துங்கள், இராணுவத்திற்கு மேலும் அதிக பணத்தை படிப்படியாக முதலீடு செய்யும் போக்கிற்கு திரும்புங்கள்,” என அவர் முறையிட்டார். “உக்ரேனில் என்ன நடந்துள்ளதோ அது ஐரோப்பாவை எழுப்பிவிடும் ஒரு அழைப்பு,” என்றார். ரஷ்யா அதன் இராணுவ செலவுகளை 30 சதவீத அளவிற்கு அதிகரித்திருந்தது, அதேவேளையில் சில ஐரோப்பிய நேட்டோ அங்கத்தவர்கள் அவர்களின் செலவினங்களை 40 சதவீத அளவிற்கு குறைத்திருந்தனர். உக்ரேனை இன்னும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தினாலோ அல்லது ஒரு நேட்டோ அங்கத்துவ நாட்டுடன் ஒரு மோதலைத் தூண்டினாலோ ரஷ்யா "கடுமையான விளைவுகளை" சந்திக்க வேண்டியதிருக்கும் என உலகின் மிகப் பெரிய இராணுவ கூட்டமைப்பின் பொது செயலாளர் எச்சரித்தார். அவர் கூறினார், “எங்களின் ஒரு அங்கத்துவ நாட்டின் மீதான தாக்குதலை நாங்கள் எங்கள் அனைவரின் மீதான தாக்குதலாக கருதுவோம் என்பதில் ரஷ்யர்களுக்கு சிறிதும் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை,” என்றார். கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் துருப்புக்கள், போர் விமானங்கள் மற்றும் கடற்படை பிரிவுகளை நிலைநிறுத்துவது "குற்றத்தைத் தடுக்கும்" கொள்கையின் பாகமாகும் என்று அவர் வாதிட்டார். முன்னனி ஜேர்மன் அரசியல்வாதிகள் உடனடியாக ராஸ்முஸ்செனை ஆதரித்தனர். சமூக ஜனநாயக கட்சியின் (SPD) நாடாளுமன்ற குழுவிற்கான பாதுகாப்பு கொள்கை செய்தி தொடர்பாளர் ராய்னெர் ஆர்னோல்ட் கூறுகையில், சமீபத்திய ஆண்டுகளில் நேட்டோ அங்கத்துவ நாடுகள் "அவற்றின் நிதியியல் கட்டுப்பாடுகளால் உந்தப்பட்டு, ஒழுங்கற்ற விதத்தில் அவற்றின் இராணுவ திறன்களைக் குறைத்துக் கொண்டிருப்பதாக" விமர்சித்தார். இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு, நேட்டோ "அதன் வழக்கமான சிறந்த அச்சுறுத்தும் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். பன்னாட்டு பிரிவுகளை உருவாக்குவதோடு, அவற்றை கிழக்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்துவதற்கும் அவர் ஆலோசனை வழங்கினார். ஜேர்மன் இராணுவம் அதன் டைகர் ஹெலிகாப்டர், புதிய பூமா (New Puma) தரைப்படை போர் வாகனம், Boxer எனும் படைப்போக்குவரத்து கவச வாகனம் ஆகியவற்றைப் பங்கெடுக்க செய்து, "அதன் விலைமதிக்கத்தக்க சிறப்பு தகமைகளை பங்களிக்கலாம்" என்றார். கிறிஸ்துவ ஜனநாயக சங்கத்தின் வெளியுறவு கொள்கை வல்லுனர் ஆந்திரேயாஸ் ஷோக்கன்கொவ் அதற்கு உடன்பாடு தெரிவித்ததோடு, கவச பிரிவுகளை வழங்குவதற்கும் கூடுதலாக, இணையவழி தாக்குதல்களைத் தடுப்பதிலும், கடற்படைகளை நிறுவ ஒழுங்கமைத்திலும் கூட அது உதவ முடியும் என்பதையும் சேர்த்துக் கொண்டார். வாஷிங்டனும் பேர்லினும் வலதுசாரி பாசிச படைகளை ஒன்றுதிரட்டி, உக்ரேனிய நெருக்கடியைத் திட்டமிட்டு தூண்டிவிட்டன. ஜனாதிபதி துர்ச்சினொவ் மற்றும் பிரதம மந்திரி யாட்சென்யுக்கின் அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வந்த பெப்ரவரி 22 ஆட்சி சதி, அதில் முக்கிய பாத்திரம் வகித்த Right Sector மற்றும் ஸ்வோபோடா பாசிசவாதிகளோடு சேர்ந்து, வாஷிங்டன் மற்றும் பேர்லினால் நடத்தப்பட்டதாகும். கியேவின் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியைக் கொண்டு மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள மற்றும் ஒரு ரஷ்ய எதிர்விளைவைத் தூண்டிவிட முடியுமென மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் எதிர்பார்த்தன. 1.5 மில்லியன் யூதர்கள் உட்பட நாஜி ஆக்கிரமிப்பின் போது 6 மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட ஒரு நாட்டின் அரசாங்கம், ஸ்டீபன் பண்டாரா போன்ற நாஜி ஒத்துழைப்பாளர்களை பெருமைப்படுத்துவது தவிர்க்கவியலாமல் ஆழ்ந்த வெறுப்பைத் தூண்டிவிடும். ஒடெசாவில் நடந்த சமீபத்திய படுகொலையானது, ஏகாதிபத்தியத்தால் ஒன்று திரட்டப்படும் சக்திகளின் காட்டுமிராண்டித்தனமான குணாம்சத்தை தெளிவாக எடுத்துக்காட்டியது. Right Sector குண்டர்களும், கியேவ் ஆட்சியின் ஏனைய ஆதரவாளர்களும், மே 2இல், ஆட்சிக்கு எதிரான நூற்றுக்கணக்கான எதிர்பாளர்கள் தஞ்சமடைந்திருந்த ஒடெசா தொழிற்சங்க கட்டிடங்களைத் தீயிட்டு கொழுத்தினார்கள். அந்த தீயில் டஜன் கணக்கானவர்கள் இறந்ததோடு, பலர் தீ சுவாலைகளில் இருந்து தப்பிக்க முயன்று ஜன்னல்களுக்கு வெளியே குதித்த போது கடுமையாக காயமுற்றார்கள். அவ்விடத்தில் பாசிசவாதிகள் உற்சாகமாக கூச்சலிட்டதோடு, மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். சில செய்திகளின்படி, பாசிச கும்பல்களால் அந்த கட்டிடம் தீ வைக்கப்படுவதற்கு முன்பு காயமடைந்தவர்களில் பலர் அந்த வலதுசாரி கும்பலால் கொல்லப்பட்டனர். முதுகெலும்பற்ற, எவ்வித உணர்மையுமற்ற ஜேர்மனிய ஊடகங்கள் இந்த உண்மைகளை மூடி மறைக்கும் வேலையைக் கையிலெடுத்துள்ளதோடு, அதேவேளையில் அந்த நெருக்கடியை தூண்டிவிட்டதற்கான பொறுப்பை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீது சித்தரித்து வருகின்றன. கியேவ் ஆட்சி உக்ரேனிய மக்களின் பரந்த அடுக்குகளால் நிராகரிக்கப்படுவதை எடுத்துக்காட்டும் நிறைய ஆதாரங்கள் வெளி வருகின்றன, அதே அளவுக்கு யதார்த்தத்தை தலைகீழாக திருப்ப இயல்புக்கு மீறி அதிகளவில் ஊடகங்கள் முயல்கின்றன. “உக்ரேனிய சமூக பிரச்சினைகளிலும், அத்தோடு மொழி, கலாச்சார மற்றும் வரலாற்று பிரச்சினைகளிலும் உக்ரேனிய சமூகத்திற்குள் இருக்கும் நிஜமான முரண்பாடுகளை மாஸ்கோ திரித்தும், தூண்டிவிட்டும் உக்ரேனினுக்கு எதிராக அதன் அறிவிக்கப்படாத யுத்தத்தை நடத்தி வருகிறது என்ற உண்மையிலிருந்து கண்ணோட்டத்தை மாற்ற வேண்டாமென" திங்களன்று Frankfurter Allgemeine Zeitung அதன் வாசகர்களை எச்சரித்தது. உண்மையில் இந்த முரண்பாடுகள் நிஜமானவையே, ஆனால் அனைத்திற்கும் மேலாக அவை ரஷ்யாவின் சூழ்ச்சியால் அல்ல மேற்கத்திய சக்திகளின் ஆக்ரோஷமான தலையீட்டால் தூண்டிவிடப்பட்டு வருகின்றன. உக்ரேனிய நெருக்கடியை 9/11 சம்பவத்துடன் ராஸ்முஸ்சென் ஒப்பிட்டமை ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். அது, மேற்கத்திய சக்திகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் உக்ரேனிய தொழிலாள வர்க்கம் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டுள்ளன என்பதை காட்டுகிறது. அவை ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பிற்கு, யுத்தத்திற்கு, ஒரு பொலிஸ் அரசை ஸ்தாபிப்பதற்கு போலிக்காரணத்தை வழங்குவதற்காக உள்ளன. இதில் ராஸ்முஸ்சென் ஒரு நிபுணர் ஆவார். அவர் From Social State to Minimal State என்ற தலைப்பிலான ஒரு நூலின் ஆசிரியராவார். ஒரு காலத்தில் பொறுமைக்கு பெயர் போன ஒரு நாடான டென்மார்க்கில் அவர் பிரதம மந்திரியாக இருந்தபோது, அவர் அந்நாட்டை வெளிநாட்டினருக்கு எதிரான ஒரு படையரணாக மாற்றி இருந்தார். 2003இல் ஈராக்கிற்கு துருப்புகளை அனுப்பிய ஒருசில ஐரோப்பிய நாடுகளில், அவரது தலைமையின் கீழ் இருந்த டென்மார்க்கும் ஒன்றாக இருந்தது. ஜேர்மன் மற்றும் பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சிகளின் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கவும், ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பகுதிகளைக் கட்டியெழுப்பவும் நாங்கள் யுத்தம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்க்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். இது மட்டுமே யுத்தம் மற்றும் இராணுவவாதத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் ஒரேயொரு அரசியல் போக்காக விளங்குகிறது. |
|